Monday 30 January 2017

அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி - நாகப்பட்டினம்


மூலவர் : கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பரிமள சுகந்த நாயகி

தல விருட்சம் : -

தீர்த்தம் : மங்கள தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவேள்விக்குடி

ஊர் : திருவேள்விக்குடி

பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டாகக் தூரினும் ஆகச்சிந் திக்கி னல்லால் காப்பது வேள்விக் குடிதண் துருத்திஎங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே.
- சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 23வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

தல சிறப்பு:

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 23 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.


பிரார்த்தனை

நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.

தலபெருமை:

திருத்துருத்தியாகிய குத்தாலத்தோடு சேர்த்து பாடப்பட்ட திருத்தலம் இது.

அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.


அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.


சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

தல வரலாறு:

திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.


அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள். பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

No comments:

Post a Comment