Monday, 5 February 2018

திருப்பங்கள் தரும் திரிசக்கர தரிசனம்!

மூன்று அம்பாள்கள்... மூன்று மஹான்கள்... மூன்று தலங்கள்

க்தியை வழிபட்டால், இக்கலியுகத்தில் வரும் சங்கடங்களை எதிர்கொண்டு விலக்கிக்கொள்ள முடியும் என்பது பெரியோர்களின் அறிவுரை. அந்த சக்தியை வழிபடுவதற்கும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று, தான் பாடிய சௌந்தர்யலஹரியில் ‘ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி’ என்ற வாக்கி யத்தால் உணர்த்தி இருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

முற்பிறவி கர்மவினையின் காரணமாக இப்போது நமக்கு மனிதப்பிறவி வாய்த்திருக்கிறது. இப்பிறவியில் நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு கைகளால் இறைவனுக்குத் தீபங்கள் ஏற்றி வைக்கவேண்டும். மலர்களை எடுத்து பூஜை செய்தல் வேண்டும். இரண்டு கால்களால் இறைச் சக்திகள் உறைந்திருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று திருச்சுற்று வந்து வணங்குதல் வேண்டும். அவன் நமக்குப் பேசும் சக்தியைக் கொடுத்திருப்ப தால், இறைவனின் திருநாமத்தை உச்சரித்துப் பிரார்த்திக்க வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் ஆலய தரிசனங் களில், நவகிரகத் தலங்கள் தரிசனம், சிவத் தலங்கள் தரிசனம், சக்தி தேவியர் தரிசனம் என்று பலவகை தரிசனங்கள் உள்ளன. இத்தகைய தலங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய தலங்களாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் அமைந்தி ருக்கும் தலங்களாகவோ அமைந்திருக்கும்.

அந்த வகையில் ‘திரிசக்கர தரிசனம்' என்று பக்தர்களால் போற்றப்படும் - ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் மூன்று அம்பாள் கோயில்கள், அவசியம் நாம் தரிசிக்க வேண்டியவை ஆகும்.

திரிசக்கர தரிசனம்

வள்ளலார் சுவாமிகளால், ‘தருமமிகு சென்னை’ என்று போற்றப்பட்ட சென்னை யில், ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள மூன்று சக்தித் தலங்களை ஒரே நாளில் தரிசித்து அருள்பெறும் விசேஷ வழிபாடுதான் திரிசக்கர தரிசனம் ஆகும். 

திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன், மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் ஆகிய மூன்று சக்தி ஸ்தலங்களும், சுமார் 12 கி.மீ. தூரத்துக்குள் ஒரே வரிசையில், 12 ராசிகளைச் சேர்ந்த வர்களும் தரிசித்து பலன் பெறும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சக்திகளின் அருட் கோலங்களைப் பற்றி அகத்தியர் நாடியின் ருத்ர சம்வாத சருக்கப் பகுதியில் கலியுக க்ஷேத்திரப் பரிகார காண்டப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சக்தியின் மகிமையைக் கூறும் நூல்களில் ரேணுகாதேவியின் திருக்கதையில் ஸ்ரீகருமாரி அம்மன் சிறப்புகளும், ஸ்ரீசண்டிகா வழிபாட்டு முறையில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகிமைகளும், தேவி மகாத்மியப் பகுதியில் ஸ்ரீகாத்யாயனி தேவியின் புகழும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. 

லலிதா சகஸ்ரநாமத்தில் திரிசக்கர சக்திகள்

பெண்கள் திருவிளக்கு பூஜை செய்யும் போது, அவர்கள் கூறும் சகஸ்ரநாம அர்ச்சனையில் திரிசக்கர தரிசன சக்திகள் இடம்பெற்றுள்ளனர். அதில், 616-வது நாமாவளியில் ‘ஆதிசக்தியை நம:' என்று தேவி கருமாரி அம்மனையும், 63-ம் நாமாவளி யில் ஸ்ரீகாமாட்சி தேவியையும், 557-வது நாமாவளியில் ஸ்ரீகாத்யாயனி தேவியையும் போற்றுவதாக உள்ளது. 

அத்துடன்... முச்சக்தி தரிசனம், முச்சக்தி வேட்டல் என்று பக்தர்கள் கொண்டாடும் இந்த திரிசக்தி தரிசனத்தின்போது, மூன்று தேவியரின் பேரருளுடன் மூன்று குரு தேவர்களின் திருவருளும் நமக்குக் கிடைப்பது மிகவும் விசேஷம் ஆகும்! 

காக்கும் தேவி கருமாரி

திருவேற்காடு கோயிலுக்குள் சென்றதும் முதலில் விநாயகரை வணங்கி, திரிசக்கர தரிசனம் விக்கினம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, கருவறைக்குச் சென்று கருமாரி அம்மனைத் தரிசித்து மூன்று நெய் தீபங்கள் ஏற்றி மாரியின் தியானத்தை மும்முறை கூறுதல் வேண்டும்.

அருணமணி நியாங்கம் அக்னி கெசம் கரண்டம்
டமருக துதசூலம் கட்க ஹஸ்தம் கபாலம்
அநல நயன நாகம் ஆஸனம் பத்ம பீடம்
அகில புவன மாதர் சீதனா தேவி மீடே!


பின்னர் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, புற்று மண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, பிராகார வலம் வந்து பரிவார மூர்த்திகளையும் வணங்கவேண்டும். பின்னர், கருமாரி அம்மன் துதிப் பாடல்களைப் பாடியபடி புஷ்கரணிக்குச் சென்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ளவேண்டும். அங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வேதபுரீஸ்வரரையும், அவருக்கு எதிரில் தலத்தின் குருநாதரான மூர்க்க நாயனாரையும் வணங்கி அருள் பெறவேண்டும்.
திருவேற்காடு தலத்துக்கும் குன்றத்தூர் தலத்துக்கும் நெடுங்காலமாகவே  ஓர் ஆன்மிகத் தொடர்பு உண்டு, இந்த தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்த அநபாயச் சோழனும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் பாதயாத்திரையாகச் சென்று ஆலயப் பணிகளைச் செய்து வந்ததைக் குறிப்பிடும்படியாக வேதபுரீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் உட்பிராகாரத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்கு எதிரில் தெய்வச் சேக்கிழாரையும் அநபாயச் சோழனையும் சிலையாக வைத்திருக்கிறார்கள். 

கருணை நாயகி காமாட்சி

திருவேற்காடு தரிசனத்துக்குப் பிறகு, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள மாங்காடு - தேவி ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.கோயில் கொடி மரத்தில் மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து கருவறைக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மகாமேருவை தரிசித்து, சப்த மாதர்களையும் வணங்கி, மஞ்சள் குங்குமத்துடன் எலுமிச்சங்கனியை அருட் பிரசாதமாகப் பெற்று காமாட்சி தேவியின் தியானத்தை மூன்று முறை கூற வேண்டும்.

ஓம் சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே
குங்கும ராக சோனே புண்ட்ரேஷு பாசாங்குச புஷ்ப
பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: 


இத்தலத்தில் அர்த்த மகாமேருவைத் தரிசிக்கும்போது ஆதிசங்கரரின் குருவருளைப் பெறுகிறோம்.

கல்யாண தேவி ஸ்ரீகாத்யாயனி

மாங்காடு தரிசனம் முடிந்ததும், அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் குன்றத்தூரின் தென் பாகத்தில் உள்ள கல்யாண வரம் தரும் ஸ்ரீகாத்யாயனி அம்மன் சந்நிதிக்குச் செல்லவேண்டும். குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து திருநீர்மலைக்குப் பிரியும் தார்ச் சாலையில் அரை கி.மீ தூரத்தில் ஸ்ரீகாத்யாயனி சந்நிதி அமைந்துள்ளது.

இங்குள்ள தோரண கணபதியையும், மங்கள மாரி, கிருஷ்ண மாரி தேவியரையும் தரிசித்துவிட்டு, சூல மண்டபத்தில் மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து வணங்க வேண்டும். பின்னர், கமலவிமானக் கருவறையின் கீழ் மகாமேருவோடு காட்சி தரும் ஸ்ரீகாத்யாயனி அம்மனை தரிசித்து மஞ்சள் பொடியும் குங்குமமும் அருட்பிரசாதமாகப் பெற்று வழிபட வேண்டும். இத்தலத்தில் அம்மன் கருவறைக்கு பின்புறமாக தார்ச் சாலையில் பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழார் அருள் தருகிறார். இவரே இத்தலத்தின் ஆதி குருநாதராக விளங்குவது குறிப்பிடத்தக்கது. 

காத்யாயனி சந்நிதியில் திருச்சுற்று முடித்த உடன் அம்மன் துதியாக

ஓம் காத்யாயனி மகாமாயே பவாநி புவனேஸ்வரி
ஸம்ஸார சாகரே மக்நாத் உத்தர ஸ்ரீ க்ருபாமயி
நமோதேவ்யை ப்ரக்ருத்யைச விதாதர்யை நமோநம:
கல்யாண்யை காமதாயைச விருத்யை சித்யை நமோநம: 


என்ற துதியைக் கூறி வழிபட வேண்டும்.  தற்போது, இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால் பாலாலயம் அமைத் துள்ளனர். ஆகவே, அம்பிகையின் உற்ஸவ மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டு வரலாம்.

திரிசக்கர தரிசன பலன்கள்

வாழ்க்கையின் முன் வினைகளைத் துடைத்து முன்னேற்றங்களைத் தரும் சக்தி உடையது இந்த திரிசக்கர தரிசனம். பொதுவாக பௌர்ணமி, அமாவாசை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று பிரார்த்திக்கின்றனர். வெள்ளி, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பிரார்த்தனை தினமாக நினைத்து தரிசிக்கும் வழக்கமும் உள்ளது. 

காரியத் தடைகள் விலகி நலம் பெற பௌர்ணமி அன்றும், சூன்யாதி தோஷங்கள் விலக அமாவாசை அன்றும், வியாபார தொழில் முயற்சிகளில் வெற்றிபெற ஞாயிற்றுக் கிழமையிலும், கடன் தீர்ந்து சொந்த இல்லம் அமைய செவ்வாய்க்கிழமையிலும், குழந்தைப் பேறு தடைகள் நீங்க சனிக்கிழமையிலும், பொன் பொருள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் பெற வெள்ளிக்கிழமையிலும், நவக்கிரக தோஷங்கள் விலகி, தம்பதியர் ஒற்றுமையுடன் வாழவும், தீராத கோர்ட் வழக்குகளில் தீர்வு பெறவும் சனிக்கிழமையிலும் திரிசக்கர தரிசனம் சென்று வர வேண்டும்.

இத்தனை மகிமை மிக்க தரிசனத்தை, அம்பிகைக்கு உரிய நவராத்திரி திருநாட்களில் மேற்கொள்வது இன்னும் சிறப்பு. ஆகவே, நாமும் நலம் தரும் நவராத்திரி தினங்களில், திரிசக்கர தரிசனம் மேற்கொண்டு, வாழ்வில் நல் திருப்பங்கள் காண வரம் பெற்று வருவோம்.


காலை 6 மணிக்கு திருவேற்காட்டில் தரிசனம் முடித்து, 9 மணிக்கு மாங்காடு தரிசனம் கண்டு, 11 மணிக்குக் குன்றத்தூரில் திரிசக்கர தரிசனத்தைப் பூர்த்தி செய்யலாம்.

பெரும்பாலான பக்தர்கள் இந்த திரிசக்கர தரிசனத்தை திருவேற்காட்டில் தொடங்கி குன்றத்தூரில் நிறைவு செய்கின்றனர். ஒரு சிலர், குன்றத்தூரில் ஆரம்பித்து திருவேற்காட்டில் நிறைவு செய்கின்றனர்.
குன்றத்தூர் திருநீர்மலை சாலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணிமனை உள்ளது. எனினும், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் கோயிலைத் தரிசித்துவிட்டு, அங்கிருந்து மாங்காடு மற்றும் திருவேற்காடு சென்று ஆலய தரிசனம் செய்ய ஆண்களும் பெண்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். ‘திரிசக்கர தரிசனப் பேருந்து’ பௌர்ணமி, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை தினங்களில் இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment