Thursday 23 June 2016

ருத்திராட்சத்தின் மகிமை

ருத்திராட்சத்தின் மகிமை.....


இன்றைய உலகில் இரத்தக் கொதிப்பு நோய் மனிதர்களை வாட்டி வதக்கிக்கொண்டிருக்கின்றது. இதற்கான மூல காரணம் மன அமைதியின்மை, மனப்பதட்டம்தான் என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.பழங்காலத்தில் இந்த இரத்தக் கொதிப்பு நோய் இப்போது இருக்கும் அளவில் இல்லை. இதற்கு காரணம் மனிதன் முன்பு இயற்கையோடும், இயற்கையையும், மனிதர்களையும் படைத்த இறைவனோடும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தான். அதனால் மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்தது.


இன்று விஞ்ஞானம் என்ற போர்வையில் செயற்கையான அன்பு, பாசம் வாழ்வினால் உண்டாகும் அமைதியின்மையால் இரத்தக் கொதிப்பு நோயும், மனத்தளர்வு என்னும் மென்டல் டெப்ரஷன் அதிகளவில் இருக்கின்றது.


இதனால் கிட்னிஃபெயிலியர், ஹார்ட்ஃபெயிலியர், லிவர்ஃபெயிலியர், லங்க்ஸ்ஃபெயிலியர் போன்ற நோய்கள் உருவெடுத்திருக்கின்றன.உருத்திராட்சம் என்னும் மரத்தின் காய்கள் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகின்றது. கெட்ட எண்ணங்களை அகற்றிவிட்டு தூய்மையான எண்ணங்களை அளிக்கின்றது. நிம்மதியும், தூக்கத்தையும் வரவழைக்கின்றது. இந்தக் கொட்டையை இந்த சமுதாய மக்கள் பல நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.சிவபெருமானின் கண்ணிலிருந்து வழியும் நீர் காயாக மாறி ருத்ராக்ஷாவாக காட்சியளிக்கின்றது என்ற நம்பிக்கை சிவபக்தர்களிடம் காணப்படுகின்றது. இவ்வாறு மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது.


ருத்ராக்ஷா ஒரு அழகான மரமாகும். இந்த மரத்தில் காய்கள் விளைகின்றன. அவைகள் சிறிதளவிலும், இலந்தை பழம் வடிவிலும் இருக்கும். இதை உலரவைத்து நூலால் கோர்த்து, மாலையாகவும், கை மணிக்கட்டிலும், முழங்கை மூட்டுக்கு மேலுள்ள சதை பகுதியிலும், வளையலாக அணிந்து கொள்வார்க்ள.


சிலர் இறைவனின் திருப்பெயர்களை மந்திரமாக ஜெபிக்கும் போது இந்த மாலையைக் கையில் வைத்துக் கொண்டு ஜெபிப்பார்கள். முனிவர்கள் தலைமுடி கொண்டையிலும் கட்டிக் கொள்வார்கள். மருத்துவர்கள் இதனை மருந்தாகத் தயார் செய்து தருவார்கள்.இந்த மரத்தை இந்து சமுதாய மக்கள் தெய்வீக மரமாகக் கருதி கோயில்களில் வைத்து வணங்குகின்றனர். 

இதைப்பற்றி சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டிருப்பதாவது :

இமயமலைச் சாரலில், நேபாளம் போன்ற இடங்களில் பயிராகும் இது அக்கமணி, கண்மணி, சிவநேத்திரம், உத்திராட்சம் என வேறு பல பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. இலையும், விதையும் மருத்துவப் பயன்களுக்குத் தேவையாகிறது. கார்ப்புச் சுவையுடன், வெப்பத்தன்மை கொண்டது. கோழை, பித்தம், தோஷங்களை நீக்கும். அதிக நாவறட்சியோடுள்ள நீர்வேட்கை, முக்குற்ற வேறுபாடுகள், விக்கல், அழல் இவைகளைப் போக்கும். ஐயத்தால் உண்டாகும் மரணத்தைப் போக்கும்.இலையின் சாறு, கற்ப செந்தூரங்களுக்கு உபயோகமாகிறது. கொட்டையைத் தேன்விட்டு உரைத்து நாக்கில் தடவ, விக்கல், பித்த மயக்கம், மரணத்தை உண்டாக்கும் கபம் இவைகளைப் போக்குகிறது. மன அமைதிபெறவும், பயம் நீங்கவும் உதவுகிறது.

உருத்திராட்சத்தின் பெருமையும், தியான முறையும் :


‘உருத்திரன்’ என்றால் சிவனையும், ‘அட்சம்’ என்றால் கண்ணையும் குறிக்கும். ருத்திராட்சம் என்றால் சிவனின் கண்களிலிருந்து தோன்றியது என்பது பொருள்.உலகியல் வாழ்வில் ஏற்படும் துன்பத்தைப் போக்க உதவும் அருள் பார்வையின் பொருளாக உள்ளதுதான் ருத்திராட்சமாகும்.


நாராயணனுக்கு உகந்த செபமாலை துளசி மாலையாகும். சிவனுக்கு உகந்த செபமாலை ருத்திராட்ச மணி மாலையாகும்.


ஒரு ருத்திராட்ச மணி ஒரு சிவலிங்கத்திற்கு ஒப்பானது. சிவபுண்ணியம் தேடுவோர் சிவபூஜையின் போதும், சிவபுராணம் ஓதும் போதும், சிவநிட்டையில், திருமறை ஓதும் போதும் ருத்திராட்ச மாலை அவசியம் அணிதல் வேண்டும்.சிவனுக்குப் பிடித்த ருத்திராட்சமில்லாத பூஜை மிக பலனற்ற பூஜையாகுமென சைவ நெறி கூறுகிறது. ருத்திராட்சத்தில் மூன்று தெய்வங்களும் குடிகொண்டுள்ளதாக வேதங்கள் கூறுகின்றன.


ருத்திராட்சத்தின் மூலம் பிரம்மாவையும், மத்தியில் செல்லும் துவாரம் சிவனையும், அடிப்பாகம் விஷ்ணுவையும் குறிக்கும். ருத்திராட்சத்தின் மீது பட்டுவிழும் தண்ணீர் கங்கை நீரை ஒத்த புனிதத் தன்மையுள்ளது.


ருத்திராட்சத்தின் தரமும் முகமும்: 


நல்ல ருத்திராட்ச மணிகளை நீரில் போட்டால் மூழ்கி விடவேண்டும். தண்ணீரை விட்டு மேலெழும்பினாலும், அல்லது மிதந்து கொண்டிருந்தாலும் அந்த ருத்திராட்சங்கள் தரமற்றவையாகும். அல்லது பூச்சரித்தும், நாள்பட்டதும், பிஞ்சாகவும் இருக்கலாம்.ருத்திராட்சத்தில் எத்தனை கோடுகள் உள்ளதோ அத்தனை முகம் உள்ளது என்று பொருள். உதாரணமாக ஐந்து கோடுகள் சென்றால் ஐந்து முக ருத்திராட்சம் ஆகும்.ருத்திராட்சத்தில் 1 முதல் 18 வரை முகங்கள் உள்ள ருத்திராட்சங்கள் இயற்கையில் கிடைக்கின்றது. இயற்கையிலுள்ள கோடுகள் சற்று வளைந்து நெளிந்திருக்கும். ஆனால் செயற்கையாக உருவாக்கும் முகங்கள் அறுபட்டும், வெட்டுப்பட்டது போலவும் இருக்கும். இவை போலியானவை. இவற்றை அணிந்தால் தீய பலனே கிடைக்கும்.சில நேரங்களில் இயற்கையாக மரத்தில் தோன்றும் ருத்திராட்சத்தில் இரண்டு கொட்டைகள் இணைந்தும் பிறக்கும். இவை கவுரி சங்கர் (சிவ பார்வதி) ருத்திராட்சம் என அழைக்கப்படும். அதுபோல மூன்று ருத்திராட்சக் கொட்டைகள் இணைந்திருப்பது “திருமூர்த்தி” என்ற அழைக்கப்படும். ஒற்றை முகம் உள்ள ருத்திராட்சம் மிகவும் சிறப்பானது. இது சிவனுக்கு உகந்தது. பாவ நிவர்த்தி செய்யக்கூடியதென புராணங்கள் கூறுகின்றன.


ருத்திராட்சத்தை அணியும் விதமும், ஜெப முறையும்:


தலையில் 36 ருத்திராட்சமும், காதில் தலா 3, மணிக்கட்டில் 12, கழுத்தில் 27, 54, அல்லது 108 மணிகளை அணியலாம். ருத்திராட்ச மாலை தொப்புளைத் தொடும்படி அணிவது நல்லது. இயற்கையிலேயே ஐந்து முகம் கொண்ட ருத்திராட்சம் அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கிறது. ஏனெனில் இது ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ பஞ்சாட்சர வடிவம். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பேதமில்லாமல் அனைவருக்கும் கிடைக்கவே இதுபோல மரத்தில் விளைகிறது. மற்ற முகங்கள் விலை அதிகம்.


ஒரேவித முகங்களைக் கொண்டதும், வடிவம் ஒன்று போல உடைய 108 ருத்திராட்ச மணிகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி தனியாக மேரு பாகமாக வைத்து 109 ஆகவும் வைத்துக் கொள்ளலாம். பொன், வெள்ளி, பஞ்சலோகம் ஆகியவற்றால் ஆன கம்பிகளைக் கொண்டும் கோர்த்து ஜெபமாலையை உருவாக்கிக் கொள்ளலாம்.


