Sunday, 12 February 2017

64. வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம் !


ஐம்பெரும் பூதங்களும் ஒரு காலத்தில தத்தம் நிலையில் இருந்து மாறுபட்டன. பதினான்கு உலகங்களும் அவற்றில் அடங்கிய அனைத்தும் தோன்றியவாறே அடங்கி ஒடுங்கின. ஊழிக்காலம் வரவே மறைகளும் ஒடுங்கின. பின் கால வேகத்தில் கதிரவன் முன் மலரும் தாமரை போல், சிவபெருமான் திருமுன்னர் மீண்டும் யாவும் தோன்றலாயின. அப்போது சிவபெருமான் திருவாக்கில் பிரணவம் தோன்றிற்று. அதனின்றும் வேதங்கள் எல்லாம் தோன்றலாயின. நைமிசாரணிய வாசிகளாகிய கண்ணுவர், கருக்கர் முதலிய முனிவர்கள் அவ்வேதங்களை ஓதி, அவற்றின் உட்பொருளை அறியாது மயங்கி மனமும், முகமும் வாடிக் கவலையோடு இருந்தார்கள். அச்சமயத்தில் தவவலிமை பெற்று விளங்கிய அரபத்தர் என்னும் ஒரு முனிவர் அங்கு வந்தார். அங்கிருந்த முனிவர்கள் அவரை வணங்கினர். பின்னர் வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி கவலையோடு அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அரபத்தர் அம்முனிவர்களிடம், தாங்கள் முகம் வாடி இருக்கும் காரணம் என்ன? என்று வினவினார். முனிவர்கள் அரபத்தை நோக்கி, ஐயனே! நாங்கள் சிவபெருமான் அருளிச் செய்த வேதங்களைப் பயின்றோம், ஆனால் அதன் உட்பொருள் எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.

அரபத்தர், முனிவர்களே! வேதத்தை அருளிச் செய்த சிவபெருமானே அருளுருக் கொண்டு உங்களுக்கு தாம் அருளிய வேதத்தின் பொருளை உணர்த்துவார். நீங்கள் அவரை நோக்கித் தவம் இருங்கள் என்றார். அரபத்தர் கூறியதைக் கேட்ட மற்ற முனிவர்கள் மகிழ்ச்சியடைந்து மதுரையைச் சென்றடைந்தனர். திருக்கோயில் பொற்றாமரையில் நீராடு, சோம சுந்தரக் கடவுளை தரிசித்தனர். எம்பெருமானை நோக்கி வேதத்தின் பொருளை உணராது வாடிய எங்களுக்கு நீரே அவ்வேதங்களின் உட்பொருளாய் நின்று அருளினீர். அந்த வேதங்களுக்கு உம்மையன்றி வேறு பொருள் யாது? என்று கூறி வணங்கி விட்டு பின்னர் கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியை அடைந்தார்கள். அங்கு முப்பத்திரெண்டு இலக்கணமும் அமையப் பெற்ற, பதினாறு வயது நிரம்பிய ஒரு பிராமணக் குரு வடிவம் கொண்டு எழுந்தருளினார் ஈசன். முனிவர்களை நோக்கி குற்றமற்ற தவமுடையீர்! நீங்கள் விரும்புவது யாது? என்றார். உடனே முனிவர்கள் அனைவரும் அறியும் படி வேதங்களின் பொருளை உபதேசித்தருள வேண்டும் என்று கூறினர். சிவலிங்கப் பெருமான் அவர்களுக்கு வேதங்களின் பொருளை அருளிச் செய்வாரானார். முனிவர்களே! கேளுங்கள், வேதங்களின் பொருள்களைனைத்தும் ரகசியமாகும். அவ்வேதப் பொருளை அறிதலே இம்மை இன்பப் பயனுக்கும் பாச பந்தத்தைப் போக்கும் வீடு பேற்றின் பயனுக்கும் கருவியாகும். சிவபெருமானின் சக்தியால் நான்கு வேதங்கள் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் அவை அளவற்று விரிந்தது.

சிவபெருமானின் ஈசான முகத்திலே சிவாகமங்கள் இருபத்தெட்டும், கிழக்கு முகமாகிய தற்புருட முகத்தினின்று 21 சாகைகளோடு ரிக் வேதமும், தெற்கு முகமாகிய அகோர முகத்தினின்று 100 சாகைகளோடு யஜூர் வேதமும், வடக்கு முகமாகிய வாமதேவ முகத்தினின்று 1000 சாகைகளோடு சாம வேதமும், மேற்கு முகமாகிய சத்தியோசாத முகத்தினின்று 9 சாகைகளோடு அதர்வண வேதமும் தோன்றியது. வேதங்கள் நான்கு வகை. அதனால் வருணங்களும், ஆச்சிரமங்களும் நான்காயின. தருமங்களும் யாகாதி கருமங்களும் வேதங்களின் நெறியிலே தோன்றின. அவ்வேதங்கள் சிவனின் பூஜா விதிகளை குறிக்கும் கரும காண்டம், சிவனின் சச்சிதானந்த வடிவத்தை குறிக்கும் ஞான காண்டம் என இருவகைப்படும். வேதத்தின் வழியே நடக்கும் அனைத்திற்கும் வேதமே பிரமாணமாகும். அதன் வழியே சென்று பொருந்தக் கூறும் ஸ்மிருதிகள் அனைத்தும் அம்மதங்களுக்கு அனுகுணப் பிரமாணமாகிய ஸ்மிருதிக் கொள்கைகள் ஸ்மார்த்தம் எனப்படும். ஸ்மார்த்தத்தைத் தழுவிய வேத நெறிகள் வைதிகம் எனப்படும். அவற்றும் மிக மேன்மையாகக் கூறப்படுவது சுத்த சன்மார்க்கமாகிய வைதிக சைவம் என்பதை உறுதியுடன் பற்றிடுக என்றார். பாகத்திற்கும், வீட்டிற்கும் காரணமாக விளங்கும் சிவமயமாகிய மறைகளின் உட்பொருளை உங்கள் அறியாமை நீங்கும் வண்ணம் உரைத்தோம். நாம் கூறிய இப்பொருளைக் காட்டிலும் மேலான பொருள் வேறில்லை. இப்பொருள்கள் அனைத்தும் உங்களுக்கு மயக்கம் தீர அமைவதாக! என்று அருளி மறைந்தார். கண்ணுவர் முதலான முனிவர்கள் மயக்கம் தெளிந்து மகிழ்த்தி வெள்ளத்தில் மூழ்கினர்.

No comments:

Post a Comment