Friday 9 February 2018

இராமேஸ்வரம் - 6

22 தீர்த்தங்களை தவிர ஆலயத்துக்கு வெளியேயும் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன. அவைகள்:

Image result for ராமேஸ்வரம் 22 தீர்த்தங்கள்

1. வேதாளவரத தீர்த்தம்
2. பாபவிநாச தீர்த்தம்

3. பைரவ தீர்த்தம்

4. சுபிதீர்த்தம்

5. சீதாகுண்டம்

6. மங்கள தீர்த்தம்

7. அமிர் தவாபி தீர்த்தம்

Related image

8. ருணவிமோசன தீர்த்தம்

9. லட்சுமணத் தீர்த்தம்

10. ராம தீர்த்தம்

11. சீதா தீர்த்தம்

12. சுக்ரீவன் தீர்த்தம்

13. அங்கத்தீர்த்தம்
14. ஜாம்பவ தீர்த்தம்

15. கந்தமாதன தீர்த்தம்

16. தருமதீர்த்தம்

17 வீமன் தீர்த்தம்

18. அருச்சுனன் தீர்த்தம்

19. நகுல தீர்த்தம்
20. சகாதேவ தீர்த்தம்
Related image
21. திரெளபதி தீர்த்தம்

22. பிரம்ம தீர்த்தம்

23. அனுமகுண்ட தீர்த்தம்

24 அக்னி தீர்த்தம்

25. நாகதீர்த்தம்

26. அகஸ்திய தீர்த்தம்

27, ஜடாயுதீர்த்தம்

28. தனுஷ்கோடி தீர்த்தம்

29. தேவதீர்த்தம்
30. கஜன தீர்த்தம்

31. சரவண தீர்த்தம்
Related image

32. குமுதம் தீர்த்தம்

33. ஹரன் தீர்த்தம்
34. கனகள் தீர்த்தம்

35. பண்கள் தீர்த்தம்

36. விப்ஷண தீர்த்தம்

ராமேஸ்வரத்தில் தங்கி மேற்கண்ட எல்லா தீர்த்தங்களிலும் நீராடி சகல பாபதோஷங்களிலிருந்தும் நிவர்த்தி பெறலாம்.

ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய மேலும் சில முக்கிய இடங்கள் :

கந்தமாதன பர்வதம் ஸ்ரீ ராம பாத தரிசனம்

ராமேஸ்வரத்திலிருந்து வடக்கே 2 மைலில் கந்தமாதன பர்வதம் உள்ளது. இயற்கையாக அமைந்த உயரமான மணல் மேட்டில் 30 அடி உயரத்தில் பாறைக் கற்களால் உருவாக்கப்பட்ட தளத்தின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இதன் உள்ளே ஸ்ரீ ராமனின் திருப்பாதங்கள் உள்ளன. இந்த உயரமான மண்டபத்தின் மீது இன்னொரு மண்டபத்தையும் எழுப்பியுள்ளார்கள்.


Image result for கந்தமாதன பர்வதம்
இந்த மண்டபத்தின் மீது ஏறிநின்று பார்த்தால், ராமேஸ்வரத் தீவின் நான்கு புறங்களையும் காணலாம். நகரின் அழகிய தோற்றத்தையும் தீவிலுள்ள வேறு சில பகுதிகளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. வட இந்திய யாத்திரிகர்கள் இந்த புனிதமான இடத்தை ‘ஸ்ரீ ராமஷருகா’ என்று பக்தி மேலிட அழைக்கிறார்கள்.

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் நடைபெறும் வசந்த உற்சவத்தின் இரண்டாம் திருநாளன்று ஸ்ரீ ராமநாதசுவாமியும் அம்பாளும் இங்கே வந்து பூஜைகளை ஏற்றுத் திரும்புகின்றனர்.

Related image

கந்தமாதன பர்வதம் பற்றி புராணங்களிலும் வரலாறுகளிலும் குறிப்புகள் உள்ளன. முருகக் கடவுளை எதிர்த்துநின்ற சூரபத்மனைக் கந்தவேளின் தளபதியான வீரபாகு இங்கு தான் சந்தித்தார் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தவிறவும் பராக்கிரம பாண்டியனுக்கு உதவுவதற்காக கி.பி. 1169ல் இலங்கை மன்னன் அனுப்பி வைத்த படைவீரர்கள் இங்கேதான் தரை இறங்கினர் என்ற வரலாற்றுத் தகவலும் உண்டு.

ஸ்ரீ ராமபிரான் பாதத்தைத் தன்மீது பதிய வைத்துக் கொண்ட பெருமையை இந்த கந்தமாதனப் பர்வதம் பெற்றிருப்பதுதான் இந்த இடத்தின் சிறப்பம்சம் !

கோதண்டராமர் கோயில் ! 

ராமேஸ்வரத்தின் கிழக்கே அமைந்துள்ளது கோதண்டராமர் கோயில். இந்தத் கோயிலும் புராணத்துடன் தொடர்புடையதுதான்.

விபீஷணன் இங்கு வந்துதான் ஸ்ரீ ராமரைச் சந்தித்து சரணாகதி அடைந்தான். அப்போது லட்சுமணன் விபீஷணனுக்கு முடிசூட்டிய இடம்  இது. கோதண்டம் என்ற ஒப்பற்ற வில்லை ஏந்திநின்றபடியே விபீஷணனுக்கு ராமன் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாகவே, இந்த கோயிலுக்கு கோதண்டராமர் கோயில் என்று பெயர்.

kothandaramar temple-rameshwaram

ராமேஸ்வர ஆலயத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா (மே ஜூன்) நடை பெறும்போது ராமேஸ்வரத்திலுள்ள உற்சவமூர்த்தியான ஸ்ரீராமர் தங்கரதத்தில் எழுந்தருளி, இங்கே விபீஷண பட்டாபிஷேகத்துக்காக வருகிறார்.

அதற்கு முதல்நாள் ராமேஸ்வரம் கடைத் தெருவிலுள்ள திட்டகுடி என்னும் பகுதியில் ராவணவதம் நிகழ்ச்சி நடைபெறும். விபீஷண பட்டாபிஷேகத்துக்கு மறுநாள் ராமேஸ்வரத்தில் ராமலிங்கம் பிரதிஷ்டை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அனுமார் கோயில் 

ராமேஸ்வரத்திலிருந்து வடபுறம் உள்ளது இக்கோயில் ஸ்ரீ ராமரின் சிவலிங்க பிரதிஷ்டைக்காகக் காசி சென்று ஆத்ம லிங்கத்தைக் கொண்டு வந்த அனுமனின் செயலைப் போற்றுவதற்காக எழுப்பப்பட்டுள்ளது இந்தச் சிறிய கோயில்.

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதைப் போல சிறிய கோயிலில் இந்த அனுமன் எழுந்தருளியிருந்தாலும் ராமபக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருபவராக விளங்குகிறார்.

ஏகாந்த ராமர் கோயில் 

இந்தத் திருக்கோயில், ராமேஸ்வரத்திலிருந்து மேற்கே பாம்பனுக்குச் செல்லும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

இந்த ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாம். இந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு பக்தர் ஒருவர் திருப்பணி செய்து ஆலயத்தை மேம்படுத்தியுள்ளார். ஆலயத்தின் உள்ளே ஒரு மகாமண்டப மும் அதையொட்டிய இறைவனின் கருவறையும் சிறப்பாகக் காணப்படுகிறது.

கருவறைக்குள் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளான ராமர், லட்சுமணன், சீதா பிராட்டி, அனுமார் ஆகியோரின் கற் சிற்பம் கலையம்சத்துடன் காணப்படுகிறது.

வில்லேந்திய ஸ்ரீ ராமபிரானின் திருமேனி அழகைக் காண கண்கோடிவேண்டும். சீதாப்பிராட்டி, லட்சுமணன் திருமேனியும் அவ்வாறே அழகுற விளங்குகின்றன.

நித்தியப்படி பூஜை மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

இங்கு லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன், அனுமனுடன் கடற் பாலம் அமைப்பது குறித்து ஏகாந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, கடலின் இரைச்சல் அதிகமாக இருந்ததாம். "இரைச்சலிடாதே" என்று கடலுக்கு உத்தரவு போட்டாராம் ராமர். அன்றிலிருந்து இங்கே கடல் அமைதியாகக் காணப்படுகிறது!

சிறந்த ராமபக்தரும், இசைமேதையுமான தியாகராஜ சுவாமிகள் இந்த ஏகாந்த ராமரின் மேல் பாடியுள்ள இரண்டு கீர்த்தனைகள் மிகச் சிறந்தவை.

 நம்புநாயகி அம்மன் கோயில் 

ராமேஸ்வரத்தின் தெற்கே, தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கே 2. கி.மீ. தூரத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்மன்.

ராமேஸ்வரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை பர்வதவர்த்தினியின் மற்றொரு வடிவமாக இவள் விளங்குகிறாள் என்கிறார்கள். எல்லைத் தெய்வமான இந்த நம்புநாயகி, நாடிவரும் பக்தர்களின் சகலவிதமான குறைகளைப் போக்கி அருள்கிறாள் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே காணப்படுகிறது.

இந்த அம்மனுக்கு மாசிமாதத்தில் இரண்டு நாட்கள் மிக விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது.

கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அம்மன் கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமியின் திருக்கோயிலுக்கு உட்பட்டுதான் இருக்கிறது.

அக்காமடம் தங்கச்சிமடம் 

பத்தினிப் பெண்டிர் இருவரின் செயலைப் போற்றும் விதமாக எழுந்தவைதான் இந்த ஊர்கள்.

சேதுபதி மன்னர்கள் பெரும்பாலும் சிவனின் பக்தர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அப்படி ஒரு சிவனடியாராகவே தன் வாழ்வைக் கொண்டவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரான விஜயரகுநாத சேதுபதி.

சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார் என்ற தன் இரண்டு பெண்களையும் தண்டத் தேவர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார் முத்துவிஜயரகுநாத சேதுபதி.

சேது யாத்திரைக்கு வரும் பக்தர்களைக் கவனிப்பதற்காகவே தன்னுடைய மருமகனான தண்டத்தேவரை இராமேஸ்வரத்துக்கு ஆளுநராக நியமித்தார்.

பாம்பனிலிருந்து இராமேஸ்வரம் வரை செல்லஅந்தக் காலத்தில் சரியான சாலை வசதி கிடையாது.

இது குறித்து யோசித்து தண்டத்தேவர், புதிய சாலை ஒன்றை அமைக்க இங்கு வரும் யாத்ரிகர்களிடம் சிறிய தொகையை வரிப்பணமாக வசூலித்தார்.

இந்தச் செய்தி மன்னர் காதுக்குப் போனது. புதிய சாலை அமைப்பது நல்ல விஷயம்தான் என்றாலும் தன்னிடம் ஒப்புதல் பெறாமல் வரிவசூல் செய்ததன் மூலம் சிவ பக்தர்களுக்குத் தொந்தரவு கொடுத்து சிவத் துரோகம் புரிந்துவிட்டாரே என்று வெகுண்டு எழுந்தவர், தண்டத் தேவருக்கு மரண தண்டனை வழங்கிவிட்டார்.

தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு தண்டத் தேவரின் மரணத்தைக் கேள்விப்பட்ட அக்கா தங்கை இருவரும் தண்டத் தேவரின் சிதைக்கு வந்து, அதில் விழுந்து உடன்கட்டை ஏறிவிட்டனர். இப்படி இவர்கள் உயிர்விட்ட இடம் தீப்பாஞ்சகாணி. இன்றும் இந்த இடம் தங்கச்சிமடம் அரண்மனைக்கு எதிரே உள்ளது.

இந்த இரு சகோதரிகளின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு ஊர்களாகப் பிரிந்து அக்காள் மடம் தங்கச்சிமடம் என்று வழங்கப்பட்டு வருகிறது. தங்கச்சிமடத்தில் தான் தண்டத்தேவரின் அரண்மனை உள்ளது.

சீக்கிய மடம்: 

சீக்கிய குருவான குருநானக் ஒருமுறை இலங்கை சென்று திரும்பும் வழியில் இராமேஸ்வரம் தீவில் வந்து இறங்கினாராம். இந்தப் புனிதத் தலத்திலேயே சிலகாலம் தங்கியும் இருந்து இருக்கிறார்.

இராமேஸ்வரத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைப் பிற்காலத்தில் அவரது தொண்டர்கள் சிலர் கல்லினால் உருவாக்கப்பட்ட அழகிய மண்டபமாகக் கட்டியிருக்கிறார்கள்.

குருத்வாரா அல்லது உதாசிமடம் என்று சீக்கியர்களால் இந்த இடம் போற்றப்படுகிறது. உதாசி என்றால் சீக்கிய உபாசகர் என்று அர்த்தம். எனவே அந்தப் பெயரைக் கொண்டதாகவே இந்த இடம் வழங்கப்படுகிறது.

ஆபில் காபில் தர்ஹா: 

பொதுவாகவே இராமேஸ்வரம் மத நல்லிணக்க பூமியாகவே திகழ்கிறது. ராமேஸ்வரத்தில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் நல்ல நேச உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அதாவது டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக் காபூர் தென்னாட்டின் மீது படையெடுத்து ஆலயங்களை வரிசையாகச் சூறையாடினான். அவனது மதுரைக் கோயில் கொள்ளையை அடுத்து இராமேஸ்வரம் கோயிலையும் கொள்ளையிட வந்துவிட்டால் என்ன செய்வது என்று ராமேஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் அச்சமடைந்தனர்.

அப்பொழுது ராமேஸ்வரத்து மரைக்காயர் சிலர் அர்ச்சகர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ராமேஸ்வரம் கோயில் திருமேனிகளையும் திருவாபரணங்களையும் அர்ச்சகர்களையும் தங்களது படகுகளில் ஏற்றிச் சென்று பக்கத்திலுள்ள தீவு ஒன்றில் பத்திரமாக ஒளித்து வைத்தனராம். மாலிக்காபூர் திரும்பி டெல்லி சென்ற பிறகே கோயில் திருமேனிகளையும் திருவாபரணங்களையும் அர்ச்சகர்களையும் ராமேஸ்வரத்தில் பத்திரமாகச் சேர்ப்பித்தார்கள்.

Image result for ஆபில் காபில் தர்ஹா

அந்த நல் உறவு காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

ஆபில் காபில் தர்கா இராமேஸ்வரத்தில் இஸ்லாமியர்களின் புனித இடமாகப் போற்றப்படுகிறது. இந்த தர்ஹாவின் தீப, தூப செலவுகளுக்காகப் புதுக்கினம் (எக்கக்குடி) என்ற கிராமத்தையே மான்யமாகக் கொடுத்து உள்ளார் ஓர் இந்து மன்னர் .

இந்த தர்ஹா ராமேஸ்வரத்தின் ரயில் நிலையத்துக்குத் தெற்கே உள்ளது.


                               - திருத்தல யாத்திரை வ(ள)ரும்..


No comments:

Post a Comment