Sunday 26 June 2016

வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில்....!!!!

வேலூர் கோட்டைக்கு நடுவே கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ..



மூலவர் : ஜலகண்டேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்

தாயார் : அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : கங்கா பாலாறு, தாமரை புஷ்கரிணி

ஆகமம் : சிவாகமம்

புராண பெயர் : வேலங்காடு

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


திருவிழா


சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்.

தல சிறப்பு:

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.

பொது தகவல்:



இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார். சுவாமியின் பாதத்தில் 11 சாளக்கிராம கற்கள் உள்ளன.


புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். இவருக்கு தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்கின்றனர்.


சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது.


நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி விழுந்ததால் தோஷம் என நம்புபவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள்.


ஆதிசங்கரர் பிரகாரத்தில் இருக்கிறார்..சித்திரையில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.


சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது 8 சப்பரங்களில், 8 நாயன்மார்கள் வீதம் 63 நாயன்மார்களும் வீதியுலா செல்வர். இவர்களுடன் சிவன், யானை வாகனத்தில் பவனி செல்வார்.

இத்தலத்து விநாயகர் செல்வ விநாயகர் எனப்படுகிறார்.

தல பெருமை:


பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில் இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து பின்பு வீதியுலா செல்வர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

தீப சிறப்பு :

அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதி எதிரில் அணையா நவசக்தி(ஒன்பது) ஜோதி தீபங்கள் உள்ளன. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள்.வெள்ளிக் கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன் சுத்தான்ன நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடக்கிறது.இந்த சன்னதிக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோர் அருகருகில் காட்சி தருகின்றனர். ஒரே சமயத்தில் கலைமகள், திருமகள், மலைமகள் தரிசனம் இங்கு கிடைப்பது விசேஷம்.

இங்குள்ள நந்தியின் முன்பு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை. இவருக்கு மாட்டுப்பொங்கலன்று விசேஷ பூஜை உண்டு.

ஜுரகண்டேஸ்வரர்:

மூலஸ்தானத்தில் ஜலகண்டேஸ்வரர் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். பக்தர்களின் உடல், மனதில் ஏற்படும் பிணிகளை நீக்குபவராக அருளுவதால், "ஜுரகண்டேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

இவருக்கு பக்தர்கள் ருத்ராபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். காலசம்ஹார மூர்த்தி உற்சவராகக் காட்சி தருகிறார். ஆயுள்விருத்தி பெற, விபத்து பயம் நீங்க இவருக்கு ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது, எண்பதாம் திருமணங்களும் (சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்) நடக்கின்றன. பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி விட்டு புது மாங்கல்யம் அணியும் பிரார்த்தனையும் உண்டு.

வேலூரில் காசி :

பிரகாரத்தில் ஒரு கிணறு உள்ளது. இதிலுள்ள நீரை கங்கை தீர்த்தமாக கருதுகின்றனர். கிணற்றின் அருகில் "கங்கா பாலாறு ஈஸ்வரர்' என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் இந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதன் பாணம் கூம்பு வடிவில் இருப்பது சிறப்பான அமைப்பு. லிங்கத்தின் பின்புறம் பைரவர் இருக்கிறார். காசியில் உள்ளது போல, சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் என மூன்றையும் தரிசிக்கலாம். எனவே, இந்த சன்னதியை, "வேலூர் காசி' என்று அழைக்கிறார்கள்.

கலையம்ச கல்யாண மண்டபம் :

கோயில் வளாகத்தில் வித்தியாசமான சிற்பங்களுடன் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, பெருமாளின் தசாவதாரம், நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், யோகாசனம் செய்யும் மகரிஷி, மேல் விதானத்தை தாங்கும் கிளிகள், தேவலோகப்பெண்கள் என கண்ணைக்கவரும் சிற்பங்களை வடித்திருக்கின்றனர்.


இவற்றின் அழகில் லயித்த ஆங்கிலேய தளபதி ஒருவர் இந்த தூண்களைப் பெயர்த்துச் செல்ல விரும்பினார். தூண்களின் வரிசை மாறக்கூடாது என்பதற்காக எண்களையும் பொறித்தார். மண்டபத்தை பெயர்த்துச் செல்ல கப்பலையும் வரவழைத்தார். ஆனால், அக்கப்பல் வழியிலேயே கடலில் மூழ்கி விட்டது. எனவே, அவர் திட்டத்தைக் கைவிட்டார்.

தல வரலாறு:


சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி, இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி புற்று வளர்ந்து, வேல மரங்களால் சூழப்பட்டது. பொம்மி என்பவர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். உடனடியாக லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. பெரிய கோட்டையுடன் அவர் கோயில் எழுப்பினார்.

சுமார் 650 ஆண்டுகளுக்குமுன்பு விஜயநகரப்பேரரசு காலத்தில் வேலூரில் சிற்றரசர்களாக இருந்த திம்ம ரெட்டி,பொம்மரெட்டி ஆகிய இருவரும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினர்.கோவிலுக்குப் பாதுகாப்பாக கோட்டையையும்,அகழியையும் உருவாக்கினார்கள்.

அதன்பின் 200 ஆண்டுகள் கழித்து,இன்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்பு திப்புசுல்தான் படையெடுத்து வரும் செய்தி,வேலூருக்கு எட்டியது.சாமி இருந்தால் தானே கோவிலை இடிப்பார்கள் என தீர்க்கமாக யோசித்த இந்துக்கள்,வேலூரில் இருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் சத்துவாச்சாரியில் 7 அடி உயரமுள்ள ஜலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தை மறைத்து வைத்தனர்.இருப்பினும், திப்புசுல்தான் படையெடுப்பில் கோவில் தாக்கப்பட்டு,சிற்பங்கள் சிதிலமடைந்தன.

1981-ம் வருடம் ஜலகண்டேஸ்வரர் வேலூர் கோட்டையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும் சில தகவல்கள் :

கோயிலின் தெற்கு புறத்தில் பிரதான நுழைவாயில் உள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழு நிலைகளை கொண்டது. கோபுரத்தின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளம்; இடது புறத்தில் கல்யாண மண்டபம். கோயிலின் ஒவ்வொரு தூணும் கண்ணைக் கவரும் புராண சம்பவ சிற்பங்களைக் கொண்டு, வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்திலும் உட்பிராகாரத்திலும் ஆலய சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட முழு நீள மண்டபம் அமைந்துள்ளது.

கோயிலில் உள்ள மண்டபம் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வட மேற்கில் வசந்த மண்டபமும், அதையட்டி சிம்ம கிணறும், வட கிழக்கில் வெளிப் பிராகார யாகசாலையும், தென் கிழக்கில் உற்சவ மண்டபம் மற்றும் வெளிப் பிராகார மடப்பள்ளியும் அமைந்துள்ளன.

கோயிலின் தனி சந்நதியில் வலம்புரி விநாயகர் அருளே உருவாகி அமர்ந்துள்ளார். அவரையடுத்து செல்வ விநாயகர், வெங்கடேசப் பெருமாள், வள்ளி&தேவசேனா உடனுறை சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நதிக்குச் செல்லலாம். அம்மன் சந்நதியின் சுற்றுப்புற சுவர்களில் விநாயகர், மாகேஸ்வரி, வைஷ்ணவி, பிராம்மி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்கிரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன. அகிலாண்டேஸ்வரி சந்நதியின் இருபுறமும் கம்பீரமாக துவார பாலகியர் உள்ளனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்கள், பிள்ளையார், சப்த கன்னியர், வீரபத்திரர் விக்கிரகங்களும் உள்ளன. உட்பிராகாரத்தில் மிக கம்பீரமாகவும், நெடிதுயர்ந்தும் துவார பாலகர்கள் ஜலகண்டேஸ்வரர் சந்நதி முன் நிற்கிறார்கள்.தன்னைச் சுற்றிலும் கோட்டையையும், அகழியும் கொண்டு ஆயிரமாயிரம் லீலைகளை நடத்திக் கொண்டிருக்கும் கம்பீரமான ஜலகண்டேஸ்வரரை காணும் போது நாம் மிகச் சாமானியர்களாக மாறி விடுவதை உணரமுடிகிறது. நீர் தத்துவத்திற்கு உரித்தான அவர் தரிசிப்போரின் தீவினைகளை கரையச் செய்கிறார். கடலளவு அன்பு கொண்டவர் இங்கு நம் பொருட்டு கருணைமிகு லிங்க மூர்த்தியாக அருள்கிறார்.



No comments:

Post a Comment