Thursday 26 January 2017

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை - திருவாரூர்


மூலவர் : திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி)

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : சோடஷ (முக்கூடல்) தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல்

ஊர் : திருப்பள்ளி முக்கூடல்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர் 

தேவாரப்பதிகம்

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம்.

திருவிழா:

தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 149 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன.

பிரார்த்தனை

12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர்.

தலபெருமை:

இத்தலத்து அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.

இங்குள்ள குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில் நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை. ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.

இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,""ராவணன் சீதையை தூக்கி செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை வெட்டி விடுவான். நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார்.

நீ அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்,''என கூறினார். அதற்கு ஜடாயு,""இறைவா! நான் காசி ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான் என்று கூறுகிறீர்கள். நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,''என கேட்டது. அதற்கு சிவன்,""நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில் நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,''என கூறினார். கோயில் எதிரில் உள்ள இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.

இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன் ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான். இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன் குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி மன்னனை உணவருந்த செய்தான்.

பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது

No comments:

Post a Comment