பாண்டிய நாட்டில் பல அரசர்கள் ஆட்சி நடத்தினர். கீர்த்திபாண்டியன்என்பவன் காலத்தில் உலகம் அழியும் நிலை வந்தது. ஏழு கடல்களும் பொங்கின. எங்கும் வெள்ளம். உலகம் முழுக்க தண்ணீரால் நிறைந்தாலும், மீனாட்சியம்மனின் கோயிலுக்குள் மட்டும் வெள்ளம் வரவில்லை. விமானங்கள் உயர்ந்து நின்றன. பொற்றாமரைக் குளத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் மதுரையிலுள்ள யானைமலை, நாகமலை, பசுமலை, பன்றிமலை, ரிஷபமலை ஆகியவையும் அழியவில்லை. ஒருவாறாக வெள்ளம் வடிந்தது. இறைவன் கருணை கொண்டு மீண்டும் உலகத்தைப் படைத்தார். மனிதர்கள் உள்ளிட்ட ஜீவராசிகள் தோன்றினர். ஒரு யுகமே முடிந்து அடுத்த யுகம் துவங்கியது. அந்த யுகத்தில் வங்கியசேகர பாண்டியன் என்பவன் ஆட்சியில் முதன்முதலாக அமர்ந்தான். அவன் மீனாட்சியம்மன் கோயிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தினான். கோயிலைச் சுற்றி தெருக்களை உருவாக் கினான். அது ஒரு நகரம் போல இருந்தது. ஆனாலும், அந்த தெருக்களில் கட்டப் பட்ட வீடுகள் மக்கள் தொகைக்கு போது மானதாக இல்லை. வீடில்லாத மக்கள் மன்னனிடம் சென்று, தாங்கள் வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் வேதனைப் படுவதாக முறையிட்டார்கள். புதிய நகரம் ஒன்றை நிர்மாணிக்கும்படி கோரிக்கை வைத்தார்கள். இவர்களின் வேதனையைப் புரிந்து கொண்ட மன்னன், நகரை மேலும் விரிவுபடுத்த ஏற்பாடு செய்தான். எதுவரை விரிவுபடுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியிருந்தது. மிகப்பெரிய இந்த பொறுப்பை சுந்தரேஸ்வரரிடமே ஒப்படைப்பது என முடிவெடுத்து, ஆலயம் சென்று வணங்கினான். பெருமானிடம் தன் குறையைச் சொன்னான். அப்போது அசரீரி ஒலித்தது. இந்த நகரத்தை நானே நிர்மாணிப்பேன், என்றது.
ஒருநாள் சித்தர் ஒருவர் நகருக்குள் வந்தார். அவரது கைகளில் பாம்பு ஒன்று இருந்தது. அதைத் தடவிக்கொடுத்தபடியே வீதிகளில் நடந்தார். மக்கள் அவர் பின்னால் சென்றனர். தங்கள் நகருக்கு வந்த சித்தர் பற்றி வங்கியசேகரனுக்கு தகவல் கிடைத்தது. அவரை அவன் வணங்கினான். சித்தர் அவன் முன்னிலையில், ஆலமே! நாகதேவா! இதோ, இந்த மன்னன், இந்நகரை நிர்மாணம் செய்யும் எல்லை பற்றி அறிய விரும்புகிறான். அதைக் காட்டுவாயா? என்றார். அப்போது, பாம்புக்குள் இருந்து நாகதேவன் வெளிப்பட்டான். ஐயனே வணக்கம்! நான் இவ்வூரின் எல்லையைக் காட்டுகிறேன். அப்படி அமையும் நகருக்கு எனது பெயரைச் சூட்ட தாங்கள் உறுதி பெற்றுத் தரவேண்டும், என்றான். நானே அந்த வரத்தை உனக்கு தருகிறேன். உன் பெயரே இந்த நகருக்குச் சூட்டப்படும், என்றார் சித்தர். அந்த சித்தர் வேறு யாருமல்ல. சுந்தரேஸ்வரப் பெருமான் தான் சித்தராக உருமாறி அங்கு வந்திருந்தார். உடனடியாக நாகம் வளைந்தது. மிக நீண்ட உருவம் எடுத்து தன் வாலின் நுனியைக் வாயால் கவ்விக் கொண்டது. அப்போது அது வட்ட வடிவமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வட்டம் விரிந்து கொண்டே போனது. அந்த எல்லையை மன்னன் குறித்துக் கொண்டான். பின், பாம்பு முன் போல் சுருங்கி சித்தரின் கையில் போய் சுருண்டு கங்கணம் போல் அமர்ந்தது. சக்கரம் போல வட்ட வடிவமாக இருந்த அந்த நிலப்பரப்பைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினான் மன்னன். அதற்கு சக்ரவாளகிரி என்று பெயரிடப் பட்டது. மதிலின் தெற்கு வாசல் திருப்பரங்குன்றம் என்றும், வடக்கு வாசல் ரிஷபமலை என்றும், மேற்கு வாசல் திருவேங்கடமலை என்றும், கிழக்கு வாசல் திருப்பூவணம் (திருப்புவனம்) என்றும் அழைக்கப்பட்டது. இந்த மதில் எல்லைக்குள் பிரம்மாண்ட நகரம், கண்கவர் தெருக்களுடன் எழுப்பப்பட்டது. ஆலமாகிய பாம்பு தன் வாயை, அடிப்படையாகக் கொண்டு எல்லை வகுத்ததால் ஆலவாய் என்று நகருக்கு பெயர் சூட்டப்பட்டது.
No comments:
Post a Comment