Monday 27 June 2016

சங்கடஹர சதுர்த்தி !!!

சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி....

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.


ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.

பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

சங்கடஹர சதுர்த்தி

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
-
பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.

இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச் சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

விரதத்தின் பலன்கள்:

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.


விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
விநாயகர் ஓங்கார வடிவானவர், முப்பத்தி இரண்டு விதமான வடிவங்களுடன் தோற்றமளிக்கும் விநாயகரின்  ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மகா கணபதி
14. விஜய கணபதி
15. நிறுத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாட்சர கணபதி
20. ‌க்ஷிப்ரப்ரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்கமுக கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி

விநாயகரின் திருவிளையாடல்கள்:


விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.
ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.

ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment