Sunday, 26 June 2016

படவேடு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் !!

சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் கொடுத்த படைவீடு



  திருவண்ணாமலை அடுத்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அருகே உள்ள குன்றின் மீது ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மயில் மேல் நின்ற கோலத்தில் காட்சித்தருவதோடு, இத்தலத்தில் சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய தலம். படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால் படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.
   சிவபெருமானிடம் அளவற்ற வரங்களைப் பெற்று தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்தோடு அனைத்து தேவர்களையும் அடக்கியாண்டு கொடுமைப்படுத்தினான் சூரபத்மன். தேவதச்சனை அழைத்து தென்கடலின் நடுவில் மிக பிரமாண்டமான பாதுகாப்பான மாட மாளிகைகள் நிறைந்த வீர மகேந்திரபுரி என்ற நகரை உருவாக்கச் செய்தான். நகரின் பிரதான சபையில் சிங்காதனத்தின் மேல் அமர்ந்த சூரபத்மன், பிரம்மாவை விட்டுத் தனக்கு மணிமகுடம் சூட்டச்செய்தான். தலைகுனிந்து வணங்கிய தேவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பணி செய்ய ஆணையிட்டான். பிரம்மா தன் புத்திரர்களோடு சபைக்கு வந்து தினமும் பஞ்சாங்கம் படிக்கவேண்டும், வீதிகளில் உள்ள குப்பைகளையெல்லாம் வாயுதேவன் அகற்ற வேண்டும். வீதிகளில் சந்தனம், பன்னீர் ஆகியவற்றை வருணன் தெளிக்க வேண்டும். அசுரர்களையும் அசுர சேனைகளையும் யமன் கொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் சூரன் இட்ட வேலைகளைத் தேவர்கள் மனம் நொந்தபடி செய்தனர். சூரபத்மனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், சிவபெருமானை அணுகி அருள்புரிய வேண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்கென்றே எமது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவசுப்பிரமணியன் விரைவில் அவர்களைக் கொல்வான் என்று கூறிய பெருமான், கந்தனை நோக்கிக் கடைக்கண்ணால் அருளாணை பிறப்பித்தார்.  
 இந்திரனை மயில்வாகனமாகக் கொண்டு அக்னியை சேவற்கொடியாக்கி வீரபாகு தேவருடன் களமிறங்கிய முருகபெருமான், சூரபத்மனை இரண்டு கூறாகப் பிளந்து மயில்வா கனமாக, சேவற்கொடியாக ஏற்றுக்கொண்டார். சிவபாலா நானும் பிரம்மாவும் மற்றவர்களும் சூரபத்மனுக்கு வரம் கொடுத்து அவனைப் பலசாலியாக்கினோம். தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அவன் எங்களையே எதிர்த்தான். இந்திரன் நடுநடுங்கிப் போனான். நீ உன்னுடைய பெருவீரத்தினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து இந்திரலோகத்தை மீட்டாய். உன்னைப் பற்றிய அருமை தெரியமாமல் உலகத்தோர், நான் காக்கும் கடவுள் என்று என்னை புகழ்கிறார்கள். தேவர் உலகத்தை நிம்மதியாக வாழவைத்த நீயல்லவா மாபெரும் கடவுள் என திருமால் தன் மருமகனான மயில்வாகனனைப் புகழ்ந்து தள்ளினார்.
    இந்திரசேனா ஓரு படி மேலே சென்று, உமாபத்திரா, எங்களை அசுரரிடமிருந்து மீட்டு வாழவைத்த நீதான் இந்த இந்திரலோகத்துக்கு அதிபதியாக வேண்டும். எனது நன்றிக்கடனாக என் மகள் தெய்வானையை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என முறையிட்டான்.புன்னகை புரிந்த முருகப்பெருமானோ நீயே இந்திராபதியாக இரு. நாம் தேவர் படைக்குத் தளபதியாக தேவசேனாதிபதியாக இருந்து அசுரர் கூட்டத்தை அழித்து, எப்போதும் அமைதி நிலவச் செய்வோமாக… என அருள்புரிய…பிரம்மாதி விஷ்ணு தேவர்களும் சிவசுப்பிரமணியனே தேவசேனாதிபதியாக இருக்க வேண்டும் என்று ஆமோதித்து வணங்க…
     இந்த சமயத்தில் தமிழகத்தில் தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ்பெற்று, புராதனமாக விளங்கிய குண்டலீபுரத்தில் அன்னை ரேணுகாம்பாள் அருளாட்சி புரிந்து கொண்டிருந்தாள். மாதேஜோமயமாயும் குழந்தையாகவும் இருக்கிற சிவசுப்பிரமணியக் கடவுளைத் தேவசேனாதிபதியாக இருக்கிற சிவசுப்பிரமணியக் கடவுளைத் தேவசேனாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்ய குண்டலீபுரத்துக்கு அனைவரும் வந்து நடத்தி வாழ்த்த வேண்டும் எனப் பதிவிரதையான ரேணுகாதேவி வேண்டினாள். அன்னை வேண்டியபடி, கணக்கற்ற புண்ணிய தீர்த்தங்களையும், நூற்றுக்கணக்கான திருக்கோயில்களையும் கொண்ட புனித பூமியான குண்டலீபுரமான படவேட்டுக்கு பார்வதி பரமேசுவரர், சீதா ராமர், லட்சுமி நாராயண நரசிம்மர், பாமா- ருக்குமணியுடன் வேணுகோபாலன் ஆகிய அனைத்து கடவுள்களும் குண்டலீபுரத்துக்கு ரேணுகாதேவியின் ஆலயத்துக்கு எதிரேயுள்ள ஓரு சிறிய குன்றில் வந்து குவிந்தனர்.ஆரணிக்கு அருகிலுள்ள படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த குமரக் கடவுளுக்கு அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம்  நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் மங்களகரமாக நடத்தி முடித்தாள்.
        அதே சமயம் அதிசயமானதொரு காட்சியைக் காண நேர்ந்தது. கிழக்கே பார்த் திருமுகம். மயில் மீது அமர்ந்த முருகனைத்தான் நாம் குன்று தோறாடும் குமரக் கடவுளைத் தரிசிப்பது வழக்கம். ஆனால் இங்கோ வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளிநாயகன் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. அதுமட்டுமல்ல மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகத்தான் தென்படுகிறது. மயில்மேல் அமர்ந்த முருகன் ஓரு சிலைதானா அல்லது அப்படியே நேரில் வந்து அமர்ந்து அருள்புரிகிறானா என்று ஆச்சியப்படுமளவுக்கு அற்புதமானதொரு சிற்பக்கலை வேலைப்பாடு, என்ன வேண்டும்? என்று கேட்பதுபோல நம்மை நோக்கி நிற்கும் வேலவனிடம் என்ன கேட்டாலும் தருவான்.

No comments:

Post a Comment