சுக்ராச்சாரியார்
பிருகு மகரிஷியின் மகனாக தோன்றியவர் பார்கவன் என்னும் சுக்ரன். அசுரர்களுக்கு குருவாக விளங்கும் சுக்ரன், காசிக்கு சென்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டார். அவர் முன்னே சிவபெருமான் காட்சியளித்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும், ‘அமிர்த சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசித்தார்.
இதனால் சுக்ரனின் சக்தி கூடியது. இதை அறிந்த அசுரர்கள் அவரை தங்களது குல குருவாக ஏற்றுக்கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும் போது அசுரர்கள் செத்து மடிவார்கள். உடனே அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்து அவர்களை உயிர்ப்பிழைக்கச் செய்வார் சுக்ராச்சாரியார். வெண்மையான நிறம் கொண்டவர் என்பதால் அவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் சுக்ரன், யோகக்காரகராக உள்ளார். சுக்ர திசை இருபது ஆண்டுகள். அந்த காலத்தில் ஒருவரை, சுக்ரன் கோடீஸ்வரனாகவும், புகழ் பெற்றவராகவும் ஆக்கிவிடுவார்.
கண் பார்வை...
மகாபலி சக்கரவர்த்தியிடம், திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்டார். அப்போது சுக்கிராச்சாரியார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை தடுத்தார். ஆனால் மகாபலி சக்கரவர்த்தி கேட்காமல், நீர்வார்த்துக் கொடுக்க முயன்றபோது, நீர்வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்ரன் வண்டாக உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக் கொண்டார்.
இதனை அறிந்த திருமால், தர்ப்பை ஒன்றை எடுத்து கெண்டியின் மூக்கினுள் குத்தினார். அது சுக்ரனின் ஒரு கண்ணில் குத்தி, அவரது பார்வை பறிபோனது. மீண்டும் பார்வை கிடைக்க வேண்டி, சுக்ரன், மயிலாப்பூர் திருத்தலத்தில் குருந்த மரத்து அடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தார். இதையடுத்து சிவபெருமான் தோன்றி, சுக்ரனுக்கு மீண்டும் இழந்த கண் பார்வையை கொடுத்தார்.
வெள்ளீச்சரம்
சுக்ரனுக்கு வெள்ளி என்ற பெயர் உள்ளதால், வெள்ளிக்கு வரம் தந்த ஈசன், ‘வெள்ளீஸ்வரர்’என்றும் வெள்ளி பார்வை பெற்ற தலம், ஆதலால் வெள்ளீச்சரம் என்றும் பெயர் பெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் கோவிலின் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி, ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வெள்ளீச்சரம் திகழ்கிறது.
கோவிலுக்குள் நுழைந்ததும் சித்தி புத்தி விநாயகர், செல்வ விநாயகர் காட்சி தருகின்றனர். கோவிலின் ஆதிமூர்த்தி விநாயகரே ஆவார். இவர் தான் சுக்ரன் மீண்டும் பார்வை பெற, சிவலிங்க பூஜை செய்ய இத்தல குருந்த மரத்தடியை காட்டியருளியுள்ளார். சங்கடஹர சதுர்த்தி நாளில் முக்கூட்டு எண்ணெய் (சம அளவு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய்) ஊற்றி தீபமேற்றி விநாயகரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்தடையும்.
சரும நோய் நீங்கும்
கருவறையில் மூலவராக வெள்ளிக்கு அருள்புரிந்த வெள்ளீஸ்வரர் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். வெள்ளீஸ்வரர் உடனுறை சக்தியாக தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார்.
அம்மன் கருவறையின் பின்புறம் அருணகிரிநாதர், வீரபாகு வாசலில் இருக்க, தனிச் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு தனிக்கொடி மரம் தங்க தகட்டால் வேயப்பட்டு உள்ளது. கொடி மரம் அருகே முருகனை தியானித்து உப்பு, மிளகு வாங்கி செலுத்தினால் சரும நோய்கள், புற்று நோய் அகல்கிறது.
வராகி அம்மன்
உள் பிரகாரத்தில் சப்த கன்னியர்களில் வைஷ்ணவிக்கு தனி சன்னிதி உள்ளது. எதிரே கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் காட்சியளிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள தெற்கு பார்த்த தட்சிணாமூர்த்திக்கு எதிரில் வராகி அம்மனும், சாமுண்டியும் உள்ளனர். இத்தல வராகி அம்மனை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலங்களிலோ அல்லது அந்திசாயும் பொழுதிலோ நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்தால் ஏவல், பில்லி, சூனியம், தடங்கல்கள் முதலியவை அகலும்.
வெள்ளீஸ்வரர் கருவறை கோஷ்டத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவரை, மாத சிவராத்திரி நாட்களில் 5 தீபமேற்றி சிவபுராணம் பாராயணம் செய்தால், மனக் கோளாறு, மனச் சஞ்சலங்கள் அகன்று விடும். இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னிதியை அடுத்துள்ள பெரிய சன்னிதியில் பிரம்மா, வாமனர், மகாபலி சக்கரவர்த்தி, சுக்ரன், ஒட்டக்கூத்தர், வள்ளி– தெய்வானை– முருகர் ஆகிய கோவில் உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. அடுத்ததாக காலபைரவர் சன்னிதி அமைந்துள்ளது.
சுக்ரேஸ்வரர்
இக்கோவிலில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் அமைந்திருக்க, சுக்கிராச்சாரியார் வணங்கிய நிலையில் சிவலிங்க வடிவில் சுக்ரேஸ்வரர் காட்சி தருகிறார். இவ்விடத்தில்தான் சுக்ரன் சிவனை வழிபட்டு தன் கண்பார்வையை மீண்டும் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபடுபவர்களுக்கு கண் குறைபாடு நீங்கும் வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment