Saturday 29 October 2016

பரத நாட்டிய வரலாறு



ரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை "கூத்து" என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் அழைத்தனர். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.

கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் "கூத்தர்". அவர் தம் பெண்பாலார் " கூத்தியர்" இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர்.இவர்களது வாழ்க்கைப்பற்றி சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும்,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

அதேவேளை பரதம் என்ற சொல்,

ப -பாவம்,
ர - ராகம்,
த - தாளம்
என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.


பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும்

"ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும்,

"ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும்,

"த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது.




கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது.

ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.


இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.


அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம் ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார். இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.


பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பாரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர். இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்று கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது 'தாண்டவம்' என பெயர் பெற்றது.

பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினை பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது.


உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன...

No comments:

Post a Comment