Monday 13 February 2017

சைவ சித்தாந்தம் - உண்மை நெறி விளக்கம்



உண்மை நெறி விளக்கம் என்னும் இந்நூல் மெய் கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் பதின்மூன்றாவதாக வைத்து எண்ணப்படுகிறது.

மெய்கண்ட சாத்திரங்களுள் சில நூல்கள் அளவால் மிகக் குறுகியவை. கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், வினா வெண்பா ஆகிய மூன்றும் அத்தகையன.

மற்றைய மெய்கண்ட நூல்களைப்பற்றியும், அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. உண்மை நெறி விளக்கத்தின் ஆசிரியரைப் பற்றி இரு வகைப்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒரு கருத்து, உண்மை நெறி விளக்கத்தை அருளியவர் சந்தான குரவர்களில் நாம்காமவராகிய ஆசிரியர் உமாபதி சிவம் என்பது. இக் கருத்துடையோர்கள் சிவப்பிரகாசம் திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சு விடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய எட்டு நூல்களையும் உமாபதி சிவம் அருளிச் செய்தார் என்று கொண்டு, இவை எட்டும் சேர்ந்து சித்தாந்த அட்டகம் என்று பெயர் பெறும் எனக் கூறுவர். இதே தலைப்பில் இவ் வெட்டு நூல்களும் ஒரு சேரப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

எண்ணும் அருள் நூல் எளிதின் அறிவாருக்கு
உண்மை நெறி விளக்கம் ஓதினான் வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவ நாதன்

என்னும் பாடல் இந்நூலின் சிந்தனை உரையில் பாயிரமாக அமைந்திருப்பதையும் அவ்வுரையின் இறுதியில் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் அருளிய துகளறு போதம் என்ற நூலில் விளக்கப் பெற்றுள்ள முப்பது அவதரமும்(நிலைகளும்) உண்மை நெறி விளக்கத்தின் ஆறு பாடல்களில் தசகாரியம் என அடக்கிக் கூறப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை மேற்கோளாகக் காட்டுகின்றனர். இக் கொள்கை யுடையவர்கள் இருபா இருபஃது நூலுக்குக் கிடைத்துள்ள பழமையான உரை ஒன்றின் இறுதியில் உள்ள ஒரு வெண்பாவை எடுத்துக்காட்டி மேலே குறிப்பிட்ட பாடலில் பின் இரண்டு அடிகளில் கூறப்படுபவர் பண்புடைய சிற்றம்பல நாடி தாள் பணியும், சண்பை நகர் தத்துவ நாதன் என்று ஆதாரம் காட்டுகின்றனர். அவ்வாறே அறிஞர் சிலருக்குக் கிடைத்துள்ள உமாபதி சிவத்தின் நூல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளில் உண்மை நெறி விளக்கம் காணப்படவில்லை என்று ஆதாரம் காட்டுவர். மரபுவழி கொள்ளப்படும் கருத்து உண்மை நெறி விளக்கம் ஆசிரியர் உமாபதி சிவத்தால் அருளப்பட்டது என்பதே ஆகும். மேலே கூறப்பட்ட பாயிரம் தவிர்த்து இந்நூல் ஆறு விருத்தப்பாக்களை உடையது. பாயிரம் சிந்தனை உரையின் இறுதியிலே காணப்படுகிறது.

மண் முதல் சிவம் அது ஈறாம் வடிவு காண் பதுவே ரூபம்
மண் முதல் சிவம் அது ஈறாம் மலம்சடம் என்றல் காட்சி
மண் முதல் சிவம் அது ஈறாம் வகைதனில் தான்நிலாது
கண் நுதல் அருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே

மண் முதலாகச் சிவம் ஈறாக அருள் நூல்கள் முப்பத்தாறு தத்துவங்களைக் கூறுகின்றன. அத்தகைய தத்துவங்கள் யாவற்றையும் அருள் நூல்கள் கூறகிற முறையில் முறைமை தவறாமல் கண்டு உணர்வதே தத்துவ ரூபம் எனப்படும். இத்தகைய முப்பத்தாறு தத்துவங்களும் சடம் ஆதலால் அவை தாமாகவே எதனையும் அறியமாட்டா. உயிர்தான் அவற்றுள் ஒன்றி நின்று அறியும் என்று உணர்வது தத்துவ தரிசனம் ஆகும். இவ்வாறு கண்ட உயிர் திருவருளின் துணையினாலே முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் விளைவையும் நன்கு தெளிந்து இவற்றோடு பொருந்தி நில்லாது விலகி நிற்றல் தத்துவ சுத்தி ஆகும். சைவ சித்தாந்த மெய்ப்பொருள் இயல் தத்துவங்கள் முப்பத்தாறு என்றும் தாத்துவிகங்கள் அறுபது என்றும் எடுத்துரைக்கின்றன. இவை இரண்டுமாகத் தொண்ணூற்று ஆறு ஆகும். இவற்றின் விளக்கங்களும் வகைகளும் உண்மை விளக்கம் சிவஞான சித்தியார் போன்ற நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தத்துவம் என்றால் உண்மை என்ற பொருள் தரும். உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகிய இவற்றைப் பகுத்தும் உயிர் இவற்றோடு பொருந்தி நிற்கும் முறைமையைக் கொண்டும் தத்துவங்கள் முப்பத்தாறு என்று கணக்கிடப்படுகின்றன. இத் தத்துவங்களை அறிதல் தத்துவ ரூபம் அல்லது தத்துவ வடிவு என வழங்கப்படும். இவற்றைத் தான் என மயங்காது இவை வேறு தான் வேறு எனவும், தத்துவங்கள் யாவும் அறிவற்ற சடப் பொருள் எனவும் ஞான ஆசிரியனால் உணர்த்தப்பட்டு உணர்வது தத்துவ தரிசனம் அல்லது தத்துவக் காட்சி என வழங்கப்படும். இறைவன் திருவருளால் இத்தத்துவங்களின் இயல்பை நன்கு அறிந்து அவற்றோடு கூடாமல் நீங்குவதே தத்துவ சுத்தி என்ற தத்துவத் தூய்மை ஆகும். இறைவன் உயிர் தளை ஆகிய முப்பொருள்களும் என்றும் உள்ளவை. இறைவன் முழு முதன்மையும் எண் குணங்களும் உடையவன். எண் குணங்களில் ஒன்று இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், நீங்குதல் என்பது இவ்விடத்தில் சேர்ந்திருப்பது பின் நீங்குவது என்ற பொருளைத் தராமல் பாசங்களால் பற்றப்படாத இயல்பு என்ற பொருளைத் தருகிறது. எனவே பாசங்கள் உயிரைப் பற்றுகின்றன. ஆணவ மலம் உயிரைத் தோற்றமில் காலம் தொட்டே பிணித்து அறியாமையே வடிவாக ஆக்கி விடுகிறது. உயிரின் அறியாமையைப் போக்குவதற்காக இறைவன் மாயையிலிருந்து தத்துவக் கூட்டங்களை உயிருக்குத் தருகிறான். அவற்றின் வழியாகவும் துணையோடும் உயிரின் அறிவு படிப்படியே வளர்ந்து உரிய பக்குவம் வந்த போது முத்தி நிலையை இறைவனருளால் எட்டுகிறது. தொடக்க நிலையில் உயிர் தான் வேறு தத்துவங்கள் வேறு என்று அறிவதில்லை. தத்துவங்களையே தானாகக் கருதிக் கொள்கிறது. இதனை விட்டு நீங்க வேண்டுமானால் இவற்றின் தன்மையை அறிந்து முதலில் தன்னை வேறாகக் காணல் வேண்டும் அவ்வாறு காண்பதுவே தத்துவ ரூபம் எனப்படும். அதை அடுத்துத் தத்துவங்களின் தன்மையை, இலக்கணத்தை, அவை அறிவற்றன என்பதை உணர்வதாகும். மூன்றாவது படிநிலையாக இத்தத்துவங்களை விட்டு நீங்கினால் அல்லது சிவப் பெறு கைவராது என்பதை அறிதல் வேண்டும் அதுவே தத்துவ சுத்தி எனப்படும். இம் மூன்று படிநிலைகளையும் முதற்பாடலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

பாயிருள் நீங்கி ஞானம் தனைக் காண்டல் ஆன்ம ரூபம்
நீயும்நின் செயல் ஒன்று இன்றி நிற்றலே தரிசனம் தான்
போய் இவன் தன்மை கெட்டுப் பொருளிற் போய் அங்குத் தோன்றாது
ஆய்விடில் ஆன்ம சுத்தி அருள் நூலின் விதித்தவாறே. 