சிவபுண்ணியம் பெறும் பொருட்டு ‘நமசிவாய’ ‘சிவாயநம’ ஐந்தெழுத்து ஏதேனும் ஒன்றை ஜெபம் செய்ய வேண்டும். மந்திரம் செபிக்கும்போது சுத்தமான துணியினால் மறைத்து ஜெபமாலை மோதும் சப்தமில்லாமல் உருட்டி ஜெபிக்க வேண்டும். தியான ஜெபத்தில் மேரு மணியை விடுத்து துறவறத்தில் லயிப்பவர் கீழ்நோக்கியும், இல்லற யோகத்தில் செல்பவர்கள் மேல்நோக்கியும் ஜெப மாலையைத் தள்ளுதல் வேண்டும். வலது கையில் ஜெபமாலை பிடித்தல் வேண்டும். ஆள்காட்டி விரல் அகங்காரத்தைக் குறிப்பதால் அதன்மீது ஜெப மாலையைப் பிடிக்காமல் நடுவிரலின் மீது வைத்தல் வேண்டும். பெருவிரலால் மணியைத் தள்ளி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும். சுண்டு விரலால் தள்ளினால் பகைவரை வெல்லலாம்,நடுவிரலால் தள்ளினால் செல்வ விருத்தியும், மோதிர விரலால் தள்ளினால் நோய்களும் நீங்கும். உத்திராட்ச ஜெபம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி செய்தல் வேண்டும். வீட்டில் பூஜை அறையில் ஜெபமாலையைக் கொண்டு செபித்தால் 1 பங்கு பலனும், கோமாதாவான பசு இருக்குமிடத்தில் ஜெபம் செய்தால் 100 பங்கு பலனும் கிடைக்கும். காடுகளில் தவம் செய்யும் போது 1000 பங்கு பலன் கிடைக்கிறது. மாலையிலும், நதிக்கரையிலும் ஆற்றின் ஓரத்திலிருந்து ருத்திராட்சத்தை கொண்டு ஜெபம் செய்தல் லட்சம் மடங்கு பலன் கிடைக்கின்றது.

ருத்திராட்சம் அணிபவர் சிவனின் சாயலைப் பெறுகிறார். 108 மணிகள் கொண்ட ருத்திராட்சத்தை அணிந்து சிவாலயத்தை ஒருமுறை வலம் வந்தால் ஒரு அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனைப் பெறுகிறார்கள்.


ருத்திராட்சம் ஒரு மணியை கழுத்தில் தொண்டைக்குழிக்கு நேராக அணிந்து கொள்ளலாம். இதனால் வாக்கிலும் உயிரோட்டமான மூச்சிலும் சிவனிருந்து நடத்துவதாக உணர்ந்து கொள்ளலாம்.


ருத்திராட்ச மணி அணிந்து கொண்டு பொய், களவு, போகம், அசைவம், மோகம், மது, போதை வஸ்து உண்பது மிகப்பெரிய பாவத்தைத் தரும். ஒரு சிவலிங்கத்தை சிதைத்த பழிக்கு ஆளாவதாகும். நடுமுறை வாழ்வில் சுத்தமாக இருக்கும்போது மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். பிற நேரத்தில் பூஜை அறையில் வைத்து விடலாம்.


ருத்திராட்சத்தின் மருத்துவ குணங்கள்: 


ருத்திராட்சத்தில், துவர்ப்பு, கார்ப்பு சுவையுள்ளது. வெப்பத்தன்மையும் உள்ளது. கொட்டையை தேன்விட்டு உரைத்து நாக்கில் தடவ, விக்கல், பித்தத்தால் ஏற்படும் மயக்கம், சளி, கோழை இவற்றை அகற்றும். வாதம், பித்தம், சிலேத்துமம் இவற்றில் ஏற்படும் மூன்று தோஷங்களை நீக்கும். ருத்திராட்சத்தில் மின்காந்த பண்புகள் இருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மனச்சாந்தி கிடைக்கும். தியான மாலையில் முகங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதால் மின துடிப்புகள் உண்டாகி மூளைக்குப் புத்துணர்ச்சியும், இதயத்தின் துடிப்பில் ஒரு சீரமைப்பும் உண்டாகிறது. மனத்திண்மையும், பாஸிடிவ் எண்ண அலைகளும் உருவாகின்றது. நரம்பு மண்டல கோளாறுகளும், மனச்சேர்வும் நீங்குகிறது. மனம் சார்ந்த பிரமைகள் ருத்திராட்ச மாலைகள் அணியும்போது படிப்படியாக குறைகிறது. இரவில் 1 டம்ளர் நீரில் 5 ருத்திராட்சத்தைப் போடடு வைத்து, காலையில் குளித்துவிட்டு வெறும் வயிற்றில் நீரை மட்டும் அருந்தினால் கணைச்சூடு குறையும்.


மொத்தத்தில் ருத்திராட்சம் மெய்ஞானமும், விஞ்ஞானமும் கலந்த ஓர் இயற்கையின் அற்புத படைப்பு. தினசரி வாழ்வில் ருத்திராட்சத்தைப் பயன்படுத்தினால் தீமைகள் விலகி தூய வாழ்வும், சிவநேயமும் பெறுவோம் என்பது இந்து சமுதாய மக்களின் நம்பிக்கையாகும்.



திருவலஞ்சுழி, அச்சுத மங்கலம், தாராசுரம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்களின் தலவிருட்சமாக உருத்திராக்கம் எனப்படும் ருத்ராட்சை மரம் வணங்கப்படுகிறது.

No comments:

Post a Comment