
ஞானவாவி:
பத்தடி விட்டமுள்ள கிணறுதான் ஞான வாவி ஆகும். இதைச் சுற்றி தூண்கள் அடர்ந்த மண்டபத்தை 1828-ல் கட்டினார்கள். இந்த வாவி உள்ள மண்டபம்தான் முக்தி மண்டபம் என்று அழைக்கப்படுகி றது.
பிரும்ம சூத்திரத்துக்கு விரிவுரையை ஆதிசங்கரர் காசியில்தான் எழுதினார். அதற்கு வியாசர் ஆமோதிப்பு அளித்தார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் மணிகர்ணிகா கட்டத்தினருகில் முக்தி மண்டபம் என்றிருந்தது. அதன் நினைவாக ஞானவாவியிலும் முக்தி மண்டபம் கட்டினர்.
இந்த வாவிக்கு இரண்டு பக்கத்திலும் கணநாதராகிய விநாயகரும் வியாசரும் இருக்கிறார்கள்.
வாவியின் நுழைவாயிலில் 50 அடி தொலைவில் நந்தி சிலை இருக்கிறது.
இத்தீர்த்தத்தில் ஆடினால் மனத்தில் லிங்கபாவனை வரும் என்றும், ஞானம் வந்து மோட்சத்துக்கு வழியாகுமென்றும் கூறுவர். காசுகளை இதில் பக்தர்கள் இறைக்கிறார்கள். அதற்காக ஒரு துணியையும் கட்டி உள்ளனர். காணிக்கைக் காசுகள் துணியில் தேங்கிவிடும். இதனால் தண்ணீரை நேரடியாகப் பார்க்க முடிவதில்லை.
ஆழமான இந்த வாவி சிவபெருமானால் தோண்டப் பெற்றது என்பர். காசிக்கு கங்கை வருவதற்கு முன்பிருந்தே இங்கே இந்த வாவி இருப்பதாக ஐதீகம்.
விஸ்வநாதர் கோயில் !!
விஸ்வநாதர் கோயிலின் வாயிற்கதவுகள் வெள்ளித் தகடு பொருத்தப்பட்டது.
கோயிலின் நடுவே நீள்சதுரமான கருவறையும் அதில் காவல் தெய்வங்களும் உள்ளன.
விஸ்வநாதர் உள்ள மூலஸ்தானத்தின் மேலே தேர்க் கூரையைப் போல், நான்கு பட்டைகள் கொண்ட விமானம் உள்ளது. விமானம் தங்கத் தகடு வேயப்பட்டு தகத் தகாயமாக ஜொலிக்கிறது. கோயிலில் இறைவனை வழிபட்டுத் திரும்புவோர் கதவின் இரும்புச் சங்கிலியைத் தம் உடம்பில் தேய்த்துவிட்டுச் செல்கின் றனர். எமபயம் நீங்கும் என்பதே இதன் காரணமாகும்.
வாயில் கதவை ஒட்டிய சிறிய திண்ணை களில் சற்று அமர்ந்த பிறகே வீடு திரும்பு கிறார்கள். இறைவனை வணங்கிவிட்டு அவசரமாகத் திரும்பக் கூடாது என்ற உணர்வே காரணம்.
நீள் சதுர மண்டபத்தில் விஸ்வநாதர் கிழக்கே இருக்கிறார். மேற்கே தண்ட பாணீச்சுரரும் நிகும்ப மகாதேவியரும் உள்ளனர்.
தண்டபாணி என்போர் சிவபெருமானுக்கு உகந்த யட்சர்கள் என்றும், காசியில் அவர்களின் துணை கொண்டே விஸ்வநாதர் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. தண்டு வைத்திருப்பதால் தண்டபாணியாவார். இவர் உத்தரவு இல்லாமல் காசியில் யாரும் நுழைந்துவிட முடியாதாம். நம் முருகனாகிய தண்டபாணி இந்தக் காசி தண்டபா ணியிடம் உத்தரவு பெறாமையால் காசிக்கு வரமுடியாமல் போனதாகவும் ஒரு கதை உண்டு.
இந்த தண்டபாணி லிங்க வடிவில் உள் ளார். பகைவர் வெட்டிய வடு மறையாமல் உள்ளது.
இந்த மைய மண்டபத்தில் தண்டபாணி சந்நிதி மேற்கும் விஸ்வநாதர் சந்நிதி கிழக்கும் அமைய, உதயவூர் மகாராணா ஜவான்சிங் அமைத்த வைகுந்த மகாதே வர் நடுவே நந்தியுடன் உள்ளார். மேவார் மன்னன் கொடுத்த பெரிய மணி ஒன்றும் இங்கே இருக்கிறது.
விஸ்வநாதர் பத்து அடிக்குப் பத்து அடி யாக ஒரு சிறிய சலவைக்கல் கருவறையினுள்தான் இருக்கிறார்.
சலவைக்கல் சுவரில் ஆதிசங்கரர் தனது சீடர்களுடன் உள்ள காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறிய கருவறைக்குள்ளும் விஸ்வநாதர் நடுவில் இல்லை. வடகிழக்கின் ஓரமாகத் தள்ளி இருக்கிறார். நீள் சதுரமான ஒரு வெள்ளித் தொட்டியில் கீழே உள்ளார்.
இவர் தலைக்கு மேல் ஒரு பெரிய பாத்திரத்தில் கங்கை நீர் உள்ளது. அந்த நீர் ஒவ்வொரு சொட்டாக சிவலிங்கம் மீது விழுந்துக் கொண்டே இருக்கிறது.
தரையில் கைக்கெட்டும் தூரத்தில் விஸ்வநாதர் இருப்பதால் யாரும் தொடலாம், நீராட்டலாம், பூச் சாத்தலாம், ஆடை அணிகள் செய்யலாம். தொட்டு வணங்கலாம். தூய்மை கருதி கருவறைக்கு வெளியிலேயே இருந்து சிவலிங்கத்தை வணங்கிப் பழகியோருக்கு, இப்படி கருவறையில் அவரைத் தொட்டு வணங்கும்போது உண்மையில் மனத்தில் ஒரு உருக்கமும், உறவும், உரிமையும் மிகுவதையே காண்கிறோம். என்றும் திருநாள் கூட்டம்தான்.
திருப்பள்ளி எழுச்சிக்குப் பிறகு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது.
அர்த்த ஜாம பூஜையை நம்மூர் நாட்டுக் கோட்டை நகரத்தாரே காசியில் நடத்துகின்றனர். அதற்கு முன் சப்தரிஷி பூஜை என்பது விஸ்வநாதருக்கு நடைபெறும். ஏழு பண் டாக்கள் (அர்ச்சகர்கள்) சுற்றிலும் அமர்ந்து விஸ்வநாதருக்கு விசிறி விட்டு, வேத மந் திரங்கள் ஓதி, மரபு தவறாமல் இந்த பூஜையைச் செய்கின்றனர்.

இந்த இரண்டு பூஜைகளோடு திருப்பள்ளி எழுச்சி பூஜையும் தவறாமல் காண வேண்டிய பூஜைகளாகும்.
கோயிலில் பேதங்களோ, வணிக முறைக் கட்டுப்பாடுகளோ கிடையாது. சிபாரிசுகள் எதுவும் தேவையில்லை. படைத்தவனுக்கும் படைக்கப்பட்டவனுக்கும் இடையில் யாதொன்றும் தடையில்லை. படைத்தவன் படைக்கப்பட்டவன் இருவரும் நேரடியாக ஐக்கியமாகும் தலம் இது.
காசி கேதார்நாத் கோயில்:
தசாசுவமேதத் துறைக்குத் தெற்கில் உள்ள பெரிய துறையின் உச்சியில் உள்ளதே கேதார்நாத் கோயில். அழகிய படிக்கட்டுகள் கொண்டது. கிழக்கு பார்த்த கோயில் பக்தர்கள் குளித்த உடையோடு ஈரம் உலராமலே கோயிலுக்குள் செல்வர்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக இமயத்தின் மீது உள்ள கேதார்நாத்துடன் தொடர்புடைய கோயில்.
நமது தென்னகக் கோயில் முறை அமைப்பைக் கொண்டது. இக்கோயில் திருப்பனந்தாள் மடத்துப் பராமரிப்பில் உள்ளதால் தென்னக முறை வழிபாடு உண்டு. அர்ச்சகர் பூஜை வேளையில் மட்டுமே வருவார். மற்ற நேரங்களில் காசிநகர் பண்டாவே வழிபாடுகளைச் செய்கிறார்.
பண்டா இருக்கும் வேளையில் மட்டும் வடநாட்டு முறையில் இறைவனைத் தொட்டு வணங்கலாம். அபிஷேகம் முதலிய சடங்குகளைச் செய்யலாம்.
விஸ்வநாதரை விட இந்தக் கேதாரநாதரை எளிதில் சென்று நாம் விரும்பியவாறு வழிபடலாம். அமைதியான சந்நிதியும்கூட.
குமரகுருபரர்:
குமரகுருபரர் சைவ சித்தாந்தத்தையும் தமிழையும் பரப்புவதற்கே வடக்கே சென்றார். காசியில் பல ஆண்டுகாலம் வாழ்ந் தார். அப்போது அவர் பாடியதே காசிக் கலம்பகமாகும்.
விஸ்வநாதர் குமரகுருபரரின் கனவில் ஒருநாள் தோன்றி, “புதர்களால் மறைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் இருக்கும் கேதார் கோயிலை மீண்டும் எழுப்புக” என்று கோரினார். அப்போது காசியை ஒரு முஸ்லிம் மன்னன் ஆண்டு வந்தான்.
குமரகுருபரர் அந்த மன்னனிடமே சென்று, காசியில் கோயில் கட்டவும் கங்கையில் படித்துறை அமைக்கவும் உதவி கேட்கப் போனார்.
'சகலகலா வல்லி மாலை' என்ற நூலை சரஸ்வதி மேல்பாடி அருள்பெற்ற குமரகுருபரர், இந்துஸ்தானி மொழியையும் கற்றுக்கொண்டு, முகமதிய அரசரைக் காணச் சென்றார்.
குமரகுருபரரை ‘யாரோ ஒரு சந்நியாசி ' என்று ஏளனமாக நினைத்த மன்னன் அவரது கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. மறுநாள், மன்னனே கண்டு அஞ்சும் ஒரு சிங்கத்தைக் கண்டு, அதைத் தனது யோக வலிமையால் அடக்கி, அந்தச் சிங்கத்தின் மீது ஏறி அரண்மனைக்கு வந்தார். அக்காட்சியைக் கண்டோர் திகைத்தனர். அனைவரும் அஞ்சினர்.
மன்னன் அவரது தவவலிமையைப் பாராட்டி அவரது விருப்பம் இன்னதென்று கேட்காமலே, அவர் கேட்பதையெல் லாம் கொடுக்கும்படி உத்தரவு இட்டான். அவனது பொருளுதவியைக் கொண்டு அவர் கட்டியதே கேதார்நாதர் கோயிலும் காசி மடமும்.
அவர் இயற்றிய ’சகலகலாவல்லி மாலை' நூலைப் படிப்போர்க்கு சரஸ்வதி அருள் கிட்டும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். குமரகுருபரர் சிங்கத்தில் ஏறிவருகிற மாதி ரியான காட்சி நம் மடாலயங்களில் படமாக இருக்கக் காணலாம்.
காசியில் உள்ள திருப்பனந்தாள் மடத்தில் இப்படி ஒரு விக்கிரகமே உள்ளது. காசியில் மடம் நிறுவிய காரணத்தால் திருப்பனந்தாள் மடாதிபதிகளை 'காசி வாசி' என்றும் காசி மடத்தினர் என்றும் கூறுதல் வழக்கமாயிற்று.
குமரகுருபரர் காசியில் நாள்தோறும் பக் திச் சொற்பொழிவுகளைச் செய்து வந்தார். துளசிதாசர் அதை நாள்தோறும் கேட்டுப் பரவசமுற்றார். கம்பராமாயணத்தின் சிறப்புகளைக் குமரகுருபரர் எடுத்துச் சொல்ல, துளசிதாசர் தனது ராமாயணத்திலும் அவற்றைப் புகுத்தினார்.
தமிழர்கள் காசிக்குச் சென்றால் தங்குவதற்கு இந்த திருப்பனந்தாள் மடமே மிகவும் ஏதுவாக இருக்கிறது. தூய்மையான அறைகளைக் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். தமிழ்நாட்டி லிருந்து செல்வோர்க்கு பல வகையிலும் துணை புரிகிறார்கள். வருவோர்க்கு புரோகிதம் செய்யத் தமிழறிந்த பண்டாக்களையும் ஏற்பாடு செய்கிறார்கள்.
குமரகுருபரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பல இந்த மடாலயத்தில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சகலகலாவல்லி மாலைப் பாக்கள் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.
குமரகுருபரர் வாழ்ந்த இடம் புனிதமாகப் போற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
கங்கையின் அழகும், படித்துறைகளில் மக்கள் கூட்டமும், நகரின் காட்சிகளும் இந்த மடாலயத்தின்மேல் மாடியிலிருந்து பார்க்க மிகவும் ரம்மியமாக உள்ளது.
இம்மடத்தில் குமரகுருபரர் வழிபட்ட லிங்கத்துக்கு இன்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
திருப்பனந்தாள் மடத்து இருபதாவது மகா சந்நிதானம் அருள் நந்தியடிகளார் இம்மடத்தின் மாடியில்தான் தங்கியிருந்தார். அவருடைய கைத்தடி, திருப்பாதுகை முதலியவை நினைவுப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.
சிருங்கேரி மடத்தின் கிளையொன்று கேதார்கட்டில் உள்ளது. சிருங்கேரி மடத்துடன் தொடர்புடைய அன்பர்கள் தென்னகத்திலிருந்து இங்கு வந்தால் தங்குவதற்கு ஏற்ற மாடியறைகள் இங்கு உள்ளன.
நம்மூர் சேதுபதி மன்னரால் நிறுவப்பட்ட சேதுமடம், கேதார் கட்டில் திருப்பனந் தாள் மடத்துக்கு அருகில் உள்ளது.
No comments:
Post a Comment