குதிரைகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அத்தனையும் நரிகளாக இருந்தன. பாண்டியன் கொதித்தான். இந்த அரிமர்த்தனனையே முட்டாளக்குகிறானா அந்த திருவாதவூரான்! பிடியுங்கள் அவனை! முதலில் அழகிய குதிரைகளைக் காட்டினான். இப்போது, நரிகளாக்கி விட்டான். மாயவித்தைக்காரனாக மாறிவிட்டானே! பணத்துக்காக இப்படி நாடகமாடுகிறான், என்று வசைமாரி பொழிந்தவன், பிடித்து வாருங்கள், அவனை மீண்டும், என்று கட்டளையிட்டான். காவலர்கள் சென்றனர். அவர் தியானம் செய்த அறைக்குச் சென்று கூச்சலிட்டு, பரிகளை நரிகளாகக்கி விட்டு, நீர் தியானத்தில் உள்ளீரா! வாரும் எங்களுடன், என இழுத்துச்சென்றனர். மன்னன் அவரைக் கடுமையாகப் பேசினான். பணத்தாசை பிடித்தவனே! உன்னைப் பார்க்கவே எனக்கு கண்கள் கூசுகின்றன. உன்னை ஆரம்பத்திலேயே கொல்லாமல் விட்டேனே! அதுதான் நான் செய்த குற்றம். இருப்பினும், அரசுப் பணத்தை உம்மிடமிருந்து கைப்பற்றியாக வேண்டும். அது மக்கள் பணம். அதைக் கொடுத்து விட்டு மறுவேலை பாரும், என்றவன் யாரங்கே? என்று கைதட்டி காவலர்களை அழைத்து, இவனிடமிருந்து பணத்தைக் கைப்பற்றும் வரை வைகையில் சுடுமணலில் படுக்க வையுங்கள், என்று கட்டளையிட்டான்.
காவலர்கள் அவரது காலிலும் கையிலும் பெரிய பாறாங்கற்களை தூக்கி வைத்துக் கட்டி மணலில் படுக்க வைத்தனர். மாணிக்கவாசகருக்கு கால் சூடுபொறுக்க முடியவில்லை. ஆ ஆ..வென அலறினார். மீனாட்சியம்மன் கோபுரம் தூரத்தில் தெரிந்தது. இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். இந்த அபயக்குரல், கோயிலுக்குள் இருந்த சுந்தரேஸ்வரப் பெருமானை உருக்கியது. ஆனாலும், அந்த ஈசன் நல்லவர்களுக்கு சோதனைகளைத் தந்த பிறகு தான் இரங்குவான் போலும்! சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார்.
No comments:
Post a Comment