Saturday, 3 December 2016

பூரி ஜகன்னாதர் ஆலயம் - 6


காலம் ஓடியது. பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர்களின் சிலைகளை மாற்ற வேண்டிய காலம் வந்தபோது, அந்த சிலைகளை அமைக்க தேவையான தெய்வீக வேப்ப மரம் உள்ள இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என ஆலயத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவர்களில் மூத்த வயதானவர் கனவில் தோன்றிய மங்களா தேவி, திருவிழாவை துவக்கியதும், தெய்வீக வேப்ப மரத்தை தேடப் போகும் குழுவினர் தன் ஆலயத்தில் வந்து தங்கி தன்னை வழிபட்டால் தான் அந்த மரத்தை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்குக் கூறுவதாக வாக்குறுதி தந்தாள். அது முதல் நபகலேபரா திருவிழா துவங்கியதும், சிலைகளுக்கான மரத்தை தேடும் குழுவினர் முதலில் மங்களா தேவியின் ஆலயத்துக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்து அவளை ஆராதிப்பார்கள். அவர்கள் அங்கு சென்றதும், ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குத் தேவையான மரங்கள் உள்ள இடங்களை மங்களா தேவி கண்டுபிடித்து, அந்தக் குழுவின் தலைவரிடமும், வேறு சிலரிடமும் அவர்கள் கனவில் தோன்றி அந்த மரங்கள் உள்ள இடத்துக்கு செல்லும் வழியை மங்களா தேவி கூறுவாளாம்.  ஒரே மரத்திலேயே ஜகன்னாதர், சுபத்ரை மற்றும் பாலபத்திரரின் சிலைகளை செய்ய மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் சிலையை வடிவமைக்கத் தேவையான தனித் தன்மைக் கொண்ட குறிப்பிட்ட மரம் வெவேறு இடங்களில் இருக்குமாம். அவற்றைக் கண்டு பிடிப்பது எளிதான காரியம் அல்ல என்பதினால் மங்களா தேவியே இதற்கு உதவுகிறாள் என்பது ஐதீகம்.   மரங்கள் உள்ள இடத்தை மங்களா தேவி கூறியதும் தம்மை நான்கு குழுக்களாக பிரித்துக் கொண்டு அந்த ஆலயத்தில் இருந்து அந்த குழுவினர் புறப்பட்டுச் செல்வார்கள்.  இன்றுவரை மங்களா தேவி கூறிய மரங்கள் உள்ள இடத்தைக் கண்டு பிடிப்பதில் எந்தவிதமான சங்கடமும் ஏற்ப்படவில்லையாம்.  ஆனால்  அவர்களுக்கு எந்த விதத்தில், எப்படி அந்த மரங்கள் உள்ள இடங்களை மங்களா தேவி துல்லியமாக எடுத்துக் கூறி  வழி காட்டுகிறாள் என்பதும் பரம ரகஸ்யமாகவே அந்தக் குழுவினர் வைத்து உள்ளார்கள்.

மங்களா தேவி அந்த மரங்கள் உள்ள இடத்தைக் கூறிய பிறகு தேடுதல் வேட்டையில் உள்ளவர்கள் அந்த மரங்கள் உள்ள இடத்தை  சென்றடைவார்கள். அங்கு சென்று மரத்தின் தன்மைகளை நன்கு ஆராய்ந்தப் பின்  அந்த மரத்தை யாரும்  அசுத்தப்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த மரத்தை சுற்றி உள்ள இடத்துக்கு தடுப்பை போட்டு விட ஏற்பாடு செய்வார்கள். மரத்தை சுற்றி உள்ள பகுதிகளை மந்திரங்கள் ஓதி தண்ணீர் தெளித்து  தூய்மைப்படுத்துவார்கள். அதன் பின் அந்த மரத்துக்கு முன்னால்  யாகங்கள் மற்றும் பல விதமான பூஜைகளும், முக்கியமாக நரசிம்மருக்கும், சூரியனுக்கும்  பூஜைகள் நடைபெறும்.  யாகம் நடைபெறும் முன் ஜகன்னாதர் மற்றும் பாலபத்திரர் மரங்களின் அடிப்பகுதியை தூய வெண்மை நிற வேட்டியை போட்டு மூடுவார்கள்.  அதைப் போல சுபத்ராவின் மர அடிப்பகுதியை சிவப்பு நிற சேலையால் சுற்றிக்  கட்டி விடுவார்கள். அனைத்தும் முடியும்வரை அந்த மரத்தை தேடி வந்த குழுவினர் அங்கேயே தற்காலிக குடிசை அமைத்துக் கொண்டு தங்குவார்கள்.
மரத்தை வெட்டத் துவங்கும் முன், முதலில் சம்பிரதாயமாக அந்த மரத்தை தங்கக் கோடாலியால் ஒருமுறை வெட்டுவார்கள். அதைத் தொடர்ந்து வெள்ளிக் கோடரியினால் ஒருமுறை வெட்டிய பின்னர் முடிவாக இரும்புக் கோடரியினால் வெட்டுவார்கள். இப்படியாக முழு மரமும் வெட்டப்பட்டு சாய்க்கப்படும் வைபவத்தில் 108 தெய்வங்களின் நாமாவளியை உச்சரித்தபடி இருப்பார்கள்.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து மரம் வெட்டப்பட்டப் பின்னர் தேவையான அளவு மரத்தின் அடிப்பாகத்தை வைத்துக் கொண்டு மீதி மரத்தை அதன் கிளைகளுடன் சேர்த்து பூமியிலே குழி தோண்டி புதைத்து விடுவதற்காக அவற்றையும் தனியாக வேறு வண்டியில் வைத்து பூரி ஆலயத்துக்கே எடுத்துச் சென்று விடுவார்கள். தெய்வீக மரம் அது என்பதினால் அதை வேறு எவருமே வேறு எந்த காரியத்துக்கும் பயன்படுத்த முடியாது என்பதினால் அந்த மரத்தின் எந்தப் பகுதியையுமே அங்கு விட்டு வைக்காமல் அனைத்தையும் எடுத்துச் சென்று விடவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மூலவர் சிலைக்கு  தேவையான மரத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து எடுத்துச் செல்வார்கள்.
மாட்டு வண்டி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால் முதன் முதலில் நீல மாதவர் ஒரு கட்டை உருவில் மன்னன் இந்ரதைய்யுமாவிற்கு கடலில் மரத்தின் அடிப்பாகமாக காட்சி தந்து, அந்த மரத்தை கடலில் இருந்து எடுக்க முடியாமல் தவித்தபோது அதை வெளியில் எடுக்க மாட்டு வண்டியைக் கொண்டு வருமாறு நீல மாதவர் கட்டளை இட,  மாட்டு வண்டி வந்ததும் அதை எளிதில் அதில் ஏற்ற முடிந்தது என்பதினால் அதை குறிக்கும் விதத்தில் சம்பிரதாயமாக  மாட்டு வண்டியே பயன்படுத்தப்படுகிறது. வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை பூரி ஆலயத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.

பூரி ஜகன்னாதர்  சிலையின் உயரம் 5' 7'' . இரண்டு கைகளும் 12 அடி அளவில் நீண்டு இருக்கும். பாலபத்திரரின்  உயரம் 5' 5'' மற்றும் சுபத்திராவின் உயரம் 5 அடிக்கும் குறைவானதாம். சுதர்சனம் மட்டும் 5' 10''த்துக்கும் உயர நீண்ட தடி போல அமைந்து உள்ளது.
ஆலயத்துக்குள் மரங்களை எடுத்துச் சென்ற பின், அந்த சிலைகளை வடிவமைக்கும் தச்சர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படாத  தனி அறையில் அவற்றை வைத்தப்  பின் அறையின்  கதவை மூடி வைத்து விடுவார்கள்.  உள்ளே உள்ள தச்சர்கள் சிலை வடிவமைக்கப்பட்டு முடியும்வரை ஆலயத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது. ஆலயத்துக்குள்ளேயேதான்  படுத்து உறங்க வேண்டும்.  ஆலய பிரசாததைத் தவிர வேறு எந்த உணவையும் உண்ணக் கூடாது போன்ற கடுமையான நியதிகள் உள்ளன. 21 நாட்களுக்குள் சிலை தயாராகி விடும். அவை தயார் ஆனதும் ஆலயம் முற்றிலும் மூடப்பட்டு விடும். பக்தர்களுக்குக் கூட ஆலயத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது.

சிலைகள் தயார் ஆனதும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு பழைய சிலைகளின் முன் நேருக்கு நேர் நிறுத்தி வைக்கப்படுமாம்.   அந்த சிலைகளை தைத்தியாபதிகள் மட்டுமே எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். அன்று இரவு விளக்குகள் அணைக்கப்பட்டு முற்றிலும் இருட்டு மயமாக்கப்படும் ஆலயம் மற்றும் ஆலய கருவறையில் பழைய சிலைகளில் உள்ள பிரும்ம சக்தியை புதிய சிலைக்குள் புகுத்த மூத்த தைத்தியாபதி  மட்டுமே கருவறையில் அனுமதிக்கப்படுகிறார். அவரைத் தவிர அங்கு வேறு யாருமே நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.   அவரும் தனது கண்களைக் கட்டிக் கொண்டு 'பிரும்மபதார்த்தா' எனப்படும் ரகஸ்ய நூலில் கூறப்பட்டுள்ள விதிமுறையின்படி  இந்த சடங்கை  செய்து முடிக்கிறார். அனைத்தும் செய்யப்பட்டப் பின் மரணம் அடைந்து விட்டதாக கருதப்படும் பழைய சிலைகள் ஆலய வளாகத்தின் பின்புறத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  மரணம் அடைந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளைப் போல சடங்குகளை செய்து  பூமிக்குள் புதைத்து விடுவார்கள். அன்றில் இருந்து மூன்றாவது நாளில் பூரி ஜகன்னாதர் ஆலய தேரோட்டம்  புதிய சிலைகளுடன் நடைபெறுகிறது. 





--முற்றும் --

நன்றி : Mr. N.R.Jayaraman

No comments:

Post a Comment