Monday, 31 October 2016

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -8

முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார். பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் பிருங்கி எனும் மாபெரும் முனிவரும் அங்கு வந்து இருந்தார். அவர் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார். சிவபெருமான் பார்வதிக்கு அனைவரும் பூஜை புனஸ்காரங்கள் செய்து முடித்தப் பின் அனைவரும் சிவபெருமான் மற்றும் பார்வதியை வழிபடத் துவங்க பிருகு முனிவர் மட்டும் சிவபெருமானை மட்டுமே வணங்கி விட்டு பார்வதியை வணங்காமல் சென்றார்.
அதற்கான காரணத்தை அந்த முனிவரிடம் கேட்டபோது பிருகுவும் சிவன் வேறு, பார்வதி வேறு என்று தான் கருதுவதால் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் தாம் வணங்குவதில்லை என்றும் கூற அதனால் கோபமுற்ற பார்வதியும் அவருக்கு சாபம் தந்தார். அது மட்டும் அல்ல அங்கிருந்து கோபமாக எழுந்து சென்று விட்டார். அவர் மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. சிவனுடன் சேர்ந்து பிரபஞ்சத்தையே படைத்த பராசக்தியான தன்னை புறங்கணித்து விட்டு சிவனை தனிக் கடவுளாகப் இந்த உலகம் பார்ப்பதை மாற்ற வேண்டும். சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள், இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும். சக்தி இல்லையெனில் சிவனும் இல்லை என்றும் சிவன் மற்றும் சக்தி என்ற இரண்டும் வெவேறு இல்லை. அவை இரண்டுமே ஒன்றிணைந்த ரூபம் ஆகும் என்ற உண்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

ஆகவே சிவபெருமானுக்கே சக்தி தரும் தனக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என எண்ணியபடி அங்கிருந்துக் கிளம்பிச் சென்றவள் நேராக கேதார்னாத்துக்கு வந்து அங்கிருந்த கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தில் சென்று அமர்ந்து கொண்டு கேதார கௌரி விரதத்தினை மேற்கொண்டு தவம் இருந்தாள். கேதாரம் என்பது இமயமலையின் ஒரு பகுதி ஆகும். இங்குதான் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் எனும் பெயரில் தோன்றினார். பார்வதி சிவனை வழிபட்டு அவர் கொடுத்த வரத்தின்படி அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தை பார்வதி பெற்றாள்.

இருபத்தி ஒரு நாட்கள் விரதம் இருந்து செய்ய வேண்டிய கௌரி விரதம் முழு பக்தியோடு செய்யப்பட்டால் கணவரிடம் இருந்து வேண்டியவைக் கிடைக்கும் அன்பது ஐதீகம். ஆகவே பார்வதி மேற்கொண்டு இருந்த விரதத்தில் மகிழ்ந்து போன சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டதும், பார்வதியும் தயங்காமல் அவருடைய உடலில் தானும் பாதி உடலாகி அவர் சக்தியிலும் பாதியாக வேண்டும். இனி உலகம் சிவசக்தி என்றே அவர்கள் இருவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று வரம் கேட்க சிவபெருமானும் தன்னுடன் அவளை பாதியாக இணைத்துக் கொண்டப் பின் சில காலம் பொறுத்து தக்க நேரத்தில் அந்த அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் அதுவரை பார்வதி பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கூற அவளும் மகிழ்வுற்றாள். அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் முதலில் திருவண்ணாமலை உண்ணாமலையார் ஆலயம் மற்றும் திருச்சங்கோடு அம்மையப்பர் ஆலயம் இரண்டிலும் நிகழ்ந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் தோன்றியது கேதார்னாத்தில்தான் என்றாலும் அந்த ரூபத்தில் முதன் முறையாக பக்தர்களுக்கு காட்சி தந்து வெளிப்பட்டது திருவண்ணாமலை மற்றும் அம்மையப்பர் ஆலயங்களில் என்பதே உண்மையான வரலாறு .



பார்வதியை தன்னுடன் பாதியாக இணைத்துக் கொள்வேன் என வாக்குறுதி கொடுத்தப் பின் பார்வதியும் சிவபெருமானும் அதே வனப்பகுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்கள். பொழுதைப் போக்க அவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார்கள். அந்தப் போட்டியில் ஒரு நிபந்தனையையும் வைத்துக் கொண்டார்கள். அதன்படி சிவபெருமான் அந்த வனப் பகுதியில் மறைந்து கொள்ள வேண்டும். மாலை சூரியன் மறைவதற்கு முன்னால் மறைந்து உள்ள அவரை பார்வதி அவரைக் கண்டு பிடிக்க வேண்டும். ஐந்து இடங்களில் மறைந்து இருக்கும் அவரை ஐந்து முறை பார்வதி கண்டு பிடித்து விட்டால் அவள் கேட்கும் வரத்தை அவர் அருள வேண்டும். ஆட்டம் துவங்கியது. சிவபெருமானும் பல இடங்களில் சென்று தனது உருவான லிங்க கற்களை வைத்து விட்டு அவற்றில் ஐந்தில் தான் ஒளிந்து கொண்டார். பல லிங்கங்கள் இருந்ததைக் கண்ட பார்வதி, அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏமார்ந்தாள்.



அவரைத் தேடித் தேடி அலைந்த பார்வதி ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தைக் கட்டிப் பிடிக்க அதில் அவர் உடலைத் தழுவியதைக் போன்ற உணர்வைப் பெற்றாள். அவள் கட்டிப் பிடித்தப் பகுதி அவருடைய உடல் பகுதியாக இருந்தது. இப்படியாக அவள் ஐந்து இடங்களில் இருந்த லிங்கங்களில் மறைந்து இருந்த சிவபெருமானைக் கட்டிப் பிடித்தபோது அவளது கைகளில் அவருடைய உடல், காது, கால், கைகள் மற்றும் வயிறு என அவருடைய உடல் அமைப்புக்கள் அகப்பட்டன. இப்படியாக அவற்றைக் கொண்டு அந்த ஐந்து இடங்களில் ஒளிந்து இருந்த சிவபெருமானை பார்வதி கண்டு பிடித்து ஆட்டத்தில் வெற்றி பெற்றாள் .

அந்த விளையாட்டு முடிந்தவுடன் பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள். எந்த ஐந்து இடங்களில் அவரை பார்வதி கண்டு பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டலோ அந்த இடங்கள் எல்லாம் பவித்ரமானதி விட்டன. ஆகவே பஞ்ச பூதங்களைப் போன்ற அவை ஐந்தும் சிவபெருமானின் புனித ஆலயங்களாக மாறி பக்தர்கள் பூஜிக்கும் இடங்களாக அமைய வேண்டும். அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் தக்க நேரத்தில் அந்த ஐந்து இடங்களிலும் எழுந்தருளுவேன் என்று அவளுக்கு வாக்குறுதி தந்தார். அதுவே கேதார்நாத்தில் பஞ்ச லிங்க ஆலயங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தன. ஆனால் அந்த ஆலயங்கள் ஐந்து இடங்களில் அமைந்தது எப்படி ?

........தொடரும் 

No comments:

Post a Comment