Monday, 7 May 2018

அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் - சென்னை



அமைவிடம்:

சென்னை, போரூரிலிருந்து குன்றத்துர் போகும் மார்க்கத்தில் போருர் பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலுள்ள ஆலயமிது.

குரு பரிகார க்ஷேத்திரமிது.

இந்த ஆலயம் ஆதி ராமேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது.

சுப காரியங்களை நடத்துவதற்கு முன்பாக இத்தலம் வந்து தரிசனம் செய்வது விச‌ஷம். குறிப்பாக வியாழன் தோறும் விரதம் இருந்து, குரு ஸ்துதியை மனதால் ஜெபித்து, வழிபாடுகள் நடத்துவதால் குருவின் பலமானது விரும்பியபடி கிடைக்கும்.

ஆலய அமைப்பு:

கருவறை முன்மண்டப முகப்பிலுள்ள சுதை சிற்பங்கள் வசீகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ஜோதிர் லிங்கங்கள், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள், மகான்கள் வடிவங்கள் குறிப்பிடத் தக்கவை.

கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் ஆறடி உயர ராமநாதேஸ்வர லிங்க பாணம் அமைந்துள்ளது.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஆரத்தழுவிய லிங்கமிது. தெற்கு முகமாக உள்ளது.

ஸ்ரீசிவகாம சுந்தரியம்மை நின்ற திருக்கோலம்; சதுர்புஜங்களுடன் அருள்பாலிக்கிறார். எதிரே சிம்ம வாகனம்.

கோஷ்டத்தில் விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி கொடுக்கின்றனர்.

கோமுகத்தருகே சண்டிகேஸ்வரர் 2350 ஆண்டுகள் புராதனமானவர் என தொல்பொருள் ஆராய்ச்சியினர் சான்றிதழ் அளித்துள்ளனர்.

பிராகாரத்தில் கணேசர், சண்முகர், பைரவர், சனிபகவான், நவக்கிரகங்கள் வாகனங்களுடன், அவரவர் வாழ்க்கைத் துணையுடன் சன்னிதி கொண்டுள்ளனர்.

இங்கே ஈஸ்வரனே குருவாயிருந்தபடியால் தக்ஷிணாமூர்த்திக்கான அர்ச்சனை ஆராதனைகளும் மூலஸ்தானத்திலேயே செய்யப் படுகின்றன.

பக்தர்கள், வியாழக்கிழமைகளில் கடலை சுண்டல் நிவேதனம் செய்து விநியோகிக்கின்றனர்,

திராட்சை மாலை, கடலை மாலை சாற்றுகின்றனர்.

சோம வாரங்களில் தயிர் சாதம் நிவேதிப்பதாக வேண்டிக் கொண்டால் காரியம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்தல புராணம்: 1

ராமபிரான் சீதா தேவியைப் பிரிந்திருந்த காலத்தில் குரு கடாட்சம் வேண்டி, இத்தலத்தில் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு கீழேயே ஒரு லிங்கம் புதைந்து கிடப்பதை உணர்ந்தார்.

அந்த லிங்கத்தை லக்ஷ்மணர் உதவியோடு வெளியே எடுத்து அருகிலிருந்த நதி நீரால் அபிஷேகம் செய்து, காட்டு மலர்களைப் பறித்து அர்ச்சித்தார்.

லிங்கம் இருந்த இடத்திற்கு மேல் உட்கார்ந்த பாபம் நீங்க நெல்லிக்கனி மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார்.

கயிலை நாதர் தோன்றி "இராமேச்வரம் செல், விரைவில் கவர்ந்து சென்ற கள்வனை அழித்து ஜானகியை அடைவாய்" என ஆசீர்வதித்தார்.

அதன்படி செய்து சீதையுடன் அயோத்தி திரும்பினார் ரகுநந்தனர்.

ஸ்தல புராணம்: 2

சிவனுக்கும் சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், சிவனின் திருவிளையாடலால் சக்திதேவி தோல்வி அடைந்தாள். இதன்பின், ஒன்பது கங்கைத் துளிகளாக ஆழ்கடலில் அமிழ்ந்துவிட்டாள்.

அதனைச் சுற்றி 21 துளிகளாக சக்திக்கு சிவன் தரிசனம் கொடுத்தார். அதில் ஒரு துளி நீர் தரிசனம் தந்த இடமே, கைலாயகிரிபுரம் என்பதாகும் (தற்போதைய ராமேஸ்வரம்).

இச்சம்பவத்திற்கு பிறகு, சக்திதேவி தன் அண்ணன் மஹாவிஷ்ணுவிடம், காளிரூபத்தோடு சிவனை அடக்கி ஆளவேண்டும். பின்னர் சிவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்பதே அந்த வரம்.

அவ்வாறே ஆகட்டும் என்ற விஷ்ணு, சிவன் காஞ்சிபுரத்தில் லிங்கவடிவில் இருப்பதாகவும், அங்கு போய் அவரை அடக்கியாளலாம், என்றும் சொன்னார்.

சக்தி அங்கு சென்றதும், மாயவனின் லீலையால் காஞ்சிபுரம் முழுவதுமே லிங்கமயமாக இருந்தது. உண்மையான சிவன் யார் என்று தெரியாமல் சக்தி திணறினாள். அவளது கோபம் அதிகமானது. தான் கணவரை பிரிந்து வாடுவது போல், தன் அண்ணன் விஷ்ணுவும், ராம அவதாரம் எடுத்து மனைவியாகிய சீதையை பிரிந்து துன்புற வேண்டும். பின்னர் சிவனை வழிபட்டு சீதையை அடைய வேண்டுமென்று சாபம் கொடுத்தாள்.

இந்த சாபத்தின் படி, விஷ்ணு ராமாவதாரத்தின் போது சீதையைப் பிரிந்தார். அவளை தேடிச்சென்ற ராமன், இலுப்பைக்காடு சூழ்ந்த போரூர் என்னுமிடத்தில் ஒரு நெல்லி மரத்தடியில் அமர்ந்தார்.

பூமிக்கடியில் லிங்கம் இருப்பதை அறிந்து, அதை வெளிக் கொண்டு வர 48 நாட்கள் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு லிங்க வடிவில் வந்தார். ராமன் லிங்கத்தைக் கட்டி அணைத்து அமிர்தலிங்கமாக மாற்றினார்.

ஸ்ரீராமர் வழிபட்ட ஈஸ்வரர் ராமநாதேஸ்வரர் ஆனார்.

நாதர் என்பதற்கு குரு என்றொரு பொருள் உண்டு. தாசரதிக்கு குருவாக இருந்து ஈசன் வழி காட்டிய க்ஷேரத்திரமிது.

சண்முகப் பெருமான் சூரசம்காரம் செய்யப் புறப்பட்ட போது இங்கு வந்து சிவனை ஆராதித்து, போருக்கு வாழ்த்துப் பெற்றதால் ஊர் போரூர் ஆயிற்று என்பர்.

ஸ்ரீ ராமர் பஞ்சாட்சரம் ஜபித்த இடமானபடியால் திருநீறோடு தீர்த்தமும், சடாரியும் கொடுக்கப் படுகிறது.

சீதா நாயகர் அயோத்திக்குத் திரும்பிய போதும் இங்கே இறங்கி லிங்க பூஜை செய்த பதியிது.

மூலவர்: ஸ்ரீ ராமநாதீஸ்வரர்
 
அம்மன்/தாயார் : ஸ்ரீ சிவகாமசுந்தரி

தல விருட்சம் : நெல்லி

நடை திறக்கும் நேரம்:
 
காலை 6 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment