Monday, 7 May 2018

அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் ,கோவூர் - சென்னை


அமைவிடம்:

சென்னை, போரூர் – குன்றத்தூர் சாலையில் கோவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவிலுள்ளது ஆலயம்.

ஆலய அமைப்பு:

85 அடி உயர இராஜகோபுரம் நம்மை வரவேற்க , நுணுக்கமான சிற்பக்கலைகளுடன் நம் மனதை கொள்ளை கொள்ளும் இவ்வாலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

ஏழடுக்கு ராஜ கோபுரம் ஒன்பது கும்பங்களுடன் கம்பீரமாக தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.

வெளிப்பிராகாரத்தில் நேத்ர கணபதி, வரசக்தி விநாயகர், சனீஸ்வரரின் தனி சன்னிதி, நவக்கிரக சன்னிதிகளைக் காணலாம்.

சிவகங்கை தீர்த்தமென்று அழைக்கப்படும் இத்தல தீர்த்தம், இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப் பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்தல விருட்சமான வில்வம் மூன்று தளங்கள் மட்டுமின்றி ஐந்து, ஏழு, ஒன்பது தளங்களுடன் மகா வில்வமாகத் திகழ்கிறது.

சோம வாரத்தில் இந்த விருட்சத்தை பிரதட்சணம் செய்தால் செல்வமும், செழிப்பும் பெறுவர் என்கிறது சிவபுராணம்.

கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் உள்ள கர்ப்பக் கிரகத்தில் சுந்தரேஸ்வர லிங்கம் பெயருக்கேற்றபடி அழகுடன் விளங்குகின்றது.

கோஷ்டத்தில் கணபதி, தென்முகக் கடவுள், பிரம்மா, துர்க்கை, லிங்கோற்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.

சைவ நால்வர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வயானை சகிதம் கந்தவேள், 63வர், தனி சன்னிதியில் ஸ்ரீதேவி சமேதராக கருணாகரப் பெருமான், வீரபத்ரர், மாகாளி முதலானோரும் அருள்பாலிக்கின்றனர்.

தியாகப் ப்ரம்மம் தனது பஞ்சரத்னக் கீர்த்தனையில் இத்தல ஈசனைப் போற்றி பாடியிருக்கிறார்.

செளந்தராம்பிகை சன்னிதி தெற்குப் பார்த்து அமைந்துள்ளது.

அம்பாள் சன்னிதியை வலம் வருகையில் வைஷ்ணவி, வாராஹி, திருமகள், பிராம்மி,சண்டிகை, துர்க்கை ஆகியோரைத் தரிசிக்கலாம்.

வியாழனன்று அம்பாள் சன்னிதியில் நெய் விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும் என்கிறது ஸ்தல புராணம்.

Ⓜ புதன்: சில தகவல்கள்:Ⓜ

ஞாழல் மொட்டுப் போல் ஒளியுடையவன். அழகே வடிவானவன், சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்தவன். செளம்யமானவன்.

புதனுக்குப் பிடித்த நிறம் பச்சை, பிரியமான ரத்தினம் மரகதம்.

உயரமானவன், ஜாதகத்தில் உச்சனாயிருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் கல்வியில் சாதனை படைப்பர்.

ஜோதிடத்தில் நிபுணராவார், பேச்சாற்றல் பெருகும்.

கணிதம், தர்க்க சாஸ்திரம், மருத்துவம் அனைத்துக்கும் மூலகர்த்தா இவரே.

கன்னியோ, மிதுனமோ லக்னமாயிருந்தால், உடன் ராகு–கேது, சனி, செவ்வாய் இல்லாமலிருப்பின் நாடகம், நடனம், எழுத்தாளர், கவிஞர் இவர்களை உருவாக்குவார்.

பஞ்சபூதங்களில் மண் இவர்.

மிதுனம், கன்னி இரண்டும் இவரது சொந்த வீடு.

கன்னி உச்ச வீடுமாகும், மீனம் நீசவீடு– சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள்– சந்திரன் எதிரி.

புதனது உலோகம் பித்தளை; பச்சைப் பயிறு, பயத்தம் பருப்பு இவருக்குப் பிடித்த தானியம்.

பயத்தம் பருப்பு போட்ட வெண் பொங்கல், பாசிப்பயிறு சுண்டல், பயத்தம் பருப்புப் பொடி சாதம் ஆகியன இவருக்குரிய நிவேதனங்கள்.

ஐந்தாம் எண்ணிற்குரியவர் புதன்.

இவருக்குரிய சமித்து நாயுருவி வேர்.

இவரது சுவை உப்பு.

மலர்-வெண் காந்தள், அல்லது பச்சை நிற தவணம், மரு, துளசியால் அர்ச்சித்தால் திருப்தியுறுவார்.

புதனது மனைவி இளை; புதல்வன் புரூரவஸ். "புதம் ஆச்'ரயாமி ஸததம்" எனத் தொடங்கும் கீர்த்தனையில் முத்துசுவாமி தீக்ஷிதர் புதனின் பிரபாவங்களைப் புகழ்கிறார்.

கிரகபதி, ஞானி, செளம்யன் என்ற பட்டங்களைப் பெற்ற புதனை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு வரும்.

கர்நாடக சங்கீத வித்துவான்  தியாகராஜரால் கோவூர் பச்சரட்னம் என்று அழைக்கப்பட்ட ஐந்து பாடல்களையும் தொகுத்து வழங்கினார்.

ஸ்தல புராணம்:

பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எனத் தெரிகின்றது.

