அழகிய சிற்றம்பலமுடையான் படலம்: (திருப்பேரூர், 36 படலங்களுள் ஒன்று)
சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை வணங்கிச் சென்று, தில்லைச் சிற்றம்பலத்திலே திருநடராசரைப் பாடும் திருப்பதிகத்தில் "பேரூர்ப் பெருமானைப் பெற்றோம்" என்று அருளிச் செய்த தேவாரத்தைத் தில்லைவாழந்தணர் கேட்டு நாயனாரை நோக்கி, இத்தில்லைத் தலம்போல் இவ்வுலகத்திலே ஒரு தலம் உண்டோவென வினவியதற்கு....
"இக்கனகசபையிலே, தாண்டவஞ் செய்தது போலத் திருப்பேரூர்
வெள்ளியம்பலத்திலே சிவபிரான் திருநடனஞ் செய்தருளுகின்றார்.
வெள்ளியம்பலத்திலே சிவபிரான் திருநடனஞ் செய்தருளுகின்றார்.
அத்தலத்தில், முத்தி தருவதன்றி, தருமார்த்த காமங்களைத் தருவதில்லை" என்று நாயனார் நவின்றார்.
உடனே தில்லைவாழந்தணர் திருப்பேரூரைச் சேர்ந்து, காஞ்சிமா நதியில் மூழ்கியெழுந்து திருமேனியிலே, சிவசின்னங்களாகிய திருநீறும் கண்டிகையும் பூண்டு, சுவாமியையும் அம்மையையும் தரிசித்து, அரசம்பலவாணரை வணங்கி, மறுநாள், காலவனீச்சரத்திற்கு அக்கினித்திக்கிலே சிவலிங்கந் தாபித்துப் பூசித்து அங்கே வசித்தார்கள். அப்பொழுது வெள்ளியம்பலத்திலே, சிவபிரான் திருநடனஞ் செய்ய அதனை தில்லைவாழந்தணர்கள் தரிசித்து, ஆன்மாவுஞ் சிவமும் அத்துவிதமாய், மனம் அழிந்து அவசமாய் நின்று துதித்து விடைபெற்றுக் கீழைச் சிதம்பரஞ் சேர்ந்து பண்டைக்காலம் போல் வாழ்ந்திருந்தனர்.
அவ்வந்தணர் பூசித்த ஆலயத்திற்கு "அழகிய திருச்சிற்றம்பலமென்றும்," சுவாமிக்கு "அழகிய திருச்சிற்றம்பல முடையாரென்றும்" பெயர். இக்கோயில் காலவேசுவரத்திற்குத் தென் கீழ்த்திசையில் உள்ளன. இக்கோயிலில் எழுந்தருளிய பெருமானுக்கு "இடங்கை நாயகேசுவர முடையார்" என்ற பெயரும் உண்டெங்கின்றது கச்சியப்பர் தலபுராணம்.
மகாராஷ்டிர தேசத்தில் எச்சதேவன் என்னும் பிராமணன் அரிய தவங்களும் வேள்விகளும் செய்து சிவபெருமான் திருவருளினால் ஒரு மைந்தனைப் பெற்றான். அவனுக்குச் சுமதி என்று பெயர் வைத்தனர்.
அப்புதல்வன் அப்பெயருக்கேற்ப வேதம் முதலிய கலைகளை ஓதியுணர்ந்து, அதன் பயனாகிய ஒழுக்கத்தோடு வளர்ந்து, பதினாறு வயதை அடைந்தான். அவன் சிவதாமா என்னும் மறையவன் மகளை மணந்து வாழுந்து வரும்போது, யாத்திரைச் செய்ய எண்ணம் கொண்டு திருப்பருபதத்தை அடைந்து, அங்கே சிவபெருமான் கொண்டருளும் மகோற்சவத்தைத் தரிசித்து வசிக்கும் நாளொருநாளில்.....
திருவீதியின் வளத்தை நோக்கும்படி புறப்பட்டுச் சென்றான். தீவினைப் பயனால் பொதுமாதர் வீதி வளத்தைக் கண்டு செல்லும்போது, சூரியனது கதிர் வெப்பத்தினால் அயர்வுற்று, ஆகாயத்தை அளாவிய பந்தர் (பந்தல்) பொருந்திய மூன்றிலையுடைய இந்திரலோகம் போன்ற சுந்தரமுள்ள ஒரு மாளிகையைக் காணப்பெற்றான். அப்பந்தரிடையே தங்கிச் செந்தமிழ்ப் பொதியச் சந்தனம் முதலிய நறுமணத்தையும் குளிர்ச்சியையும் கொண்டு, அவ்விடத்தில் அமர்ந்தான். அந்தத் தருனத்தில் சிரம பரிகாரமாகி அம்மாளிகையில் உள் செல்வோரையும் வெளியில் வருவோரையும் கண்டு, அவர்கள் செயல்களை விசாரிக்கத் தொடங்கினான்.
இதற்கு அங்கே அருகே நின்ற ஒருவன் "இத்திருப்பருப்பதத்திலே, வேதியர் வீதியின் மத்தியிலுள்ள ஒரு பிராமணன் பத்தினியாகிய ஏமாங்கி என்பவள் காமத்தினாற் கற்புநிலை குலைந்து, கணவனையும் கொன்று, பெரும் பொருளையும் கைக்கொண்டு, பரத்தையர் வாழும் இவ்வீதியில் வந்து, இவ்வீட்டியினை கட்டுவித்து வசித்து இங்கு தங்கியிருக்கிறாள்.
இளமையானவளாயிருந்து பொதுமகளிர் தொழில் பழகிய அவள், முதுமை பெற்றவளாய், இளையிளமையானவர்கள் தன் வரவை நாடி இங்குற்றிருக்கிறாள் என்றான். உடனே சுமதியானவன், அம்மனையின் அகத்திருந்த ஏமாங்கி புறத்தே போனான். சுமதி நல்வரவை வினவினான். அவளும் கையைப்பற்றித் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டுபோய் இன்பத்தை நுகர்வித்துக் கொடுத்தாள்.
நுகர்ந்த சுகம் கொண்ட சுமதி, தொடர்ந்து சில தினத்திலே பல பொருள்களையும் அவளிடம் இழந்து, பின்பு ஏமாங்கியினால் இகழப்பட்டும், அதன்பின்பும் அவளின் மீது பெரும் மோகம் கொண்டு பொருள் கொண்டு வர விரைந்தோடினான். சுமதியின் தந்தை புரோகிதமாகவிருந்த காஷ்மீர கண்டத்து அரசனையடுத்து, இரத்தின ஆபரணங்களும், பெரும் பொருளும் பெற்று, மீண்டும் ஏமாங்கியிடம் வந்து இணைந்தான். இன்பச் சுழற்சியில் மூழ்கிச் சில நாளில் மறுபடியும் அனைத்து பொருளையும் இழந்தான்.
மீண்டும், கொடைக்குணமுடையாரை அடைந்து அங்கிருந்து பொருள் பெற்றும், உற்கலதேயத்திற் பர்க்கதேவன் என்னும் பார்ப்பானனைக் கொன்று அவனிடமிருந்த பொருளை கவர்ந்து துராசாரனென்னும் பெயர் பெற்றும் திரும்ப, ஏமாங்கியிடத்தே வந்தான். அவன் பெருங் கொடுஞ் செய்கைகளைக் கேள்வியுற்ற ஏமாங்கி, "வருணமும் ஒழுக்கமும் கற்பும் கழுவிக் கொழுநனையுங் கொன்று பழிபூண்டு அளவில்லாத் தீமைகளைச் செய்திருக்கின்றோம்.
இன்னமும் எம்மிடத்துள்ளாராலும் பழிபாவங்கள் உளவாதல் முறையோ" என்று வருந்தி, அச்சுமதியை விலக்கி வைத்தாள் ஏமாங்கி. அவனோ அவளை விட்டு விலகாது மாளவதேசத்தை எய்தி, அங்கும் ஒரு பிராமணனை வதைத்துப் பொருள் பறித்து திரும்பி வந்து மறுபடியும் ஏமாங்கியை அடைந்தான்.
உடனே ஏமாங்கி, "இப்பாவியைப் பார்ப்பதும் பாவம் பெரும்பாவம்" என்று அவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்றாள். சுமதியானவன் அவளைத் தேடி சென்றான். தேடியலைந்தவன் "தென்கைலாயமாகிய கோவை திருப்பேரூர்" எல்லையில் உள்ள காட்டில் வீழ்ந்து மாண்டு போனான். திருப் பருப்பதமாகிய மல்லிகார்சுனத்தை வழிபட்டு திருப்பேரூர் வெள்ளியங்கிரியின் அருகே இறந்த சுமதியின் உடம்பை நாய் நரிகள் திண்றன. அவனுடலை திண்ணுவதற்கு நாய் நரிகள், அவைகளுள் சண்டையிட்டு உனக்கு எனக்கு என் அவ்வுடலை இழுத்துப் போய் காஞ்சிமா நதியில் இட்டுவிட்டன. ஆதிபுரியிலே உடல் வந்து வீழ்தலினாலும், அவ்வுடலில் காஞ்சி தீர்த்தத்தில் நனைந்ததினாலும் அவ்வுடல் புண்ணியங்கள் பெறப்பட்டு சுமதி சிவலோகத்தை சேர்ந்தான்.
முசுகுந்தன் முகம்பெறு படலம்
கலிங்க தேசத்திலே சிவபூஜை செய்யும் மெய்யன்பினையுடைய ஓர் அந்தணரொருவர் அருந்தவஞ் செய்ய, அவன் மனைவியிடத்தே ஒரு புத்திரி அவதரித்துச் சுகுமாரி என்னும் பெயர் பெற்று விளங்கினாள். அவள் பிதாவை வணங்கிச் சிவார்ச்சனை புரியும் விருப்பம் இருப்பதாக விண்ணப்பம் செய்தாள். அதற்கு பிதா மகிழ்ச்சியுற்று சமயதீக்கை செய்து மந்திராதிகாரம் கொடுத்து, அது மனதிற்கு மகிழ்வாக இருக்க பின் விசேஷ தீக்கையும் செய்து அர்ச்சனாதிகாரம் கொடுத்தனர்.
கலிங்க தேசத்திலே சிவபூஜை செய்யும் மெய்யன்பினையுடைய ஓர் அந்தணரொருவர் அருந்தவஞ் செய்ய, அவன் மனைவியிடத்தே ஒரு புத்திரி அவதரித்துச் சுகுமாரி என்னும் பெயர் பெற்று விளங்கினாள். அவள் பிதாவை வணங்கிச் சிவார்ச்சனை புரியும் விருப்பம் இருப்பதாக விண்ணப்பம் செய்தாள். அதற்கு பிதா மகிழ்ச்சியுற்று சமயதீக்கை செய்து மந்திராதிகாரம் கொடுத்து, அது மனதிற்கு மகிழ்வாக இருக்க பின் விசேஷ தீக்கையும் செய்து அர்ச்சனாதிகாரம் கொடுத்தனர்.
இவ்விதமாகியிரும் வேளையில் சுகுமாரி அச்சிவபூசையில் நேசமுண்டாகிச் சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை நீங்கிச் சதா சிவமூர்த்தியைத் தியானித்து "சௌசம்", "தந்தசுத்தி", "நீராடல்", "அநுட்டானங்கள்" முடித்துத் தோழியரோடு திருநந்தவனம் சென்று, திருப்பள்ளித்தாமம் கொய்து, சிவபூஜை செய்து தொடர்ந்தாள்.
ஒரு நாள் மலர் கொய்வதற்கு நந்தவனத்திற்குப் போனாள். அப்போது அவளை விதூமனென்னும் காந்தருவன் கண்டுவிட்டவன், அவள்மேல் மையலுற்றுத் "தையலே," நீ எனக்கு மனைவியாவை எனில், "உனக்கு வேண்டும் பொருள் கொணர்ந்து பணியும் புரிவேன்" என்றான்.
அதற்குச் சுகுமாரியோ "போகத்திற் சிறிதும் கருத்தின்றிச் சிவார்ச்சனையில் பெரிதும் கருத்துடையேன் நான். ஆதலால், நீ உன் எண்ணத்தை மாற்றிக் கொள்வாயாக" என சொல்லி விட்டாள். அவனோ.... அவ்வென்னத்தை மாற்றிவிட முடியாது வருந்தி மறுபடியும் அவளைத் துரத்த, சுகுமாரி இரவிந்த விதூமனை நோக்கி "நீ முசுவாகக் கடவாய்" என சபித்து விட்டாள்.
உடனே அவன் முசுவாய் மலைகடோறும் உழன்று இமயமலையை எய்தி, வில்வ மரத்திற்கும் வில்வ மரமாகத் தாவினான். வில்வ மரத்திற்கும் வில்வ மரமாகத் தாவும் போது, அவ்வில்வயிலை சருகுகள் அவ்வில்வ மூலத்திலே அமருந்திருந்த சிவலிங்கப் பெருமான் திருமேனியை மூழ்கிச் சொரிந்தன. அப்போது இடபாகத்திலிருந்த உமாதேவியார் முசுவை நோக்கி, "எம்பெருமான் திருவுரு மறையச் வில்வசருகுகளை உதிர்த்தபடி மூழ்கடிக்கப்பட்டுப் போனதலால், சுகுமாரி இட்ட சாபம் தீரும் போதும் உனக்கு முசுமுகம் மறைந்திருக்கும் என சாபம் கிடைத்தது.
இதனைத் திருச்செவி சாத்தியருளிய சிவபிரான் "அளவில்லாத தீங்கையும் நீங்கச் செய்யும் வில்வத்தை நம்மேனியில் மூழ்கித்தியது புண்ணியமே! ஆக இம்முசுவுக்கு உலக முழுவதும் ஆளும் அரசினைக் கொடுப்போம்" என கூறிய ஈசன், உமாவின் பக்கம் திரும்பி.....
"தேவி!, நீ கோபிக்காதே! எனவும் கூறிவிட்டு அம்முசுவுக்கு எதிரில் தோன்றி' பேரரசை ஈந்தும், உமாதேவியாரோடு மறைந்தருளிப் போனார். அவ்வரத்தினால் அக்காந்தருவன் முசுமுகத்தோடு அரச குலத்திலே பிறப்பரிந்து உதித்து, "முசுகுந்தனென்னும்" பெயர் பெற்று உலகத்தை ஆண்டான். அச்சமயத்தில் அகிதவுட்டிரனென்னும் அவுணன் அமரர்களைக் கலக்கி, இந்திரனை வென்று, விண்ணாட்டைத் தன் நாடாக்கி ஆளமிடத்து, இந்திரன் இமயமலையில் மறைந்திருந்தான்.
அப்படியிருக்கும்போது பிருகு முனிவர் மகளைக் கண்டு மயங்கி, வலிந்து கைப்பற்றிய வழிய, அம்முனிவர் சாபத்தினால் அரக்கனாகி உழன்றான். இவ்வித நிகழும் போது வியாழ பகவானோடு தேவர்கள் பூமிக்கு வந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியைச் சார்ந்து நிகழ்ந்தவைகளைச் சொல்லித் தேவலோகத்தைக் காத்தருளும்படி வேண்டினர். அதனால் முசுகுந்தன் விண்ணுலகை அடுத்து, அகிதவுரட்டிரனை வென்று அவ்வுலகத்தைக் காத்தவழி அதனை ஆளும்படிக்கும் அமரர்கள் விரும்பினர்.
அவ்வாறு மூவுலகிலும் செங்கோல் செலுத்தி வந்தான். ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் போது, நாடகம் செய்த அரம்பை அவன் முசுமுகத்தை நோக்கி நகைத்தனள். அதனால் நாணமுற்று அவ்வரசாட்சியை அகற்றிய முசுகுந்தன் அருந்தவம் செய்து, சூரியன் அனுமதியினால் சிவத்தல யாத்திரை புரிந்து, நாரதமுனிவர் ஏவுதலால் திருப்பேரூரைச் சார்ந்து கலிகன்ம நாசினி யென்னுங் காஞ்சிமா நதியில் மூழ்கிச் சுவாமியை தரிசனம் செய்தான்.
அக்காஞ்சிமா நதிதீரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி, இரண்டு இரண்டுநாளாய் அந்நதியினில் படிந்து, மூன்றாம் நாள் மூழ்கியெழுந்த போது, முசுமுகம் நீங்கப் பெற்று நன்முகம் கிடைக்கப் பெற்றுத் தானங்கள் செய்து தென் கைலாய, வட கைலாயங்களை அருச்சித்து, மருதவரையில் முருகக் கடவுளைத் தரிசித்துத் தன் பதியை அடைந்து நல் அரசாட்சி செய்து நடத்தி வந்தான்.
காசிப முனிவர் புத்திரராகிய காலவ முனிவர் சிவ புண்ணிய மேலீட்டினால், இருவினையொப்பும் மலபரிபாகமும், சத்திநிபாதமும் உற்று, பாசத்தையும், பாசத்தையுடைய பசுவையும், பசுவுக்குப் பதியாகிய சிவபிரானையும் தமது மதிநுட்பத்தினாலே ஆராய்ந்து பதிந்து அடைவதற்குரிய நெறி சிவலிங்கோபாசனையே என்றார்.
அந்த உபாசனை எளிதில் கைகூடுதற்குரிய தலம் கோவை திருப்பேரூரே என்றும் உணர்ந்தார். எனவே, அத்திருப்பேரூரை அடைந்து, காஞ்சி நதியில் மூழ்கி சுவாமி தரிசனம் செய்தார். தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினார். அத்தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து வந்தார். இதுவே காலவ தீர்த்தம். அவ்வாற்றங்கரையில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து வந்தார். அங்கிருந்த தீர்த்தத்தை அபிஷேகித்து அர்ச்சனை புரிந்து, தினந்தோறும் பஞ்சாக்ஷரத்தைப் பதினைந்தாயிரம் உரு ஜெபித்து வந்தார். இங்ஙனம் பதினாயிர வருஷம் தவம் செய்தார்.
இத்தவத்திற்கு அருட்குறியினின்று சிவபிரான் தோன்ற, அவரைக் காலவ முனிவர் வழிபட்டு வரங்கள் பெற்றுத் தீக்ஷயுற்று, சித்தாந்த மகா வாக்கியோபதேசங் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து, நிட்டைகூடி வெள்ளியம்பலத் திருக்கூத்தையும் தரிசிக்க விரும்பி இருந்தனர்.
காலவ முனிவர் ஆலயத்திற்குக் காலவேச்சுரமென்ற தீர்த்தத்திற்குக் காலவ தீர்த்தத்மென்றும் பெயர். இவ்வாலயம் பட்டீசராலயத்திற்கு ஈசான திக்கில் இருக்கின்றது.
காமதேனு வழிபடு படலம்
சுவாயம்பு மனுப்பட்டத்தில், சகரன் எனும் அரசன் அரசாட்சி புரியுங்கால், பிரம்மதேவர் பிரஜைகளைப் படைக்கும் வண்ணம் எண்ணிச் சிவயோகத்தில் இருந்தபொழுது தீய ஊழினால் நித்திரை செய்தனர்.
அதனை இந்திராதி தேவர்கள் முகமாக உணர்ந்த விஷ்ணு மூர்த்தி காமதேனுவை நோக்கி, "நீ தவம் புரிந்து சிவபிரான் திருவருள் பெற்றுச் சிருட்டித் தொழில் செய்வாயாக" என்ற போது காமதேனு இமயமலையை எய்தி ஆயிரம்தேவ வருடம் அருந்தவம் புரிந்தும் சிவபெருமான் அருளாமேபற்றிக் கவலையுற்றிருக்கும் காலத்து நேர்பட்ட நாரத முனிவர் ஏவுதலால், அதி ரகசியமாக தலமாகிய ஆதிபுரியை அடுத்துக் காஞ்சி நதியில் வாஞ்சையோடு மூழ்கி, அசரீரி வாக்கின்படியே ஆதிலிங்க மூர்த்திமீது தனது பாலைப்
பொழிந்து பூசித்துக் கொண்டிருந்தது.
பொழிந்து பூசித்துக் கொண்டிருந்தது.
குழகன்-குழம்புச் சுவடுற்ற படலம்
ஆதிலிங்கத்தினருகே பட்டியிட்டு இருக்குங்கால் ஒரு நாள், காமதேனு முற்பகலிலே சிவபூசை செய்து சிவயோகத்தில் இருந்தது. அப்பொழுது சூரியன் அந்தமனமாகிச் சந்திரன் உதயமான காலத்தில், அக்காமதேனுவின் கன்றானது விளையாட்டினால் அண்டங்கங்கள் குலையும்படி அங்கும் இங்குமாக மேய்ந்து அலைந்து. அப்படி அலைந்து திரிந்த கன்றானது அண்ட நாயகராகிய "ஆதிலிங்க மூர்த்தி" அருமைத் திருமேனியை மறைத்திருந்த மேருமலையாகிய புற்றுக்களால் சூழப்பட்ட இடத்தினை கன்று குளம்புகளால் மிதித்தது.
தன் கால் குழம்பினால் கோதி கிளர்த்தியது. கால் குளம்புகள் தடுத்திடற குனிந்து தன் கொம்புகளால் குத்தி சிதைத்தது. கன்று கிளறி களோபரமாக புற்றைச் சேதப்படுத்த, மேருமலையின் உருக்கமாகியிருந்த புற்றின் மணல் துகள்கள் பிரிந்தன.
கன்றின் காற்குளம்பு புற்றினை கடுமையாக மோதி கிளர்த்தியதில் புற்றினுள் இருந்த ஒருவித ஈரப்பதம் ஆனதால் புற்றுமண் முழுமையும் கரையப்பட்டு, புற்றினைச் சுற்றி குருதி பெருகியோடி வழிந்தது. கன்றின் திருவடி, ஏற்கனவே புற்றினுள் உருவாக்கமாயிருந்த ஈசனின் திருமுடியில் அழுந்திப் பெயர்க்கக் கூடாமை போகவே, பின்பு தன் கொம்புகளாற் குத்திக்கிளறியதால் ஆதிலிங்கேசர் திருமுடியில் பட்டு உதிரம் பெருக அழுந்தியதின் விளைவு இப்போது புற்றினைச் சுற்றிக் குருதி வெள்ளம். உள்ளேயுள்ள அக்குழகர் அக்குளம்புச் சுவட்டினை உடையவரானார்.
பின்பு காமதேனு சூரியோதய காலத்தில், தன் கன்றினைத் தேடியது. அவ்விடம் வந்த காமதேனு தன் கன்றின் நிலையறிந்து கவலை கொண்டு வருந்தின, காமதேனுவின் வருத்தம் நீடிக்கவிடாத சிவபிரான் உடனடியாக காமதேனுவுக்கு முன் காட்சியானார். சிவபெருமான் இடபாரூடராய் எழுந்தருளி, காமதேனுவை நோக்கி "உனதிளங்கன்றின் விளையாட்டினால் உற்றதைக் குற்றமாக உள்ளத்திற் சற்றும் பற்றிலோம்" என்றார்.
"உமாதேவி முலைத் தழும்பையும் வளைத்தழும்பையும் மார்பினிற் கொண்டது போல முடியின் கண்ணே, குளப்படிச் சுவடையும் கோட்டின் சுவடையும் குதூகலத்தோடு கொண்டருளினோம்;"
"உனது கருத்துப்படி இப்போது பக்தியும், பின்னொருநாளில் நடன தரிசனமும், கடைசிமுடிவில் முத்தியும் தந்தருளுவோம்;"
"நீ வழிபட்டுத் தங்கியபடியால் இத்திருப்பேரூர் காமதேனுபுரம், பட்டிபுரி என்னும் பெயர்கள் பெற பட்டிநாதர் என்னும் நாமதேயத்தை நாமும் பெற்றோமென்று திருவாய் மலர்ந்து, மேலும்.. இது முத்தித்தலமாதலால், நீ கருதிய சிருட்டித் தொழிலைப் பற்றி வஞ்சி என்கிற "திருக்கருவூரிலே" அநுக்கிரகிப்போமென்றனர்.
அவ்வாறே காமதேனு வஞ்சித்தலத்திற்கு சென்று வரம் பெற்றுச் சிருட்டித் தொழிலைச் செய்தது. பட்டிப் பெருமானது திருமுடியிலே பசுக்கன்றின் காற்குளம்புகளின் சுவடுகளும் கொம்பு குத்திய சுவடும் இன்றைக்கும் நாம் காணும்படியான அருளோடு உள்ளன.
தென் கைலாயப் படலம்
கீழைச் சிதம்பரம் எனும் ஷேத்திரத்தில், சிவபெருமான் தமது அருட்சத்தியாகிய உமாதேவியார் காண, மேலைச்சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவஞ் செய்தருளுவார். அத்திருநடனத்தைத் தரிசிக்கும்படி சிவபிரானது கட்டளையினால், வியாக்கிரபாத முனிவர் கீழைச்சிதம்பரத்திற்கு சென்று, பத்தியினால் வழிபட்டுப் பல காலம் தவம் பயின்று வதிந்தார்.
அப்பொழுது கர்மமே கர்த்தா என்னும் கொள்கையுடைய தேவதாருவனத்து முனிவர்களைத் தடுத்தாட் கொள்ளும் வண்ணம் சிவபிரான் பிட்சாடன மூர்த்தியாகி அம்முனிவர்களுடைய பத்தினிகளிடத்தே சென்று, கற்பு நிலையைக் கலக்கியும், அவராஞ்ஞைப்படி விட்டுணு மூர்த்தி மோகினியாகி, அம்முனிவர்கள் தவ நிலையை அவநிலையாக்கியும், அவ்விருடிகள் கர்வபங்கமான பின்பு அவ்வனத்தின் கண்ணே சிவபிரான் திருநடஞ் செய்தருளினார்.
அந்நிருத்தத்தைத் தரிசித்த திருமால், ஆதிசேடன் மீது சயனித்து, ஒருதினம் விழிக்கும் காலையில், கண்களினின்றும் ஆனந்த நீர் பொழியவும் உடல் முழுதும் உரோமாஞ்சிதங் கொள்ளவும் பேரன்போடு "சங்கரா சங்கரா" என்று ஆரவாரித்தனர்.
அப்பொழுது ஆதிசேடன் அடுத்து வினவியதற்கு, விட்டுணு தேவதாரு வனத்தில் நிகழ்ந்த நிருத்த தரிசனத்தைக் குறிப்பிட்டளவில், அத்திருக் கூட்டத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஆதிசேடன் ஆசை மிகுந்து விடை பெற்று மேருமலையைச் சார்ந்து தவம் செய்தார். ஆதிசேடனின் தவத்திற்கு எதிர்வந்த தில்லையம்பலத்தைச் சேரும்வண்ணம் சிவபெருமான் அருள் புரிந்தார்.
அவ்வாறே அத்திரி முனிவர் பத்தினியாகிய அனசூயையிடத்திற் பதஞ்சலி முனிவராக அவதரித்துத் தில்லைப் பகுதியில் வியாக்கிரபாத முனியோடு தாமும் பஞ்சகிருத்தியத் திருக்கூத்தைத் தரிசித்திருந்தனர்.
அச்செய்தியை அறிந்த மால் திருக்கைலாச மலையைச் சேர்ந்து சிவபெருமானைத் திரிகரணங்களாலும் சேவித்து தில்லைச் திருச்சிற்றம்பலத் திருநடன தரிசனத்தின் பேராவாவைப் பெரிதும் விண்ணப்பம் செய்தனர்.
அதற்குத் திருக்கைலாசபதி "விராட் புருடனுக்கு இதயஸ்தானமாகிய கீழைச்சிதம்பர நடனதரிசனத்தைப் பதஞ்சலி வியாக்கிரபாதர் பொருட்டுச் சுதந்தரமாக்கினார். ஆகையால் தக்ஷண கைலாசமாய், விராட்புருடணுக்கு விந்துஸ்தானமாயுள்ள மேலைச் சிதம்பர நடன தரிசனத்தைக் காலமுனியும் காமதேனுவும் கருதியிருத்தலானும், நீயும் கோமுனியாய்த் திருப்பேரூரைச் சார்ந்திருப்பாயாயின் அங்கே வெள்ளியம்பலத்தில் திருநடனம் செய்து காட்டுவோம்" என்று விட்டுணுவுக்கு விடைகொடுத்தருளினார்.
உடனே விட்டுணு, கோமுனியாய் மவுரியுடுத்துச் சடைமுடி தரித்துத் திருநீறுங் கண்டிகையும் அணிந்து திருவைந்தெழுத்தைச் சிந்தித்துக் கொண்டு, ஆதிபுரியை அடுத்துக் காஞ்சி நதியில் விதிப்படி குளித்து, வெள்ளிமலை மீது சென்று சுவாமியையும் அம்மையையும் தரிசித்து, பின்னர் சிவபெருமான் திருக்கோயிலுக்குத் தென் திசையிலே தென் கைலாசமென்று திருநாமமிட்டு ஒராலயம் நியமித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து, சக்கரதீர்த்தம் என்ற பெயரால் ஒரு தீர்த்தம் அகழ்ந்து, அத்தீர்த்தத்தைச் சிவாகம
விதிப்படி சிவபூசை செய்து காலவ முனிவரோடு சிவயோகத்திலிருந்தனர்.
விதிப்படி சிவபூசை செய்து காலவ முனிவரோடு சிவயோகத்திலிருந்தனர்.
வட கைலாயப் படலம்
திருமால் தவம் புரியும் போது பிரம்மதேவர் நித்திரை நீங்கி நித்திய கருமங்களை நிறைவேற்றி உலகத்தைப் படைக்கத் தொடங்கிய நேரம். வேதங்களின் முறைமையை மறந்தமையால் அத்தொழில் கைகூடப் பெற்றிலர்.
"ஐயயோ" இதற்காகவோ சிவயோகம் பயிலும்போது துயில் உண்டாகியது.
இதனால் வருந்தி மத்திய கைலாச மலையைச் சார்ந்து தேவதேவரை வணங்கி இந்த சிறியேனின் பிழையைப் பொறுத்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார்.
அதற்கு மகாதேவர், "தென் கைலாசமாகிய "திருப்பேரூரிலே" அரசமர மூலத்தின் கண்ணதாகிய வெள்ளியம்பலத்திலே நமது தாண்டவத்தை வேண்டி விட்டுணு கோமுனிவனாகிக் காலவ முனிவனோடு தவம் செய்கின்றான்.
காமதேனு வழிபட்டமையால் நமக்குப் பட்டிநாதரென்னும் நாமதேயமுமுண்டு. ஆகையால் நீ பட்டி முனியாய் அத்தலத்தே சென்று பத்தி செய்வாயாகில் நமது நடனத்தையும் கண்ணுற்று எண்ணற்ற வரம் பெறலாம்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பிரமதேவர் உடனே விடைபெற்றுத் திருவைந்தெழுத்தைச் சிந்தித்துப் பட்டிமுனியாகித் தண்டம் கமண்டலங்களைத் தாங்கி, விபூதி உருத்திராட்சகங்களைத் தரித்துக் குழைந்த உள்ளத்தோடு தவசிபுரத்தைச் சார்ந்தார்.
காஞ்சிமா நதியில் மூழ்கிச் சிவபெருமானை வணங்கிப் பன்னீர் மரத்தடியிலே குடி கொண்டருளும் மூலலிங்க மூர்த்திக்கு உத்தரதிக்கிலே தமது கமண்டலத்தைத் தீர்த்தமாக இருத்திச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து நீராட்டி, அருச்சித்து வெள்ளியம்பலத்தையும் தரிசித்தார்.
இவ்வாறேயாயினும் செய்து காலவ முனிவர் கோமுனிவர் இருவருடனும் மருவியிருந்தார்கள் அப்போது....
காஞ்சி நதியின் வடதிசையில் முத்தியைத் தரத்தக்க ஒரு யாகம் வளர்த்துச் சிவபெருமான் திருவுளங் களிகூறும்படி முற்றுவித்தார்.
பிரம்மதேவர் செய்த ஆலயத்திற்கு வடகயிலை என்னும் தீர்த்தத்திற்குப் பிரமதீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும், யாக குண்டம் இருக்குமிடம் திருநீற்றுமேடு என்றும் வழங்குவதாகும்.
- கோவை கு. கருப்பசாமி
No comments:
Post a Comment