Friday, 9 February 2018

இராமேஸ்வரம் - 3

ராமேஸ்வர யாத்திரை நியதி :

முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர் என்ற தலத்துக்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் வெயிலுகந்த விநாயகரின் ஆசியுடன் ராமேஸ்வரம் யாத்திரையைத் தொடங்கி, பின்னர் தேவிபட்டினம் சென்று அங்கு ஸ்ரீராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகங்களை வழிபட்டு, நவபாஷாண தீர்த்தத்தில் நீராடிவிட்டு அங்கிருந்து சேதுக்கரையான தனுஷ்கோடி சேது தீர்த்தத்தில் நீராடிவிட்டு அதன் பிறகே ராமேஸ்வரம் வர வேண்டும்.


ராமேஸ்வர ஆலயத்துக்கு வெளியே உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு, அதன் பின்னர் ராமேஸ்வர ஆலயத்துக்குள் சென்று கோயிலுக்குள் உள்ள முக்கிய தீர்த்தங்களில் நீராடிய பின் அங்குள்ள தெய்வங்களை வணங்கி அருளாசி பெற வேண்டும்.

அதன் பின்னர் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ஆகிய தலங்களுக்குச் சென்று யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே நியதி. வாருங்கள் நாமும் அதன்படியே யாத்திரை தொடங்கி தரிசனம் செய்வோம்.

முதலில் (உப்பூர்) வெயிலுகுந்த விநாயகர்

(உப்பூர்) வெயிலுகுந்த விநாயகர்

எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், அதில் எந்தவித இடைஞ்சல்களும் நேராமல் நல்லபடியாக நடக்க, விநாயகரை வழிபட்டு, அவரின் அருளாசி யுடன் தொடங்குவது தான் நமது மரபு.

ஸ்ரீராமபிரானும் அதுபோலவே சீதாப் பிராட்டியைச் சிறையெடுத்துச் சென்ற ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்காக இலங்கையை நோக்கிப் புறப்பட்டபோது, ராமநாதபுரம் வந்தவர், முதலில் உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் ஆலயத் துக்குச் சென்று வழிபட்டே புறப்பட்டாராம்.

எனவே, இந்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் இன்றும் மக்களிடையே வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். பிரம்மசாரியாகக் கொண்டாடப்படும் விநாயகப் பெருமானுக்கு திருமணம் நடைபெறும் திருத்தலமாக வட இந்தியாவுக்கு அடுத்து தமிழகத்தில் உப்பூரில் தான் திருமணம் நடைபெறுகிறது.


இத்திருக்கோயில் தலபுராணம் சுவாரஸ்யமானது.

பிரஜாதிபதிகளுள் ஒருவனான தட்சன் தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து வானவர்களும், தவசிகளும் தட்சனின் அழைப்பை ஏற்று அதில் பங்கேற்றனர். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது.

தனது தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார். சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருள் செய்தார். அதனால் சூரியன் தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்படி, தட்சிணாயன, உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனால் இவருக்கு "வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

உப்பூர் பயணத்துக்குப் பின் தேவிபட்டினம் சென்றார் ராமன்.


தேவிபட்டினம்


இந்த தேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து வடக்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது புகழ்பெற்ற நவக்கிரகத் தலமாகவும் விளங்குகிறது. கடலுக்கு நடுவே இங்குள்ள நவபாஷாண நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீராமபிரான் என்று தல புராணம் சொல்கிறது.

Image result for தேவிபட்டினம்

இத்தலத்துக்கு தேவிபட்டினம் என்கிற பெயர் எப்படி ஏற்பட்டது ?

முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அரக்கன், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டவனாக மூன்று உலகங்களையும் வென்று ஆட்டிப்படைத்து வந்தான். அவனது சக்தி அளப்பரியதாக இருந்தது. மகிஷனைக் கண்டு உலகத்தோர் நடுநடுங்கினார்கள். அவனை எதிர்க்க முடியாமல் சரணடைந்தார்கள்.

ஒரு பெண்ணைத் தவிர வேறு யாராலும், தேவர்களாலோ அசுரர்களாலோ மனிதர்களாலோ எவராலும் தனக்கு மரணம் நேரக் கூடாதுஎன்று பிரம்மதேவரிடம் வரம் பெற்றவன் மகிஷன். எனவே அவனை அழிக்கும் வல்லமை, தேவி பராசக்தி மட்டுமே உள்ளது என்றறிருந்த தேவர்களும், மகரிஷிகளும் பராசக்தியை துதித்து தவம் இருந்தார்கள்.

அவர்கள் முன் தோன்றிய அன்னை பராசக்தி நல்லோர்க்கு அபயம் அளித்தாள். தானே மகிஷனை வதம் செய்வதாகக் கூறி ஆக்ரோஷத்துடன் புறப்பட்டாள்.

அன்னை பராசக்திக்கும், மகிஷாசூரனுக்கும் உக்கிரமான போர் மூண்டது. இடைவிடாமல் நாள் கணக்கில் நடந்த மூர்க்கமான அந்தப் போரின் முடிவில் மகிஷன் சோர்ந்து போனான். பராசக்தியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மாயாசக்தியால் அங்கிருந்து மறைந்து போனான்.

அப்படி மறைந்தவன் இப்போது தேவி பட்டினம் இருக்கும் இடத்திலுள்ள சக்கர தீர்த்தம் என்கிற இடத்தில் வந்து ஒளிந்து கொண்டான்.

மகிஷனைத் தேடி அவ்விடத்துக்கு வந்த தேவிபராசக்தி, அரக்கன் ஒளிந்திருந்த சக்கர தீர்த்தத்தைத் தன் சக்தியால் வற்றச் செய்தாள். அதற்குள் பதுங்கியிருந்த மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனாலேயே மகிஷாசூரமர்த்தினி என்று போற்றப்பட்டாள்.


மகிஷாசுரனை தேவிபராசக்தி வதம் செய்த அந்த ஊர் தான் தேவிபட்டினம் திருத்தலமாகப் போற்றப்படுகிறது.


ஸ்ரீராமபிரான் ஸ்தாபித்த நவக்கிரகங்கள் !


இத்தனை மகிமை பெற்ற தேவிபட்டினத்துக்கு வந்த ராமபிரான், தான் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடிய உப்பூர் பிள்ளையார் பூஜைக்குப் பிறகு நவக்கிரக வழிபாடு நடத்த இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்காலங்களில் தேவசாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம்.

அதன்படியே தேவிபட்டினம் கடற்கரைக்குச் சென்ற ராமபிரான், அங்கு கடலுக்கு அருகில் தமது திருக்கரங்களால் மணலால் பிடித்து நவக்கிரகங்களை உருவாக்கி  பூஜித்து வணங்கினார்.

பூஜையின் போது தாம் உருவாக்கிய நவக்கிரகங்களை கடலின் அலைகள் பொங்கி வந்து அழித்து விடக்கூடாது என்பதற்காகவே ராமபிரான் கடலரசனுக்குக் கட்டளையிட்டதாகவும், அதன்படியே அவ்விடத்தில் ராமனின் ஆணைக்கு கட்டுப்பட்டு கடலில் அந்தப் பகுதியில் அலையே இல்லாமல் போனது என்பது ஐதீகம்.

Image result for தேவிபட்டினம்

ஆச்சரியம் என்னவென்றால் இன்றும் கூட அந்த நவக்கிரக தலத்தில் அலைகளே இல்லாமல் கடல் அமைதியாக இருப்ப தைப் பார்க்கமுடிகிறது.

இந்தப் பிரசித்திபெற்ற தேவிபட்டினத்தின் நவக்கிரகங்கள் கடல் நீருக்குள் அமைந்திருக்கின்றன. நாம் நவக்கிரகங்களை வணங்க காலை நேரத்தில் சென்றால் சுமார் 50 அடி தூரம் செல்லும்போது கடல் நீர் கணுக்கால் அளவில்தான் இருக்கும். இருள்கவியத் தொடங்கியதும் நீர் மட்டம் உயர்ந்து விடும். கடல்நீரில் நின்று தான் வழிபட வேண்டி இருக்கும்.

முன்பெல்லாம் கரையில் இருந்து நவக்கிரகத்தலத்துக்குப் படகிலும் செல்லலாம். இப்போது பாலம் கட்டி விட்டார்கள். பாலத்தில் நடந்து சென்று நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் நீரில் இறங்கி வழிபட்டுத் திரும்பலாம்.

தேவிபட்டினம் சென்று நவக்கிரகங்களைச் சென்று பார்த்தாலே நமது முன்ஜென்ம பாவங்கள் முதல் எல்லாப் பாவங்களும் தொலைந்து போகும். நவக்கிரக தோஷங் கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றிவைப்பவர்கள் இந்த நவக்கிரக நாயகர்கள்.

நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம் வருதல், தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும். இங்கு வரும் பக்தர்கள் அனைத்தையும் முறை யாகச் செய்து பலனடைகிறார்கள்.

இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் மற்ற கோயில்களைப் போல் அர்ச்சகர், பூசாரி தயவு இல்லாமல் பக்தர்களே இங்குள்ள நவக்கிரகங்களைத் தொட்டு அவரவர் கைகளாலேயே அபி ஷேகம், அர்ச்சனை செய்து மகிழலாம் என்பது இத்தலத்தின் சிறப்பு விசேஷம்.

இங்குள்ள புனிதமான சக்கரத் தீர்த்தம் புராணத்தில் இடம்பெற்ற புகழ் வாய்ந்தது என்பதை முதலிலேயே பார்த்தோம்.

 அன்னை பராசக்தி சக்கரத்தீர்த்தத்தை வற்றச் செய்து மகிஷனை வதம் செய்த பிறகு, மீண்டும் தீர்த்தத்தை அங்கே தோன்றச் செய்தாள். அதனாலேயே இந்த சக்கரத் தீர்த்தம் மேலும் புனிதமானது.

தவிரவும், தர்மதேவன் தவமிருந்து ஈஸ்வரனுக்கு உரிய ரிஷபவாகனமாக ஆனதால் தர்ம தீர்த்தமும், காலவரிஷி இங்கே தவமிருந்ததால் கால தீர்த்தமும் இதில் கலந்து இதன் தன்மையை மேலும் புனிதமடையச் செய்தது என்று தலபுராணம் சொல்கிறது.

எனவே, இந்தச் சக்கரத்தீர்த்தத்தில் நீராடுதல் சிறப்பானதாகக் கருதப்பட்டு வருகிறது.


பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் !!

Image result for பாம்பன் பாலம் hd images


தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கி ரகங்களின் தரிசனத்துக்குப்பின் பக்தர்கள் அடுத்து பயணிக்க வேண்டிய இடம் பாம்பன்.

பாம்பனில் உள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி அவரின் அனுக்கிரகத்துடன் ராமேஸ்வரம் தீவுக்குச் செல்லவேண்டும் என்பது நியதி.

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவியால்தால் நமது வீரத்துறவி விவேகானந்தர், அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் சமயச் சொற்பொழி வாற்றச் சென்றார். அந்த சமயச்சொற்பொழிவின் மூலம், மேலைநாட்டவரை இந்தியாவின் ஆன்மிகத்தை நோக்கித் திரும்ப வைத்த விவேகானந்தர், நமது தாயகம் திரும்பும் வழியில் இந்தப் பாம்பனின் கரையில்தான் கால்பதித்தார்.

ராமநாதபுரம் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்தும் பாம்பன் வந்து சேரலாம். பழைய காலத்தில் இந்தப் பாம்பன் கடல் வழியாகத்தான் தூத்துக்குடியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தோணிகள் மூலம் வாணிபம் நடைபெற்று வந்தது.

கடலில் பாறைகள் அதிகமிருந்ததால் இந்த பாம்பன் கால்வாய்ப் பகுதியிலுள்ள பாறைகளை அகற்றி தோணிகள் எளிதாகச் செல்ல ஆங்கிலேயர்கள் வழிவகுத்தனர்.

இந்தக் கால்வாயின் குறுக்காக மண்டபத் திலிருந்து பாம்பனை இணைக்கும் வகையில் கி.பி. 1914ல் ரயில்வே பாலம் ஒன்றை அமைத்தனர்.

அது எந்தவித ஆதாரமுமின்றி தொங்கு பாலமாக 25 கி.மீ. தூரம் வரை அமைக்கப்பட்டிருக்கிறது. கப்பல்கள் இதன் குறுக்கே செல்லும் வகையில் பாலம் உயர்ந்து வழி தரவும், பின் மூடிக்கொள்ளும் விதமாகவும் அமைக்கப்பட்டிருப்பது காண்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்த ரயில்வே தொங்குபாலம் ஜெர்மனி நாட்டுப் பொறியாளரான ஸ்வைட்சர் என்பவரால் அமைக்கப்பட்டது. மண்ட பத்திலிருந்து பாம்பனை இணைக்கும் இந்த ரயில்வே பாலம் கட்டப்பட்டபிறகு, பின்னாளில் தரைவழிப் பாலமும் அமைக்கப்பட்டது. 1973ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1988ல் பாலம் முடிவடைந்து பக்தர்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டது. தற்போது அந்தப் பாலத்தில் பேருந்து மூலமாகக் கடலின் குறுக்கே ராமேஸ்வரம் சென்று வருகிறார்கள் பக்தர்கள்.


பாம்பனிலிருந்து வடகிழக்கே ராமேஸ்வரமும் தென் கிழக்கே தனுஷ்கோடியும் உள்ளன. முன்பு பாம்பனிலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து இருந்தது. 1964ம் ஆண்டு அடித்த புயல் காற்றில் தனுஷ்கோடி கடலால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது என்றாலும் பக்தர்கள் தற்போதும் அந்தக் கடற்கரைக்குச் சென்றுதான் நீராடிவிட்டு வருகிறார்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து சேதுக்கரை எனப்படும், தனுஷ்கோடிக்குப் படகுகள் மூலமும் கடற்கரையோரமாக நடந்தும் போய் வரலாம். தற்போது பஸ் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தச் சேதுக்கரையில் நீராடிப் பிதுர்க் கடன்களை முடித்த பின்தான் ராமேஸ்வரம் திருக்கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.

                                                   திருத்தல யாத்திரை ()ரும்..

No comments:

Post a Comment