Sunday, 12 February 2017

திருவிளையாடல் - 13. எல்லாம் வல்ல சித்தரான படலம்!


அபிஷேகப் பாண்டியனின் ஆயுளை முடித்து தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள சிவபெருமான் விருப்பம் கொண்டார். தன்னை ஒரு சித்தர் போல உருமாற்றிக் கொண்டு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார். தங்கள் ஊருக்கு புதிதாக வந்துள்ள சித்தரைக் கண்ட மக்கள் அவரது தெய்வீக தோற்றம் கண்டு பணிந்து வணங்கினர். ஜடாமுடி, பூணூல், ஸ்படிகம், ருத்ராட்ச மாலைகள் அணிந்த மார்பு, உடலெங்கும் திருநீறு, காதுகளில் மகர குண்டலங்கள், கையில் தங்க பிரம்பு, மழு என்னும் ஆயுதம், கவுபீனம் (கோவணம்), புலித்தோல் அணிந்து புன்னகை சிந்த அவர் பிரகாரத்தில் வீற்றிருந்தார். மதுரை நகருக்குள் அவ்வப்போது வலம் வந்து, பல சித்து வேலைகளை அவர் செய்தததால், மக்கள் கூட்டம் அவரைக் காண அதிகமாக கூடியது. சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே, திடீரென அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவார். எங்கு தேடினாலும் கிடைக்காத அவர், அந்த தெருவின் இன்னொரு பகுதியில் ஏதாவது செய்து கொண்டிருப்பார். மக்கள் அங்கே ஓடுவார்கள். வேடிக்கை பார்க்கும் முதியவர்களை இளைஞனாக்குவார். இளைஞர்களை முதியவனாக்கி விடுவார். ஆண்களைப் பெண்ணாக்கி விடுவார். பெண்களை ஆணாக்கி விடுவார். அது மட்டுமல்ல! ஊனமுற்றோரைக் குணப் படுத்துவார்.


பிறவியிலேயே பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், பேச முடியாதவர்களை பார்க்க, கேட்க, பேச வைத்து அதிசயம் நிகழ்த்துவார். கோடீஸ்வரர் களை ஏழையாக்கி விடுவார். ஏழைகளை கோடீஸ்வரராக்கி விடுவார். உப்பு நீரை நல்ல நீராக்கி மக்களுக்கு பயன்படச் செய்வார். பட்டமரத்தில் இலையும், பூவும் தழைக்கச் செய்து பசுமையாக்கினார். இப்படி, பல சித்து வேலைகளைச் செய்து மக்களின் மனம் கவர்ந்தார் அந்த சித்தர். மன்னன் அபிஷேகப்பாண்டியனின் காதுகளுக்கு சித்தரைப் பற்றிய அபூர்வத் தகவல் எட்டியது. அமைச்சர்களை அழைத்த மன்னன், நம் ஊருக்கு வந்துள்ள சித்தரைப் பற்றி உங்கள் காதுக்கு தகவல் எட்டியதா? மக்கள் எப்போதும் அவரைத் தான் சூழ்ந்து நிற்கிறார்களாமே! அவரைச் சந்தித்து, என்னைப் பார்க்க வரச்சொல்லுங்கள், என உத்தரவிட்டான். அமைச்சர்கள் சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு விரைந்தனர். அங்கு சித்தர் பல சித்து விளையாட்டுகளை செய்வதைக் கண்டு தங்களையும் மறந்து நின்று விட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் எல்லாம் அவரைச் சுற்றியே நின்றனர். அனைவர் வாயிலும் ஆஹா...அற்புதம்... பிரமாதம் என்ற வார்த்தைகளே வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அமைச்சர்கள் சித்தரை நெருங்கினர். மாபெரும் சித்தரே! நாங்கள் மதுரை மன்னர் அபிஷேகப் பாண்டியனின் அமைச்சர்கள். தங்கள் விளையாடல்களை அறிந்த எங்கள் மன்னர், தங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார். அவர் உங்களைக் காண வேண்டுமென விரும்புகிறார்.


தாங்கள் புறப்படுகிறீர்களா! என்றனர். சித்தர் அவர்களிடம் மிகவும் அலட்சியமாக பதிலளித்தார். மன்னனா! யார் அவன்! அவனால் எனக்கு ஒன்றும் காரியம் ஆக வேண்டியதில்லையே! ஒருவேளை, என்னால் அவனுக்கு ஏதாவது ஆக வேண்டுமென்றால், அவன் வந்தல்லவா என்னைப் பார்க்க வேண்டும், என்றார். சித்தரின் ஆணித்தரமான பதில் அமைச்சர்களை கலங்கடித்து விட்டது. மாபெரும் முனிவர் போல் தோற்றமளித்த அந்த ஜடாமகுடரை அவர்களால் குண்டு கட்டாகத் தூக்கிப் போக முடியுமா என்ன! மேலும், அந்த சித்தர் செய்யும் அற்புதங்களைப் பார்த்தால் தங்கள் கட்டுகளை அறுத்துக்கொண்டு வர அவருக்கு எவ்வளவு நேரமாகி விடும்! அது மட்டுமல்ல! அவர் தங்களைத் தண்டித்து விட்டால் நிலைமை என்னாகும்! அவர்கள் அவரிடம் விடைபெற்று சென்று விட்டனர். அபிஷேகப்பாண்டியனை அணுகிய அவர்கள், மாமன்னரே! தங்கள் உத்தரவுப்படி சித்தரைக் காணச் சென்றோம். அவரது சித்து விளையாடல்கள் எங்களையே பிரம்மிக்க வைத்தது என்றால், சாதாரண மக்களைக் கேட்கவா வேண்டும்! அவரிடம், தங்கள் விண்ணப்பத்தைச் சொன்னோம். உங்கள் மன்னனை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என எவ்வித அச்சமும் இல்லாமல் சொல்லிவிட்டார். என்ன செய்வது? என்றனர். ஒருவேளை மன்னனுக்கு கோபம் வந்து தங்களை கையாலாகாத அமைச்சர்கள் என சொல்லிவிடுவாரோ என அவர்களுக்கு பயம். ஆனால், மன்னனின் பதில் மாறுபட்டதாக இருந்தது.

No comments:

Post a Comment