Saturday 29 October 2016

ஆறுபடை வீடும் ஒரு படை வீடாய்

சூரபத்மனின் வதத்திற்கென்றே தோன்றியவன் முருகப் பெருமான். எனினும் அவன் அரங்கேற்றிய ஞானத் திருவிளையாடல்கள் எண்ணற்றவை. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து, அவனை சேவலாகவும் மயிலாகவும் ஏற்று என்றென்றும் தன்னுடனேயே வைத்துக்கொண்ட அளப்பரிய கருணையை என் சொல்வது?.





பிரணவப் பொருளறியான் படைப்புக் கடவுளா என வெகுண்டு, பிரம்மனை சிறையிலடைத்து, "உமக்கு பொருள் தெரியுமா?" என கேட்ட தந்தைக்கே குருவான சுவாமி நாதனைப் புகழ சொற்களேது! அகத்தியர் தமிழ் தந்தாரென்பர். அவருக்குத் தமிழ் தந்தவன் முருகன். பொதிகை மலையில் அகத்தியர் தவம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில் தெய்வீக மணம் வீசியது. எதிலிருந்து அந்த மணம் வருகிறதென்று அறியாத அகத்தியர் முருகப்பெருமானை பிரார்த்திக்க, அவனருளால் அது தெய்வத் தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்தார். ஆறுமுகனையே ஆசானாகக் கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணம் செய்து தமிழை வளர்த்தார். முருகப்பெருமான் செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுத்தான் என்றும்; அதை அகத்தியர் பாண்டியனுக்கு வழங்கினாரென்றும் திருநெல்வேலித் தலபுராணம் கூறுகிறது.


சிவபூஜை செய்யும்போது சித்தத்தை வேறிடம் செல்ல விட்டார் நக்கீரர். அதனால் சிறைப்பட்டார். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருளால் விடுபட்டார். ஔவைக்கும் முருகனுக்கும் நடந்த தமிழ் விளையாட்டு நாடறிந்த ஒன்று. "சும்மா இரு" என்று அருணகிரிக்கு உபதேசித்து, அவரை திருப்புகழ் அருளச் செய்து நீடுபுகழ் வழங்கியவன் முருகன்.


கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "திகடச் சக்கர" என அடியெடுத்துக் கொடுத்து, அதற்கு விளக்கம் சொல்ல தானே புலவனாக வந்து கந்தபுராணத்தை அரங்கேறச் செய்ய அருளியவன் முருகன். குமரகுருபரர், தேவராய சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் என பலருக்கு அருளி தரிசனம் தந்தவன் முருகன்.


இவ்வாறு பக்தர்கள் பலருக்கு ஞானம் தந்த வேலவன், வேண்டுவோர் வினை தீர்த்து வாழ வைக்கும் வள்ளலாகவும் திகழ்கிறான். அவன் கோவில் கொண்டுள்ள இடங்ளெல்லாம் அருள் மன்றங்களே! அத்தகைய சிறப்புமிக்க முருகன் தலங்களில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ஆகிய ஆறு படைவீடுகள் தனித்தன்மை வாய்ந்தவையாக சிறப்பிக்கப்படுகின்றன. இந்த தலங்களைச் சென்று ஒருமுறையேனும் தரிசித்து வரவேண்டியது முருக பக்தர்களின் கடமையாகும்.


அந்த ஆறுபடைவீடு முருகப் பெருமான்களையும் ஒரே இடத்தில் காணும் ஆவல் எல்லாருக்குமே இருக்குமல்லவா? அந்த ஆவலைப் பூர்த்தி செய்து ஆத்ம சுகம் தருகிறது - சென்னை பெசன்ட் நகரில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறுபடை முருகன் கோவில். மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம் செந்தூரைப்போலவே கடற்கரையையொட்டி அமைந்துள்ள விதம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.


கானாடுகாத்தான் என்னும் ஊரைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், அருணாச்சல செட்டியார் என்னும் சகோதரர்களின் அரிய முயற்சி யால் 1983-ஆம் ஆண்டு இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முதலில் அமைக்கப்பட்டது சுவாமிமலை முருகன் சந்நிதியாகும். பின்னர் மற்ற படைவீட்டு சந்நிதிகள் ஒவ்வொன்றாக அமைக்கப்பெற்றன.


ஒரே கடவுளுக்கு பல உருவங்கள் ஏன்? ஒரு மனிதன் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறக்கிறான். பின்னர் உடன் பிறந்தோருக்கு அண்ணனாகிறான்; தம்பியாகிறான். அவனே ஒரு பெண்ணுக்கு கணவனாகிறான். பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். உறவுகளுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமன், மைத்துனன் என பல உறவுகளாகிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவனே. அதுபோலவே நம் ஆத்ம திருப்திக்கு இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். மனநிம்மதி பெறுகிறோம். இத்தகைய நிம்மதியை - மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது இந்த அறுபடை முருகன் ஆலயம்.


ட்ரஸ்ட் ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்படும் இவ்வாலயம், அறங்காவலரான திருமதி அலமேலு ஆச்சி அவர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அறுபடை முருகன் திருவுருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் அற்புதமாக விளங்குகின்றன. இங்கு குடிகொண்டுள்ள விநாயகர் வேலை வாய்ப்பிற்கும் வரம் நல்குபவர்.


தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த மன அமைதியைத் தருவதாய் விளங்குகிறது இவ்வாலயம். பக்தர்களுக்கு முதலில் சோதனைகள் வரலாம்; துன்பங்கள் தொடரலாம். ஆனால், "நீயே சகலமும், உன் பாதமே அடைக்கலம்" என்று சரணடைந்துவிட்டால், நம்மைப் பற்றியுள்ள இடர்களனைத்தும் இல்லாமல் போய்விடும். துயரங்கள் தொலைதூரம் ஓடும். நோயற்ற வாழ்வு, சகல சௌபாக்கியங்கள், மணப்பேறு, மகப்பேறு என எல்லாம் அள்ளித்தரும்- ஓரிடத்தில் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டு முருகனை வணங்கி திருவருள் பெறுவோம்!.

நன்றி : சித்ரலேகா


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment