சிவபெருமான் பக்தர்களுக்காக அவர் மனவருத்தம் தீர்ப்பதற்காக எதையும் செய்வார் ; வளைந்தும் கொடுப்பார் ; நிமிர்ந்தும் நிற்பார் என்பதை உணர்த்தும் பதி ; அன்புக்கும், பக்திக்கும் மயங்கும் அருணஜடேஸ்வரர் அருள்பாளிக்கும் அற்பூத சிவ ஷேத்திரம்..
🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸
தொலைபேசி எண் : +91 - 4352 – 456422
💦🌿💦🌿 BRS 💦🌿💦🌿💦
மூலவர் : அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்
அம்மன்/தாயார் : பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி
மூர்த்தி : சொக்கநாதர், நர்த்தன விநாயகர், முருகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், பஞ்சபூத லிங்கங்கள், பைரவர், சூரியர், சந்திரர், சப்தகன்னியர், குங்கிலியக் கலயர்.
தல விருட்சம் : பனைமரம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விட்டுணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூபதீர்த்தம், மண்ணியாறு முதலாகிய பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.
ஆகமம்/பூஜை : காரண, காமிக ஆகமப்படி ஆறுகால பூஜைகள் நாடோறும் நடைபெறுகின்றன.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
ஊர் : திருப்பனந்தாள்
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்
🅱 தேவாரப்பதிகம்:🅱
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே. - திருஞானசம்பந்தர்
🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம். 🌀
🅱 திருவிழாக்கள் :🅱
🍄 சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
🍄 ஆடிப்பூரம்
🍄 நவராத்திரி
🍄 மகா சிவராத்திரி
🅱 தல சிறப்பு:🅱
🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🎭 பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.
🎭 இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார். இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும்.
🎭 இத்தல இறைவன் பிரம்மனுடைய சாபத்தை நிவர்த்தி செய்து அவனுக்குரிய பதவியையும், பெருமையையும் திரும்பத் தந்தவர்.
🎭 பசியோடு வருந்தி வந்த காளமேகப் புலவனுக்குச் சிவாச்சாரியார் வடிவத்தில் வந்து அன்னத்தை அளித்தவர் இத்தல இறைவன்.
🎭 அழகும், பெருமையும் இழந்து, தேய்ந்து, சிறுத்துப் போய், குருவின் மனைவியை விரும்பிய சந்திரனுடைய சாபத்தைத் தீர்த்துப் பொலிவும், பெருமையும் தந்தவர் இத்தல இறைவன்.
🎭 அனைத்தும் அறிந்த அன்னை பார்வதி தேவி திருவைந்தெழுத்தின் பெருமையை அறிய விரும்பினாள். அவளுக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஞான குருவாக இருப்பவர் செஞ்சடையப்பர். குருவாய் இருந்து குருதோஷ நிவர்த்திகளைச் செய்பவர் இத்தல இறைவன்.
🎭 திருமணத் தடை அகற்றி மக்கட்பேற்றினை அருளும் மகேஸ்வரன் அவர்.
🎭 தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.
🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும்.
🅱 நடைதிறப்பு:🅱
🔑 காலை 5.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.🔑
🅱 பொது தகவல்:🅱
🌸 இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
🌸 கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம்.
🌸 கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது.
🌸 சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
🌸 திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
🌸 இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.
🌸 தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.
🅱 திருப்பனந்தாள் பெயர் காரணம்: 🅱
🌿 ஊருக்கு ஒரு பெயர்; கோயிலுக்கு ஒரு பெயர் பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது உண்டு. திருப்பனந்தாள் என்ற பெயர் ஒரு காலத்தில் ஊருக்கும் கோயிலுக்கும் இருந்தது. பனை மரத்து அடியில் சுயம்பு லிங்கம் எழுந்தருளியிருந்ததால் பனந்தாள் என்ற பெயர் வந்தது.
🌿 அந்த லிங்கத்தைப் பின்னர்த் தாடகை என்பவள் வழிபட்டாள். தாடகை வழிபட்ட ஈஸ்வரன் இருந்த ஆலயம் தாடகைஈச்சரம் எனப்பட்டது. ‘தண் பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே’ என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.
🌿 பனை மரங்கள் மிகுந்திருந்த ஊர் பனந்தாள். பனை மரத்தடியில் சிவலிங்கம். பனைமரத்துக்கு என ஒரு விசேஷம் உண்டு. தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய பொருள்கள் மூன்று உண்டு. ஒன்று காமதேனு என்னும் பசு. இன்னொன்று கற்பக விருட்சம். மூன்றாவது சிந்தாமணி. இந்த மூன்றும் இருப்பதே தேவலோகத்துக்குப் பெருமை.
🌿 கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றக்கூடிய மரமான கற்பக மரங்களைப் பஞ்ச தருக்கள் என்பார்கள். ஐந்து வகையான மரங்களே பஞ்ச தருக்கள். கற்பக மரம், பாரிஜாத மரம், ஹரிசந்தன மரம், மந்தார மரம் ஆகியவை அவை.
🌿 பூலோக பாரிஜாதம் பவளமல்லிகை. பூலோகத்தில் சந்தன மரம் உண்டு. ஹரிசந்தனம் மற்றும் மந்தார மரங்கள் முறையே பெருஞ்சேரி சிதலைப்பதி என்ற தலங்களில் தலவிருட்சங்கள்.
🌿 பஞ்சதருக்களில் முதலாவதான கற்பக மரம் தேவலோகத்துக்குப் பெருமை தரக்கூடியது. இந்திரன் இந்த மரத்தில் மலர்ந்த பூக்களிலிருந்து சிந்தும் தேனுக்குக் கீழே வீற்றிருக்கிறான் என்பார் கம்பர். தேவலோகத்தைக் கற்பக நாடு என்றும் சொல்வார்கள்.
🌿 பூலோகத்தில் இருக்கக் கூடிய கற்பக மரம் எது தெரியுமா ? பனைமரம்தான். சில தலங்களில் பனை மரம் தலவிருட்சம். மூன்று தலங்கள் அப்படி உண்டு. அவற்றில் விசேஷமானது திருப்பனந்தாள். பனை மரத்தடியில் இருக்கும் கற்பகம்தான் செஞ்சடையப்பர். அவரை வழிபடக் கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைப்பதெல்லாம் நடக்கும். கற்பக மரத்துக் கடவுள் கட்டாயம் அடியவர் தேவைகளை நிறைவேற்றுவார்.
🅱 பிரார்த்தனை:🅱
🌹 சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு.
🌹 குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.
🅱 நேர்த்திக்கடன்:🅱
♻ சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
🅱 தலபெருமை:🅱
🌱 கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும்.
🌱 திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடு செய்த தலமாகும்.
🌱 மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.
🌱 இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன.
🌱 இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அகத்தியர், சூரியர், சந்திரர், ஆதிகேசன், தாடகை, குங்குலியக் கலயநாயனார் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
🌱 ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார்.
🌱 ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார்.
🌱 திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.
🌱 இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர்.
🌱 இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.
🌱 இத்தலம் உமையம்மையார் சிவ பூசையியற்றி ஞானோபதேசம் பெற்ற சிறப்புடையது.
🌱 தாழை மலரைச் சான்று காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்கு அதனாலேற்பட்ட பாதகத்தைப் போக்கியது. இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாதகமும், கெளதமர் மனைவியைக் களவாற் சேர்ந்த தோஷமும் போக்கிய அருள் பாலித்தது.
🌱 பிருந்தையைப் புணர்ந்த திருமாலுக்கு அருள் செய்து. தக்கனுடன் கூடிச் சிவத்துரோகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு அத்துரோகத்தால் உண்டான பாவத்தைத் தீர்த்தது.
🌱 குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகத்தை நீக்கியது. அகத்தியரால் பூசித்து வழிபடப் பெற்றது. ஆதிசேடனால் பூசிக்கப் பெற்றது. தாடகை சிவ பூசையின் போது அணிவித்த மாலையை ஏற்றுக் கொள்ளத் திருமுடிசாய்த்தருளிய இறைவனைக் குங்குலியக்கலய நாயனார் அன்புக் கயிற்றால் இழுத்து நிமிர்த்தி வழிபட்டது.
🌱 வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகையால் பூசிக்கப் பெற்றது. மேற்கூறிய ஒவ்வொருவரும் தத்தம் பெயரால் தீர்த்தங்கள் அமைத்து சிவலிங்கப் பிரதிட்டையும் செய்துள்ள பெருமை மிக்கது. அவ்வத் தீர்த்தங்களில் அன்போடு மூழ்கியவர்களின் பவப்பிணி மாய்த்துப் பெரும் பேறடையச் செய்வது இத்தலம்.
Ⓜ நாககன்னிகை தீர்த்தம்: Ⓜ
🍁 இது சுவாமி சந்நிதியில் மேலை இராஜ கோபுரத்தின் வடபால் கோயிலுக்குள் அமைந்துள்ளது. நாக கன்னிகையால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் மூழ்கினோர் சகலபிணிகளும் நீங்கப் பெறுவர்.
Ⓜ மண்ணியாறு: Ⓜ
🍁 அம்மையார் விருப்பத்தின்படி, முருகப்பெருமானால் அழைக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்தின் இரண்டு பர்லாங் தொலைவில் வடக்கு நோக்கி ஓடிகின்றது. வடக்கு நோக்கி ஓடுவதால் உத்தரவாகினி என்ற சிறப்போடு போற்றப்படுகிறது.
Ⓜ சிற்பஓவிய மேம்பாடு: Ⓜ
🍁 சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர், கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறுகால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும், கலயனார் அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும், அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும், நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
🍁 சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன.
🍁 சுப்ரமண்யர் உற்சவருக்குப்பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்ற ஐதீகம் செதுக்கப் பெற்றிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
🍁 வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப் பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் எழுதப் பெற்றுள்ளன. 1942-ல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர்.
🍁 வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் உருவத்திற்கு (சுதை) எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன. அதன் விபரம்.
1. சிதம்பரம் – ஆனந்த தாண்டவம் – கனகசபை
2. மதுரை – சந்தியா தாண்டவம் – இரசிதசபை
3. திருக்குற்றாலம் – திரிபுர தாண்டவம் – சித்ரசபை
4. திருவாலங்காடு – ஊர்த்துவ தாண்டவம் (காளி தாண்டவம்)– இரத்தினசபை
5. திருநெல்வேலி – காளிகா தாண்டவம் (முனி தாண்டவம்) – தாமிரசபை
Ⓜ அம்மையார் ஞானோபதேசம் பெற்றது: Ⓜ
🌹 முன்னொரு கற்பத்தில் அம்மையார் இறைவனை வணங்கி ’ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும்’ எனப் பிரார்த்திக்க, இறைவன் ‘நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம்’ என்று உரைத்தனர்.
🌹 அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்து வந்து எதிர்முகமாக வடபுறத்தமர்ந்து தவஞ் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்மையாருக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இவ்வுண்மையினையே இறைவர் மேற்குமுகமாக எழுந்தருளியிருப்பதும் இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருப்பதும் வலியுறுத்தும், அம்மையார் உபதேசம் பெறுமுன் பாலாம்பிகை எனவும், உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் வழங்கப் பெறுகின்றார்.
Ⓜ ஐராவதம்: Ⓜ
🌹 அசுரர்களின் அல்லலுக்கு ஆற்றாராகிய அமரர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். செவியேற்ற இந்திரன் ‘போர் புரிதற்கு ஐராவதத்தைக் கொண்டு வருக’ எனக்கூறினான்.
🌹 ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுகைத்துள்ள மந்தரமலையை அடைந்திருக்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், தனது சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையையிழந்து மண்ணுலகத்தில் காட்டானையாகத் திரிந்தது. தன் எதிர்பட்ட நாரதரை வணங்கி, அவராணைப்படியே இத்தலத்திற்கு வந்தது.
🌹 தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது. தன் பெயரினால் மேற்பால் ஓர் தடாகமும் சிவலிங்கப் பிரதிட்டையும் செய்து பூசித்துத் தன்னுலகடைந்தது. (ஐராவது ஆனை தங்கி இறைவனை வணங்கிய இடம் “ஆனைகோயில்” என்று தற்போது வழங்கப் படுகிறது. இது செஞ்சரையப்பர் கோயிலுக்கு மேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ளது.)
Ⓜ குங்கிலியக்கலயனார்: Ⓜ
🍄 கலயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி தெரிந்து வீடு சென்று இதுவும் திருவருட்செயல் போலும் என எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். வழியில் உள்ள விநாயகர் அசரீரியாக அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் நனைக்க, மகனும் உயிர் பெற்று எழுந்தான். (பெரியபுராணத்தில் இதற்கு ஆதரம் இல்லை) இவ்விநாயகர் இன்றும் ‘பிணமீட்ட விநாயகர்’ என்ற திருநாமத்துடன் திரு வீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.
Ⓜ நாகன்னிகை: Ⓜ
🍁 நாகலோகத்தில் வாசுகி தன் மகன் சுமதிக்கு மணஞ் செய்விக்கக் கருதிய காலை ‘சுமதி அதைப் பற்றிய முயற்சி தங்கட்கு வேண்டாம்’ எனக் கூறி கன்னி மாடத்தமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி ‘நீ தாலவனமடைந்து பூசிப்பாய்’ என அருள் செய்தனன். சுமதியும் அவ்வாறே பிலத்தின் வழியாக வந்து அம்மையார் சந்நிதானத்திலுள்ள கூபத்தில் தோன்றி இறைவனை வழிபட்டு வந்தாள்.
🍁 தலயாத்திரை செய்து வரும் அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தையடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று, நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று மணமுஞ் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் பிலத்தின் வழியாக வந்து அம்மையருக்கு மேல்புறம் ஓர் தடாகமைத்து நாடோறும் வழிபாடியற்றி வந்தாள்.
🍁 அரித்துவசனும் ஆலயத்திற்குத் தென்பால் ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தியின்பம் பெற்றார்கள்.
🅱 திருப்பனந்தாளில் அகத்தியர் 🅱
🌀 தென்னகம் நோக்கிப் புறப்பட்ட அகத்திய முனிவருக்குச் சிவபெருமான் தமிழை உபதேசித்தார். சிவனிடம் அறிந்த தமிழுக்கு அகத்தியர் மிகப்பெரிய இலக்கண நூல் ஒன்றை வகுத்துத் தந்தார். அந்த நூலுக்கு அகத்தியம் என்று பெயர் என்கிறது இலக்கிய வரலாறு.
🌀 சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை அறிவித்தார் என்ற உண்மையைக் கம்பரும் குறிப்பிட்டிருக்கிறார்.
🌀 தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் என்று அவர் அகத்தியரை குறிப்பார்.
🌀 அரியவளான தாடகை பனசைப் பதியில் இறைவனை முடியை வளைத்த செய்தியை ஸ்தல மான்மியத்தை அறிந்தார் அகத்திய முனிவர். உடனே திருப்பனந்தாளுக்கு செல்ல முடிவெடுத்தார். பல்வேறு முனிவர்களுடன் திருப்பனந்தாளுக்குச் சென்றார்.
🌀 புண்ணியப் புனல்களில் மூழ்கினார்; சிவ பஞ்சாட்சர ஜெபம் செய்தார். உரிய நியாசங்களைப் புரிந்தார். முறைப்படிப் பூஜைகளைச் செய்தார். எட்டு வகை மலர்களை இட்டு அர்ச்சித்தார். பல்வேறு விதமான அபிஷேகங்களைச் செய்தார்.
🌀 தூய்மையான நீர், எண்ணை, மஞ்சள், மாப்பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், இளவெந்நீர், வில்வக் குழம்பு, பாளிதம், பால், தயிர், தேன், கனிச்சாறு, இளநீர் முதலான பல அபிஷேகங்களைச் செய்தார். அவ்வப்போது தூப, தீபங்களையும் காட்டினார். செய்ய வேண்டிய எல்லாவகை பூஜைகளையும் முறைப்படிச் செய்தார். இறுதியில் சுவாமியை அலங்கரித்தபின் எட்டுவிதார்ச்சனைகள் செய்தார். ஈரெட்டு உபசாரங்களைச் செய்தார். உண்மையான அன்புடன் பணிந்தார்.
🌀 இப்படிப் பல நாட்கள் பெரியநாயகியுடனான செஞ்சடையப்பரை இடைவிடாது வழிபட்டார். விழுந்து வணங்கும் போது அடியற்ற மரம் போல மிகுந்த ஆர்வத்துடன் உள்ளம் உருகி வணங்குவார். அப்போது அவர் விழியிலிருந்து அருவி போலக் கண்ணீர் கொட்டும். இப்படிப்பட்ட பேரன்புடன் தன்னை வழிபடுவதைக் கண்டார் செஞ்சடையப்பர்.
🌀 சிவநாம ஜெபத்தில் மூழ்கிக் கிடந்த அகத்தியர் முன் அருட்காட்சி தந்தார் சிவன். "உன் பூஜைக்கு மகிழ்ந்தோம். எனவே உனக்குக் காட்சி தந்தோம். வேண்டும் வரம் கேள் தருகிறோம்" என்றார்.
🌀 அப்போது அகத்திய முனிவர், "ஒப்பில்லாத தெய்வமே ! உன்னை அன்போடு வழிபடுபவர்களுக்கு இந்த லிங்கத்தில் எழுந்தருளியிருந்து தமிழ், இயல் ஞானத்தை அதாவது தமிழ் அறிவைக் குறையாமல் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
🌀 இறைவனும் "அப்படியே செய்கிறோம்" என்று அருள் செய்தார் என்கிறது திருப்பனந்தாள் புராணம்.
🅱 தல வரலாறு:🅱
🔥 அருணஜடேஸ்வரர் யுக யுகாந்திரமாக இருக்கும் சுயம்புநாதர். அவரைப் புராண காலத்தில் பூஜித்தாள் ஒரு பூவை. அவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற உத்தம குணங்களுக்குச் சொந்தக்காரி. சிவபூஜையில் நாட்டம் அதிகம் கொண்ட நங்கை. அவள் தினந்தோறும் சிவலிங்கத்தை பூஜிப்பது பழக்கம். வெவ்வேறு இடங்களிலிருந்து மலர்களைக் கொண்டு வருவாள். சிவலிங்கம் இருக்கும் கோயிலைத் தூய்மை செய்வாள். இறைவனை முறைப்படிப் பூஜை செய்வாள். எல்லா வகையான உபசாரங்களையும் செய்வாள். இறைவனுக்குச் செய்யும் உபசாரங்களில் மலர்மாலை சாத்துதல் என்பது ஒன்று.
🔥 ஒருநாள்... சுவாமிக்கு மாலை சாத்தப் போகும் நேரம்... அவள் மேலாடை சற்று நழுவியது. உடல் உறுப்புக்கள் தெரியச் சுவாமிக்கு மாலை சாத்துவது அபசாரம். எனவே அவள் நாணமிக்கவளாய் நழுவிய மேலாடையை ஒரு கையால் இறுக்கிப் பிடித்து மாலை சாத்த முயன்றாள். பக்கவாட்டில் ஆடையைப் பிடித்தமையால் கையின் நீளம் குறைந்தது. லிங்கம் கைக்கு எட்டவில்லை. மாலை சாத்த முடியவில்லை. அந்த நிலையில் சிவபெருமான் தாடகையின் பக்திக்கு இரங்கித் தன் பாணப்பகுதியைச் சற்றே முன்னோக்கி குனிந்தார். அதனால் மாலை சாத்த முடிந்தது. தாடகையும் மாலை சாத்தி மகிழ்ந்தாள்.
🔥 சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.
🔥 தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். துடிதுடித்தான்.
🔥 யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிந்து விடுவாரா ஆண்டவன் ? மாட்டாரல்லவா. தோல்வியைத் தழுவினான் மன்னன். துவண்டு திரும்பினான்.
🔥 தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகாரத்துக்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது. அந்தச் சமயத்தில்...
🔥 காலசம்ஹார க்ஷேத்திரமான திருக்கடையூரில் சிவத்தொண்டு புரிந்து வந்தார் ஒரு அடியவர். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரென்னவோ ? உலகுக்கு அது புலப்படவில்லை. அவர் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார். இடைவிடாமல் செய்த அத்தொண்டு காரணமாக அவரை எல்லாரும் குங்கிலியக்கலயநாயனார் என்று அழைத்தார்கள். இயற்பெயர் போனது காரணப் பெயரே நிலைத்தது.
🔥 திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தார். நினைத்ததைச் செயல்படுத்தத் திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்தார். குங்கிலியத் திருப்பணி செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.
🔥 நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு மாலையை சிவனுக்கு அணிவித்தார். வளைந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டார். தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். அந்தக் கயிற்றினை லிங்கத்துடன் கட்டினார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.
🔥 சர்வேஸ்வரனுக்குச் சங்கடத்தைக் கொடுத்து விட்டார் சிவனடியார். அரசனின் அதிகாரத்துக்கு வளையாத சிவனுக்குச் சவாலாக அமைந்தார் அடியவர். நிமிராவிட்டால் குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். சுருக்கு இறுகும் அவர் உறுதியாக உயிர் நீப்பார். அவருடைய அன்பு சிவனை அசைபோட வைத்தது. அடியவருக்காக - அவர் அன்புக்காக - அவர் மனஒருமைப்பாட்டுக்காக மகிழ்ச்சியடைந்தார். லேசாக நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.
நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் கூடி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு கண்டபோதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்
- என்பது பெரிய புராணம்.
🔥 திருப்பனந்தாள் சிவபெருமான் பக்திக்காக வளைந்து கொடுத்தார் - ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்தார் - அடியவர் அன்புக்கு இரங்கினார் நிமிர்ந்து கொடுத்தார் என்பது தல வரலாறு.
🔥 அன்புக்காக எதையும் செய்வார் அருணஜடேஸ்வரர். அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.
🔥 இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது. உள்ளன்போடு வழிபட்டுக் கேட்டதைப் பெற வேண்டிய தலம் இது.
🅱 மற்றொரு தலவரலாறு :🅱
🔥 முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர் ? என்றப் போட்டி எழுந்தது. அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார்.
🔥 ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை. லிங்கோத்பவராய் திருவண்ணாமலையில் தனது அடி முடி தெரியா வண்ணம் சிவராத்திரிப் பொழுதில் நள்ளிரவு 12.00 மணி அளவில் ஜோதி வடிவில் காட்சியளித்தார் சிவபெருமான். அதுவே லிங்கோத்பவ காலம் (இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை) எனப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், இந்த லிங்கோத்பவர் காலத்தில் கண்டிப்பாக சிவாலயங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.
🔥 மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார்.
🔥 பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார். பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.
🔥 அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார். இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது.
🔥 பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது. திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.
🔥 சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார். இத்தலத்தில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கலாம்.
🅱 சிறப்பம்சம்:🅱
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:
♻ சித்திரை மாதம் சில நாட்கள் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன.
♻ இத்தலம் திருஞானசம்பந்தரால் வழிபட்டுப் பாடப் பெற்ற பெருமையினையுடையது. ஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையிலுள்ளது.
♻ இதுவன்றி திருநாவுக்கரசர் பாடிய தலத் தொகுப்புப்பாடல் ஒன்றிலும், பதினோராம் திருமுறையில் ஐயடிகள் காடவர் கோன் நாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய இரண்டு பாடல்களிலும், குங்குலியக் கலயநாயனார் புராணத்திலும், திருப்புகழிலும், க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழிலும் இத்தலம் பற்றியும் இறைவனைப் பற்றியும் பல செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
♻ காலமேகப் புலவர் பாடிய பாடல் ஒன்றிலிருந்து அக்காலத்தில் ‘திருப்பனந்தாள் பட்டன்’ என்ற பெயரினையுடைய ஒருவன் தண்ணீரும் சோறும் தடையின்றி வழங்கிய செய்தி தெரிய வருகிறது. செஞ்சடை வேதிய தேசிகர் அவர்களால் தலபுராணமும் பாடப் பெற்றுள்ளது.
♻ திருஞானசம்பந்தர் பதிகம் ‘கண்பொலி நெற்றியினான்’ என்று தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தாடகையீச்சரத்தின் சிறப்புபேசப்படுகிறது. இரண்டாவது பாடலில் வல்வினையும் பல் பிணியும் பாழ்பட விரும்பினால் இறைவனை ஏத்துமின் என ஞானசம்பந்தர் அருளுகிறார்.
♻ ‘ஞானசம்பந்தன் நல்ல பண்ணியல் பாடல் வல்லார் அவர் தம் வினை பற்றறுமே’ எனப் பாடுவார் பெறும் பயனும் பேசப்படுகிறது. இப்பதிகத்தின் முதல் பாடல் வருமாறு:
கண்பொலி நெற்றியினால் திகழ் கையிலோர்வெண் மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதி சேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
♻ கல்வெடுக்களில் இறைவன் பெயர், திருத்தாடகையீச்சரத்து மஹாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது.
♻ இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி, இக்கோயில் மஹா மண்டபத்து வாசலில் தென்பாலுள்ள கல்வெட்டால் புலனாகிறது. இக்கோயிலின் உள்நுழை வாயிலின் இரு புறங்களிலும் உள்ள துவாரபாலகர்கள் சிற்ப வேலைப்பாடுடையன. அவற்றின் பின் பக்கம் சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு கூறும் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.
♻ இக்கோயிலில், குங்குலியக் கலயநாயனாருக்கென தனிக் கோயில் உண்டு. அதனை எடுப்பித்தவர் அவர் பால் ஈடுபாடு கொண்டு விளங்கிய திருப்பனந்தாள் குங்கிலியக் கலயர் என்பவராவர். இக்கோயில் இரண்டாவது கோபுரத்தை அடுத்து உள்புறமு தென்பால் மண்டபத்துடன் அமைந்துள்ளது.
🅱 இருப்பிடம்:🅱
✈ கும்பகோணத்திலிருந்து(15 கி.மீ.) சென்னை செல்லும் சாலையில் சோழபுரத்துக்கும் அணைக்கரைக்கும் இடையில் உள்ள ஊர்.
✈ கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. அணைக்கரை சாலையில் செல்லும் எல்லாப் பேருந்துகளும் நிற்கும்.
🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀
🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄
No comments:
Post a Comment