தொலைபேசி எண்: +91- 44 - 2478 0436 , 93828 89430
அமைவிடம்:
சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலுள்ள இத்தலம் போரூரிலிருந்து 10 கி.மீ. தூரமும், பல்லாவரத்திலிருந்து ஐந்து கி.மீ.துரமும் உள்ளது.
இந்த இடத்திற்கு நகரப் பேருந்து விடப்படுகிறது.
அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.
ஆலய அமைப்பு :
கிழக்கு முகமான ஆலயம். ஐந்து அடுக்கு ராஜ கோபுரம், ஏழு கலசங்களுடன் புதுப் பொலிவுடன், சிற்ப கோபுரமாக பக்தர்களை வரவேற்கிறது.
நுழையுமுன் இடப்பக்கம் தெப்பக்குளம்.
தைப்பூசத் திருவிழாவில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும்.
முதல் நாள் சோமாஸ்கந்தர் உலா;
இரண்டாம் நாள் சந்திரசேகரர் உலா;
மூன்றாம் நாள் தேவியருடன் முருகவேள் பவனி வருகிறார்.
ஆலயத்துள் பிரவேசித்தால் இடப்புறம் சேக்கிழார் சன்னிதி உள்ளது. சேக்கிழாரின் பிறந்த நாளான வைகாசி பூசத்தன்று விழா கொண்டாடப்படுகிறது. சொற்பொழிவுகள், அபிஷேகம், அலங்காரம், திருமுறை பாராயணம் அனைத்தும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் பிரதோஷம் கோலாகலமாக நடக்கிறது.
நுழைவாயிலுக்கு நேரே துவஜஸ்தம்பம்; பலிபீடம், பிரதோஷநந்தியின் நான்குகால் மண்டபமும் இருக்கிறது.
இடப்புறம் கற்பக விநாயகர்; வலப்புறம் கோடி தீப மண்டபம் உள்ளது.
வள்ளலார் சேக்கிழாரைப் போற்றிப் பாடியுள்ளதால் அவரது வண்ணச் சித்திரத்தின் முன்பும் இடைவிடாமல் தீபம் ஏற்றப்படுகிறது.
சுதையாலான துவார பாலகர்களை தாண்டி உள்ளே சென்றால் நாகேச்வரர் தரிசனம் தருகிறார்.அவருக்கு இடப்புறம் அம்பாள் சன்னிதி.
அம்பாள் நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சதுர் கரங்களுடன் எதிரே பலிபீடம், சிம்மவாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
சன்னிதியில் இடப்பக்கம் பள்ளியறை காணப்படுகிறது.
பிராகாரச் சுற்றில் பைரவருக்கு தனி சன்னிதி காணப்படுகிறது.
உட் பிராகார வலத்தில் உற்சவ சேக்கிழார், சூரியன், சந்திரன், பரவை நாச்சியாருடன் சுந்தரர், விநாயகர், சத்தியநாராயணர், அப்பர், சம்பந்தர், மாணிக்க வாசகர்,நாகேந்திரர், நாக நாதேச்வரர், காளிங்க நர்த்தன கண்ணன் என வரிசையாக சிலா வடிவங்களைக் காணலாம்.
சுவாமி சன்னிதி கோஷ்டத்தில் பிள்ளையார், தக்ஷிமூர்த்தி, திருமால், நான்முகன், விஷ்ணு துர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் சைவ நால்வருக்கு விசேஷ அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது.
செவ்வாய்க் கிழமைகளில் விஷ்ணு துர்கைக்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
ஒரு பெரிய மேடையில் காசி விஸ்வநாதர், அண்ணாமலையார், திருமகள், கலைவாணி, வீரபாகு முதலானோரின் சிலை வடிவங்கள் கம்பீரமாக உள்ளன.
நாக தோஷம் நீக்கும் சிவன்:
நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர்.
நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள் (கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருவர்). இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள்.
தை வெள்ளிக் கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர்.
சித்ரா பவுர்ணமியை ஒட்டி இக்கோயிலில், 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
இவ்விழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்வர்.
சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. விழாவில் ஒருநாள் சுவாமி, நாக வாகனத்தில் உலா செல்வார்.
சேக்கிழாரின் சிவ தரிசனம்:
கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார்.
அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.
குருபூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி இங்கிருந்து தேரடிக்குச் செல்வார். அப்போது பொதுமக்கள் சிவன் சார்பில், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வருவர்.
அதன்பின்பு, சேக்கிழார் மூலஸ்தானத்திற்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும். அன்றிரவில் சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார்.
அன்று இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும்.
இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த தலத்தில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது.
அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.
தல வரலாறு:
சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்ட போது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழி ராமதேவர், குலத்தின் பெயரால் "சேக்கிழார்' என்றழைக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான்.
அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், "உத்தமசோழ பல்லவர்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான்.
சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, "பெரியபுராணம்' என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.
ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார்.
அதேசமயம் அடிக்கடி திருநாகேஸ்வரம் செல்ல முடியாதென்பதால், நாகேஸ்வரருக்கு தனது ஊரில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார்.
நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோயில் எழுப்பினார்.
சிவனுக்கு, "நாகேஸ்வரர்' என்று பெயர் சூட்டி, தினமும் வழிபட்டார். தலமும், "வடநாகேஸ்வரம்' என்று அழைக்கப்பெற்றது.
உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழாரைப் பாராட்டி புராணமே பாடியிருக்கிறார். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயம் என்பது சரித்திர ஆய்வாளர் கூற்று.
மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1178-1218) மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1246-1271) காலத்திய 45 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
திருவிழா காலங்களில் நாட்டியமாடியவர்களில் பிரபலமான இருவர் பெயர்களும் காணப்படுகின்றன. ஒருவர் சித்திரமேழி நங்கை; மற்றொருவர் திருபுண்ணாழிகை நங்கை.
நாகேஸ்வரர் தன்பெருமையை உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம்.
ஒரு சமயம் ஆலயத்தின் பிரதான லிங்கமான ஸ்ரீ நாகேஸ்வர லிங்கத்தின் தலைப்பாகம் சற்றே சேதப்பட்டது. அதை ஆலய அதிகாரிகளிடம் தெரிவித்தார் அர்ச்சகர். அவர்கள் கலந்து பேசி மூலமூர்த்தியை எடுத்துத் திருக்குளத்தில் சேர்ப்பித்து விட்டு,
பிராகாரத்திலிருக்கும் அண்ணாமலையாரை கருவறையில் பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
பேச்சு செயலானதும், திருக்குள ஜலம் சிகப்பானது.
அன்றிரவு ஒரு சிவனடியார் சொப்பனத்தில் சிவபெருமான் தோன்றி "பொய்கையிலுள்ள என்னை எடுத்து பழையபடி பிரதிஷ்டை செய்" என அருளியிருக்கிறார்.
அவ்விதமே செய்ய, குளத்து நீர் இயல்பு நிலைக்கு வந்தது.
சிறிது நேரம் கருவறையில் இருந்ததால், அருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
பிராகாரத்தில் ஸ்தல விருட்சத்தைப் பார்க்கலாம். நித்தமும்
நான்கு வேளை பூஜை நடைபெறுகிறது. அனைத்து திருவிழாக்களும் முறைப்படி நடத்தப்படுகின்றன.
ராகுதோஷ நிவர்த்தி க்ஷேத்திரமாக இத்தலம் இணைக்கப்பட்டுள்ளது.
ராகு - சில தகவல்கள்:
நிழல்கிரகம். சிவனைப் போற்ற போற்ற அருள் தருபவன். பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டவன்.
தீக்ஷிதர், தனது பாடலில் வியாதியை தீர்ப்பவன், விஷத்தால் ஏற்படும் பயத்தை போக்குபவன், அருள் பொழியும் ஓரவிழி நோக்குடையவன், என்று பாடியிருக்கிறார்.
ஐந்தில் ராகு இருக்க அவர்களுக்கு பெண்பிள்ளை பிறந்தால் யோகமாக இருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மூலவர் : நாகேஸ்வரர்
உற்சவர் :சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : காமாட்சி
தல விருட்சம் : செண்பக மரம்
தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : காரணாகமம்
நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment