பிரம்மதேவர் முன்னொரு காலத்தில் தான் சிருஷ்டி செய்த சரஸ்வதியை நோக்கி; அவளது பேரழகு காரணமாக, நீ என்னை அணையவேண்டும். நீயே என் மனைவி நானே உன் கணவன் ! என்று சொன்னார். அதற்கு கலைமகளான சரஸ்வதி இது என்ன விந்தை நீயே என்னை படைத்து விட்டு நீயே என்னை மணப்பதாகக் கூறுவது தகுமா, தகுமமா ? என்று நிராகரித்து, மனந்தாளாமல், புத்திரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளைக் கூறிய உன் ஒரு வாயானது. இப்படியே துர்ப்பாஷைகளையே பேசிக் கொண்டிருந்து பின் ஒரு காலத்தில் சிவபெருமானால் தண்டனையடையட்டும் என்று சாபமிட்டாள். அந்தச் சாபத்தாலேயே சிவபெருமானை மற்ற முகங்கள் துதிக்க அந்தச் சிரம் மட்டுமே அவரை நிந்தித்து அவரால் அறுத்து எறியப்பட்டது !
சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன்னை தோத்திரஞ் செய்தவர்களுக்கும் பாபத்தை நீக்கும் வன்மையை உடையவராக இருக்கும்போது தான் பிரம்மன் தலையைக் கொய்த தோஷத்தை நிவர்த்தித்துக் கொள்ளச் சக்தியின்றிப் போகுமா ? இல்லை ஆயினும் அவ்வாறு நடித்துக்காட்டிய காரணத்தையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.
உலக சிரேஷ்டன் செய்த காரியத்தைப் பிறர் நற்கருமம் என்று அங்கீகரிப்பது பிரமாண பூர்வமாகும். ஆகவே சிவபெருமான் தான் பிரமச் சிரச்சேதம் செய்த காலத்தில் அக்கபாலம் ஒட்டிக் கொண்டதேயென்று தீர்த்த யாத்திரை செய்து பிரம கபாலத்தை விலக்கினார். இது உலகினருக்காகச் செய்த நடிப்பு !
இதனால், காசி க்ஷேத்திரம் பாபங்கள் அனைத்தையும் போக்கடிக்கத் தக்க உத்தம க்ஷேத்திரமாகும். இந்தக் கபாலம் விழுந்த இடம் கபாலமோசன தீர்த்தம் எனப்படும். நிக்ரகா நிக்கிரக சமர்த்தராய்ச் சகல பிரமாண்டங்களையும் சிருஷ்டித்துக்காத்து சங்கரிக்கும் சிவபெருமானின் சங்கற்பமும் நடக்கையும் யாவன் அறியவல்லவன் ? அவர் செய்த செயல்கள் அநேகம் !
மன்மதனைத் தகனஞ் செய்தார். எனினும் தனது உடலிலேயே வாம பரகத்தில் பார்வதிதேவியை அமர்த்தியிருப்பது எங்கே ?
கண்டத்திலே விஷத்தைத் தரித்திருந்தும் மிருத்யுஞ்சயராய் இருப்பது எங்கே ?
தான் பிட்சை ஏற்கும் திகம்பரரேயாயினும் தன்னை அடைந்தோருக்கு சகல ஐஸ்வரியங்களையும் அநுகிரகிப்பது எங்கே ?
தான் பைசாசங்களை சைன்னியமாக வைத்துக் கொண்டு இருந்தும் தன்னை அண்டியவர்களுக்கு ரத, கஜ, துரகபதாதிகள், என்ற சதுரங்க சேனையை அனுக்கிரஹிப்பது எங்கே ?
தன் உடலில் கபாலமாலை அணிந்திருந்தும் தன் பக்தர்களுக்கு முத்து பவளம் முதலிய மாலைகளைக் கொடுக்கிறார். தான் மயான சாம்பலைப் பூசியிருந்தும் தன் பக்தர்களுக்கு சந்தனம் முதலிய பரிமள சுகந்தத்தைக் கொடுக்கிறார்.
தான் எருதை வாகனமாக கொண்டிருந்தும் தன்னை துதிப்பவர்க்கும் தனக்கு தொண்டு செய்வோருக்கும் யானை, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுக்கிறார்.
தான் சர்ப்பாபரணங்களை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு மகர குண்டலாதி ஆபரணங்களைக் கொடுக்கிறார். தான் ஜடாதரராக இருந்தும் தம் அன்பர்களுக்குக்கிரீடம் முதலான சகலபொருட்களையும் கொடுக்கிறார்.
தான் யானைத்தோலை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு சீனி சீனாம்பரங்களை உதவுகிறார். இவையே அன்றித் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, இகபர போகங்களை கொடுக்கிறார்.
ஆகையால் அவர் மகிமைகளைத் தெரிந்து கொள்ள ஒருவருக்கும் சக்தி கிடையாது இந்தப் பஞ்சக்குரோச விஸ்தீரணமுடைய காசி க்ஷேத்திரத்தைவிட திரிலோகங்களிலும் சிறந்த க்ஷேத்திரம் ஒன்றும் இல்லை. அத்தகைய திருத்தலமே இல்லாவிட்டால் சிவபெருமானே அங்கு எந்த காலத்திலும் எழுந்தருளியிருந்து, அங்கே மடிபவர்களின் செவிகளில் தாரக மந்திரோபதேசம் செய்து, அவர்களுக்கு முக்தியளிக்க முடியுமா ?
விஸ்வேஸ்வரலிங்க மூர்த்தமாகச் சிவபெருமான் எப்பொழுதிலிருந்து காசி க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கிறாரோ அது முதல் காசி க்ஷேத்திரம் சிறப்புடையதாயிற்று. இந்தக் காட்சி மகத்துவத்தைக் கேட்பவர்கள், சகலவித சாம்ராஜ்யங்களையும் அடைவார்கள் ! இனி புனித பயணம் தொடங்கவோம்…
நிஜமான காசி யாத்திரையும்...
‘கல்யாண பாவ்லா’ காசி யாத்திரையும் !
இறைவன் ஜோதி வடிவானவன்.
‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று துதிக்கிறார் அருணகிரிநாதர்.
‘உலகெலாம் உணர்ந்து ஓதர்க்கரியவன் அலகில் சோதியன்’ என்று சிவபிரானைப் போற்றி, தன் புராணத்தைத் தொடங்குகிறார் சேக்கிழார் பெருமான்.
ஜோதிவடிவான இறைவனுக்கு பாரதத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள். இதில் முதலாவதும் சிறப்பானதும் - காசி. புண்ணியத் தலங்கள் எல்லாவற்றிலும் மணிமுடி போன்றது.
காசியை நினைக்க முத்தி காசியென்றுரைக்க முத்தி
காசியைக் காண முத்தி காசியில் வசிக்க முத்தி
காசியைச் சூழ முத்தி காசியைக் கேட்க முத்தி
காசியில் வசித்தோர் தம்மைக் கண்டு தாழ்ந் திடுதன் முத்தி.
இப்படிப் புகழ் கொண்ட காசி என்ற சொல்லுக்கு ஒளிமயமானது என்பது பொருள். காசி, காஞ்சி, மதுரா, மாயா (ஹரித்துவார்), அவந்திகா (உஜ்ஜயினி), அயோத்தி, துவாரகை ஆகிய ஏழும் முத்தித் தலங்கள்.
இவற்றினுள் காசிக்கு மட்டும் ஏனிந்த பெயர், புகழ், பெருமை, மகிமை, புனிதம், புண்ணியம் ?
‘காசிக்கு நிகரான பதியுமில்லை;
கங்கைக்கு நிகரான நதியுமில்லை’
என்று பாமரரும் பக்தியுணர்வோடு ஏற்றிப் புகழும் இந்தத் திருத்தலத்தைத் தரிசிப்பதற்குக் கூட, பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே பாக்கியம் கிடைக்கும் என்கிறார்களே, ஏன் ?
காரணம் பல...
மனித வாழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது தான் நிற்கும்; நிலைக்கும். காசி நகரம் இந்தியா முழுவதும் புகழ் மணம் பரப்பி நிற்கக் காரணம். மனித வாழ்க்கையோடு அந்நகருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புதான்.
இந்துக்கள் மட்டுமல்லாது ஏனைய சமயத்தினரும் காசியை - அதன் சிறப்பை நன்கறிவர்.
மனித வாழ்வில் பல பிரிவுகள் - அதனுள்ளும் பலப்பல கூறுகள் - உள்ளன. அதில் தலையாயது எது ?
குடும்ப வாழ்க்கை, துறவு மனம், மரணம் - இந்த மூன்றும்தான் மனிதனின் பெரும்பகுதி வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன அல்லது ஆளுமை செலுத்துகின்றன.
துறவைப் பொருத்தவரை காசிக்குப் பெரிய பங்கில்லை. பலரும் காசியைத் தரிசிக்க வருகிறார்களே தவிர, அவர்கள் அங்கேயே தங்கிவிடுவதில்லை. துறவு வாழ்வை மேற்கொள்ளாமல், ஆனால் பற்றற்ற மனநிலையில் இல்லறத்திலேயே இருப்போரும் வந்து வணங்குகின்றனர். வாழ்வின் தொடக்க நிலையில் இருப்போரும் குடும்பத்துடன் பக்தியின் காரணமாக வந்து வழிபடுகின்றனர்.
ஞானத்தேடல், பாவம் போக்குதல் என்று அவரவர் நோக்கில் வந்து தொழும் தலம் இது.
ஒருவன் குடும்ப வாழ்வை மேற்கொள்ளும்போதே காசி க்ஷேத்திரம் அவனுக்கு நினைவூட்டப்படும் சடங்கும் நம்மிடையே திருமணத்தின்போது உண்டு.
பிரம்மச்சாரி ஒருவன், ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாகக் கைப்பிடித்து இல்லறத்தில் நுழையும்போதே, அவன் தன் குடும்பத்திடம் கோபித்துக்கொண்டு காசிக்கு யாத்திரை புறப்படுவதாகவும், கையில் குடையுடன் அப்படி அவன் பாவனை பண்ணிக்கொண்டு சில அடி தூரம் சென்றதும், ஏனையோர் அவனைச் சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வருவது போலவும் திருமணச் சடங்கில் ஒரு நிகழ்ச்சி உண்டு. இன்றும் பலரது திருமணங்களில் இது ஒரு அம்சமாக உள்ளது.
இல்லற வாழ்வின் தொடக்கத்திலேயே காசியின் பிணைப்பை இந்த தேசத்தினர் கைக்கொண்டிருந்ததற்கு இது சான்று.
சரி, பாவம் போக்க காசிக்குப் போவது ஏன் ?
இன்பம் துய்க்கும் விருப்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் படைப்பிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக வாழ்வின் போக்கிலோ அதற்கு ஏராளமான தடைகள். மனிதன் இவ்வகைத் தடைகளைத் தாண்டியோ தகர்த்தோ தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முனையும்போது அறிந்தோ அரைமனதுடனோ, தவிர்க்க இயலாத சில தவறுகளைச் செய்து விடுகிறான்.
பிறகு ஒரு நேரத்தில், அவன் தன் மனசாட்சி என்னும் துலாக்கோலில் தனது செயலையும் அதன் விளைவையும் எடை இட்டுப் பார்க்கும்போது அவன் உள்ளம் குற்றஉணர்வால் அமைகிறது. வேறுவகையில் அவனுக்கு ஏற்படும் இயல்பான துன்பங்களும்கூட, தனது முந்தைய பாவச் செயல்களின் பிரதிபலிப்பே என்று எண்ணி வருந்தி மனம் நைந்து போகிறான். அவனது செயலூக்கம் குன்றி விடுகிறது. தனது பாவங்களின் சுமை தனது வாரிசுகளையும் வதைக்குமோ என்று அஞ்சுகிறான்.
இதிலிருந்து அவன் மனம் தேற, அமைதி கொள்ள என்ன வழி ?
தன் தவறுகளுக்கு பரிகாரம் ஒன்று இருப்பதாக அவன் நம்பும்போது, மனித மனம் ஆறுதல் அடைகிறது; அமைதி பெறுகிறது.
தனது தவறுகளுக்குத் தண்டனை தரும் சக்தி எதுவோ அதனிடம் பாவமன்னிப்பு கோரி பரிகாரம் பெற மனம் துடிக்கிறது. அதனால் தண்டனை குறைக்கப்படும் அல்லது மன்னிப்பு வழங்கப்படும் என்பது நம்பிக்கை.
அதற்குரிய இடம்தான் காசி.
பாவங்களைப் போக்கி மனிதனைக் குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்து, அவனது எஞ்சிய வாழ்வை அவனுக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக நல்வழியில் செலுத்தத்தக்க சக்தி கொண்டதுதான் காசித் தலமும் கங்கை நதியும்.
பாரத சமுதாயம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நம்பிக்கையோடு தரிசித்தும், வணங்கியும், வழிபட்டும் தமது பாவச் சுமைகளைப் போக்கி, மனதின் களங்கக் கறையைக் கழுவிப் புனிதம் பெறுகிறது; சுகம் பெறுகிறது.
இந்த சம்பிரதாயத்தை ஏற்று, கடைத்தேற விரும்பும் எல்லா மனிதர்களாலும் காசிக்குச் சென்றுவிட முடியுமா ?
பொருள் இல்லாதவர்களால் முடியாது. பொருள் இருந்தும் ஆரோக்கியம் இல்லாதவர்களால் முடியாது.
நடமாட இயலாதவர்களால் முடியாது.
பொருளும் சக்தியும் இருந்தும் நம்பிக்கையான வழித்துணை இல்லாதவர்களால் முடியாது.
போக்குவரத்து எளிதாகவோ, இன்றுள்ளது போன்ற எந்திர வாகன வசதியோ இல்லாத காலத்தில் ஒருவர் காசி சென்று திரும்புவது எளிதான காரியமல்லவே. மேலும், காசியைக் காண முடியாதவர்கள் மனம் தளரக் கூடாதல்லவா ? இதன் காரணமாகவே இந்தியாவில் வேறுபல தலங்களைக் காசிக்கு இணையான தலங்களாக அமைத்தனர்.
உதாரணமாக தமிழ்நாட்டில் திருவாஞ்சியம், திருச்சாய்க்காடு (சாயாவனம்), தென்காசி உள்ளிட்ட சில தலங்களைக் காசிக்கு இணையான தலம் என்று கொண்டனர்.
ஆயினும் இவை எதுவும் காசிக்கு இணையானதுதானே தவிர, காசிக்கு மேலானது என்று குறிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிலபேர், காசியும் காசிக்கு இணை என்று சொல்லப்படும் தலமும் ஒன்றாகி விடுமா என்று விதண்டாவாதம் பேசலாம். நம்பிக்கையைப் பழிப்பதை விட, அதனால் வரும் பயனை எண்ணிப் பாராட்டுவதே நல்லது. மனோதத்துவ நிபுணர்கள் ஆதரிக்கும் கருத்தும் அதுவே.
- புனித பயணம் வ(ள)ரும்..
No comments:
Post a Comment