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் துவக்கி வைத்த ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆலயம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. சாதாரணமாக அனைத்து ஆலயங்களுமே கிழக்கை நோக்கித்தான் அமைந்து இருக்கும். ஆனால் இந்த ஆலயமோ தெற்கு நோக்கி அமைந்து உள்ளதின் காரணம் அந்த ஆலயத்தில் சௌந்திராம்பிகையாக அன்னை பார்வதி அமர்ந்து இருந்தார்.

சிவபெருமான் ஒரு முறை தவத்தில் இருந்தார். வெகு காலம் கண் திறக்கவில்லை. ஆகவே தற்போது திருமேனீஸ்லரர் ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த மாங்காட்டில் பார்வதி சிவபெருமானின் அங்கத்தில் தாம் பாதியாகி அவரை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தவத்தில் அமர்ந்து இருந்தார். அவள் தவத்தினால் ஏற்பட்ட உஷ்ணத்தினால் உலகம் தகிக்கலாயிற்று. அனைத்தும் கருகலாயின.

உயிர் சேதங்கள் துவங்கின. அப்போது கண்களை மூடியபடி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முடியாமல் போன தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்க அவர் தனது மனைவி மகாலஷ்மியை அந்த இடத்துக்கு அனுப்பினார்.

இலஷ்மி தேவியும் ஒரு பசுவின் உருவில் அந்த இடத்துக்குச் சென்று சிவலிங்கத்தின் மீது தன் மடியில் இருந்து பாலை சுரந்து அபிஷேகித்து சிவனை வேண்ட அவர் கண் திறந்தார்.

ரிஷப வாகனத்தில் பார்வதிக்கு காட்சி தந்தார். அவர் கண் திறந்ததும் அனைத்து இடங்களும் குளிர்ந்தன. அவளுடைய பக்தியை மெச்சிய சிவனார் அந்த இடத்துக்கு கோபுரி எனப் பெயரிட்டார்.

கோ என்றால் பசுமாடு. புரி என்றால் இடம். அதுவே பின்னர் மறுவி கோவூர் ( கோ+ஊர்) என ஆயிற்றாம்.

புதன் கிரகம் சூட்டு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நிவாரணம் தருபவர்.

புதன் மன இறுக்கத்தையும் குறைப்பவர். அவர் குளுமையானவர். அதற்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.

ஒரு முறை சந்திரன் பிரஹஸ்பதியிடம் பாடம் பயின்று கொண்டு இருந்தபோது அவருடைய மனைவியின் மீது மையல் கொண்டு அவளை தூக்கிப் போய்விட சண்டை மூண்டது. யுத்தத்தில் தோற்றுப் போன சந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்து மன்னிப்புக் கேட்டார்.

ஆனால் அதற்குள் சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் குழந்தைப் பிறந்து விட்டது. அதை பிரகஸ்பதி ஏற்க மறுத்தார். ஆகவே அந்த குழந்தைக்கு விஷ்ணுவே பாடம் பயில்வித்து வளர்த்து பெருமையை ஏற்படுத்தினார். ஆகவே தான் சந்திரனின் குளுமையான குணம் புதனுக்கு வந்ததாம்.

ஆகவே தான் சிவபெருமான் கண் விழித்து குளுமையான அந்த இடம் புதனுக்கு அர்பணிக்கப்பட்டது. அங்கு தேவர்களுடன் சேர்ந்து வந்து வணங்கிய புதன் கிரகத்தை சிவபெருமான் தன்னுடன் அங்கு தங்கி அந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு கூற அந்த ஆலயம் புதன் கிரகத்துக்கு முதன்மை தரும் தலமாகியது.

அந்த ஆலயத்துக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. இந்த ஆலயத்தில் மட்டுமே மகா வில்வம் என்று சொல்லக் கூடிய இந்த மரத் தளம் ஒவ்ஒன்றிலும் 5, 7 மற்றும் 9 இலைகளைக் கொண்ட தளங்களைக் கொண்ட வில்வ மரம் உள்ளதாம்.

எந்த ஒரு இடத்திலும் வில்வத்துக்கு ஒரு தளத்தில் மூன்று இலைகள்தான் இருக்கும். ஆகவே இந்த இடத்தில் வந்து அந்த வில்வ இலைகளினால் பூஜை செய்பவர்கள் பெரும் பாக்கியத்தை அடைந்தவர்கள்.

ஒரு முறை தியாகராஜர் அந்த வழியாக செல்லும்போது திருடர்கள் தாக்கினர்.

வழிப்போக்கர்கள் போல வந்து அவரை இராமரும் லஷ்மணரும் காப்பாற்றினர். அதற்கு முன்னர்தான் தியாகராஜரை இராமர் மீது பாடல்களைப் பாடுவது போல சிவன் மீதும் பாடல் பாடுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ள அவர் மறுத்து இருந்தார்.

ஆனால் தம்மை அந்த இடத்தில் ராம - லஷ்மணர்கள் காப்பாற்றியதினால் அந்த பூமிக்கு விஷேச சக்தி உள்ளது எனப் புரிந்து கொண்டு சுந்தரீஸ்வரர் புகழ் பாடும் பஞ்சரத்தின கீர்தனையை அந்த இடத்துக்கு மீண்டும் வந்து பாடினார்.

புதனுக்கு இரட்டை தரிசனம் கிடைத்த ஸ்தலமானதால் புத பரிகார க்ஷேத்திரமாயிற்று.

தற்போதைய பெயர் : கோவுர் 

இறைவன் : திருமேனீஸ்வரர் ,சுந்தரேஸ்வரர்

இறைவி : சௌந்தராம்பிகை - திருவுடை நாயகி 

தலமரம் : வில்வம் (27 இலை அடுக்குகள்)

நடை திறக்கும் நேரம்:
 
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment