Sunday 12 February 2017

26. சுந்தர பேரம்பு எய்த படலம் !


சோழமன்னன் விக்கிரமன் பாண்டியன் மீது பகை கொண்டான். ஆலவாய் நகரைப் பிடிக்க திட்டமிட்டான். விக்கிரமனுக்குத் துணையாக வடதேசத்தில் இருந்த சில மன்னர்களும் இணைந்துகொண்டனர். அவர்கள் ஆலவாய் நகருக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்தனர். மக்களை அடித்து விரட்டினர். வியாபாரிகள் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். பசுக்களை பிடித்துச் சென்றனர். இதைக்கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர். பாண்டிய மன்னனுக்கு தகவல் சென்றதும் அவன் சுந்தரேசுவரப் பெருமானை மனதார நினைத்தான். அப்போது அசரீரி ஒலித்தது. வங்கிய சேகரனே! கவலைப்படாதே. உனது படைகளுடன் எதிரிகளின் படைகளை எதிர்த்து நில். நான் உனக்கு துணைபுரிவேன், என்று சுந்தரேஸ்வர் அருள்வாக்கு சொன்னார். பாண்டியன் அச்சத்தை விடுத்து போர்க்களத்தில் புகுந்தான்.பகைவர்கள் ஆங்காங்கே இருந்த ஏரிகளை உடைத்திருந்தனர். அவற்றையெல்லாம் செப்பனிடுவதற்கு படையில் ஒரு பகுதியை அனுப்பிவிட்டான். மற்றவர்களுடன் இணைந்து கடுமையாக போரிட்டான். இந்த நேரத்தில் பாண்டியப்படைக்குள் வேடன் ஒருவன் புகுந்தான். அவன் எதிரிகளை துவம்சம் செய்தான். அவனைப்போல் அம்புமழை பொழிவார் அந்தக்கூட்டத்தில் யாருமே இல்லை.

ஒரு பாணத்தை விடுத்தால் அது நூறு பேரை அழித்தது. இந்த மாயாவி எப்போது தனது படையில் சேர்ந்தான் என்பதை பாண்டியனால் அனுமானிக்க முடியவில்லை. எதிரியின் மார்பில் குத்தியிருந்த ஒரு அம்பைப் பிடுங்கி சோதனை செய்தான். அந்த அம்பில் ரிஷப முத்திரை இருந்தது. சுந்தரேசன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகே அங்கு நிற்பது சுந்தரேஸ்வரப் பெருமான் என்பது பாண்டியனுக்குத் தெரியவந்தது. இவ்விதம் வேடம் கொண்டு வந்த இறைவர் விடுத்த சுந்தரப் பேரம்பினால் சோழர் படை வலுவிழந்தது. அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். இந்திர வில்லும், கரிய மேகமும் போலப் போர்களத்தில் வில் ஏந்திய கரிய உடலுடன் தோன்றிப் போர்புரிந்த சிவபெருமானாகிய வேட வீரர், பாண்டியனுடைய மலர்ந்த முகத்தை நோக்கினார். பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தார். வங்கியசேகரன் வெற்றிபெற்றான். பாண்டிய நாட்டுக்கு ஒரு இழுக்கு வந்தால், அதை துடைத்தெடுக்க பல சந்தர்ப்பங்களிலும் மீனாட்சிசுந்தரேஸ்வரர் உதவி செய்தார். வெற்றியை அளித்த சோமசுந்தரருக்கு நிலையாக பூசனைப் பொருட்களை அளித்தான். இரத்தின ஆபரணங்களும், ஒளி வீசும் மாணிக்கத்தால் இழைக்கப் பெற்ற வில்லும், சுந்தரப் பேர் எழுதிய அம்பும் செய்து சாத்தினான். நீதி வழுவாமல் அறம் தழைத்தோங்கி நெடுநாள் ஆட்சி புரிந்து வந்தான்.

No comments:

Post a Comment