விக்கிரம பாண்டியனுடைய ஆட்சிகாலத்தில் மதுரை மாநகரில் விருபாக்ஷர் என்னும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுபவிரதை. தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்ந்தனர். ஆனால், இறைவன் அவர்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் அன்னை மீனாட்சியையும், சோமசுந்தரரையும் தினமும் தரிசித்து தங்களுக்கு குழந்தை வரம் அருளும்படி கண்ணீர் உகுத்துக் கேட்டுக் கொண்டனர். அவர்களது கண்ணீருக்கு அன்னை மீனாட்சி பதில் சொல்லும் காலம் வந்தது. ஆம்...சுபவிரதை கர்ப்பமானாள். பத்துமாதங்களில் அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மீனாட்சியே அவ்வீட்டிற்கு வந்து விட்டது போல பேரழகு மிக்கவளாகத் திகழ்ந்தாள் அந்தக் குழந்தை, அவளுக்கு கவுரி என்று அம்பாளின் பெயரையே வைத்தனர். மழலைப் பருவத்திலேயே கவுரி மந்திரங்கள் சொல்லிப் பழகினாள். அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் 1008 நாமங்களால் போற்றிப் பாடுவாள். கோயிலுக்கு வந்து உளமுருகிப் பாடும் அவளது மழலைக்குரல் கேட்க மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள்.அவளுக்கு வயது பத்தை எட்டியது.ஒருநாள் அவள் தன் தந்தையிடம், அன்புத்தந்தையே! காரைக்கால் அம்மையார் சரிதத்தை நான் வாசித்தேன், அந்த அம்மையார் இந்த உடலோடு எப்படி கைலாயம் சென்றடைந்தார்களோ, அதே போல நானும் வீடுபேறு அடைய விரும்புகிறேன். அதற்குரிய வழியைச் சொல்லுங்களேன், என்றாள்.
மகளின் உயர்ந்த எண்ணத்தையும், பக்தியையும் எண்ணி உளம் பூரித்துப் போனார் விருபாக்ஷர். மகளின் ஆசைக்கு அவர் தடைவிதிக்கவில்லை. பல மந்திரங்களை அவளுக்கு போதித்த அவர், அவற்றைத் தொடர்ந்து ஓதிவரும் படி கூறினார். அவர்களது வீட்டுக்கு தினமும் உஞ்சவ்ருத்திக்காக (பிச்சை எடுத்தல்) பல சிவனடியார்களும், வைணவ அடியார்களும் வருவார்கள். கவுரி அவர்களுக்கு உணவளித்த பிறகே சாப்பிடுவாள். ஒருமுறை புயல் போல் வந்தான் ஒரு இளம் பிரம்மச்சாரி சன்னியாசி. அந்த இளைஞன் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவன். நெற்றி நிறைய திருமாலின் திருநாமம் அணிந்திருந்தான். அவனைப் பார்த்ததுமே விரூபாக்ஷருக்கு ஏனோ பிடித்துப் போனது. நாம் சைவர்கள் தான். இவன் வைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவனாக இருந்தாலும், ஏனோ என் மனதுக்குப் பிடித்துப் போய் விட்டது. இவனுக்கு நமது கவுரியைத் திருமணம் செய்து வைத்தால், மிகவும் நன்மையே ஏற்படுமென்றே என் உள்ளம் கணிக்கிறது. கவுரியிடமே இதுபற்றி கேட்டு விடுவோமே என்ற எண்ணத்தில் அவளை அழைத்தார். இதற்குள் கவுரியும் சாப்பாட்டுடன் அந்த வைணவனுக்கு உணவிட வந்துவிட்டாள். அவள் அவனுக்கு உணவை வைத்துவிட்டு, உள்ளேவரும்போது, அம்மா! கவுரி, என கனிவோடு அழைத்தார் தந்தை. என் னப்பா! என்ற கவுரியிடம் அந்த வைணவ இளைஞனை பார்த்தாயா? அவனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அவனுக்கு உன்னை திருமணம் செய்துவிடலாம் என பார்க்கிறேன், என்றார் விரூபாக்ஷர். அக்காலத்தில் திருமணமாகாத பெண்கள் இளைஞர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதிலும் கவுரி பக்தி சிரத்தையோடு வளர்ந்த பெண். அன்னத்தை அவனுக்கு இட்டாளே தவிர, வந்திருப்பவன் இளைஞன் என்பதால் அவனை ஓரக்கண்ணால் கூட பார்க்க வில்லை. இப்போது தந்தை இப்படி கேட்டதும் அவளுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை. தனது நோக்கம் இறைவனை அடைவது! பிறப்பற்ற வாழ்வை அடைவது! என்றிருக்க தந்தை தன்னை குடும்பவாழ்வில் ஈடுபடுத்த விரும்புகிறாரே என்ற குழப்பம் இருந்தாலும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கருத்தும் அவளை இன்னொருபுறம் குழப்பியது. இறுதியில் தந்தையின் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் எண்ணமே ஜெயித்தது. உம் என்று கூட அவள் சொல்லவில்லை. அப்படியெல்லாம் அன்றைய பெண்கள் சொல்வதில்லை. நாணத்துடன் கூடிய புன்னகை ஒன்றைத் தான் குனிந்த தலை நிமிராமல் உதிர்ப்பர் அவர்கள். கவுரியும் இதற்கு விதிவிலக்கா என்ன! அன்னம் கேட்டு வந்தவன் வீட்டு அன்னக்கிளியாக செல்ல அவள் புன்னகையை மட்டும் தந்தையிடம் பதிலாகச் சொல்லி சம்மதித்தாள். வைணவ இளைஞனிடம் விரூபாக்ஷர் இதுபற்றி கேட்டார். அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். பிறகென்ன! மறுதினமே நாள் நன்றாக இருந்ததால், அன்றே தன் பெண்ணை எளிமையான முறையில் கன்னிகாதானம் செய்து கொடுத்தார் விரூபாக்ஷர். மருமகனுக்குரிய சீர், மகளுக்குரிய நகைகள் என சீதனத்தை வாரி வழங்கி அவர்களை மணமகன் ஊருக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் கிளம்பும்போது, மணமகன் வீட்டில் இந்தளவுக்கு புயல் வீசுமென நினைக்கவே இல்லை. அவர்கள் வீட்டை அடைந்ததும், மணமகனின் தந்தை கொதித்தெழுந்து விட்டார்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வளர்ந்த என் மகனை மயக்கி மணந்து கொண்டாயே பாவி! சைவர்களை நாங்கள் எப்படி ஏற்போம், நீயே மரியாதையாக உன் வீட்டிற்குப் போய் விடு, என கத்தினார் அவர். கவுரியின் மாமியாரோ அதை விட துள்ளிக்குதித்தாள். அடியே! உன் குலம் என்ன! என் குலம் என்ன! என் மகனும் இது விஷயத்தில் உனக்கு உடன்பட்டு விட்டதால், உன்னை இந்த வீட்டுக்குள் அனுமதிப்பேன். ஆனால், நீ அவனோடு வாழக்கூடாது. இதோ! இவ்வீட்டு பணிகளை முடித்ததும் அந்த தனியறைக்குள் போய்விட வேண்டும். வெளியே வந்தால் உன்னை பூட்டி வைப்பேன். நாங்கள் எங்காவது வெளியில் சென்றால், உன்னை அந்த அறைக்குள் பூட்டி வைத்துவிட்டே செல்வேன், என்றாள். கவுரி இதற்காக கலங்கவில்லை. அவரவர் தலையில் இப்படித்தான் நடக்கவேண்டுமென ஆண்டவன் எழுதி வைத்து விடுகிறான். இது அவரவர் பூர்வஜென்ம விதிப்படி நடக்கிறது. இதற்கு விதிவிலக்காகி தப்பி ஓட நினைத்தாலும் அது முடியவே முடியாது. கவுரி இந்த தத்துவத்தில் அதிக நம்பிக்கையுடையவள். மதுரை மாநகரத்து ஆடல்வல்லான் இப்படியெல்லாம் தன்னை ஆட்டுவிக்கிறான். அவன் ஆட்டுவித்தபடியே ஆடிவிட்டு, இந்த உலகத்தை விட்டுப்பிரிந்து, அவன் நினைவாகவே இருந்து அவனை சென்றடைய வேண்டும் என்ற உறுதியோடு, கணவன் வீட்டில் தரப்பட்ட இந்த தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொண்டான். வைணவ இளைஞனுக்கோ தன் பெற்றோர் செய்வது தவறென்று தெரிந்தாலும் அவன் அவர்களை தட்டிக் கேட்கவில்லை. பெற்றோர் கருத்தை ஏற்று அதன்படியே செயல்பட்டான். ஒருநாள், அவளது வீட்டார் பக்கத்து ஊருக்கு கிளம்பினர். வழக்கம் போல, தனியறையில் பூட்டப்பட்டாள் கவுரி. அப்போது நமசிவாய, சிவாயநம என்ற கோஷத்துடன் ஒரு வயோதிகர் அந்த தெரு வழியே வந்தார். ஜன்னலோரமாக நின்ற கவுரியைக் கண்ட அவர், மகளே! எனக்கு பசிக்கிறது. அன்னமிடு, என்றார். தான் அறைக்குள் அடைபட்டு கிடப்பதை அவரிடம் சொல்லி,தாங்கள் பசிக்கிறது எனக்கேட்டும் அன்னமிட முடியாத பாவியாகி விட்டேனே, என்றாள் கவுரி. மகளே! கலங்காதே! பூட்டில் கை வை. அது தானாகவே திறக்கும், என்றார் முதியவர். ஆச்சரியமடைந்த கவுரி அவ்வாறே செய்ய பூட்டு திறந்தது. கதவைத் திறந்து வெளியே வந்த அவள், சமையலறை பூட்டிலும் கையை வைத்தாள். பொருட்கள் வைத்திருக்கும் அறையில் கைவைத்தாள். எல்லா கதவுகளும் திறந்தன. பெரியவரை உள்ளே வரச்சொல்லி, அவரது கால்களை அலம்பி, தலையில் நீர் தெளித்து அவரை ஊஞ்சலில் அமர வைத்தாள். சுவாமி! சற்று நேரத்தில் சமைத்து விடுகிறேன். அதுவரை தாங்கள் வந்த களைப்பு தீர சற்று கண்ணயருங்கள், என்றாள்.
அந்த முதியவரும் கண்ணயர்ந்தார். சமையல் முடிந்ததும் அவரை எழுப்பி சுடச்சுட அன்னம் பரிமாறினாள். அவர் நன்றியுடன் சாப்பிட்டு மகிழ்ந்தார். கிளம்பும் நேரத்தில், மகளே! நீ சிறுவயதிலேயே முக்தியடைய நினைக்கிறாய் என்பதை நான் அறிவேன். அது விரைவில் நடக்கும், என வாழ்த்தினார். நம் மனதிலுள்ளதை இவர் எப்படி அறிந்தார்? யார் இவர்? கவுரி குழப்பத்துடன் அவரைப் பார்த்தபோது, சற்றும் எதிர்பாராத ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆம்...அந்த சாமியார் ஒரு கைக் குழந்தையாக மாறிவிட்டார். கவுரிக்கு ஆச்சரியம். சாமியார் எப்படி துறவியாக மாறினார்? இந்தக் குழந்தை எப்படி வந்தது? என்று யோசித்த போது, மதுரை சுந்தரேஸ்வரப் பெருமான் பேரழகுடன் அவளுக்கு காட்சி தந்தார். எம்பெருமானே! நீயே என் கையால் உணவருந்த வந்தாயா? இத்தனை நாளும் நான் செய்த பூஜையின் பலனை அடைந்தேன். எனக்கு குடும்ப வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுத்தது உன் தரிசனத்தைக் காட்டத்தானா? உன் தரிசனம் கிடைக்குமென்றால், இந்த வீட்டார் என்னைத் தீயில் தூக்கி வீசினாலும், அதையும் குளுகுளு பொற்றாமரையில் கிடப்பதாக எண்ணி மகிழ்வேனே! என மனதுக்குள் உருகி வணங்கும்போது, மீண்டும் குழந்தையாகி விட்டார் சுந்தரேஸ்வரர். அந்தக் குழந்தையை மகிழ்ச்சியுடன் தன் மடியில் அமர்த்தி, ஈசனுக்கே தாயானாள் கவுரி. அப்போது வெளியில் சென்றிருந்த அவளது வீட்டார் வந்தனர். பூட்டிச்சென்ற வீடு திறந்தது கிடந்ததைப் பார்த்து அவர்களுக்கு அதிர்ச்சி, வீட்டுக்குள் ஓடிவந்து பார்த்த அவர்கள், கையில் ஒரு குழந்தையுடன் கவுரி இருப்பதை கண்டு மேலும் பேரதிர்ச்சி அடைந்தனர். கவுரியின் மாமியார், அடியே! நாங்கள் செல்லும்போது இந்த வீட்டை பூட்டிச் சென்றோமே! கள்ளச்சாவி எதுவும் தயார் செய்து வைத்திருந்தாயா? வீடு எப்படி திறந்தது? அதிருக்கட்டும், இந்தக் குழந்தை யாருடையது? இது எப்படி இந்த வீட்டுக்குள் வந்தது? என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்கினாள். அத்தை! நீங்கள் சென்றதும் தேவதத்தன் என்பவரும், அவரது மனைவியும் இங்கு வந்தனர். இந்தக் கதவு எப்படியோ திறந்தது. அவர்கள் இந்தக் குழந்தையை என்னிடம் கொடுத்தனர். தாங்கள் திரும்பி வரும்வரை பார்த்துக் கொள்ளும்படி கூறினர், என்றாள் கவுரி. இதை அத்தையும் மற்றவர்களும் நம்பவில்லை. நீ ஏதோ தகிடுதத்தம் செய்கிறாய். இனிமேல், இங்கே நீ வாழ முடியாது. வீட்டை விட்டு வெளியே போ, என விரட்டினர். அவள் என்ன செய்வதெனஅறியாமல் திகைத்த போது, அவளது மாமியாரே வீட்டை விட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு கதவை அடைத்து விட்டாள். அனாதையாக வெளியில் குழந்தையுடன் நின்ற கவுரி கதறினாள். சுந்தரேசப்பெருமானே! ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்? என்றாள். அப்போது அவளது கையில் இருந்த குழந்தை மறைந்தது. அவள் முன் சுந்தரேஸ்வரர் ரிஷபத்தில் தோன்றினார். மகளே! இளவயதிலேயே முக்தி மார்க்கத்தை அடைய நீ விரும்பினாய் என்பதால் குடும்ப வாழ்வில் கஷ்டத்தைக் கொடுத்தோம்! எல்லார் வாழ்விலும் எல்லாம் காரணப்படியே நடக்கிறது. உனக்கு முக்தியருளவே இத்தகைய நாடகத்தை நடத்தினோம். இனி, நீ என் திருப்பாதங்களை அடைவாயாக, என்றார். கவுரியும் அவரது திருப்பாதங்களில் சரணடைந்து அவருடன் ஐக்கியமானாள்.
No comments:
Post a Comment