Sunday, 12 February 2017

33. திருமுகம் கொடுத்த படலம்!



காலப்போக்கில், ஹேமநாதன் மூலம் கிடைத்த பணம், மன்னர் பரிசாக அளித்தது எல்லாம் காலியாகி விட்டது. பாணபத்திரரின் குடும்பத்தில் வறுமை நிலை ஏற்பட்டது. தனக்கேற்பட்ட கதியை பெருமானிடம் சொல்லி அழுதார் அவர். அப்போது அசரீரி ஒலித்தது. பாணபத்திரா! கவலை கொள்ளாதே. இதோ! இங்கிருக்கும் படிக்கட்டில் தினமும் ஒரு பொருள் இருக்கும். அதை எடுத்துச் சென்று பிழைத்துக் கொள், என்றது குரல். இதை இறைவனின் திருவாக்காக கருதிய பாணபத்திரர் மகிழ்ச்சியடைந்தார். சொன்னது போலவே, தினமும் ஒரு பொருள் கிடைத்தது. இதைக் கொண்டு வாழ்ந்து வந்த போது, மீண்டும் அவருக்கு வறுமையை உண்டாக்கி திருவிளையாடல் புரிந்தார் ஈசன். பாணபத்திரரின் பக்தியின் பெருமையை உலகறியச் செய்யவே இவ்வாறு செய்தார் அவர். ஒருநாள் இரவில் கனவில் தோன்றிய சுந்தரேஸ்வரர், இதோ! சேரமன்னனுக்கு ஒரு திருமுகம் (திரைச்சீலையில் எழுதிய கடிதம்) தருகிறேன். இதைக் கொண்டு அவனிடம் கொடுத்து வேண்டுமளவு பொருள் பெற்றுக்கொள், என்றார். உடனே சோமசுந்தரக் கடவுள் வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த திருவாக்கினால் ஒரு பாடல் இயற்றினார்.

மதிமலி புரிசை மாடக்கூடற் பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிற(கு) அன்னம் பயில் பொழில் ஆலவாயில் மன்னிய சிவன் யான மொழிதருமாற்றம் பருவக் கொண்மூப்படியெனப் பாவலர்க்(கு) உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமாமதிபுரை குவிவியக் குடைக்கீழ் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க! பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மண்பொருள் கொடுத்து வர விடுப்பதுவே.இவ்விதம் திருப்பாசுரம் ஒன்று எழுதிக் கொடுத்து விட்டு மறைந்தருளினார். பாணபத்திரர் திடுக்கிட்டு விழிக்க, அவரது கையில் திருமுகம் இருந்தது. ஆச்சரியமடைந்த அவர், இறைவனை வணங்கி சேரநாடு சென்றார். இதற்குள் சேரமன்னனின் கனவிலும் பாணபத்திரர் வந்துள்ள தகவலை இறைவன் அறிவிக்கவே, அவனே அவர் தங்கியிருந்த இடத்தைத் தேடி வந்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு பொன்னும் பொருளும் கொடுத்தான். மீண்டும் பாண்டியநாடு திரும்பிய அவரது பெருமையை அறிந்த வரகுணபாண்டியனும், பொன்னை வாரி வழங்க பாணபத்திரர் அறவே வறுமை நீங்கப் பெற்றார்.

No comments:

Post a Comment