Sunday, 12 February 2017

62. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம் !


எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும் விருந்துண்ண சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும், பக்தியில் முதிர்ந்த வியாக்ரபா முனிவரும்! அவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். பதஞ்சலி முனிவர் சிவனிடம், சோமசுந்தரப் பெருமானே! நாங்கள் ஒரு உறுதி எடுத்துள்ளோம். அதாவது, தில்லையம்பலமாகிய சிதம்பரத்தில் நாங்கள் தங்கள் திருநடனக்கோலத்தை தரிசித்த பிறகே உணவு உண்போம். இங்கு என்ன செய்வதென தெரியவில்லை, என்றதும், அதற்கென்ன! அங்கு ஆடிய நடனத்தை இங்கும் ஆடுகிறேன். தாங்கள் இருவரும் கண்டுகளித்த பின் உணவருந்துங்கள், என்றார். முனிவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிவபெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரை கோயிலுக்குள் சென்றார். மேலும் சிவபெருமான் உலகனைத்தும் வடிவான விராட்புருடனுக்குத் தில்லைப் பதி இதயமாகும். மதுரையோ துவாத சாந்தத் தானம் என மொழிந்தார். இதைக் கேட்டு மகிழ்வுற்ற முனிவர்கள் வேந்தர் வேந்தே! பிறஉறுப்புகள் எது என தெளிவாக விளக்குங்கள் என கூறினர்.

இறைவடிவான சுந்தர பாண்டியர் கூறியதாவது மூலதாரமான இப்பூவுலகிலே எல்லையற்ற இறைத்தன்மைத் தானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள். திருவாரூர் மூலதாரத் தானம், திருவானைக்கா சுவாதிட்டானத் தானம், திருவண்ணாமலை நாபி, தில்லைபதி இதயம், திருக்காளத்தி கண்டம், காசித் தலம் புருவமத்தியம், திருக்கயிலாயம் பிரமநாடி, இந்த மதுரைப் பதி துவாத சாந்தத்தானம். இது எவ்வாறு சிறந்ததென்று கேட்பீர்களானால், அது முன்னர் தோன்றிய முறையால் என்று தெளிந்த விளக்கத்தினை எடுத்து இயம்பினார். அதன் பின் அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே ஓர் அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க விமானத்தின் கீழ், ஒளி பொங்கும் வெள்ளி அம்பலம் ஒன்றை உருவாக்கினார். பளபளவென மின்னிய அந்த அரங்கத்தில் மாணிக்க பீடம் ஒன்று வந்து அமர்ந்தது. கோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற் போல் குருபரன் தோன்றினார். மனம், மொழி, பக்கம், மேல், கீழ், முன், பின் என்ற இவைகளைக் கடந்த மெய்ஞ்ஞானப் பேரொளி வடிவே அது. சிவகணங்கள் முழக்க, நந்தி தேவர் மத்தளம் அடிக்க, திருமால் இடக்கை முழக்க, தும்புரு நாரதர் இசைபாட தேவர்கள் பூமழை பொழிய, கடல்நிற மேனி படைத்த செந்தீப்புறமயிர் முயலகண் மேல் வடவைத் தீப்போல் அவனது செங்கண்கள் பிதுங்கவும், சினங்கொள்ளவும் முதுகு முறியவும் வலது திருவடியை ஊன்றி சிவபெருமான் அந்த பீடத்தில் நின்று நடனமாடினார்.

திருக்கூத்தாடும் இடது திருவடித் தாமரையும், பத்துத் திருக்கரங்களும், வலக்கரம் ஐந்தில் அபய அத்தத்திலே சூலமும், மற்ற நான்கு கரங்களில் உடுக்கை, அம்பு, வாள், மழு என்பனவும் இடக்கரம் ஐந்தில் வரத அத்தத்திலே பாம்பும், மற்றைய நான்கு கரங்களில் அக்கினி, வில், கேடகம், தண்டு என்பனவும், திருநீலகண்டமும், சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும், விரித்த செஞ்சடையும், வெள்ளிய திருநீற்றொளித் திருமேனியும், முக்கண்களும், அரவக் கச்சையும், அம்மையார் ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவ்வம்மையார் மேல் வைத்த திருநோக்கமும் திருநகையும் தோன்றத் திருநடனம் செய்தருளினார். அந்த முனிவர்களும் மதுரை மாநகர மக்களும் இறைவனின் நடன காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் கருணாமூர்த்தியைப் பாக்களால் பலபடப் பூசித்துப் போற்றி மகிழ்ந்தனர். பரந்தாமன் அம்முனிவர்களிடம் நீங்கள் இன்னும் விரும்பியது யாது? அதை யாம் நிறைவேற்றி வைப்போம் என வினவினார். உடனே அவ்விருவரும், எந்தையே! இத்திருக்கூத்துடனம் எப்பொழுதும் இவ்வெள்ளியம்பலத்துள்ளே நின்று எல்லோருடைய பாச பந்தங்களையும் போக்கி அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். திருமண விழாக்களில் பிறர் நடனமாடி நாம் ரசிப்பது வழக்கம் தான்! ஆனால், இங்கோ மணமகனே நடனமாடினார். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு முனிவர்கள் உணவருந்தச் சென்றனர்.

No comments:

Post a Comment