பரந்த இருளாக எல்லா உயிர்களையும் பற்றிக் கொண்டிருக்கிற ஆணவ மலத்தின் பிடியிலிருந்து விலகித் தன்னுடைய சிற்றிவுக்கு அறிவுக்கு அறிவாக நின்று உதவுவது இறைவனுடைய பேரறிவே என்பதை உணர்வது ஆன்ம ரூபம் எனும் உயிரின் வடிவு. இறைவனின் பேரறிவு புலப்பட்டுத் தன் சிறுமையையும் உணர்ந்த உயிர் அவனுடைய பேரறிவுச் சத்தியின்றித் தனக்கென ஒரு ஆற்றல் இல்லை செயல் இல்லை என்பதை உணர்வது இதற்கு அடுத்த படிமுறையாகும். இது ஆன்ம தரிசனம் எனும் உயிர்க் காட்சி. இது முற்கூறியதற்கு அடுத்த படிநிலை. எல்லாம் சிவன் செயல் என்றுணர்ந்த உயிர் செயலின்றி நின்ற தன்மையோடு அமையாது நான் இதனை அறிகின்றேன் நான் இதனைச் செய்கின்றேன் எனத் தன்முனைப்போடு சுட்டியறிவும் அறிவும் நீங்கப் பெற்று இறைவன் திருவருளிலே ஒன்றித் தன்முனைப்பும் அற்று ஆணையாம் சிவத்தை சார்ந்து அதிலேயே ஒடுங்கி அவனே தானே ஆகிய அந்நெறியில் நிற்பது ஆன்ம சுத்தி எனப்படும் உயிரின் தூய்மை ஆகும். இவை மூன்றும் இறைவன் அருளிய ஆகமங்களில் கூறப்பட்ட முறைமை. ஞானம் என்பது திருவடி உணர்வாகிய சிவஞானம். இரவில் காண இயலாதிருந்த கண் காலையில் கதிரவன் தோன்றியதும் அதனைக் காண்கிறது. இதுவே ஆணவ மல மறைப்பில் இறைவனை அறிய ஒண்ணாது இருந்த உயிர் சிவானந்தத்தைக் காண்பதற்கு உவமையாயிற்று. இதுவே ஆன்ம ரூபம் எனப்படும். உயிர் தனித்து நின்று காணும் வல்லமையற்றது. ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்து நின்று தன்னைக் காணும் இயல்புடையது. இது வரை தத்துவங்களைச் சார்ந்து தத்துவம் வேறு தான் வேறு என உணராது இருந்த உயிர் இப்போது தன்னை இயக்குவிக்கும் திருவருள் ஆற்றலை யின்றித் தனக்கு ஒரு ஆற்றல் இல்லை என்பதை உணரும். இதுவே ஆன்ம தரிசனம் எனப்படும் உயிர்க் காட்சி. திருவடிப் பேற்றினுள் இறைவன் திருவருளால் அடங்கி அதன்பின் சிவத்தைச் சார்ந்து பின் அதனை விட்டு அகலாது குறைவற்ற அன்பினால் அப் பேரின்பத்தைத் தன்னை மறந்து துய்த்துக் கொண்டிருக்கும் நிலை ஆன்ம சுத்தி எனப்படும் உயிர்த் தூய்மை. இது வரை சொல்லப்பட்டவை முறையே தத்துவ ரூபம். தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி என்ற ஆறுமாகும். தத்துவங்களும் உயிரும் குற்றமுடையன ஆகையால் அவற்றின் வடிவு காண்டலும் இயல்பு காண்டலும் ஆகிய இரண்டு நிலைகளுக்குப் பின்னர் அவற்றின் தூய்மை நிலை பற்றிக் கூறப்பட்டது. இதை அடுத்த பகுதியில் பரம்பொருளாகிய சிவத்தைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார் ஆசிரியர். அது நான்கு வகையாகக் கூறப்படும். அவை முறையே சிவ ரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் என்பன. தூய்மையே வடிவான இறைவனுக்குத் தூய்மை கூற வேண்டுவதில்லை என்பது ஒன்று. உயிரின் குறிக்கோள் சிவத்தோடு ஒன்றுதலும் சிவப் பேரின்பத்தை நுகர்தலும் ஆகிய இரண்டுமே என்பது மற்றொன்று.

எவ்வடிவுகளும் தானாம் எழிற்பரை வடிவதாகிக் 
கல்வியமலத்து ஆன்மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண்டு அகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவன் என்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூபமாகும் அன்றே. 

உலகத்தில் காணப்படுகிற அறிவுஇல் பொருளும் அறிவுடைப் பொருளுமாகிய எல்லா வடிவங்களும் தானே ஆகி அவற்றொடு இரண்டறக் கலந்து நின்று எழில்மிக்க பராசத்தியையே தனக்கு வடிவமாகக் கொண்டு, மலத்தால் விழுங்கப்பட்டுக் கிடக்கும் ஆன்மாக்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக அவற்றுக்கு உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தந்து அவற்றின் இளைப்பாறுதலுக்காக ஒடுக்கிப் பின்னர் உளவாக்கி, பக்குவப்பட்ட உயிர்களுக்குப் பிறவிக் கடலில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டி அவற்றுக்கு வீடுபேறு வழங்குபவன் சிவபெருமான் ஒருவனே என்று செம்மையாக உயிர் உணர்வதே சிவரூபம் ஆகும். எவ்வடிவுகளும் தானாம் என்ற பகுதிக்கு சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவம் மகேசுவரன் உருத்திரன் மால் அயன் என்ற நவம்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்(சித்தியார் 164) என்ற சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தின் அடிப்படையிலும் பொருள் கொள்ளுவர். எழிற்பரை என்பது கருணை நிறைந்த பராசக்தியைக் குறித்து நின்றது உயிர்களை உய்விப்பதற்காக அவற்றைப் பிறப்பு இறப்புட் செலுத்தி வினையைக் கழிப்பது இறைவனின் திருவருள் ஆதலால் அருளது சத்தியாகும் அரன் தனக்கு (சித்தியார் 239) எனப் பெரியோர் உரைப்பர். தோற்றமில் காலம் தொட்டே உயிர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் ஆணவ மலம் நீங்குதற் பொருட்டே இறைவன் ஐந்தொழில் இயற்றுகிறான். ஆதலால் கவ்விய மலத்து ஆன்மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கி பவ்வம் மீண்டு அகலப்பண்ணி என்று உரைத்தார் ஆசிரியர். ஐந்தொழிலும் இயற்றுவானும் உயிர்களுக்கு வீடுபேறு தருவானும் சிவபெருமான் ஒருவனே என்ற தெளிவும் அப்பெருமானின் வடிவம் தடையிலா ஞானமாகிய திருவருள் ஆற்றல் என்று ஐயமும் திரிபும் இன்றிக் காண்டல் சிவரூபம் எனப்படும் சிவவடிவமாகும்.

பரைஉயிரில் யான் எனது ஒன்று அறநின்றது அடியாம்
பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றல் அதுமுகமாம்
உரை இறந்த சுகம் அதுவே முடியாகும் என்று இவ்
உண்மையினை மிகத் தெளிந்து பொருள்வேறு ஒன்று இன்றித்
தரைமுதலில் போகாது நிலையினில் நில்லாது
தற்பரையில் நின்று அழுந்தாது அற்புதத்தின் ஆகும்
தெரிவு அரிய பரமானந்தத்தில் சேர்தல்
சிவன் உண்மைத் தரிசனமாய்ச் செப்பும் நூலே

யான் எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் அறவே நீங்குமாறு உயிரில் திருவருள் பதிதல் சிவபெருமானது திருவடி ஆகும். பார்க்கும் இடம் எங்கும் அசைவனவும் நின்றனவுமாகிய பொருள்கள் எல்லாம் சிவபெருமானாகவே தோன்றுதல் அவனது திருமுகம் ஆகும். இதன் விளைவாகச் சொல்லுக்கு அடங்காமல் தோன்றும் பேரின்பமே அப்பெருமானது திருமுடியாகும். இவ்வாறு அறிந்து உண்மை தெளிந்து இறைவனைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை உணர்ந்து மண் முதலாகிய தத்துவங்களைச் சேர்ந்து பிறவியுட்படாமலும் தன் முனைப்பாகிய செருக்கினில் அழுந்தாமலும் இவ்வாறு அறிதற்குத் துணையாக நின்ற திருவருளை உணர்ந்து அதனோடு அமையாது அதற்கு அப்பாலும் சென்று அதனால் விளைகின்ற தெரிதற்கரிய பேரின்பத்தில் திளைத்திருத்தல் சிவதரிசனம் ஆகும் என்று சிவாகமங்கள் கூறும். என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவர் அருளியுள்ளது இங்கு நினைவு கூருதற்குரியது. பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே என்ற தாயுமானவர் வாக்கும் இதனை உணர்த்தும். சிவப் பேரின்பம் இத்தகையது என்று சொல்லால் உணர்த்த இயலாது என்பதனைத் திருஉந்தியார்.

