Sunday 16 October 2016

திருப்போரூர் முருகன் ஆலயம்

அசுரர்களை எதிர்த்து திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருச்செந்தூர் ஆகிய மூன்று தலங்களில் முருகப்பெருமான் போரிட்டார். இவற்றில் அசுரர்களின் கன்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு முருகப்பெருமான் திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் ஆகும்.



சென்னையில் இருந்து நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டைத் தாண்டி உள்ளதே திருப்போரூர் முருகன் ஆலயம். அது பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். அதில் உள்ள முருகனின் சிலை ஸ்வயம்புவாம். அந்த ஆலயத்துக்கு செல்ல நல்ல பாதை உள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது. அது குறித்துப் பல கிராமியக் கதைகள் நிலவுகின்றன. 

சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1645 ஆம் ஆண்டு வாக்கில் அந்த இடத்தின் அருகில் இருந்த கிராமத்தில் சிதம்பர ஸ்வாமிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மதுரை மீனாஷி தேவியின் பக்தர். ஒரு நாள் தேவி அவர் கனவில் வந்து திருப்போரூரில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டாள். ஆனால் சுவாமிகளோ அந்த தேவி தன் முன்னால் வந்து தனக்கு தரிசனம் கொடுத்தால்தான் அதை செய்வேன் எனப் பிடிவாதமாக அவளைக் காண வேண்டும் என சாப்பிடாமலேயே விரதம் இருந்தார். ஆகவே ஒரு நாள் அவர் முன்னால் மீனாஷி தேவி தோன்றி அவர் தலையை தொட்டு ஆசி கூறினாள். அவரும் அதன் பின் திருப்போரூர் பகுதிக்கு கிளம்பிச் சென்றார். அந்த இடம் அப்போது அடர்ந்த காடாக இருந்தது. போக்குவரத்து வழிகூட இல்லை. ஆனாலும் தனக்கு மதுரை மீனாஷி கட்டளை இட்டபடி அவள் கூறி இருந்த இடத்தை அடைந்தபோது எந்த இடத்தில் ஆலயத்தை அமைப்பது எனக் குழம்பி நின்றார். அப்போது முருகப் பெருமானே ஒரு சிறிய பையனாக அவர் முன் வந்து எந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என அவரை அழைத்து சென்று காட்டியப் பின் மறைந்து விட்டார். அப்போது அங்கு ஒரு புற்று இருந்ததைக் கண்டார். அந்தப் புற்றை விலக்கியபோது அதனுள் வள்ளி, தேவயானை சமேத முருகன் சிலை கிடைத்ததாகவும் அதுவே தற்பொழுதைய திருப்போரூர் ஆலயத்தில் உள்ள சிலை எனவும் நம்புகிறார்கள்.
 அது மட்டும் அல்ல , அந்த இடம் அப்போது ஒரு முஸ்லிம் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அவருடைய மகளுக்கு தீராத வியாதி இருந்தது. மன்னரது ஆஸ்தான பண்டிதர்கள் அந்த மன்னனிடம் சிதம்பர சுவாமிகளை சென்று பார்த்து அவரை வணங்கினால் அவரால் அதை குணப்படுத்த முடியும் என்று கூற அந்த மன்னனும் அவரிடம் சென்று தனது மகளின் நோயை குணப்படுத்துமாறு கேட்க அவரும் முருகனை வேண்டிக் கொண்டு அந்த மன்னனின் மகளை பூரண குணப்படுத்தினார். அதனால் மனம் மகிழ்ந்த அந்த மன்னனும் ஆலயம் அமைக்க நிலமும் தந்து மற்ற உதவிகளும் செய்துள்ளதாக ஒரு கதை உள்ளது.
அங்கு முருகப் பெருமான் வந்தது எப்படி? சூரபத்மனை வதம் செய்தப் பின் முருகன் அந்த அசுரனின் மற்ற அசுரர்களை துரத்தி வந்து திருப்போரூரில் வதம் செய்தாராம். அதனால்தான் திரு என்ற முருகன் போர் புரிந்த இடம் என்பதினால் அது திருப்போரூர் என ஆயிற்றாம். மேலும் அந்த இடத்தில் வள்ளியும் தேவயானியும் அசுரனோடு முருகன் யுத்தம் செய்தபோது தேவர்களைக் காத்து நின்றார்களாம். அங்குதான் முருகனும் வள்ளியும் சேர்ந்து அகஸ்தியருக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை போதித்தார்களாம். மேலும் கான்வ முனிவரின் சாபத்தைப் பெற்ற விஷ்ணு பகவான் தனது மனைவி லஷ்மியுடன் அங்கு வந்து சிவபெருமானை துதித்து சாப விமோசனம் பெற்றாராம். அங்குதான் சிவபெருமான் தமது குடும்பத்தினருடன் வான்மிகநாதர் என்ற பெயரில் வசிக்கின்றாராம் . அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குளத்து நீர் முருகப் பெருமானின் ஏற்பட்டது என்கிறார்கள்.
ஆலயத்தில் முருகனின் பல வகைகளான சிலைகளும் உள்ளன. போர்புரிபவரைப் போலவும் குழந்தை வடிவிலும் அவர் காட்சி தருகிறார். அந்த ஆலயத்தில் உள்ள பனை மரத்தின் அடியில் உள்ள எறும்புப் புற்றின் அருகில் வள்ளி சமேத முருகப் பெருமான் தேவயானையுடனும் இருந்தவாறு காட்சி தருகிறார்.


கந்தசுவாமி திருக்கோவில்


அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களின் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மினாட்சி சொக்கநாதரை அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

மீனாட்சி அம்பாள்

ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.

மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

கோவில் கட்டும் பணி

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை திருப்பணிக்காக வைத்திருந்த பொருட்களை திருடர்கள் கவர முயற்சிக்க, அவர்கள் பார்வை இழந்து வருந்தினர். சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்ற கள்வர்கள், தாங்கள் வைத்திருந்த பொன், பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

கோவிலுக்கு நிலம் தானம்


அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வள்ளி– தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார்.

உபதேச மூர்த்தி

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும். இந்த உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

கோவில் அமைப்பு


ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.


நலம் தரும் ஸ்ரீசக்கரம்

கோவில் உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டு, எழுந்தருளச் செய்துள்ளனர். கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இந்தச்சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய்தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிட்டும்.

No comments:

Post a Comment