Monday, 31 October 2016

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -3

வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால் நல்லவன் யாருக்கும் தீங்கு இழைக்காதவர் என்ற நற்பெயருடன் இருந்து வந்தார். அவனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு எதுவும் இல்லை என்பதினால் மனம் புழுகினான். அவனுடைய மனைவியும் வாழ்கையை வெறுத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்து தமது சந்தானங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டு துறவறம் போய் விடலாம் என முடிவு செய்தார்கள்.

ஆகவே ஒருநாள் அவர்கள் தமது வீட்டில் பெரிய பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் அந்த ஊரில் இருந்த பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து போஜனம் செய்விக்கச் சொன்னார்கள். அதன் பின் கணவனும் மனைவியும் சேர்ந்து அனைவரிடமும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுக் கொடுத்து அவற்றை விற்றும், வேறு ஏற்பாடு செய்து கொண்டும் சமமாக பங்கு செய்து கொள்ளுமாறு கூறினார்கள். திடீர் என அவர்கள் செய்ய முன்வந்த காரியத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பண்டிதர்கள் அதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டபோது அவர்களும் தமக்கு சந்ததியே இல்லை எனும்போது யாருக்காக அந்த சொத்துக்களையும் பூதம் காத்தப் புதையலைப் போல வைத்துக் கொண்டு வாழ்வது என்று மனம் வேதனை அடைந்து அந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார்கள்.

ஆனால் அந்தப் பண்டிதர்கள் அவர்களுடைய செல்வத்துக்கு ஆசைப்படாமல், அவர்களது நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்து போய் அவர்களிடம் தாம் அவர்களுக்காக புத்திரகாமேட்ஷி யாகம் செய்து தருவதாகவும், அதற்கான தானத்தை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என அந்த தம்பதியினருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்கு மகத்பேறு கிடைக்க படைக்கும் கடவுளான பிரும்மாவை வேண்டிக் கொண்டு புத்திரகாமேட்ஷி யாகம் செய்து வைத்தார்கள். அந்த யாகமும் நான் தசரத மன்னனுக்கு ராமாயணக் காலத்தில் செய்த புத்திரகாமேட்ஷி யாகம் போலவே நன்கு நடந்து முடிந்தது. என் மீது வைத்திருந்த மரியாதையினால், நான் செய்த யாகம் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து இருந்ததினால் யாக முடிவில் அந்த பண்டிதர்கள் எனக்கும் மானசீகமாக அர்கியம் அளித்தார்கள். பிரும்மாவும் அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு மகன் பிறக்க அருள் புரிந்தார். அந்த யாகம் முடிந்ததும் தமக்கு எப்படிப்பட்ட சந்தானம் கிடைக்கும் என அந்த தம்பதியினர் பண்டிதர்களிடம் கேட்டார்கள்.

அந்தப் பண்டிதர்களும் காண்டம் போட்டுப் பார்த்தப் பின் ஒரு அதிர்ச்சியான தகவலை அந்த தம்பதியினருக்கு கூறினார்கள். அந்த தம்பதியினருக்கு பிறக்க உள்ளது ஒரு ஆண் மகவே என்றும், ஆனால் அந்தப் பிள்ளை அவர்களைப் போல சாத்வீகமாக இல்லாமல் கொடும் தொழில் புரிந்து கொண்டு, குடும்ப கௌரவத்தை குலைப்பவனாகவே இருப்பான் என்று கூறியவுடன் அந்த தம்பதியினர் அதிர்ந்து போனார்கள். ஆனால் அதில் ஒரு ஆறுதலான விஷயம் என்ன என்றால் அப்படி தறுதலையாக இருக்கும் பிள்ளையை இருபது வயதில் பத்ரினாத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பத்ரினாதரை வழிபட்டால் அவன் மீண்டும் நல்ல வழியில் செல்வான் எனக் கூறினார்கள். அவர்களுக்கு நிறைய தானம் கொடுத்து அவர்களை அனுப்பினார்கள் .

காலம் ஓடியது. அந்த தம்பதியினருக்கு அழகிய குழந்தை பிறந்து வளர்ந்தது. அந்த மகன் பிரும்மாவை வேண்டிக் கொண்டு யாகம் செய்ததினால் பிறந்தக் குழந்தை என்பதினால் அவனுக்கு பிரும்மதத்தர் என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். மெல்ல மெல்ல வளரத் துவங்கிய குழந்தையும் நல்ல வழியிலேயே சென்று கொண்டு இருந்தது. வயதுக்கு வந்ததும் பிரும்மதத்தரும் தனது தந்தையைப் போலவே வியாபாரம் செய்யத் துவங்கி பெரும் பொருள் ஈட்டினார். ஆனால் திடீர் என அவருக்கு உலக இன்பங்களில் நாட்டம் அதிகரித்தது. பெண்கள் விஷயத்தில் தன்னை இழந்து, அவர்களிடம் ஏமார்ந்து போய் தான் சம்பாதித்த அத்தனை பொருளையும் இழந்தார். கையில் பணம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டார். அப்போது ஒருமுறை காட்டில் சென்று கொண்டு இருந்த யாத்ரீகர் ஒருவரை மரத்தின் மீது ஒளிந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்று விட்டு பொருட்களை திருடியபோது அவர் ஒரு பிராமணப் பண்டிதர் எனத் தெரிய வந்தது.



அது அவர் மனதை பெரிய அளவில் பாதித்தது. குற்ற உணர்வு அவரை வாட்டியது. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பிராமணர் குணத்தைப் போலவே குணம் கொண்டிருந்த வைசியர் அல்லவா? ஆகவே தான் கொள்ளை அட்சித்தப் பொருட்களை அந்த இறந்து போன பிராமணர் வீட்டிலேயே கொண்டு போய் தந்து விட்டு அவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பின்னர் தனது வீட்டிற்குச் சென்று தனது தந்தையின் கால்களில் விழுந்து அழுத பின் நடந்த அனைத்தையும் கூறினார். அவர் தந்தையும் அதைக் கேட்டு வருத்தம் அடைந்தாலும் ஒரு பிராமணரைக் கொன்று விட்ட பாவத்தினால் ஏற்பட்டு விட்ட பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொள்வது தனது மகனுக்கு அத்தியாவசமானது என்பதை உணர்ந்து கொண்டார். நடந்ததை நினைத்து கவலைப்படுவதை விட அதை விலக்கிக் கொள்ள உடனடியாக இமயமலை சாரலில் உள்ள பத்ரினாத்திற்குச் சென்று பத்ரினாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரைக் கூறினார்.

பிரும்மதத்தரும் தனது தந்தையின் அறிவுரைப்படி உடனடியாக பத்ரினாத்திற்கு கிளம்பிச் சென்றார். வழி நெடுக இருந்த அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பின் பத்ரினாத்தரை வணங்கி பூஜித்து சில காலம் அந்த ஆலயத்திலேயே தங்கி இருந்து அங்கு ஆலயத்திற்கு பணிவிடைகளை செய்து வந்தார். அவர் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த பத்ரினாதரும் அவர் கனவில் தோன்றி, அவர் செய்த பிழையை தான் மன்னித்து விட்டதினால் ஊருக்கு கிளம்பிச் சென்று அங்கு தமது நாம பஜனையை செய்து கொண்டு இருக்குமாறும், அவருக்கு மோட்ஷம் கிடைக்கும் என்றும் கூறினார். மறுநாள் காலை பிரும்மதத்தர் ஆலயத்துக்குச் சென்று பத்ரினாதரை வணங்கி விட்டு ஊருக்குக் கிளம்பச் செல்லத் துவங்கியபோது தான் கொன்று விட்ட அதே பிராமணரை அங்கு கண்டு வியந்து அவரை நோக்கி ஓடினார். அருகில் சென்றதும்தான் அதுவும் மாயையே என்றும், பத்ரி நாராயணரே தன்னைத் திருத்த அப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளார் என்பதும் புரிந்தது. அதன் பின் பல காலம் வாழ்ந்து வந்த பிரும்மத்தரும் மோட்ஷத்தை அடைந்தார்' என்று அந்தத் தலத்தின் மகிமைக் குறித்து வசிஷ்டர் அருந்ததிக்குக் கூறினார். 

                                                                                                                                    ............தொடரும் 

No comments:

Post a Comment