இங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ஙன் இருந்தது என்று உந்தீபற
அறியும் அறிவு அது அன்று உந்தீபற
என்று அருளிச் செய்கிறது.

தரை முதலில் போகாது என்பது தத்துவ உயப்படாது என்று பொருள் தரும். முதற்பாடலில் மண் முதல் என்று சொல்லப்பட்ட கருத்து இங்குத் தரை முதல் என்று சொல்லப்பட்டது.

திருவருள் வழியே சென்று சிவத்தினை அடைதல் வேண்டும் என்பதை வலியுறுத்துவற்காக தற்பரையில் நின்று அழுந்தாது அற்புதத்தின் ஆகும் தெரிவு அரிய பரமானந்தத்தில் சேர்தல் என்று விதந்து கூறினார். எப்பொருள் வந்து உற்றிடினும் அப்பொருளைப் பார்த்து அங்கு
எய்தும் உயிர்தனைக் கண்டு இங்கு அவ்வுயிர்க்கு மேலாம்
ஒப்பில் அருள் கண்டு சிவந்து உண்மை கண்டு இங்கு
உற்றது எல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச் செய்வதும் அதுவே நினைப்பும் அதுதாவே
தரும் உணர்வும் பொசிப்பும் அதுதானே ஆகும்
எப்பொருளும் அசைவு இல்லை என அந்தப் பொருளோடு
இசைவதுவே சிவயோகம் எனும் இறைவன் மொழியே.

உலகியல் பொருள்கள் எதனோடு பொருந்த நேரிடினும் அப்பொருள் அறிவற்றதாயும் சடமாயும் அழிந்து போகிற தன்மையுடைய தளை என்றும் அறிந்து அதன் உண்மையை உணர்ந்து உயிரின் உண்மையான நிலைமை தனக்கென ஒன்று இன்றித் தன்னிலும் மேலான திருவருளின் துணை கொண்டு செயல்படுவதே என்பதை அறிந்து, அவ்அருளின் வழியாக சிவ பரம்பொருளின் உண்மையை உணர்ந்து அதனுள் அடங்கி, மறப்பும் நினைப்பும் அறிவிக்க அறியும் ஆன்மாவும் வினை நுகர்வும் சிவமே யாகும் என்பதையும் உணர்ந்து அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதையும் தெளிந்து சிவத்தோடு பொருந்துவதே சிவயோகம் என்று இறைவன் மொழியாகிய ஆகமங்கள் கூறுகின்றன. தப்பு என்பது அதன் பின்னர்க் கூறப்படுகின்ற நினைப்பு என்ற சொல்லுக்கு மறுதலைப் பொருளை உணர்த்துதால் இங்கு அது மறப்பு என்று பொருள் கொள்ளப்பட்டது. பொசிப்பு என்பது நுகர்வு என்ற பொருளைத் தரும். பாதகங்கள் செய்திடினும் கொலை களவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறி பயிற்றிவரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள் வந்திடினும்
தனக்கு என ஓர் செயல் அற்றுத் தான் அதுவாய் நிற்கில்
நாதன் அவன் உடல்உயிராய் உண்டு உறங்கி நடந்து
நானா போகங்களையும் தான் ஆகச் செய்து
பேதம் அற நின்று இவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகம் எனப் பேசும் நெறிஇதுவே.

சிவ யோகத்தில் பொருந்தியவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்துத் தவறுகள் செய்திடினும் கொலை களவு கள்ளுண்ணல் போன்றவற்றைச் செய்யினும் அறநெறி சாராத நெறியில் ஒழுகினும், குலத்துக்கு ஒவ்வாத குற்றங்கள் செய்யினும் அல்லது குற்றம் இழைக்காமலே பழிவந்து சேர்ந்தாலும், அவர்கள் ஏகனாகி இறை பணி நிற்பவர்கள் ஆகையால் இறைவன் அவர்கள் செயலை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டு அவர்களையும் தானாகச் செய்வன். இதுவே சிவபோகம் என்று கூறப்படும். பாதகம் செய்திடலுக்குச் சண்டேச நாயனாரையும் கொலைக்குக் கோட்புலி நாயனார் வரலாற்றையும், நெறியல்லா நெறி என்பதற்கு மூர்க்க நாயனாரையும் இவ்வாறே பொருந்தும் அடியார் வரலாறுகளைப் பொருத்திக் காண்க.


சிவஞான, சித்தியாரில் இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
இதம்அகிதம் இவனுக்குச் செய்தார் பால் இயையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகன் ஆகி
அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும்இவன் செய்திஎலாம் என்செய்தி என்றும்
செய்தது எனக்கு இவனுக்குச் செய்தது என்றும்
பவம்அகல உடனாகி நின்றுகொள்வன் பரிவால்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே

எனக் கூறப்பட்ட திருப்பாடல் இருக்கருத்தை வலியுறுத்தும்.

சுத்த நிலை 

இத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் வேண்டும். திருவருள் உயிருக்கு அப்பால் எங்கேயோ உள்ளது என்று எண்ணவேண்டா. உயிரிடத்தேயே எப்போதும் உடனாக உள்ளது. அதனை நாம் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். உடற்சார்பும் உலகச் சார்பும் ஆகிய பற்றுக்களே நம்மைத் திருவருளை நோக்காதபடி செய்கின்றன. அப்பற்றுக்கள் அறுந்தால் அக்கணமே திருவருளின் இருப்பைத் தெற்றென உணர்ந்து கொள்வோம். கயிறுகளால் கட்டப்பெற்ற ஊசலின் மேலிருந்து ஆடிக்கொண்டிருக்கின்ற வரையில் நிலம்தான் ஆதாரமாக இருந்து தாங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வதில்லை. கயிறுகள் அறுந்து கீழே விழும் போதில் நிலம் நம்மைத் தாய் போலத் தாங்கிக் கொள்ளும் போதுதான் அவ்வுண்மையை அனுபவமாக உணர்வோம் அதுபோல, அற்றது பற்றெனில் திருவருளை உற்றவராவோம். உயிரறிவில் கலந்திருக்கின்ற இறைவனது அறிவே திருவருள் என்பது அப் பேரறிவே மறைந்து நின்று கருவி கரணங்களின் வழியாக உயிருக்குச் சிற்றறிவே விளக்கி வருகிறது. இது திருவருளை உணர்வதற்கு முந்திய நிலை. கயிறு அறுந்த ஊசல் போலத் திருவருட் சார்பை உயிர் பெற்றுவிட்டால் அத்திருவருள் ஞானம் தானே முன்நின்று அவ்வுயிருக்கு நேரே உணர்த்தும். அந்நிலையில் மனம் முதலிய கருவி கரணங்கள் உயிருக்குத் தேவையில்லாமற் போகின்றன. ஓர் எடுத்துக் காட்டினால் இதனை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். இரவு நேரத்தில் விளக்கு எரிந்து தனது சிற்றொளியால் இருளைச் சிறிதே ஒட்டிப் பொருளைக் காட்டுகிறது. விடிந்து சூரியவொளி தோன்றி எல்லாவற்றையும் தெளியக் காணுகிற நிலை வந்த பின்னரும் விளக்கு எரியுமானால் அவ்விளக்கொளி என்ன பயனைச் செய்யும்? ஆகவே விளக்கை நாம் அணைத்து விடுகிறோம். தேவையற்ற அதனை எடுத்து அப்புறமாய் வைத்து விடுகிறோம். உடம்பும், அதிலுள்ள கருவி கரணங்களும் இரவில் எரியும் விளக்குப் போன்றவை. அஞ்ஞானத்தை ஓரளவு நீக்கிச் சிற்றறிவைக் கொடுப்பவை. திருவருளாகிய சூரியவொளி வந்து பிறகு, சிற்றறிவும் அதனை விளங்கச் செய்யும் கருவி கரணங்களும் பகல் விளக்குப் போல நீங்குதற்கு உரியவாகி விடுகின்றன. அக்கருவிகளின் துணையில்லாமலே, திருவருள் நேரே அறிவிக்க அதனால் எல்லாவற்றையும் அறிகின்ற விரிந்த அறிவு உண்டாகும். கருவிகளைக் கொண்டு அறிவு விளங்குகின்ற நிலையே சகலம் என்று கூறப்படும் ஆகலின், கருவிகளின் துணையின்றி அறிவதாகிய அருள்நிøயில் சகலமாகிய நிலை பகல் விளக்குப் போல ஆகிவிடும். அருள்நிலையில் அறியாமையாகிய இருள் முற்றிலுமாக நீங்கி விடும் ஆதலால், கேவலமாகிய நிலை நிகழ்வதில்லை. இங்ஙனம் சகல கேடலங்கள் நிகழாமல் உயிர் திருவருளில் அழுந்தி நிற்கின்ற நிலையே சுத்த நிலை எனப்படும். இவ்வுலகில் வாழும் போதே இச் சுத்தநிலையை அடையலாம்.

மாணவர் கேட்கும் வினாக்கள் 

ஆறாறு தத்துவம்ஏது ஆணவம்ஏது அன்றேதான்
மாறா வினைஏது மற்றிவற்றின் வேறாகா
நான்எது நீஏது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தான்ஏது தேசிகனே சாற்று. 

ஆறு ஆறு தத்துவம் ஏது சைவ சமயத்தில் கொள்ளப்படுகிற முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பு யாது?

ஆணவம் ஏது சைவ தவிரப் பிற மதங்களில் கொள்ளப்படாத ஆணவம் என்னும் பொருளின் இயல்பு யாது? அன்றேதான் தொன்றுதொட்டே மாறா நீங்காமல் தொடர்ந்து வருகிற வினை ஏது கன்மத்தின் இயல்பு யாது?
மற்று, இவற்றின் இத்தத்துவங்கள், ஆணவம், கன்மம் ஆகிய இவற்றிற்கு வேறாகா வேறாகாமல் அவற்றோடு கூடி அவையேயாக ஒற்றுமைப்பட்டு வருகின்ற நான் ஏது என் இயல்பு யாது?
நீ ஏது குருவாக எழுந்தருளி வந்துள்ள நும் இயல்பு யாது?
நாதன் நடம் ஏது முதல்வன் இயற்றும் திருக்கூத்தின் இயல்பு யாது?
அஞ்செழுத்து ஏது திருவைந்தெழுத்தின் இயல்பு யாது?
தான் ஏது முத்தியின் இயல்பு யாது?
தேசிகனே குரு முதல்வரே சாற்று இவ்வினாக்களுக்கு விடை கூறியருள்க

பொழிப்புரை 

1. முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பு யாது? 
2. ஆணவத்தின் இயல்பு யாது?
3. தொன்று தொட்டு ஆணவத்தோடு தொடர்ந்து நீங்காமல் வரும் வினையின் இயல்பு யாது?
4. இத்தத்துவங்கள், ஆணவம், வினை ஆகியவற்றிற்கு வேறாகாமல் அவற்றோடு கூடி ஒற்றுமைப் பட்டு வரும் என் இயல்பு யாது?
5. என் அறியாமையை நீக்கி உண்மையை உணர்த்த வந்தருளிய நும் இயல்பு யாது?
6. இறைவன் இயற்றும் நடனத்தின் இயல்பு யாது?
7. திருவைந்தெழுத்தின் இயல்பு யாது?
8. முத்தியின் இயல்பு யாது? குரு முதல்வரே, இவற்றிற்கு விளக்கம் கூறியருள்வீராக என்று மாணவர் ஆசிரியரிடம் வேண்டுகிறார்

விளக்கம் வினாக்களின் வைப்பு முறை

தத்துவங்கள் என்பவை மாயையிலிருந்து தோன்றிய காரியப் பொருள்கள். எனவே முதல் வினா மாயையைப் பற்றியதாகக் கொள்ளலாம். இரண்டாம் வினா ஆணவத்தைப் பற்றியதாகவும், மூன்றாம் வினா கன்மத்தைப் பற்றியதாகவும் அமைதலின், முதல் மூன்று வினாக்களும் பாசம் பற்றியவை என்பது விளங்கும். நான்காம் வினாவாகிய நான் ஏது என்பதில் உள்ள நான் என்ற சொல் முதலில் மாணவரைக் குறித்துப் பின் பசுவாகிய உயிரைக் குறிப்பதாயிற்று. அவ்வாறே ஐந்தாம் வினாவாகிய நீ ஏது என்பதில் நீ என்பது ஞானாசிரியரைக் குறிப்பதாலும், ஞானாசிரியர் சிவமே யாதலாலும் அவ்வினா பதியாகிய இறைவனைப் பற்றியதாயிற்று. இவ்வாறு முதல் ஐந்து வினாக்களும் பாசம், பசு, பதி ஆகிய முப்பொருள்களின் இயல்பு பற்றியன என்பது புலனாகும். பாசம் நமக்குத் தெரிந்த பொருளாதலின் அதனை முன் வைத்தார். இவற்றின் வேறாகா நான் என்றதனால் அப்பாசத்தோடு கூடி அதன் வசப்பட்டிருக்கின்ற பசுவை அடுத்து வைத்தார். குருவாகி வந்து உண்மையை உணர்த்திப் பாசத்தினின்றும் விடுவிக்கின்ற பதியை அதன்பின் வைத்தார் என இவ்வாறு பொருத்தம் காணலாம். ஆறாவது வினா நாதன் நடம் பற்றியது. இறைவன் செய்யும் ஐந்தொழிலே நடனம் எனப்படுதலின், அதுவும் பதியின் இயல்பாய் அமைதலின் அதுபற்றிய வினாவை ஐந்தாம் வினாவிற்குப் பின் வைத்தது பொருத்தமேயாகும்.

இவ்வாறு முப்பொருள்களின் இலக்கணத்தைக் கூறி முடித்த பின், சாதனமாகிய திருவைந்தெழுத்தைப் பற்றிய ஏழாம் வினாவை அமைத்துக் கொண்டார். சாதனத்திற்குப் பின் பயனைக் கூறுவது முறை. எட்டாவது வினா முத்தியாகிய பயனைப் பற்றியதாகும். முத்தியைக் குறிப்பதாகச் செய்யுளில் என்ன சொல் இருக்கிறது? நான்காம் அடியிலுள்ள தான் ஏது என்பதில் உள்ள தான் என்பதே முத்தியைக் குறிப்பதாகும். அச் சொல் எவ்வாறு முத்தியைக் குறிக்கும் என்பதைப் பார்ப்போம்.

உயிர் எதனை எதனைச் சார்கிறதோ அதன் அதன் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்பது. இப்பிறப்பு நிலையில் உயிர் உடம்பைச் சார்ந்து உடம்பின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு உடம்பாகவே நிற்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வாறே முத்தி நிலையில் உயிர் சிவத்தைச் சார்ந்து சிவத்தின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு சிவமாகவே நிற்கும். சிவம் தன்னையே தந்து உயிரைத் தன் வண்ணம் ஆக்கிவிடும். மாணிக்கத்தைச் சார்ந்த பளிங்கு தன்னிடத்தே மாணிக்கத்தின் நிறத்தை முழுதுமாகப் பெற்று மாணிக்கமே என்று சொல்லும்படியாக நிற்பது போன்றது இது. இதுவே தானாதல் ஆகிய முத்திநிலை. தான் என்பது சிவத்தைக் குறிக்கும். எனவே தானாதல் என்பது சிவமாதல் எனப் பொருள்படும். தானாதல் என்பதே செய்யுளில் தான் என நின்று முத்தியைக் குறிப்பதாயிற்று.

வினாக்களுக்கு உரிய விடைகள் அமைந்துள்ள செய்யுட்கள் 

நூலில் வரும் வினாக்கள் எட்டினுக்கும் உரிய விடைகள் அமைந்துள்ள செய்யுட்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வினாக்கள் விடைகள் முதல் வினா(தத்துவங்கள் பற்றியது) 4 முதல் 21 முடிய உள்ளவை (18 செய்யுட்கள்)
இரண்டாம் வினாவும் மூன்றாம் வினாவும் 22ஆம் செய்யுள் மட்டும்
(ஆணவமும் வினையும் பற்றியவை) நான்காம் வினா(உயிர் பற்றியது) 24 முதல் 26 முடிய உள்ளவை(3 செய்யுட்கள்)
ஐந்தாம் வினா(இறைவனைப் பற்றியது) 27 முதல் 29 முடிய உள்ளவை(3 செய்யுட்கள்)
ஆறாம் வினா(நாதன் நடம் பற்றியது) 31 முதல் 38 முடிய உள்ளவை(8 செய்யுட்கள்)
ஏழாம் வினா(அஞ்செழுத்துப் பற்றியது) 40 முதல் 44 முடிய உள்ளவை(5 செய்யுட்கள்)
எட்டாம் வினா(முத்தி நிலை பற்றியது) 45 முதல் 48 முடிய உள்ளவையும், 50 முதல் 52 முடிய உள்ளவையும்(7 செய்யுட்கள்)

விடையாக அமைந்த 45 செய்யுட்களும் ஆசிரியர் கூற்றாதல் வெளிப்படை, அவற்றோடு, 3ஆவது செய்யுள் விடைகூற இசைந்தமையைத் தெரிவிக்கும் ஆசிரியர் கூற்றாக உள்ளது. இனி, 1,2,23,30,39,49,53 ஆகிய ஏழு செய்யுட்கள் மாணாக்கர் கூற்றாக உள்ளன. இவற்றோடு முதலில் உள்ள காப்புச் செய்யளையும் சேர்க்க, இந் நூற்செய்யுட்கள் 54 ஆதல் காணலாம்.

ஆசிரியர் விடை கூறப் புகுதல் 

3. உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உன்றனக்கு
வள்ளல் அரு ளால்அன்று வாய்மலர்ந்த தெள்ளிய சீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ் புதல்வா உற்று. 

பதவுரை 

ஆனந்த யோகம் சிவானந்த நிலையை அடைவிக்க வல்ல யோக நெறியில்
நிகழ் புதல்வா நிற்கின்ற நன் மாணாக்கனே!
வள்ளல் சிவபெருமான்
அருளால் உயிர்கள்மீது கொண்ட கருணையினால்
அன்று முற்காலத்தே
வாய் மலர்ந்த ஆக்கியருளிய
தெள்ளிய சீர் தெளிவும் சிறப்பும் மிக்க
ஆகமங்கள் சிவாகமங்கள்
சொன்ன சொல்லிய
அடைவிலே முறையிலே
இத்தை இதனை(நீ அறிய விரும்பும் ஞானப் பொருளை)
உன் தனக்கு உனக்கு
உள்ள படி உள்ளவாறு
உரைக்க யாம் சொல்ல, 
உற்றுக் கேள் நீ மனம் பொருந்திக் கேட்பாயாக

பொழிப்புரை 

சிவானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் யோக நெறியில் நிற்கின்ற நன்மாணாக்கனே! சிவ பிரான் முற்காலத்தில் ஆன்மாக்களின் மீது கொண்ட அருள் காரணமாக ஆகமங்களை ஆக்கியருளினார். சிறப்பு மிக்க அச்சிவாகமங்கள் உணர்த்தும் ஞானநெறியை அவற்றில் உள்ளபடி யாம் உனக்கு உரைப்போம். உளம்பொருந்திக் கேட்பாயாக என்று ஆசிரியர் கூறத் தொடங்குகிறார்.

விளக்கம் 

வள்ளல் அன்று வாய்மலர்ந்த ஆகமங்கள்
சிவபெருமானே வேதங்களையும் ஆகமங்களையும் அருளிச் செய்தார் என்பது சைவ சமயத்தின் கொள்கை. அவற்றை அவர் அருளிச் செய்தது, சதாசிவ மூர்த்தி என்னும் நிலையில் இருந்தேயாகும். சதாசிவ வடிவம் என்பது ஐந்து முகங்களும் பத்துக் கைகளும் உடையது. கிழக்கு முதலிய நான்கு திசைகளை நோக்கினவாக நான்கு முகங்களும், அவற்றின் மேல் நடுவே வானத்தை நோக்கியதாக ஒரு முகமும் இருக்கும். மேல் நோக்கிய உச்சிமுகம் ஈசானம் எனப்படும். கிழக்கு நோக்கிய முகம் தற்புருடம் எனப்படும். தெற்கு நோக்கிய முகம் அகோரம் எனப்படும். வடக்கு நோக்கிய முகம் வாமதேவம் எனப்படும். மேற்கு நோக்கிய முகம் சத்தியோ சாதம் எனப்படும். மேற்கூறியவாறு சிவபெருமான் சதாசிவ வடிவம் தாங்கி நின்று, கீழ் நின்ற நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் மேல் நிற்கும் ஈசான முகத்தால் சிவாகமங்களையும் அருளிச் செய்தார். உச்சியில் உள்ள ஈசானம் என்னும் ஒரு முகமே கிழக்கு முதலிய திசைகளை முறையே நோக்கித் தற்புருடம் முதலிய நான்கு முகங்களாயும் நிற்கும். அந்த நான்கு முகங்களாலும் முகம் ஒன்றுக்கு ஐந்து ஆகமங்களாக இருபது ஆகமங்களையும், இயல்பான ஈசான நிலையில் நின்ற அம்முகத்தால் எட்டு ஆகமங்களையும் சதாசிவ மூர்த்தி அருளினார் என்பர்.

சத்தியோ சாத முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்பன. வாமதேவ முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்பன. அகோர முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் விசயம், நிச்சுவாசம், கவாயம்புவம், ஆக்கினேயம், வீரம் என்பன. தற்புருட முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் இரவுரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம் என்பன. ஈசான முகத்தால் சொல்லப்பட்ட எட்டு ஆகமங்கள் புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என்பன. இந்த இருபத்தெட்டு ஆகமங்களே மூல ஆகமங்கள் எனப்படுகின்றன. இந்த ஆகம நூல்கள் உபதேச முறையில் வழிவழியாக இடைவிடாது வந்து உயிர்களுக்கு மெய்ந் நெறியைக் காட்டுதல் வேண்டும் எனக் கருதி, அவ்ஆசிரிய வழி முறையை உண்டாக்குதற் பொருட்டுச் சதாசிவப் பெருமான் மூலாகமங்கள் இருபத்தெட்டினையும் இருபத்தெண்மருக்கு உபதேசித்தருளினார். அவ்வாறு அவரிடம் ஆகமங்களை நேரே கேட்டவர்கள் சிவர்கள் எனவும், உருத்திரர்கள் எனவும் இருவகைப்படுவர். சிவர் எனப்படுவோர் பத்துப் பேர். அவர்களுள் பிரணவர் என்பவர் முதன்மையானவர். உருத்திரர் எனப்படுவோர் பதினெட்டுப் பேர். அவர்களுள் மகாருத்திரர் முதன்மையானவர்.

பிரணவர் முதலிய பத்துச் சிவர்களுக்குக் காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாக உள்ள பத்துச் சிவாகமங்களை ஒருவருக்கு ஒன்றாக உபதேசித்தருளினார். மகாருத்திரர் முதலிய பதினெட்டு உருத்திரர்களுக்கு எஞ்சியுள்ள விசயம் முதல் வாதுளம் ஈறாக உள்ள பதினெட்டுச் சிவாகமங்களை ஒருவருக்கு ஒன்றாக உணர்த்தியருளினார். இனி, வித்தியேசுவரர் என்று சொல்லப் பெறுவோர் எட்டுப் பேர் உள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் அனந்த தேவர் இந்த ஆனந்த தேவர் வாயிலாகவே சிவபெருமான் அசுத்த மாயையைத் தொழிற்படுத்தவார். மேற்கூறியபடி பிரணவர் முதலியோர்க்குத் தனித் தனியே ஒவ்வோர் ஆகமத்தை உபதேசித்த சதாசிவ மூர்த்தி அதன் பிறகு அனந்த தேவருக்கு அவ்விருபத்தெட்டு ஆகமங்களையும் ஒருங்கே தொகுத்து உபதேசித்தார். இம்முறையில் எல்லா ஆகமங்களையும் கேட்டுணர்ந்த அனந்த தேவர் தமக்குக் கீழ் உள்ள உருத்திரர்களுள் முதல்வராய் விளங்கும் சீகண்ட ருத்திரருக்கு அவ்வாகமங்களையெல்லாம் உபதேசித்தார். சீகண்ட ருத்திரர் கைலாயத்தில் தமது அருகிலே இருக்கும் நந்தி பெருமானுக்கு அவ்விருபத்தெட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தார். நந்தி பெருமான் அவற்றைத் தேவ இருடிகளுக்கு உணர்த்தினார். அம் முனிவர்கள் அவற்றை நிலவுலகில் உள்ள பக்குவ ஆன்மாக்களுக்கு உணர்த்தினர். இது சிவாகமங்கள் நிலவுலகில் வந்த வரலாறாகும். யோகம் நிகழ் புதல்வா என்ற விளியின் உட்பொருள் நல்லாசிரியரது உபதேசம் மாணாக்கனது அறிவில் பக்குவம் இருந்தாலே விளங்கும். பக்குவம் என்பது ஆசிரியர் அறிவுறுத்தும் உண்மையை விளக்கமில்லாதும், பொருள் மாறுபடவும் உணராமல், உள்ளவாறு உணரும் நிலையாகும். இந்தப் பக்குவம், ஆன்ம அறிவை ஆணவ மலம் பற்றியுள்ள வரையில் உண்டாகாது. அம் மலம் அறிவைத் திசை திருப்பி, இழிந்த உலகப் பொருளையே பெரிதாக மதித்து அதனையே நாடும்படியாகச் செய்யுமேயன்றி, உயர்ந்த ஞானப் பொருளில் நாட்டத்தைச் செல்லவிடாது. எனவே ஆணவ மலத்தின் ஆற்றல் தேய வேண்டும். மலத்தின் ஆற்றல் தேயத் தேய, ஆன்ம அறிவு சிறிது சிறிதாக விளக்கம் பெற்றுப் படிப்படியே பக்குவம் எய்தும். ஆணவ மலத்தின் ஆற்றல் எவ்வாறு தேயும் எனில், பதியைத் தொழுதல் ஆகிய தவத்தினாலேயே மல ஆற்றல் தேய்வதாகும். அத்தவம் சரியை, கிரியை, யோகம் என மூன்றாய் நிகழும். அவற்றுள் சரியை என்பது திருக்கோயில் வழிபாடு செய்தல், அடியார்களைச் சிவன் எனவே கருதி வழிபடுதல் முதலியன. இது புற வழிப்பாடு என்பது புலனாகும். கிரியை என்பது தம் தம் இல்லங்களில் சிவலிங்கப் பெருமானை ஆன்மார்த்த மூர்த்தியாக எழுந்தருளுவித்துக் கொண்டு அகத்தும் புறத்தும் வழிபடுதல். இதில் உடலோடு உள்ளமும் ஈடுபடுவதால் புறமும் அகமும் கலந்த வழிபாடாகிறது. யோகம் என்பது மனத்தை அடக்கி ஒருவழியில் நிறுத்தி இறைவனை அகக் காட்சியிற் கண்டு அவனோடு உள்ளம் ஒன்றுபடுதல். இஃது அக வழிபாடு ஆகும். சரியை கிரியை யோகம் ஆகிய இவ்வழிபாட்டினை உலகப் பற்றுடன் செய்யாமல், பற்றற்ற நிலையில் செய்தால் அதுவே உண்மைத் தவம் ஆகும். உண்மைத் தவத்தினால் ஆன்மாவினது அறிவு மேலும் மேலும் நுணுகி வரும். அது நுணுகி வர வர, அதனை மறைத்து நின்ற ஆணவ மலமும் அதற்கேற்பத் தேய்ந்து தேய்ந்து வரும். அந்நிலையில் அவ்வான்ம அறிவின் கண் இறைவனது திருவருள் பதிந்து மேம்பட்டு விளங்கி வரும். அதனால் உலக இன்பத்தில் வெறுப்பும், வீட்டின்பத்தில் விருப்பும் வளர்ந்து வரும். ஞான நெறியில் மனம் செல்லும், இப் பக்குவநிலை உடையவரே சீடராதற்கு ஏற்றவர். இங்கே, ஆசிரியர் மாணாக்கரை நோக்கி யோகம் நிகழ் புதல்வா என அழைக்கிறார். அம்மாணாக்கர் சரியை கிரியைகளை முற்றச் செய்து, யோக நெறியில் நின்று அதன் பயனாக ஞானத்தைப் பெறுதலில் வேட்கையுற்று இவ்வினாக்களைக் கேட்கின்றார் ஆகலின் தாம் கூறும் விடைகளை வாங்கிக் கொள்ளும் பக்குவம் அவர்க்கு இருத்தலை நோக்கியே இவ்வாறு அழைக்கின்றார் என்று கொள்ளலாம்.

பாசம் - ஆறாறு தத்துவங்கள் இனி, ஆறாறு தத்துவம் ஏது? என்ற முதல் வினாவுக்கு விடையளிக்கின்றார் ஆசிரியர். அவ்விடைகள் மிகவும் சுருக்கமாகவே உள்ளன. இப்பொழுதே நேராக நாம் செய்யுட்குச் சென்றால் பொருளை விளங்கிக் கொள்வதில் சிக்கலும் சிரமமும் ஏற்படும். ஆதலால் முதலில் தத்துவங்களைப் பற்றி ஒரளவு விரிவாகத் தெரிந்து கொள்வோம். முன்கூட்டியே தத்துவங்கள் தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொண்டால் பின் செய்யுட்களை விளங்கிக் கொள்ளுதல் எளிதாகும்.

மாயை என்னும் மூலப் பொருள் ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருளெல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு நாம் கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை, கழுத்தில் அணியும் நகை முதலியவையெல்லாம் பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களேயாகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள் அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தாம் என்பது புலனாகும் நாம் வாழுகின்ற இப்பெரிய நிலவுலகையே எடுத்துக் கொள்ளுங்கள். மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின் சேர்க்கையால் உருவானது தானே இவ்வுலகம். எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே. முதலாசிரியராகிய மெய்கண்டார் உலகம் காரியப் பொருள் என்பதைப் பின்வருமாறு உணர்த்துவார். உலகில் எண்ணற்ற பொருள்கள் காணப்படுகின்றன. அவையெல்லாம் உலகின் பகுதிகளாக உள்ளன. அப்பகுதிகளெல்லாம் சேர்ந்த காரியப் பொருள் தான் உலகம். உலகின் பகுதிகளாய் அமைந்த சடப்பொருள்கள் அனைத்தையும் இரண்டு வகையுள் அடக்கி விடலாம். பல்வேறு பிறவிகளாகக் காணப்படும் உடம்புகளாகிய சடப் பொருள்கள் எனபன ஒருவகை. உடம்பு அல்லாத பிற சடப் பொருள்கள் எல்லாம் இரண்டாம் வகை. நிலம், நீர் முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப்படும் சிறு பொருள்களும் ஆகிய எல்லாம் இரண்டாம் வகையில் அடங்கிவிடும். முதல் வகையினவாகிய உடம்புகளையும் கூட ஆண் உடம்பு. பெண் உடம்பு என இருவகைப்படுத்திக் கூறலாம் தானே. எனவே முன்னர்கூறிய இருவகையை இப்படி மூவகைப்படுத்திக் கூறலாம். அஃதாவது ஆண் உடம்பு பெண்ணுடம்பு, அவையல்லாத பிற சடப் பொருள் என வகைப்படுத்தலாம். உலகப் பொருள் அனைத்தும் இம்மூவகையுள் அடங்கி விடும் அன்றோ? மெய்கண்டார் இவ்வாறுதான் வகைப்படுத்துகிறார். ஆணுடம்பை அவன் என்ற சொல்லாலும், பெண்ணுடம்பை அவள் என்ற சொல்லாலும், பிறவற்றை அது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இம்மூன்றன் கூட்டம்தான் உலகம் என்பாராய், அவன் அவள் அது எனும் அவை என்று கூறி, உலகம் இவ்வாறு பகுதிகளை உடையதாகக் காணப்படுவதால் அது காரியப் பொருளே என நிறுவுகிறார். காரியப் பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப் பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன் மூலப் பொருள். மூலப் பொருளை முதற் காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை யெல்லாம் நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற் காரணம் எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், கழி முதலியவை பயன்படுகின்றன. அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம் தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப் பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள் எனப் பார்த்தோம் எனவே காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டுமன்றோ? அம்முதற் காரணமாகிய மூலப் பொருள் எது? அதுவே மாயை என்பது.

மாயையின் நுண்மையும் விரிவும் மாயை எப்படியிருக்கும்? அது கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும். பின்வருமாறு சொன்னால் அதன் நுண்ணிலை ஒருவாறு விளங்கும். மாயையிலிருந்து தான் எல்லாக் காரியப் பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக இருக்கும். பருமை தூலம் எனப்படும். எனவே மாøயிலிருந்து படிமுறையில் தோன்றும் காரியப் பொருள்கள் ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும் காரியங்கள் முந்திய எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும். மாயையிலிருந்து இறுதியாகத் தோன்றுகின்ற தூலமான காரியங்களில் ஒன்றாக இருப்பது ஆகாயம். முன்னே தோன்றிய காரியங்களைப் பார்க்கத் தூலமான அந்த ஆகாயமே நமக்குப் புலப்படாத அருவமாக இருக்கிறதே. அவ்வாறாயின் அதற்கு முன்னே தோன்றிய காரியங்கள் அதைவிட எவ்வளவு நுண்ணியவாக இருக்கும்! அக்காரியங்கள் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் மாயை என்பது எத்துணை எத்துணை நுண்ணியதாக இருக்கும் என்பதைச் சொல்லவும் கூடுமோ?

சுத்த மாயையும் அசுத்த மாயையும் இத்தகைய மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும், அசுத்தமாய் உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும். சுத்தப் பகுதி என்பது ஆணவ மலத்தோடு கலவாதது. அசுத்தப் பகுதி ஆணவ மலத்தோடு கலந்தது எனவே மாயை ஒன்றே இங்ஙனம் சுத்தமும் அசுத்தமும் பற்றிச் சுத்தப் பகுதி சுத்த மாயை எனவும், அசுத்தப் பகுதி அசுத்த மாயை எனவும் இரண்டாக வைத்துக் கூறப்படும். குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதும் ஆகிய இரு பகுதிப்பட்டதாய் விளங்குதலை இதற்கு உவமை கூறுவர் இன்னொரு உவமையும் கூறலாம். பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு கலவாமல் தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது. இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய் விரிந்து விளங்க, மாசு படிந்த பகுதி அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும். சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில் வியாப்பியமும் ஆகும். வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள். வியாப்பியம் என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள். மாமாயை குடிலை விந்து என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள். மோகினி என்பது அசுத்த மாயையின் மறுபெயர். ஆணவத்தோடு கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது. அசுத்த மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி எனப்பட்டது. மோகினி மயக்குவது. மேலும் மாயை என்றாலே அஃது அசுத்த மாயையைத்தான் குறிக்கும்.

பிரகிருதி மாயை இனி, இவ்விரண்டு மாயைகளோடு பிரகிருதி மாயை என்பதையும் சேர்த்து மும் மாயைகள் என வழங்குவர். பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயையன்று. அஃது அசுத்த மாயையினின்றும் தோன்றிய காரியமேயாகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும் எனப் பார்த்தோம். அம் மயக்கம் சிறிதேயாகும். ஆயின் அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும். அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது எனப் பார்த்தோம். அவ்வாறே பிரகிருதி மாயை அசுத்த மாயையின் உள்ளாக அடங்கி நிற்பதாகும். எனவே சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது. அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். எனவே பிரகிருதி மாயை நம்மோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை முதலில் நோக்குவோம். பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்புநிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.

பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும்
ஆன்ம தத்துவங்கள் 24
அந்தக்கரணங்கள் 4
இத்தகைய பிரகிருதியினின்றும் உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக் கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே அவ்வகக்கருவிகள். அவை தோன்றும் முறையைப் பார்ப்போம்.

சித்தம் முக்குணங்களும் வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதி பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். வெளிப்பட்டதனை வியத்தம் என்றும் வெளிப்படாது நிற்பதனை அவ்வியத்தம் என்றும் கூறுவர். பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்ற மறு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.

புத்தி முக்குணங்களும் சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப் பரிணாமம் அடைகிறது என்பது கருத்தாகும். பரிணாமாவது மாற்றம் இதுபற்றி ஓர் ஐயம் எழக்கூடும். அஃதாவது குண தத்துவத்திலிருந்து புத்தி தோன்றும் எனப் பார்த்தோம். இப்பொழுது கூறியபடி குணதத்துவம் புத்தியாய்ப் பரிணமிக்கும் என்றால் அவ்வாறு புத்தியாய்ப் பரிணமித்த பின்பு அக்குணதத்துவம் தன்நிலையில் நின்று தனக்குரிய செயலை எப்படிச் செய்யும்? என்பதே அவ்ஐயம் இதற்குரிய விடையைக் காண்போம். பரிணாமத்தில் இரண்டு வகையுண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுகிறது. இம்மாற்றம் முழுப் பரிணாமம் எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத்தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம் ஏகதேச பரிணாமம் எனப்படும். பிரகிருதியிலிருந்து காரியங்கள் தோன்றுவது பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அன்று; வெண்ணெயில் புழுத்தோன்றுவது போல ஏகதேச பரிணாமமே யாகையால் ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப் பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடைஇல்லை. இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும். முக்குணங்களும் அறவே தோன்றாத நிலையைப் பார்த்தோம். அதுவே பிரகிருதி, முக்குணங்களும் சமமாய்த் தோன்றிய நிலையைப் பார்த்தோம். அதுவே குண தத்துவம். அதன்பின், முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும் ஏனையவை குறைந்தும் உள்ள நிலையைப் பார்த்தோம். அதுவே புத்தி தத்துவம். இனி வரும் காரியங்களிலெல்லாம் இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும். ஏனையவை குறைந்திருக்கும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இக்குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும் இராசத குணம் வன்மை. செயலூக்கம், கொடுமை முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும், தாமத குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும். சாத்துவிக குணம் இன்பத்திற்கும் இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும். குண தத்துவத்தில் புத்தி தோன்றும் என அறிந்தோம். இவ்வந்தக்கரணமே ஆன்மா யாதொன்றையும் இஃது இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவியாகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்குடைய தாயிருத்தல் நோக்குதற்குரியது.

அகங்காரம் புத்தி தத்துவத்தினின்றும் அகங்காரம் என்னும் அந்தக் கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும் ஏனை இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். யான் இதனை அறிவேன். யான் இதனைச் செய்வேன். யான் இதனை நுகர்வேன் என்றாற் போல எச்செயலிலும் ஆன்மா முனைத்தெழுவதற்கு இவ்வகங்காரமே கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்குடையதாயிருத்தல் காணலாம். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருத்தலால், இனித்தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய் நிற்கிறது. அஃது எவ்வாறு என்பதைப் பார்ப்போம். அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும். அவை சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக்கூறு என்பன. சாத்துவிக குணக் கூறு தைசத அகங்காரம் என்றும், இராசத குணக்கூறு வைகாரிக அகங்காரம் என்றும், தாமத குணக்கூறு பூதாதி அகங்காரம் என்றும் பெயர் பெறும். மனம் அவற்றுள், சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தினின்றும் முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றம். இவ்வந்தக்கரணம் புறத்தேயுள்ள பொருளைச் சென்று பற்றுவதாகும். முன்னே கூறிய சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றனோடு இம்மனமும் சேர, அந்தக்கரணம் நான்காயினவாறு காணலாம். இவை செயற்படும் முறைமையினைச் செய்யுள் 16இல் நாம் விளக்கமாகக் காணவிருக்கிறோம்.

ஞானேந்திரியங்கள் 5 அகக் கருவிகளாகிய இவைகளின் பின்னர்ப் புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும், அவை தோன்றும் முறையைக் காண்போம். தைசத அகங்காரத்தினின்றும் மனம் தோன்றும் என அறிந்தோம். அவ்வகங்காரத்தினின்றே மனத்தின் பின்னர் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் இவை புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் என்னும் புலன்களை ஆன்மா அறிதற்குக் கருவிகளாதலின் ஞானேந்திரியங்கள் எனப்பட்டன. தமிழில் அறிகருவிகள் என்றும், ஐம்பொறிகள் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் ஓர் ஐயம் எழலாம். மனமும் ஞானேந்திரியமும் ஆகிய இவை ஓரிடத்தில் தோன்றும் என்றல் பொருந்துமோ என்பதே அவ் ஐயம். செவி முதலிய ஞானேந்திரியங்களை வாயிலாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களைச் சென்று பற்றுவ மனமேயாகும். அகக் கருவியாகிய மனம் இவ்வாறு புறத்தேயும் சென்று புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கவர்ந்தø வெளிப்புலன்களை மனமானது பற்றி அகத்தேயுள்ள புத்திக்குத் தருகிறது. இவ்வாறு மனம் ஏனைய அகக் கருவிகளுக்கும் ஞானேந்திரியங்களாகிய புறக் கருவிகளுக்கும் இடையே நின்று அகம் புறம் ஆகிய ஈரிடத்தேயும் விரைந்து செல்வதாய் உள்ளது. இதனால்,, ஏனைய அகக் கருவிகளைப் போலல்லாமல் மனமானது புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களோடும் இயைந்து நிற்கும் என்பது விளங்கும். இவ்வியைபு பற்றி, மனமும் ஞானேந்திரியங்களும் ஆகிய இவையிரண்டும் தைசத அகங்காரமாகிய ஓரிடத்தே தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமுடையதேயாகும். சாத்துவிக குணம் பிரகாசம் உடையது ஆதலால் குண தத்துவத்தில் சாத்துவிக குணம் மிகுந்து போது நிச்சயித்தல் ஆகிய அறிவுத்தொழிலைச் செய்யும் புத்தி தோன்றிற்று எனப் பார்த்தோம். அது போலவே இங்கும் பிரகாசம் உடைய சாத்துவிகக் கூறிலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் தோன்றியுள்ளமை காணலாம். ஞானேந்திரியங்களாவன செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என அறிந்தோம். இப்பெயர்கள் உறுப்புக்களின் பெயர்களாய் இருப்பினும் அவ்வுறுப்புக்கள் ஞானேந்திரியங்கள் அல்ல. அவ்வுறுப்புக்களில் நின்று அவ்வப்புலன்களை அறிவனவாகிய ஆற்றல்களே ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன. எனவே செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவியிந்திரியம் ஆகும். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண்ணிந்திரியம் ஆகும். இவ்வாறே பிற இந்திரியங்களையும் கொள்ள வேண்டும். செவியாகிய உறுப்பு இருந்தும் ஓசையை அறிகின்ற ஆற்றல் அவ்விடத்தே இல்லாத போது கேட்டல் நிகழ்வதில்லை. இவ்வாறே பிற உறுப்புக்களிலும் அந்த அந்த ஆற்றல் இல்லாவிடில் அவ்வவ்வறிவு நிகழாமை கண்கூடு, இதனால் உறுப்பு என்பது வேறு. இந்திரியம் என்பது வேறு என்பதும். இந்திரியம் தங்கி நின்று அறிவதற்கு உறுப்பு இடமாகவுள்ளது என்பதும் தெளிவாகும்.

கன்மேந்திரியங்கள் 5 இனி, கன்மேந்திரியங்கள் தோன்றும் முறையைக் காண்போம். தைசத அகங்காரத்தினின்று மனமும், ஞானேந்திரியங்களும் தோன்றிய பின்னர், வைகாரிக அகங்காரத்தினின்றும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை வாய், கல், கை, எருவாய், கருவாய் என்பன இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். இவை பேசுதல், நடத்தல் முதலிய தொழில்களைச் செய்தற்குக் கருவியாகலின் கன்மேந்திரியங்கள் எனப் பெயர் பெற்றன. தமிழில் தொழிற்கருவிகள் எனவும், செயற்பொறிகள் எனவும் கூறலாம். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன. கை இடுதல் ஏற்றல்களைச் செய்வதாகக் கூறினாலும் உடம்பில் உள்ள எந்த உறுப்பின் இயக்கமும் கையின் செயலாகவே கொள்ளப்படும். அஃதாவது காலை நீட்டுதல், மடக்குதல், தலையை அசைத்தல், புருவத்தை நெரித்தல், கண்களை இமைத்தல், வாயை அசைத்தல் முதலியவையெல்லாம் கையிந்திரியத்தின் தொழில்களாகவே கொள்ள வேண்டும். எருவாய் என மலக்கழிவு வாயினையே கூறினாலும் அஃது உடம்பில் உள்ள பிற கழிவு மண்டலம் முழுவதையும் குறிக்கும். எனவே மலசலம் கழித்தல், எச்சில் உமிழ்தல், உண்டதைக் கக்குதல், மூக்கு நீர் சிந்துதல், வியர்வையை வெளிப்படுத்தல் முதலியவையெல்லாம் எருவாயின் தொழில்களாகவே கொள்ளப்படும். கருவாயும் கழித்தல் ஆகிய தொழிலைத் தானே செய்கிறது. அதனை எருவாய் என்றதில் அடக்கி விடலாமே. அவ்வாறு செய்யாமல் தனியொரு இந்திரியமாக ஏன் கொள்ள வேண்டும் என வினவலாம். எருவாயின் செயலிலும் கருவாயின் செயலிலும் வேறுபாடு உண்டு. எருவாயின் செயலை அடக்கினால் அஃது உடலுக்குத் தீங்கு பயக்கும். ஆனால் கருவாயின் செயலை அடக்கினால் அஃது உடலை நன்றாக வைக்கும். உயிருக்கும் நலம் தரும். இவ்வேறுபாட்டினால் எருவாயும் கருவாயும் வெவ்வேறு இந்திரியங்களாதல் விளங்கும். மேலும் கருவாயின் செயலால் இனப்பெருக்கம் உண்டாதலாகிய வேறுபாடும் குறிப்பிடத்தக்கது. ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறும்போது உறுப்புக்கள் இந்திரியமல்ல; அவற்றை இடமாகக் கொண்டு நிற்கும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் குறிப்பிட்டோம். கன்மேந்திரியங்களுக்கும் இது பொருந்தும். வாய், கால் முதலிய இடங்களில் நின்று பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங்களாகும். கன்மேந்திரியங்கள் தொழில் செய்யும் கருவிகளாதலின், ஊக்கத்தைத் தரும் இராசத குணக் கூறாகிய வைகாரிக அகங்காரத்தினின்றும் அவை தோன்றின என்றது பொருத்தம் உடையதாகும்.

தன்மாத்திரைகள்5 இனி, கன்மேந்திரியங்களுக்குப் பின்னர் மூன்றாவது கூறாகிய பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. ஆயின் இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்கும பூதம் எனவும். பூதங்களைத் தூல பூதம், மகா பூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூல பூதத்தையே குறிக்கும். தன்மாத்திரைகள் பற்றி மேலும் சிறிது கூற வேண்டும். தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். அதனளவில் நிற்றல் என்றால் என்ன? பின்வருமாறு அதனை விளக்கலாம். ஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோமேயன்றி, அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே. ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அஃதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும் அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.

தன்மாத்திரைகளும் புலன்களும் ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும் அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.

பூதங்கள் (5) தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் எனக் குறிப்பிட்டோம். அப்பூதங்கள் தோன்றும் முறையை இனிக் காண்போம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

பூதங்களின் குணங்கள் காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும்; ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும்; சுவை நீரின் குணமாய் நிற்கும்; நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. அஃதாவது, சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும். காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும் அஃதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல்வேண்டும்.

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த்
தரணி தலத்து அஞ்சாகி (திருமுறை 6: 54: 5) எனவும்

மண்ணதனில் ஐந்தை மாநீரில் நரன்கை
வயங்கெரியில் மூன்றை மாருதத் திரண்டை
விண்ணதனில் ஒன்றை (திருமுறை 6: 60: 3)

எனவும் வரும்திருமுறைப் பகுதிகளில் ஐம்பூதங்களின் குணங்கள் கூறப்பட்டுள்ளமை காணலாம். இக்கருத்தமைந்த, 

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி (போற்றித் திருவகவல் 137141)

என்னும் திருவாசகப் பகுதி பலரும் அறிந்தது.
பூதங்கள் இக்குணங்களையேயன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. அவைகளைப் பற்றிச் செய்யுள் 9இல் நாம் பார்க்க விருக்கிறோம். பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்திற் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவிற் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும் தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

No comments:

Post a Comment