Thursday, 26 January 2017

அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம் - திருவாரூர்


மூலவர் : மதுவனேஸ்வரர் ( கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : மதுவனேஸ்வரி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில்

ஊர் : நன்னிலம்

பாடியவர்கள்: சுந்தரர்

தேவாரப்பதிகம்

தண்ணியல் வெம்மையினான் தலையிற்கடை தோறும் பலி பண்ணியன் மேன் மொழியாரிடங் கெண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோவில் நயந்தவனே. - சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 71வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், திருவாதிரை இம்மூன்று திருவிழாவிற்கும் சுவாமி புறப்பாடு உண்டு. ஆடி சுவாதியில் சுந்தரருக்கு குருபூஜை. பிரதோஷம், மாத சிவராத்திரி உள்பட சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் ஸ்ரீ மதுவனேஸ்வரர் சுவாமி வார வழிபாட்டு கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 134 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் கோயில் அமைந்துள்ளது.


கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். கோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்தின் அருகில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது.

பிரார்த்தனை

இங்குள்ள தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நலன்களையும் பெறுவர் என்றும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்பவர்கள் மோட்சம் அடைவர் என்றும் கூறப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் தேவர்களின் சபையில் ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத்து கொண்டான். எனவே வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இதனால் எல்லா உலகங்களும் அதிர்வடைந்தது.

உலகமே அழிந்து விடும் என அஞ்சிய தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்டிக்கொள்ள, மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும் விட்டுக்கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்து செல்லும் போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கிருதா யுகத்தில் பிருஹத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் "தேஜோ லிங்கமாய்' காட்சி தந்தார். துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர்.

அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும் படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேஸ்வரர்' என்றும் அம்மன் "மதுவன நாயகி' என்றும் இத்தலம் "மதுவனம்' என்றும் அழைக்கப்பட்டது.

சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment