தென்னாடுடைய
சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி !!
இந்திய
தேசத்தின் பெருமை என்பது உலகுக்கே வழிகாட்டும் அதன் ஆன்மிகம்தான். இந்தியா முழுவதிலும் அமைந்துள்ள எண்ணற்ற புனித நதிகளும், பழம் பெரும் ஆலயங்களும் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களது உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து வழிநடத்தும் மகத்துவம் கொண்டவையாகத் திகழ்கின்றன.
அப்படி
மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள எல்லா புண்ணியத் தலங்களும், புனித நதிகளுமே புராதனப் பெருமை பெற்றவைதான் என்றாலும் இவற்றுள் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் விதமாக ஒட்டுமொத்த இந்துக்களின் இதயத்திலும் எண்ணத்திலும் ஆத்மாவிலும் உறைந்து பதிந்து கிடக்கும் புனிதத்தலங்களுள் முக்கியமான சிறப்புத் தலங்கள் இரண்டு.
ஒன்று
வடக்கே காசி ! இரண்டு, தெற்கே இராமேஸ்வரம் !
இந்துவாகப்
பிறந்த ஒவ்வொருவருடைய ஆசையும் கனவும் ஒன்றே ஒன்று தான் !
வாழ்நாளில்
ஒருமுறையாவது காசி, இராமேஸ்வர யாத்திரை மேற்கொள்ளவேண்டும் என்பது தான் அது !
வடக்கே
காசிக்கு எத்தனை புகழும் பெருமையும் சிறப்பும் உண்டோ அதற்கு இணையான புகழும் பெருமையும் சிறப்பும் தெற்கே இராமேஸ்வரத்துக்கும் உண்டு !
நமது
இந்தியப் பண்பாட்டின் சிறப்பு வாய்ந்த இதிகாசமான ராமாயணத்தில் உன்னதமாக இடம் பெற்ற முக்கியத் திருத்தலம் இராமேஸ்வரம்.
தென்னிந்தியாவில்
உள்ள ஒரே ஜோதிர் லிங்க ஸ்தலம்.
மூர்த்தி,
தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமை கொண்ட தலம்.
திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானசுவாமிகள் என்று நான்கு பெரும் ஞானிகளால் பாடப்பெற்ற சிறப்புடைய தலம். அனைத்திலும் மிக முக்கியமாக தேசியப் புண்ணியத் தலமாக உள்ள இராமேஸ்வரம், காசிக்கு நிகராகப் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தனை பெருமைக்குரியதான இராமேஸ்வரம் திருத்தலம் இந்தியாவில் தென்தமிழ் நாட்டின் கோடியில், ராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவில்
வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.
இராமேஸ்வரத்தின்
புகழுக்குக் காரணம் இங்குள்ள ராமநாத சுவாமி கோயில். சைவ வைணவ ஒற்றுமைக்கு பெரும் எடுத்துக்காட்டாக, ‘ஸ்ரீராம சிவமய க்ஷேத்ரம்’ என்று பக்தர்களால் போற்றப்படும் புனிதத் தலமான ராமேஸ்வரத்துக்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா ? அதற்கொரு இதிகாசக் கதை இருக்கிறது !
ராமனைப்
பிடித்த பிரம்மஹத்திதோஷம் ! ராம ராவண யுத்தத்தின் இறுதிநாள் போரில் கடைசியாக ராமன் தன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்து ராவணனுடைய பத்து தலைகளையும் கொய்து அவனுக்கு மோட்சம் அளித்தான். அநீதி அழிந்தது. அரக்கன் வீழ்ந்தான். தர்மம் தழைத்தது எல்லாம் சரிதான்.
ஆனால்
என்னதான் கொடியவன் ஆனாலும் விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையல்லவா ராவணன். எனவே ஒரு பிராமணனை சம்ஹாரம் செய்ததால், உண்டாகும் ‘பிரம்மஹத்தி தோஷம்’ ராமனை பற்றிக்கொண்டது.
அப்போது
அங்கு வந்த அகத்திய முனிவர் ‘இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்’ என்று சொல்ல, அதன்படி, தனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்வதற்காக சேதுக்கரையிலேயே சிவபூஜை நடத்தத் தீர்மானித்தான் ராமன்.
பூஜைக்கு
சிவலிங்கம் ஒன்று தேவையல்லவா ?
ராமன்
அனுமனை அழைத்து, ‘அனுமான்! நான் நடத்தப் போகும் பிரமஹத்தி தோஷம் போக்கும் பூஜைக்கு சிவலிங்கம் தேவைப்படுகிறது. ஆகவே நீ உடனே காசிக்குச்
சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் விஸ்வநாதப் பெருமானை வணங்கி அவரிடமிருந்து ஒரு சிவலிங்கத்தைப் பெற்று வா’ என்று கட்டளையிட்டான்.
அண்ணலின்
கட்டளைப்படி, ஆகாசமார்க்கமாக உடனே புறப்பட்டுப் போனான் அனுமன். அதேசமயம் அருகே மணலில் விளையாட்டாக சிவ லிங்கம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தாள் சீதை.
நேரம்
போய்க் கொண்டிருந்தது. அங்கதனும், ஜாம்பவானும் மற்றைய வானரங்களும் அங்குமிங்கும் ஓடி பூஜைக்கான மற்றைய அத்தனை பொருள்களையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டன. எல்லாம் தயார். சிவலிங்கம் மட்டும்தான் வரவேண்டும். எல்லோரும் அனுமன் வரும் திசையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஏனோ அனுமன் வர தாமதமாகிக்கொண்டேயிருந்தது.
பூஜைக்காகக்
குறிக்கப்பட்டிருந்த நேரமும் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தைத் தவறவிட்டால் ராமனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்வது இன்னும் சிலகாலம் தள்ளிப் போய்விடும். எல்லோரும் செய்வதறியாது திகைத்தார்கள். ராமன் கவலையுடன் யோசித்த போது அவனது கவனத்தில் சீதை விளையாட்டாக மணலில் செய்திருந்த சிவலிங்கம் கண்ணில்பட்டது.
ராமன்
ஒரு தீர்மானத்துக்கு வந்தான். சீதை மணலில் உருவாகி வைத்திருந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்து முறைப்படி முழு பூஜையைச் செய்து முடித்தான். அவன் பூஜையை முடிப்பதற்கும் அனுமன் காசி விஸ்வநாதர் அளித்த லிங்கத்தைக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
பரபரப்புடன்
வந்திறங்கிய அனுமான், ராமபிரானிடம், ‘பெருமானே, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவருக்கான பூஜாக்கிரமங்கள் முடிய நேரமாகிவிட்டது. அதன் பின்னரே விஸ்வநாதப் பெருமானிடம் கேட்டு இந்த லிங்கத்தைப் பெற்று வந்தேன். எனவேதான் நான் இங்கு வந்து சேருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது’என்று விளக்கமளித்தான்.
ஆனால்
என்ன விளக்கம் சொல்லித்தான் என்ன ? பூஜையை வேறு லிங்கத்தை வைத்து செய்து முடித்தாகி விட்டது என்பதை அங்கிருந்த அறிகுறிகளிலிருந்து அனுமன் கண்டுகொண்டான்.
முகம்
வாட்டமுற்றான். அனுமன் மனம் வாடிப் போனதை அவனது முகக் குறிப்பிலிருந்தே உணர்ந்தான் ராமன். பக்தர்களின் சிறு துன்பத்தையும் பொறுக்காதவன் அல்லவா ? எனவே அனுமனை ஏமாற்றத்தில் ஆழ்த்தாமல் அவன் கொண்டுவந்த லிங்கத்தை, ஏற்கெனவே பூஜை செய்து வழிபட்ட மணல் லிங்கத்துக்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்தான். பின்னர் அதற்கும் உரிய முறைப்படி வழிபாடு நடத்தி பூஜித்தான். அனுமனை சந்தோஷத்தில் ஆழ்த்தினான்.
முதலில்
பிரதிஷ்டை செய்த லிங்கம் ‘ராமலிங்கம்’ எனவும் அனுமன் கொண்டுவந்த லிங்கம் ‘காசி விசுவநாத லிங்கம்’ என்றும் அழைக்கப்படும் எனக் கூறிய ராமன், இந்திருத்தலத்தில் ‘முதல் பூஜை காசி விசுவநாதருக்குத்தான் செய்யப்படவேண்டும்’ என்றும் ஆணையிட்டான்.
இப்படியாக
ராமன் லிங்க வடிவில் ஈஸ்வரனுக்குப் பூஜை செய்த தலம் என்பதால் இந்தப் புனிதத் திருத்தலத் தீவுக்கு, ‘ராமேஸ்வரம்’ என்று பெயர் வந்தது.
- திருத்தல யாத்திரை வ(ள)ரும்..
No comments:
Post a Comment