Sunday, 12 February 2017

16. கடலை வற்றச் செய்த படலம் !



பாண்டியனின் ஆட்சி தழைத்தோங்கிய நேரத்தில் ஆண்டுதோறும் மதுரையில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சொக்கலிங்கப் பெருமானுக்கு நெய், பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும் முறையை உருவாக்கினான் அபிஷேகப் பாண்டியன். அதுவரை, தேவலோக தலைவனான இந்திரனே பவுர்ணமி அபிஷேகத்தை பூலோக மக்கள் அறியாத வண்ணம் நடத்திக் கொண்டிருந்தான். அபிஷேகப் பாண்டியன் மாலையில் அவனுக்கு முன்னதாகவே வந்து அபிஷேகம் செய்ததால், அவன் அங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருமுறை சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், வருணன் மதுரை சொக்கலிங்க பெருமான் கோயிலுக்கு வந்தான். வருத்தமான முகத்துடன் இருந்த இந்திரனைக் கண்ட அவன், தேவேந்திரா! உன் முகம் ஏன் வாட்டமாக இருக்கிறது? தேவலோக தலைவனான நீ இந்த பூலோகத்தில் வந்து வருந்துவதன் காரணம் என்ன? என்றான்.

வருணனே! சொக்கலிங்கப் பெருமானுக்கு சித்ரா பவுர்ணமியன்று நான் தான் முதலில் அபிஷேகம் செய்வேன். நேற்றோ, அபிஷேகப் பாண்டியன் முன்னதாக அபிஷேகம் செய்ய வந்துவிட்டதால், நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. சாதாரண மானிடனுக்கு கிடைத்த சிறப்பு தேவர் தலைவனான எனக்கு இல்லையே எனும் போது வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன வழி? என்றான். இந்திரனே! யார் முதலில் அபிஷேகம் செய்தால் என்ன? முதன்முதலாக அபிஷேகம் செய்யுமளவுக்கு இந்த சொக்கநாதப் பெருமான் அவ்வளவு சக்தி வாய்ந்தவரா? என்று கேட்ட வருணனிடம், அதிலென்ன சந்தேகம்! என்றான் இந்திரன். அப்படியானால், எனக்கு தீராத வயிற்று வலி இருக்கிறது. தேவலோக வைத்தியர்கள் மருந்து தந்தும் குணமாகவில்லை. இதை இந்த சொக்கநாதர் குணமாக்கி விடுவாரா? எனக்கேட்டான் வருணன். நமது சொக்கநாதர் பிறவி என்ற கொடிய நோயையே குணமாக்கக் கூடியவர். அவருக்கா உனக்கு வந்துள்ள சாதாரண வயிற்று வலியைக் குணமாக்க முடியாது! என இந்திரன் பதிலளித்தான். சரி இந்திரரே! அப்படியானால் அந்தப் பெருமானின் மகிமையை உலகறியச் செய்யும் விதத்தில் நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன். அவரது திருவிளையாடலைக் காண ஆவலாக உள்ளேன், என்றான் வருணன். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைக் காண ஆவலுடன் நின்றான் இந்திரன்.

வருணன், சமுத்திரராஜனை வரவழைத்தான். சமுத்திரராஜா! உடனே கடலை மதுரைக்கு அனுப்பு. பொங்கி வரும் கடல் மதுரையை அழிக்க வேண்டும், என்று உத்தரவிட்டான். அதற்கு கட்டுப்பட்டான் சமுத்திரராஜன். பெரும் பிரளயம் ஏற்பட்டது. கடல் பொங்கி மதுரை நகருக்குள் புகுந்து விட்டது. மாட மாளிகைகள் தகர்ந்தன. மதுரை மக்கள் அலறியடித்து ஓடி என்ன பயன்? பலர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். எங்கும் மரண ஓலம். தப்பிப் பிழைத்த அபிஷேகப்பாண்டியனும், இன்னும் சிலரும் சுந்தரேஸ்வரர் கோயிலை மட்டும் அழிக்காமல் சுற்றி நின்ற வெள்ளத்தைக் கடந்து கோயிலுக்குள் புகுந்தனர். சோமசுந்தரப் பெருமானிடம் தங்களை காப்பாற்றுமாறு விண்ணப்பித்தனர். இரக்கமே வடிவான சொக்கநாதனாகிய சோமசுந்தரர், அவர்கள் முன் தோன்றினார். மேகங்களை வரவழைத்து, மேகங்களே! இந்த கடல் நீரை உறிஞ்சுங்கள், என ஆணையிட்டார். கணநேரத்தில் மதுரையில் வெள்ளம் வந்த சுவடே இல்லாமல் மறைந்து விட்டது. பெருமானின் அருளால் மாண்ட மக்களெல்லாம் உயிர் பெற்றனர். எம்பெருமானின் கருணையை அனைவரும் போற்றினர்.

No comments:

Post a Comment