ஆனால் மற்றவர்கள்? சுற்றமும், உடன் பிறப்பும், புதல்வர்களும் மடிந்து போனாற்களே... ஆனால் ஒருவனை மறந்து போகக்கூடாது. யார் அவன்? சூரனின் புதல்வன் இரண்யன்தான். தன் பிதா இறந்ததையும், ஆனால் சேவலும், மயிலுமாக செவ்வேளுக்கு அடிமைப்பட்டதையும் கண்டு கலங்கி விண்ணில் நின்று புலம்பினான்.
அவன் போரில் தப்பியோடி அனைவருக்கும் நீர்க்கடன் செய்யும் பொருட்டு கடலடியில் மீனாக வடிவெடுத்து வாழ்ந்தவன். வீரமகேந்திரபுரம் அழிந்து விட்டதைக் கண்டு அலறி நின்றான். தந்தை யார் சொல்லையும் கேட்காமல் இப்படி ஆனதை அவனால் தாங்க முடியவில்லை.
இதை கச்சியப்பரின் வாயிலாக நம் அறியலாம்.
“நன்றென் பதையுணராய் நானுரைத்த வாசகங்கள்
ஒன்றுஞ் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே?
பொன்னும் படிக்கோ பொருதாப் புரவலனே
என்றுனை இருந்திட நான் காண்பதுவே’
என்கிறார்.
தன் சொல்லைத் தந்தை கேட்கவில்லையே என்ற ஆதங்கமும், தந்தையை இனிக் காண முடியாதே என்ற துயரமும் போட்டி போட்டுக் கொண்டு புலம்புவதை இரண்யனின் மனநிலையில் காணலாம்.
“முன்பு உன் பக்கமாய் நின்று பொருது உயிரை இழக்காமல் ஒளிந்து உய்த யான் இன்று உனக்கு அன்புடையவன் போல் அழுகின்றேன். பழிக்கு ஆளானேன். புத்திரர்கள் தந்தைக்குச் செய்யும் கடமையினின்றும் நான் விலகினேன்’ என்று கூறியதுடன் நின்றானா? இல்லை, தந்தை சேவலும், மயிலுமாய் ஆனது அவனைப் பொறுத்தவரை சரியானது இல்லை.
அவனது புலம்பலைச் கச்சியப்பர் பாடலில் காண்போம்.
“ஆழியான் வேதன் அமரர்க்கு இறைமுதலோர்
வாழியான் என்று வழுத்தியிட வைகியந்
பூமியார் மேனிப் புராரிசிறுவன் தேரில்
கோழியாய் நின்று விலாவொடிய கூவுதியோ’
“ஓசையால் அண்டத்து உயிர்களெல்லாம் வந்திரைஞ்சும்
சேகையாய் மங்குந் திருந்தாள் கொண்டு உற்றிடு நீ
வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்
தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றாளோ’
தந்தை சூரன் பெற்ற பேறு பெரியதாக அந்த அசுர குமாரனுக்குத் தோன்றவில்லை. தந்தை குமரக் கடவுளுக்குக் கோழிக் கொடியாகவும், மயில் வாகனமாகவும் மாறிவிட்டதைத் தாங்க இயலவில்லை.
“நீ இறவாமல் மயிலுஞ் சேவலுமாகி இருப்பதால் நீர்க்கடன் செய்வதற்கும் பாக்கியஞ் செய்திலேன். என்னைப் பற்றி நீ யாது நினைக்கின்றாயோ?’ என்று தாங்க முடியாமல் கதறி அழுதான்.
“ஐயோ நான் இங்கே இருப்பதைக் கண்டு விட்டால் பூதங்கள் என்னைக் கொன்று சினம் தீர்த்துக் கொள்வார்கள்’ என்று முன்போல் கடலில் போய் ஒளிந்து கொண்டான்.
மற்றவர்களுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டுமே? அதனால் சுக்ரரை அழைத்துக் கொண்டு நீர்க்கடனை செய்து முடித்தான்.
“செல்வம்தான் துயரத்திற்கு வித்து’ என்ற ஞானோதயம் வந்தது.
அதனால் அவன் மனத்தில் வெறுப்பு மூண்டது. சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து முக்தி பெரும் பொருட்டு ஒரு புறம் போய்த் தவம் மேற்கொண்டான்.
வீரவாகுத் தேவரை வேலாயுதக் கடவுள் கனிவுடன் பார்த்தார். வீரவாகுத்தேவர் அன்புடன் ஆறுமுகக் கடவுளை வலம் வந்து வணங்கினார்.
“வீரவாகு, இந்திர குமாரணாகிய ஜயந்தனையும், தேவர்களையும் சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வருவாயாக!’ என்றருளினார்.
வடிவேல் இறைவனின் கட்டளையைச் சிரமேற் கொண்ட வீரவாகுத்தேவர், குமரப் பெருமானைத் துதித்து விடைபெற்றுச் சென்றார். சிறைச்சாலையை அடைந்தார்.
அவரைக் கண்ட தேவர்கள் அதிசயமடைந்தார்கள். கால்களில் பூட்டிய விலங்குகள் ஒடிய அஞ்சலித்தார்கள்.
“அண்ணலே, எம் அல்லல்களை அகற்றவே வந்தீரோ?’ என்று ஆரவாரித்தனர்.
“ஆறுமுகக் கடவுள் அயிற் படையால் சூரனை அடக்கிவிட்டார். அஞ்ச வேண்டாம் தேவர்களே’ என்ற வீரவாகுத் தேவர் கூறினார்.
அதைக் கேட்ட தேவர்கள் மகிழ்ந்தார்கள். ஆரவாரத்துடன் சிறையை விட்டு வெளியே வந்தார்கள். செருக்களத்தை அடைந்து குமரக் கடவுளை வலம் வந்து வணங்கிக் கண்ணீர் மல்கித் துதித்தார்கள்.
ஆறுமுகக் கடவள் அவர்களை அன்புடன் திருநோக்கம் புரிந்தார்.
“கொடியவனான சூரபத்மனின் சிறையில் பலகாலம் இருந்து அதிகத் துன்பத்தை அனுபவித்து வீட்டீர்கள். இனி துன்பம் இன்றி முன்போல் அமராவதி பட்டனத்தை அடைந்து இன்புற்றிருப்பீராக’ என்று அருளாசி வழங்கினார்.
சயந்தன் தன் தந்தையான இந்திரனை வணங்கினான். இந்திரன் தனது மகனை வாரி ஆரத் தழுவி மகிழ்ந்தான். “இனி நமக்கு எந்த துன்பமும் இல்லை. குமரக் கடவுளின் வேல் எல்லாவற்றையும் துடைத்து நம்மைக் காப்பாற்றிவிட்டது’ என்று உவகையுடன் கூறினான்.
குமரக் கடவுள் போரிலே இறந்த அனைத்துப் பூதங்களையும் மீண்டு வருமாறு அருள்புரிய, அனைவரும் உயிர்பெற்று எழுந்தார்கள். வந்து கூடி முருகப் பெருமானைத் துதித்தார்கள்.
தேவர்கள் இனி “உய்ந்தோம், உய்ந்தோம்’ என்று ஆரவாரித்தனர்.
வடிவேல் பெருமான் வருண பகவானை நோக்கி, “கொடிய சூரபத்மன் இருந்த இந்த மகேந்திரபுரியை ஊழிக் காலத்தில் பூமி அழிவது போல அழித்து விடுங்கள்’ என்று பணிந்து அருளினர்.
வருணன் அவருடைய ஆணையைச் சிரமேற் கொண்டான். வீர மகேந்திரபுரியை அங்குள்ள உயிர்களோடு கடலில் வைத்து அழுத்தினான். அரி அயனாதியருடன் அமரர்களும் லட்சத்து ஒன்பது வீரர்களும் துதி செய்து அருகில் வர, போர்க்களத்தை விட்டு நீங்கி இலங்கையையும், கடலையும் கடந்து சீரும் சிறப்புமிக்க திருச்செந்தில்பதியை வந்தடைந்தார்கள்.
குமரக் கடவுள் மயிலினின்று இறங்கி திருக்கோயிலினுள் புகுந்து தேவர்கள் துதிக்க அரதன அரியணை மேல் வீற்றிருந்து அருளினார். பயமின்றி பவனி வந்த கதிரவன் மேலைக் கடலில் கரைந்தான்.
தேவர்கள் முருகப் பெருமானின் உத்தரவு பெற்றுத் திருமஞ்சனம், நறுமலர்கள், சந்தனம், தூப, தீபம் முதலியவற்றை எடுத்துக் கொண்டனர். சிவபெருமான் உமையம்மையாருக்கு உபதேசித்த குமார தந்திர விதிப்படி அபிஷேக ஆராதனை செய்து குமரக் கடவுளை வழிபட்டார்கள்.
செந்தில் பெருமான் மனமகிழ்ந்து “வேண்டிய வரங்களைக் கேட்டு உய்மின்’ என்று திருவாக்கு அருளினார். சதா முருகப்பெருமானின் திருவடிகளையே தரிசிக்கும் பேறு பெற்ற அமரர்களுக்கு குறை ஏது!
“எம்பெருமானே, எங்களுக்கு ஒரு குறையுமில்லை. எமது உயிருள்ளவரை தங்கள் திருவடியை விட்டு நீங்காத பேற்றைத் தந்தருள்வீர்’ என்று கேட்டு இறைஞ்சி நின்றார்கள்.
தேவர்களாக இருந்தாலும் அங்கேயும் அவர்கள் புனித கைங்கர்யத்தையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதித்த விதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆறுமுக வள்ளல் அவ் வரத்தை அவர்களுக்கு வழங்கினார்.
கதிரவன் உதித்து கந்தவேளை தரிசிக்க வேகமாக வந்தான். அப்பொழுது குமரவேள், மயனை அழைத்தார். அவருக்கு சேவை புரிய காத்திருந்த மயன் ஓடி வந்து துதித்து நின்றான்.
“ஐயனே, தாங்கள் இட்ட பணியைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கந்தனின் கழலடியை வணங்கினான்.
“மயனே, இத்திருச்செந்திலம்பதியில் ஒரு பொற்கோயிலை அமைத்திடுக. அங்கே எமது தந்தையை பிரதிஷ்டை செய்து யான் பூஜிக்க விரும்புகிறேன். விதிமுறைப்படி அமைத்திடுக’ என்றார்.
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பது வேதவாக்கு. சிவபெருமானே குமரக் கடவுளாக வந்தவர். தமக்கும் குமரனுக்கும் பேதமில்லை என்பதே கந்தபுராணம் எடுத்துக் காட்டும் பேருண்மை சூரனை, வரம் தந்த தாமே அழிக்க முடியாது என்பதால் தாமே குமரனாகத் தம்மை நெற்றிக் கண்களிலிருந்து தோற்றுவித்துக் குமரனைப் பிறப்பித்தார்.
அந்த மகன் தந்தைக்கு ஆற்றும் கடமையை உலகுக்கு எடுத்துச் சொல்லுகிறார். எங்கே இருந்தாலும் தந்தையை பூஜிப்பது மகனின் கடமை என்று ஒரு மகனாக அறிவுறுத்துகிறார். தாம் தேவர்களின் அபிஷேக ஆராதனைகளை ஏற்றுக் கொண்டாலும் தந்தைக்குச் செய்யும் பூஜையை மறக்கவில்லை.
அதனால் மயனை அழைத்து தந்தையை பூஜிக்க சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்து நம்மை வழிபடுத்தினார்.
தந்தைக்கு மயன் அமைத்த கோயிலில் மனம் குளிரக் குளிர பூஜை செய்த குமரக் கடவுள் பிறகு செவ்வேள் செந்திலை விட்டுப் புறப்பட்டார். பரிவாரங்கள் தொடர மயில் வாகனத்தில் ஏறி மதுரைத் திருநகரின் மேற்திசையில் விளங்கும் திருப்பரங்குன்றத்தினை வந்தடைந்தார்.
அங்கே பராசர முனிவரின் புதல்வர்கள் அனைவரும் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்து கந்தரின் கழலடியைப் பணித்தனர். தேவர்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.
“சுவாமி, தேவரீர் இங்கு வீற்றிருந்தருள வேண்டும். இது ஓர் உயர்ந்த இடம்’ என்று கூறினர்.
அவர்களுடைய வேண்டுகோளை ஏற்ற முருகவேள், தேவதச்சனை அழைத்தார். தேவதச்சன் வந்து குமரப் பெருமானை வணங்கித் துதித்து நின்றான்.
“இந்த இடத்தில் பெரிய கோயிலையும் நகரத்தையும் அமைத்துத் தருவாய்’ என்று பணித்தருளினார்.
குமரக் கடவுளின் திருவுளக்குறிப்பை ஏற்ற தேசதச்சன் திருப்பரங்குன்றத்தில் அதி அற்புதமான ஆலயத்தை ஆறு முகத்தண்ணல் தங்குவதற்கு ஏற்ப அமைத்தான். எம்பெருமான் தேவர்களும், முனிவர்களும் தொழும்படி அபிஷேக ஆராதனைகளை ஏற்று அங்கே எழுந்தருளினார்.
அவருடைய திருவுளக் குறிப்பை இங்கு காண வேண்டும். அருகே மதுரை மாநகரம் உள்ளது. அங்கே அப்பன் ஆலவாய் அழகனாக அங்கையற்கண்ணி அம்மையாருடன் கோயில் கொண்ட நான்மாடக்கூடல். அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்த கூடல் மா நகர்.
முருகப் பெருமான் அம்மையப்பனின் நடுவே அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதை சோமஸ்கந்த மூர்த்தம் என்பார்கள். அடிக்கடி அம்மை அப்பனை தரிசிக்கும் நோக்கத்தில் கோயில் கொண்டுள்ளாரோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?
திருப்பரங்குன்றத்தில் பராசர முனிவரின் புதல்வர்களுக்கு ஞானோபதேசமும் செய்தார். பின் அவரவர் இருப்பிடத்திற்குச் செல்லும்படி பணித்தருளினார். இன்னும் ஒரு செயல் மீதி இருப்பதை உணர்ந்தார். தம்பி வீரவாகுவை நோக்கினார்.
வீரவாகுத் தேவர் அண்ணலின் திருவுருக் குறிப்பை அறிந்து வந்து வணங்கினார்.
“வீரவாகு, தேவேந்திரனின் பொன்னுலகை மீண்டும் பழையபடி கற்பக நகரமாக்க வேண்டும். அதில் மீண்டும் தேவேந்திரனும், தேவர்களும் குடியேற வேண்டும். தேவேந்திரனுக்கு அமராவதிப் பட்டினத்தை அளித்து முடி சூட்ட வேண்டும்’ என்றார்.
ஆறுமுகத்தண்ணலின் ஆணையை ஏற்று வீரவாகுத் தேவர், தேவதச்சனை அழைத்து அமராவதிப் பட்டணத்தை முன்போலவே பொன் நகரமாக ஆக்கித் தர வேண்டும் என்று குமரப் பெருமானின் திருவுளக் குறிப்பை உணர்த்தினார்.
பொன்னமராவதி நகர் மீண்டும் பொலிவுற்றது. தேவர்கள் சூழ இந்திரன் பொன்னமராவதிப் பட்டினத்தில் குடியேறினான். அவன் மனத்தில் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்தது. தன் பகைவனாகிய சூரபத்மனை சங்கரித்து பொன்னுலக அரசாட்சியைக் கொடுத்தருளிய கந்தவேளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
தேவேந்திரப் பட்டினத்தை அளிக்கலாமா! குமரக்கடவுள் குழந்தையாக இருந்து திருவிளையாடல் புரிந்த பொழுதே தேவர்கள் சேனாதிபதியாகப் பட்டம் கட்டியாகி விட்டது. இந்த தேவேந்திரப் பட்டணமே அவன் தேவேந்திரனுக்கு அளித்த சன்மானம். வேறு எதைக் கொடுப்பது?
“தேவேந்திரா, உன் மனத்தை ஏதோ பெரிய சஞ்சலம் அசைக்கிறது போல இருக்கிறதே’
“புரிந்து கொண்டீர்கள். சூரனை சம்ஹரித்துப் பொன்னமராவதியை மீட்டுக் கொடுத்தவருக்கு ஏதோனும் பரிசு தர வேண்டும்.’
“என்ன தரப்போகிறாய் தேவேந்திரா?’
“என் மகள் தெய்வானையை குமரக் கடவுளுக்குப் பரிசாகத் திருமணம் செய்து தரலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று தேவேந்திரன் கூறியதும், தேவர்கள் ஆரவாரம் செய்தார்கள்.
No comments:
Post a Comment