Sunday, 12 February 2017

37. நாரைக்கு முக்தி கொடுத்த படலம் !


பாண்டியநாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தடாகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது. ஒரு சமயம் மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றிப் போனது. நாரைக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அது ஒரு வனத்திற்குள் சென்று, அங்கிருந்த நீர்நிலைகளில் சிக்கிய மீன்களைத் தின்று வாழ்ந்தது. அங்கு அச்சோ என்ற குளம் இருந்தது. இதன் கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். இந்த புண்ணியசீலர்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. இருந்தாலும், அந்த தவசீலர்கள் வசிக்கும் பகுதியில் மீன் பிடித்து சாப்பிடுவது மகாபாவம் என கொக்கு நினைத்தது. அங்குள்ள முனிவர்களில் ஒருவரது பெயர் சத்தியன். இவர் மதுரை தலம் பற்றியும், அங்கு குடிகொண்டிருக்கும் சுந்தரேஸ்வரர் பற்றியும் அருமையாக தன் சகமுனிவர்களிடம் பேசுவார். இதைக் கேட்ட நாரை மதுரை நோக்கிப் பறந்தது. பொற்றாமரைக் குளத்தின் நீர் தன் மீது படும்படியாக தலையை மூழ்கி விட்டு பறந்தது. அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதி மேலுள்ள இந்திர விமானத்தைச் சுற்றி சுற்றிப் பறந்தது 15 நாட்கள் இவ்வாறே செய்து, பதினாறாம் நாள் பொற்றாமரைக் குளக்கரைக்கு வந்தது.

குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. அவற்றைப் பிடித்து உண்ண எண்ணிய வேளையில், ஞானம் பிறந்தது. இப்படி செய்வது பாவமல்லவா? அது பசியைப் பொறுத்துக் கொண்டது. தனது இயற்கையான சுபாவத்தைக் கூட கருணையின் காரணமாகவும், தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றிக்கொண்ட நாரையின் முன்னால் சுந்தரேஸ்வரர் தோன்றி, என்ன வரம் வேண்டும் நாரையே? என்றார். ஐயனே! எங்கள் இனத்தவர் மீன்களைப் பிடித்து உண்ணும் சுபாவமுடையவர்கள். ஆனால், இந்த புண்ணிய குளத்தில் அதைச் செய்யாமல் இருக்க தாங்களே அருள வேண்டும். எனவே, இந்தக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். மேலும், எனக்கு சிவலோகத்தில் தங்கும் பாக்கியம் வேண்டும், என்றது. பெருமானும் அவ்வாறே அருளினார். நாரை நான்கு புயங்களும், மூன்று கண்களும் பொருந்திய சிவ வடிவம் பெற்று, வானுலகத்தோர் தூவிய மலர் மாரியில் மூழ்கியவாறு விமானத்தில் ஏறித் தேவ துந்துபிகள் முழங்க சிவலோகத்தை அடைந்தது. பின்னர் நந்தி கணங்களுள் ஒன்றாய்த் தங்கியிருந்தது. நாரையின் வேண்டுதற்கிணங்க இன்று வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment