அமைவிடம்:
சென்னை மாங்காட்டிலுள்ள அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகிலேயே உள்ளது இந்தக்கோயில்.
கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய அமைப்பு:
சுக்ராச்சாரியார் சிவதரிசனம் பெற்ற இந்த இடத்திலுள்ள கோயில் முகப்பில், சுதை சிற்பங்களைக் காணலாம்.
உள்ளே பிரவேசித்ததும் நந்தவனம், நந்தி தேவர், கருவறையில் சுக்ரருக்கு அருளிய வெள்ளீச்வரர் நாகாபரணம், வெள்ளி விபூதிப்பட்டையுடன் காட்சியளிக்கிறார்.
கர்ப்பக்கிரக வாயிலின் இருபுறமும், மாங்கனி விநாயகரும், தேவியருடன் சுப்பிரமணியரும் அருளுகின்றனர்.
கணபதி நெற்கதிரும், மாங்கனியும் ஏந்தியிருக்கிறார். உழவர் பெருமக்கள் விளைச்சல் பெருக இவரை வேண்டிக் கொள்கின்றனர்.
ஒரே கல்லால் வடிக்கப்பட்டவர் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான்.
நந்தி தேவரின் முன், பீடம் போன்ற ஒரு கல்லில் காமாட்சியம்மை நின்ற பாதச் சுவடுகளே இங்கே அம்பாள் சன்னிதி.
காஞ்சி செல்லும் முன் இங்கு நின்று தன் பதி, சுக்ரனுக்குத் தரிசனம் கொடுப்பதை அரூபமாகக் கண்டு மகிழ்ந்தாராம் சக்தி.
வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு நெய்தீபம் ஏற்றுவதாகக் கூறுகின்றனர்.
சேவார்த்திகள் தாயின் திருவடிகளைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர்.
சுவாமி கோஷ்டங்களில் வேழமுகன், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், திசைமுகன், ஆதி துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
காசி விஸ்வநாதர்-விசாலாட்சி மற்றும் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகா, வீரபத்திரர் அருளும் தனிசன்னதிகள் காணப்படுகின்றன.
பிரகாரத்தில் வீரபத்திரர் இருக்கிறார். இவரது வலது பாதத்திற்கு அருகே ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
சுவாமி விமானத்தில் எண்திசை அதிபர்கள் சிற்பம் இருக்கிறது.
சிவன் கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இடப்புறம் திரும்பியிருப்பதும், லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், பிரயோக சக்கரத்துடன் விஷ்ணுவும் வணங்கிய கோலத்தில் இருப்பதும் சிறப்பு.
கோஷ்டத்தில் உள்ள துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.
திருமணத் தடை நீங்கவும், பிரிந்தவர் சேரவும் அருளும் க்ஷேத்திரமிது.
இக்கோயிலில் சிவன், சதுர பீடத்துடன் அருளுகிறார்.
துவாரபாலகர்கள் கிடையாது.
சுக்ராச்சாரியாருக்கு (வெள்ளி என்றும் பெயருண்டு) காட்சி தந்தால் இங்கு சிவன், "வெள்ளீஸ்வரர்' என்ற பெயரிலேயே அருளுகிறார். பார்க்கவேஸ்வரர் என்றும் இவருக்கு பெயருண்டு.
இவருக்கான அம்பாள், மாங்காடு தலத்தில் இருக்கிறாள். எனவே, காஞ்சிபுரம் போலவே இங்கும் அம்பிகை சன்னதி கிடையாது.
சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்பவர்கள், சன்னதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
விவசாய விநாயகர்:
முன் மண்டபத்தில் இருக்கும் விநாயகர் மிகவும் விசேஷமானவர். இவர் இடது மேல் கையில் நெற்கதிரும், கீழ் கையில் மாங்கனியும் வைத்திருக்கிறார்.
விவசாயிகள் இவரிடம் மாங்கனி, நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை.
கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரம் வைத்து நின்ற கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் இரண்டு வித்தியாசமான விநாயகர்களை தரிசிக்கலாம்.
ஸ்தல புராணம்:
கைலாயத்தில் ஒருசமயம் சிவன், தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த அம்பிகை, விளையாட்டாக அவரது கண்களை மூடினாள். இதனால், உலகம் இருளில் மூழ்கியது. எனவே, அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். அவர் பூலோகத்தில் இத்தலத்தில் தவமிருந்து வழிபட, குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி அம்பிகை இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தார். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்கிராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.
(அதிதி - கச்யபரின் அருந்தவப் புதல்வனாய் அவதரித்த வாமனர், பிறந்தவுடன் வேகமாய் வளர்ந்தார். சிறப்பாக உபநயனம் நடந்தது.
தாழங்குடை பிடித்து, கமண்டலம் சுமந்து, மகாபலியின் யாக சாலை வந்து, மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார்.
மகாபலி ஒரு ஊரையே தாரை வார்த்துத் தருவதாய் சொல்லியும் அவர் ஏற்பதாயில்லை.
அப்போதுதான் அசுரகுருவான சுக்ராச்சாரியாருக்கு ஐயம் ஏற்பட்டது. "இவன் குள்ளன் மட்டுமல்ல கள்ளன். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ஒப்புக் கொள்ளாதே" என மகாபலியைத் தனியே அழைத்துக் காதில் ஒதினார் சுக்ரர்.
மகாபலி வாக்களித்து விட்டுப் பின்வாங்க மறுத்து விட்டான்.
ஒரு சிறு வண்டாக உருமாறி சந்தியாவளி (பலியின் மனைவி) பிடித்திருக்கும் கெண்டியின் நீர் வரும் துவாரத்தை அடைத்துக் கொண்டார் சுக்ரர்.
மஹாபலி, மந்திரங்களை உச்சரித்து நீர் வார்க்கும் சமயம் எவ்வளவு சாய்த்தும் கெண்டியிலிருந்து ஜலம் விழவில்லை !
வேறொரு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டான் மகாபலி.
'தேவையில்லை' என்ற வாமனர் கீழே கிடந்த ஒரு தர்ப்பையை எடுத்து கெண்டியின் துவாரத்தை குத்த தண்ணீரும், உதிரமும் சேர்ந்து வந்தது. கீழே ஒரு கண் குருடாகி சுக்ரவண்டும் விழுந்தது !
மூன்றடி நிலம் பெற்று திரிவிக்ரமனாய் வளர்ந்து, இரண்டடியால் விண்ணையும், மண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்க, மகாபலி தன் சிரஸைக் காட்ட, அவன் தலையில் கால்வைத்து அழுத்தி பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.
தானத்தைத் தடுத்த பாபம் தீரவும், கண்ணொளி பெறவும் ஈசனைக் குறித்து மாங்காட்டில் தவம் புரிந்தார் சுக்ரர்.)
ரிஷப வாகனத்தில் அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.
அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு தான் காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, பின் சிவனருள் பெற்றாள்.
"என் அம்சமும் உங்களோடு இங்கே இணைந்திருக்க வேண்டும் என் பெயரால் தாங்கள் விளங்க வேண்டும்" என வேண்டினார் சுக்ரர். அப்படியே வரமளித்தார் வெள்ளீச்வரர்.
சுக்ரர்- சிலதகவல்கள்:
சுக்ரருக்கு வெள்ளி, பார்க்கவர், சுக்ல பூஷணன்,காவியன், கவி என்றெல்லாம் பெயர்களுண்டு.
வாழ்க்கைத் துணைக்கு ஜாதகத்தில் சுக்ரன் நிலையே முக்கிய காரணம்.
துலாம், ரிஷபம் இரண்டும் இவரது சொந்த வீடு. மீனம் இவரது உச்சஸ்தானம்.
இவரது உலோகம் வெள்ளி. இவருக்குரிய ரத்தினம் வைரம்.
முக்கால் பங்கு சுபர். புதனும், சனியும் இவரது நண்பர்கள். குருவும், குஜனும் பகையும், நட்புமற்ற சமநிலையுடையவர்கள்.
பிறந்த ஜாதகத்தில் இவர் 3, 6, 8, 12-ல் மறையாதிருந்தால் ஐஸ்வர்ய யோகம் சித்திக்கும்.
பெருந்தன்மை, அதிர்ஷ்டம், கெளரவம் இவைகளை வாரி வழங்குவார்.
ஜனன உறுப்புகளைக் காப்பவர் இவர்.
ஆபரணங்கள் இசை, நடனம், நாடகம், திரைப்படம் போன்ற கலைத்துறைகளில் புகழ், அழகு, காதல், வசதி அனைத்தையும் அளிப்பவர் இவர்.
ஸ்ரீ முத்துசுவாமி தீக்ஷிதர் "ஸ்ரீ சு'க்ர பகவந்தம் சிந்தயாமி ஸந்தகம்" என ஆரம்பிக்கும் கீர்த்தனையில் இவர் மகிமைகளைப் போற்றிப் பாடியிருக்கிறார்.
"சுபிட்சத்தை மட்டுமல்லாது சாஸ்திர விற்பன்னராகவும் ஆக்குவான்" என்கிறார்.
இவருக்குப் பிடித்த சுவை- இனிப்பு, தானியம்-மொச்சை, வாகனம் - கருடன், சமித்து- அத்தி, புஷ்பம் - வெள்ளைத் தாமரை, வஸ்திரம்- வெள்ளை.
ஐங்கோண ஆசனத்தில் வீற்றிருக்கும் இவர், பிருகுரிஷி- புலோமைக்குப் பிறந்தவர் இவர்.
மனைவியர் சுபகீர்த்தி, சுகரி, சிருங்கினி- புதல்வி தேவயானி.
மூலவர்: வெள்ளீஸ்வரர் ( பார்க்கவேஸ்வரர்)
அம்மன்/தாயார்: காமாட்சியம்மை
தல விருட்சம் : வில்வம் , மாமரம்
தீர்த்தம் : சுக்ர தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்..
No comments:
Post a Comment