Sunday, 12 February 2017

55. வலை வீசிய படலம் !


ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமான் சிவஞானபோதம் என்னும் சுவடியைப் படித்துக் கொண்டிருந்தார். அது வேதத்தின் உட்பொருள் பற்றிய நூலாகும். அந்த உட்பொருளை அவர் தன்னருகில் இருந்த துணைவி பார்வதி தேவிக்கு உபதேசித்தார். ஆனால், அம்பாள் அதை ஈடுபாட்டுடன் கவனிக்கவில்லை. ஆசிரியர் கற்றுக்கொடுக்கும் போது, குழந்தைகள் கவனமாகப் பாடத்தைக் கேட்க வேண்டும். அப்படி கேட்டாலே வீட்டில் போய் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்காது. இல்லாவிட்டால், பெற்றவர்களிடமும், ஆசிரியரிடமும் தண்டனை பெற வேண்டியிருக்கும். பார்வதிதேவிக்கும் தண்டனை கிடைத்தது. ஆசிரியராய் இருந்த சிவன், பார்வதியிடம், பெண்ணே! படிப்பைப் பற்றி கவலைப்படாத நீ, பூலோகத்தில் படிப்பறிவே இல்லாமல் இருக்கும் ஒரு மீனவரின் வீட்டில் போய் பிறப்பாய், என சாபம் கொடுத்து விட்டார். பார்வதிதேவி கண்ணீர் மல்க, இறைவா! என் பிழையை மன்னித்து விமோசனம் தாருங்கள், என்றாள். சிவனும் மனமிரங்கி,சாபத்தை மாற்ற இயலாது. இதுவும் என் திருவிளையாடலே, காரணத்துடன் தான் நான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உன்னை நானே வந்து ஏற்றுக் கொள்வேன்,என்றார். அம்பாளும் மனஆறுதலுடன் பூலோகம் சென்றுவிட்டாள். தங்கள் தாய்க்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதிய விநாயகரும், முருகனும் இதுகுறித்து தந்தையுடன் வாதம் செய்ய அவரது இடத்துக்குள் புகுந்தனர். நந்திதேவரின் அனுமதியின்றி, சிவனின் இருப்பிடத்துக்குள் யாரும் நுழையக்கூடாது. விநாயகர், முருகனாயினும் இந்த விதி பொருந்தும். ஆனால், அவர் தடுத்தும் கேளாமல் பிள்ளைகள் தந்தை முன் சென்றனர். அவர் முன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேதச்சுவடிகளை எடுத்து வீசினர். அவை கடலில் போய் விழுந்தன. பிள்ளைகளாயினும், வேதங்களையே எடுத்தெறிந்த அவர்கள் மீது சிவன் கோபம் கொண்டார். விநாயகரை யாராலும் சபிக்க முடியாது. அப்படி சாபம் கொடுத்தால் சாபம் கொடுத்தவரையே அது வந்தடையும். எனவே, விநாயகர் மீதான தன் கோபம் முழுவதையும் முருகனிடம் காட்டினார். முருகா! தந்தையை மதிக்காத தனயனே! நீ பூலோகத்திலுள்ள திருவாலவாய் என்னும் நகரில் வசிக்கும் வணிகர் குலத்தில் பிறப்பாய். உனக்கு ருத்ரசர்மன் என்று பெயரிடுவார்கள் அந்தப் பெற்றோர். உனக்கு பேச்சு வராது, என்று சாபம் கொடுத்தார்.

நந்தியை அழைத்து, நந்தீஸ்வரா! என்னைக் காண வருபவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்களாயினும், அவர்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ அவர்களைத் தடுக்க இயலாததால் தானே அரிய வேதங்கள் கடலில் போய் விழுந்தன! எனவே, நீயும் கடலில் சுறாமீனாய் கிடப்பாய், என்றார். நந்திதேவர் சிவபெருமானின் பாதங்களில் விழுந்தார். ஐயனே! நான் என்ன செய்வேன்? தயவுசெய்து சாப விமோசனம் தாருங்கள், என்றார். ஈசனும் மனம் கனிந்து, நந்தீஸ்வரா! மீனவர் குலத்தில் அன்னை பார்வதி பர்வதகுமாரி என்ற பெயரில் அவதரிப்பாள். அவளை மணம் செய்துகொள்ள நான் வரும்போது உனக்கும் பழைய உருவம் கிடைக்கும், என்றார். நந்திதேவரும் சுறாமீனாக கடலில் விழுந்தார். பாண்டியநாட்டில் பாக்கம் என்ற ஊர் இருந்தது. இங்கு மீனவர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். மீனவர் குலத்தலைவனுக்கு குழந்தை இல்லை. அவனும், அவனது மனைவியும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஒருநாள் அவன் கடற்கரை பகுதிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலை யோரத்தில் இருந்த ஒரு புன்னை மரத்தடியில் இருந்து, ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கவனித்தான். வேகமாக தனது சகாக்களுடன் அங்கு சென்றான். அந்த மரத்தடியில் ஒரு பெண்குழந்தை கிடந்தது. அழகோ பேரழகு. முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஆம்...பார்வதி தேவியே அங்கு குழந்தையாக அவதாரம் எடுத்திருந்தாள். மீனவர் தலைவனுக்கு இது தெரியுமா? மலைமகளை வளர்க்கும் பாக்கியம், அந்த கடல் தலைவனுக்கு கிடைத்தது. பிள்ளையில்லாத அவன், குழந்தையை எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தான். பார்த்தாயா தேவி! பிள்ளையில்லாத நமக்கு, அந்த சுந்தரேஸ்வரப் பெருமான் அளித்த மாபெரும் பரிசு இவள். ஆம்... இவள் இனி நம் மகள். நாமே வளர்ப்போமே! என்றான். மீனவர் தலைவிக்கும் பேரானந்தம். மகளைத் தொட்டிலில் இட்டு பாராட்டி வளர்த்தாள். மீனவப் பெண் குழந்தை தங்கள் தலைவருக்கு கிடைத்த மகிழ்ச்சியில் ஊரே மகிழ்ந்தது. இதனிடையே கடலுக்குள் சுறாவாகப் பிறந்த நந்திதேவர், விநாயகர் மற்றும் முருகனால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்ட ஏடுகளை கரை சேர்த்து சிவபெருமானிடம் ஒப்படைத்தார். பின்னர், கடலுக்குள் வரும் படகுகளின் மீது முட்டிமோதி சின்னாபின்னமாக்கினார். மீனவர் தலைவருக்கு இந்தச் செய்தி தெரியவர, அதைப் பிடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பின், யார் அந்த சுறாவை பிடிக்கிறாரோ, அவருக்கு தன் மகளை மணம் முடித்து வைப்பதாக அறிவித்தார். ஆனாலும், உயிரைக் கொடுத்து அவளை மணம் முடிக்கும் அளவுக்கு யாரும் துணியவில்லை. இந்த நேரத்தில் சிவபெருமான் மீனவர் குப்பம் நோக்கி ஒரு மீனவனின் வடிவிலேயே வந்தார்.

அவரைக் கண்ட மீனவர்கள் அந்த புது மீனவன் யார்? எனத் தெரியாமல் குழம்பினார்கள். மீனவர் தலைவரை அவர் சந்தித்தார். தலைவரே! நான் மதுரை அருகில் வசிப்பவன். மீன் பிடிப்பதில் வல்லவன். இங்கே ஒரு சுறாமீன் கடலில் சுற்றித்திரிவதாகவும், அது மீனவர்களைத் துன்புறுத்து வதாகவும், அதைப் பிடிப்பவர்க்கு தங்கள் திருமகளைத் திருமணம் செய்து தர இருப்பதாகவும் அறிந்தேன். அதைப் பிடிக்கவே வந்துள்ளேன், என்று கம்பீரமாகப் பேசினார். மீனவர் தலைவர், அந்த மீனவரைக் கேலி செய்யும் விதத்தில்,தம்பி! நீ நினைப்பது போல் அல்ல அந்த மீன். ஒருவேளை ஏதோ மீன் குஞ்சு என்று நினைத்தாயோ! கலங்களையே கூட கவிழ்த்து நொறுக்கி விடும் பெரிய சுறா. அதை உன்னால் பிடிக்க முடியுமென நான் நினைக்கவில்லை, என்றார். மீனவர் தலைவரே! அந்த மீனின் வலிமை பற்றி எனக்கு கவலையில்லை. உங்களுக்கும் என் உயிரைப் பற்றிய கவலை வேண்டும். ஆக்குபவனும் நானே! காப்பவனும் நானே! அழிப்பவனும் நானே! என்று சித்தாந்தம் வேறு பேச ஆரம்பித்து விட்டார். மீனவர் தலைவரோ, வந்த வீரன் தற்பெருமை பேசுவதாக நினைத்துக்ö காண்டார். அவர் அந்த வீர மீனவரிடம்,இளைஞனே! எனக்கென்ன! நான் சொல்வதை சொல்லி விட்டேன். சரி...அந்த மீனைப் பிடித்து விட்டால், என் மகள் உனக்குச் சொந்தம், என்று சொல்லி சத்தியமும் செய்தார். அந்நேரத்தில், யாரோ ஒரு வீரன் சுறாவை பிடிக்க வந்திருப்பது பற்றி அறிந்த பார்வதிதேவி, தன் வீட்டு மாடத்தில் நின்றபடி அந்த வீரனைப் பார்த்தாள். மீனவர் வடிவிலிருந்த சிவபெருமானும் அவளைப் பார்த்தார். இருவர் கண்களும் காதல் மொழி பேசிக்கொண்டன. அவர் அவளை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு கடலுக்குள் இறங்கினார். படகில் அமர்ந்தபடி வலை வீசினார். வழக்கம் போல் படகைக் கவிழ்க்க பாய்ந்து வந்தது போல் வந்த சுறா, படகில் இருப்பவரைப் பார்த்ததுமே புரிந்துகொண்டது போல, தன்னடக்கமாக வந்து தானாக வலையில் சிக்கிக் கொண்டது. மீனவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர்கள் பிடித்த சுறாவுடன் கரைக்குத் திரும்பினர். மீனவ இளம் பெண்களெல்லாம், இப்படியும் ஒரு வீரனா! இவன் தங்களுக்கு மணாளனாக கிடைக்கமாட்டானா! என்று ஏங்கியது கண்களில் இருந்தும், நெஞ்சின் விம்மலில் இருந்தும் புரிந்தது. மீனவர் தலைவர் அந்த வீரனை கட்டியணைத்து உச்சி மோந்தார்.வாய்ச்சொல்லில் மட்டுமே வீரனென நினைத்து உன்னைக் கேலி செய்யும் தொனியில் பேசியதற்காக வருந்துகிறேன். இதோ! என் மகளை ஏற்றுக்கொள், என்றார். இருவருக்கும் இனிதே திருமணம் நடந்தது. அப்போது ஈசனும், பார்வதிதேவியும் சுயரூபம் காட்டி அவர்களுக்கு அருள் செய்தனர். சிவபெருமான், மீனவத்தலைவரிடம், என்னை மருமகனாகவும், என் துணைவியை மகளாகவும் பெற்ற நீங்கள் பூமியில் இன்னும் பல்லாண்டு சுகமாக வாழ்ந்து கைலாயத்தை அடைவீர்களாக, என வாழ்த்தினார். வலையில் சிக்கிய சுறாமீனை எழுப்பவே, அவர் நந்திதேவராக சுயரூபம் பெற்று, இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தை கண்டு உள்ளம் உருகினார். தங்களுக்கு நந்தீஸ்வரரின் தரிசனமும் கிடைத்ததால், மீனவமக்கள் அடைந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது. ருத்ரசர்மனாக பூமியில் பிறந்த முருகப்பெருமானும் கைலாயம் வந்தடைந்தார்.

No comments:

Post a Comment