Monday 7 May 2018

அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், பொழிச்சலூர் - சென்னை

அமைவிடம்:

வடதிருநள்ளாறு என்று போற்றப்படுவது பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம். இது பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் 2 கி.மீ தொலைவில் அமைந் துள்ளது.

சென்னை, பல்லாவரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்தலமிது.

பொழிச்சலூர் சிவன் கோவில் நிறுத்தம் என்று கேட்க வேண்டும்.

பேருந்து நிறுத்ததின் அருகிலேயே இருக்கிறது ஆலயம்.

அகத்தீஸ்வரர் ஆலயம் அகத்தியர் காலத்தில் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தொண்டைமண்டல புகழ்நாட்டில், புகழ்சோழநல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்டது.

பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது.

ஈசனை சரணாகதி அடைந்த எவருக்கும் நவகிரகங்கள் எதுவும் செய்வதில்லை. அதைத்தான்

'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.' - என்று கோளறு பதிகமும் தெரிவிக்கிறது.

அகத்தியர் பொதிகை நோக்கி நதியோரமாக பயணப்பட்ட போது தர்ப்பைப் புற்களை நீரில் இட்டு விடுவாராம்.

அவை எங்கெல்லாம் ஒதுங்குகின்றனவோ, அவ்விடங்களிலெல்லாம் சுயம்பு சிவலிங்கமோ அல்லது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமோ தரிசனம் தருமாம்.

அப்படி இல்லாத இடங்களில் இவரே ஒரு லிங்கத்தை நிறுவிவிட்டு தன் தீர்த்த யாத்திரையை தொடர்வாராம். அப்படி அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் உள்ள ஒரு கோயில் பொழிச்சலூரில் உள்ளது.

இவ்வூர் பூம்பொழிலோடு மலர்ந்திருந்ததால் பொழில் சேரூர் என்றும் வழங்கப்பட்டது.

தொண்டைநாட்டு நவகிரகத் தலங்களில் சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.

அகத்தியர் இத்தலத்தின் பெருஞ் சக்தியால் ஈர்க்கப்பட்டு சுயம்புவாய் நின்ற ஆதிசிவனை பூஜித்து சில காலம் இங்கேயே தங்கினார். மூலவர் சந்நதி விமானம், யானையின் பின்பக்கம் போன்ற (கஜப்ருஷ்ட) தோற்றம் கொண்டிருக்கிறது.

கோயிலின் முகப்பு மண்டப வாயிலிலிருந்து நேராக நோக்கினால் பிரதானமாக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சற்று தள்ளி இடப்பக்கமாக ஆனந்தவல்லி அம்பிகை தெற்குப்புறம் நோக்கியும், தனித்தனி சந்நதிகளில் அருளாட்சி செய்கிறார்கள்.

இத்தலத்தின் பிரதானமானவர், சனீஸ்வர பகவான் தான். சனீஸ்வர பகவானே இங்குள்ள சிவனை பூஜித்து, நள்ளாறு தீர்த்தத்தில் நீராடியதால் தன் தோஷம் நீங்கப்பெற்று, தனிச் சந்நதி கொண்டு அருட் பாலிக்கிறார். எனவே, இவ்வூர் வடதிருநள்ளாறு என்று வழங்கப்படுகிறது..

திருநள்ளாருக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோஷப் பரிகாரம் செய்து மகிழ்வோடு திரும்புகின்றனர். இங்குள்ள தீர்த்தத்திற்கும் நள்ளார் தீர்த்தம் என்றே பெயர்.

சனிபகவான் பிறர்க்கு எப்பொழுதும் கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, என்று பலவிதமாக பக்தர்களை பிடித்து வாட்டி வதைத்து துன்பம் கொடுத்து வந்ததால், அதனால் இவருக்கு ஏற்பட்ட தன் பாவங்களை போக்கிகொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டுபண்ணி சிவபெருமானை வழிபட்டு சனிபகவான் அவர் பிறர்க்கு செய்த தன் பாவத்தை போக்கி அவரது தோஷம் நீங்கி பாவ விமோசனம் கிட்டியதால், இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார்.

வடதமிழ்நாட்டில் சென்னையில் இந்த ஒரே ஆலயம் ஒன்று தான் சனிபகவானுக்கு என்று சனிதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமாகவும், நாடி ஜோதிடத்தின் பாவவிமோசனம் செய்ய பரிகார ஸ்தலமாகவும் சிறப்புற்று விளங்கிவருகின்றது.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நெய்வேத்தியம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமான நடமாடும் தெய்வமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும். இந்த நேரத்தில் தோஷநிவர்த்தி செய்பவர்களும் இவ்வாலயத்தில் உள்ள, வருகின்ற நடமாடும் தெய்வங்களாக உள்ள காக்கை, மாடு, நாய் இவற்றிக்கு அன்ன தீவணம் செய்தால் உங்களுக்கும் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.

பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும் கி.பி 12-ம் நூற்றாண்டு சோழ மன்னர் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் கஜபிருஷ்ட விமான அமைப்புடன்  கட்டப்பெற்றதாகும்.

இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர்.

இக்கோவிலுக்கு மற்றொரு குறிப்பிட்ட அம்சமும் உண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே கொண்டு சிறந்த புண்ணியதலமாக விளங்குகிறது.

 இவ்வாலயத்தில் ஈசன் கிழக்கு பார்த்திருப்பதும் அம்மன் தெற்கு பார்த்திருப்பதும், சித்திரை 7,8,9 தேதிகளில் மட்டும் சூரியன் உதயம்; ஆகும்போது சூரியன் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது மட்டும் விழும் அமைப்புடன் வடக்குபுற வாசல் அமைப்பு கொண்டு கட்டப்பெற்றதாகும்

இறைவன் : அகத்தீஸ்வரர்

தாயார் : ஆனந்தவல்லி

தீர்த்தம் : நள்ளாறு தீர்த்தம்

தல விருட்சம் : மா மரம்

நடை திறக்கும் நேரம்:
 
காலை 5.45 மணி முதல் பிற்பகல் 12.00 வரை மாலை 4.00 முதல் இரவு 08.30 வரையிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும்) திறந்திருக்கும்..

காலை - 5.30 மணி முதல் பிற்பகல் 01.00 வரை மாலை - 3.00 முதல் இரவு 09.00 வரையிலும் {சனி & ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்}
திறந்திருக்கும்..

தொலைபேசி எண்: +91  44  22631410 ; +91  93818 17940

No comments:

Post a Comment