மூன்று உலகங்களையும் ஆளவேண்டும் என்று அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் ஒருகாலத்தில் போட்டி எழுந்தது.
தேவர்களுக்கு புரோகிதர் பிரகஸ்பதி; அசுரர்களுக்கு புரோகிதர் அறிவுக்கடலான சுக்ராச்சாரியார்.
இந்த இரண்டு பிராமணர்களின் பலத்தை சாதகமாக வைத்துக்கொண்டு அசுரர்களும், தேவர்களும் சண்டையிட்டனர்.
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி வித்தை அறிந்தவர் சுக்ராச்சாரியார். அதனால், யுத்தத்தில் இறந்த அசுரர்களையெல்லாம் திரும்பவும் உயிர்ப்பித்துக் கொண்டேயிருந்தார் சுக்ராச்சாரியார். இது தேவர்களுக்கு மிகுந்த பலவீனமாக இருந்தது. அதுபோன்ற சஞ்சீவினி வித்தை பிரகஸ்பதிக்கு தெரியாது. தேவர்கள் எல்லாரும் பிரகஸ்பதியின் மகனான கசன் மகரிஷியிடம் சென்று முறையிட்டனர்.
""கசன் மகிரிஷியே! நீர் இளமையும், அழகும் நிரம்பப்பெற்றவர். நாங்கள் படும் துயரத்தைப்பாருங்கள். எங்களைக் காப்பாற்ற உங்கள் ஒருவரால் தான் முடியும். நீர் சுக்ராச்சாரியாரிடம் பிரம்மச்சாரியாக சேர்ந்து பணிவிடைகள் செய்து, அவரது நம்பிக்கையை முதலில் பெறவேண்டும். பின்பு அவரது மகள் தேவயானியின் அன்பைப்பெற்று சுக்ராச்சாரியாரின் சஞ்சீவினி வித்தையை எப்படியாவது கற்றுக்கொண்டு வரவேண்டும்!''
கசன் மகரிஷி அதைக் கேட்டு சரியென்று ஒப்புக்கொண்டார். நேராக சுக்ராச்சாரியாரிடம் சென்றார்.
""நான் அங்கிரஸ் ரிஷியின் பேரன் பிரகஸ்பதியின் புதல்வன். கசன் என்பது எனது பெயர். என்னை தாங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தங்களிடம் பிரம்மச்சர்ய பணிவிடை செய்ய விரும்புகிறேன்!'' என்றார்.
சுக்ராச்சாரியாரும் அதற்கு ஒப்புக்கொண்டு அவரை சீடனாக சேர்த்துக்கொண்டார். குருவுக்கும் அவரது புதல்வியான தேவயானிக்கும் கசன் மகரிஷி அனைத்துப் பணிவிடைகளையும் செய்துவந்தார்.
தேவயானியும் அவர்மீது மிகுந்த அன்புகொண்டாள். ஆனால், கசன் பிரம்மச்சர்ய விரதம் தவறாது காத்துவந்தார்.
கசன், சுக்ராச்சாரியாரின் சீடனாக இருப்பதை அசுரர்கள் தெரிந்துகொண்டனர். பிறகென்ன வந்தது ஆபத்து, அவன் நிச்சயம் தங்கள் குருவிடமிருந்த சஞ்சீவினி வித்தையை அபகரித்துக் கொண்டு சென்றுவிடுவான் என்று பயந்தனர்.
ஒருநாள் காட்டில் குருவின் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தார் கசன். அப்போது அசரர்கள் கசனை துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்கு இரையாகப் போட்டுவிட்டனர்.
அன்றைக்கு சுக்ராச்சிரியாரது பசுக்கள் மிகுந்த தாமதமாக ஆசிரமத்துக்கு வந்தன. ஆனால், கசன் வராததுகண்டு தேவயானிக்கு சந்தேகம் வந்தது.
உடனே தன்னுடைய தந்தையிடம் சென்று முறையிட்டாள்.
""தந்தையே! சூரியன் அஸ்தமித்து இத்தனை நாழி ஆகியபின்பு பசுக்கூட்டம் மந்தையிலிருந்து திரும்பியுள்ளன. கசனைக் காணவில்லை. ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது. கசனில்லாமல் நான் உயிர் வாழ முடியாது. எப்படியாவது அவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று தேவயானி கண்ணீர் விட்டாள்.
சுக்ராச்சாரியார் தமது மகள் தேவயானி கசன்மீது வைத்துள்ள அன்பைப் புரிந்துகொண்டார். கசனை உயிர்ப்பிக்க சஞ்சீடினி வித்தை பிரயோகித்து இறந்து போனவனை, ""வா!'' என்று அழைத்தார்.
அவர் அப்படி அழைத்ததுதான் தாமதம். நாய்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிப்பட்டு உயிர்பெற்று குருவின் முன்பாக வந்து நின்றார்.
""கசனே! நடந்ததென்ன, விபரமாகக் கூறு!'' என்று கேட்டதும் கசன் சொன்னார்.
""நான் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அசுரர்கள் வந்து, "நீ யார்?' என்று கேட்டனர். நான் பிரகஸ்பதியின் புதல்வன் என்று கூறினேன். உடனே அவர்கள் என்னை வெட்டிக் கொன்றுவிட்டனர்.''
ஆனால், கசன் உயிர்பிழைத்தது அசுரர்களுக்கு தெரிந்துவிட்டது. அவரை எப்படியும் கொன்றவிடுவதற்கு காத்திருந்தனர்.
கசன் தேவயானிக்காக புஷ்பம் பறிக்க நந்தவனம் வந்தார். அப்போது அசுரர்கள் அவரைப்பிடித்து கொன்று, அவரை அரைத்து சமுத்திர ஜலத்தில் கரைத்துவிட்டனர்.
கசனைக்காணாது வருந்திய தேவயானி தந்தையிடம் கூறினாள். திரும்பவும் சுக்ராச்சாரியார் சஞ்சீவினி வித்தையைப் பிரயோகித்து கசனை உயிர்பெற்று வரச்செய்தார்.
ஆனால், அசுரர்கள் கசனை எப்படியும் கொல்லாமல் விடுவதாக இல்லை. இப்போது அவர்கள் ஒரு தந்திரம் செய்தனர். கசனைக் கொன்று சுட்டு சாம்பலாக்கினர். அந்த சாம்பலை மதுபானத்தில் கலக்கி சுக்ராச்சாரியாருக்கே கொடுத்துவிட்டனர். மதுமோகத்தில் சுக்ராச்சாரியார் அதனைக் குடித்துவிட்டார். தேவயானியோ, ""கசன் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழமுடியாது!'' என்று வேண்டினாள்.
மீண்டும் சஞ்சீவினி வித்தையை பிரயோகித்து சுக்ராச்சாரியார் கசனை வா என்று அழைத்தார்.
""பகவானே! என்னை அனுக்கிரகிப்பீராக!''' என்று சுக்ராச்சாரியாரின் வயிற்றுக்குள்ளிருந்து சொன்னார் கசன்.
""கசனே! நீ எப்படி என் வயிற்றுக்குள் வந்தாய்... ஓ இது அசுரர்களின் வேலையா? நான் விரைவில் அசுரர்களை அழிப்பேன்!'' என்று கோபமாக குரு சத்தமிட்டார்.
மகானுபாவரும் அறிவிற் சிறந்த மதியுடையவரும் மதுபான மோகத்தினால் எப்படி ஏமாந்துவிட்டார்கள் பார்த்தீர்களா?
இப்போது சுக்ராச்சாரியார் மகளைப்பார்த்தார்.
""மகளே! உன்னுடைய கசன் வேறெங்குமில்லை. இப்போது என் வயிற்றில்தான் இருக்கிறான். இப்போது நான் சஞ்சீவினி வித்தையை பிரயோகம் செய்தால் அவன் உயிர்பெற்று திரும்புவான். ஆனால், நான் இறந்துவிடுவேன். அப்படியே செய்யட்டுமா?'' என்று கேட்டார்.
""ஐயோ தந்தையே! கசன் இல்லாவிட்டால் நான் உயிர்விடுவேன். கசன் உயிர் பெற்றால் நீங்கள் உயிர்விடுவீர்கள். இருவரும் இல்லாமல் நான் உயிர்வாழமாட்டேன்,'' என்றாள் தேவயானி.
சுக்ராச்சாரியார் சிந்தித்துப்பார்த்தார். அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
""கசன் மகரிஷியே நீ காரியசித்தி அடைந்துவிட்டாய். நீ தீர்மானித்திருந்த காரியம் உனக்கு கைகூடும் நேரம் வந்துவிட்டது. தேவயானிக்காக நான் உன்னை உயிருடன் வெளிக்கொணர வேண்டும். நானும் சாகாமல் இருக்கவேண்டும். அதற்கு ஒன்றுதான் வழி. அந்த சஞ்சீவினி வித்தையை உனக்கு உபதேசம் செய்கிறேன். நீ என் வயிற்றைப் பிளந்துகொண்டு வெளியே வந்துவிடு. நான் இறந்துபோவேன். பிறகு நீ அந்த சஞ்சீவினி வித்தையைப் பிரயோகித்து என்னை உயிர்ப்பித்து தேவயானியின் துக்கத்தைப் போக்கிவிடு!'' என்று கூறியபடி சஞ்சீவினி வித்தையை உபதேசித்தார்.
அதன்படியே கசன் சுக்ராச்சாரியார் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தபின் சஞ்சீவினி வித்தையைப் பிரயோகித்து குருவை உயிர்ப்பித்தார்.
இப்போது கசன் சுக்ராச்சாரியாரைப் பார்த்து, ""விதையறியாதவனுக்கு வித்தையைத் தந்த ஆசிரியர் தந்தையாவார். அதுமட்டுமின்றி நான் உம்முடைய வயிற்றிலிருந்து சிசுவாக வெளிவந்திருக்கிறேன். ஆகையால், நீரே எனக்கு தாயுமாவீர்!'' என்று கூறி வணங்கினார்.
கசன் மகரிஷி அதன்பின் பல காலம் குருவுக்கு பணிவிடைசெய்து தேலோகம் போக விடைபெறும்போது தேவயானி வந்தாள்.
""அங்கிரஸ் புத்திரனே! உமது பிரம்மச்சர்ய விரதம் யாவும் முடிந்துவிட்டது. உம்மீது அன்றும் நான் அன்பு பூண்டிருந்தேன். இன்றும் அன்பு கொண்டுள்ளேன். என்னை நீர் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!'' என்றாள்.
""குற்றமற்ற பெண்ணே! குருபுத்திரியாகிய நீ தருமத்தின்படி பூஜிக்கத்தக்கவள். மேலும் உனது தந்தையின் வயிற்றிலிருந்து உயிர்பெற்றவன் நான். ஆகையால், நான் உனக்கு சகோதரன் ஆகிவிட்டேன். சகோதரியாகிய நீ என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுவது தகாது!'' என்றார் கசன் மகரிஷி.
""நீ பிரகஸ்பதியின் புத்திரன். என் தந்தையின் புத்திரன் அல்ல. உன் மீது கொண்டுள்ள காதலால்தான் உன்னை பல முறை உயிர்ப்பிக்க நான் காரணமாயிருந்தேன். ஆகையால், நீ என்னை கைவிடுவது தகாது!'' என்று எவ்வளவோ வேண்டியும் கசன் மகரிஷி மறுத்துவிட்டு தேவலோகம் சென்றுவிட்டார்.
No comments:
Post a Comment