காசிப முனிவருக்கும் மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகிய அசுரர்கள். இந்த அசுரர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி அரிய பல வரங்களைப் பெற்றிருந்ததோடு, தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தி மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தையும் பெற்றிருந்தனர். வரங்கள் தந்த வலிமையைப் பயன்படுத்தி ஆணவம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்.
அசுரர்கள் பெற்றிருந்த வரத்தை அறிந்த தேவர்கள் அவர்களை அழிக்க சிவபெருமானை சரண டைந்தனர். யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவம் கலைந்தால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், சிவபெருமானது தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். மன்மதனின் பாணத்தால் தவம் கலைந்த சிவபெருமான், அவன்மீது கோபம் கொண்டு அவனைத் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.
இந்த நிலையில் தேவர்கள் தங்களை அசுரனின் கொடுமையிலிருந்து காக்குமாறு வேண்டிப் பணிந்தனர். அதையேற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.
முருகப்பெருமான் சூரனை அழிக்கப் புறப்பட்டார். சூரபன்மன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவன் திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும்விதமாக வீரபாகுத் தேவரை அவனுக்கு நல்லுரைகள் கூறிவருமாறு அனுப்பினார்.
வீரபாகுவின் அறிவுரைகளை ஏற்காத சூரபன்மன், ஆணவத்தால் தன் படைகளுடன் முருகப் பெருமானை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.
முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கு மிடையே ஆறு நாட்கள் போர் நடந்தது. சூரபன்மனின் படைகள் அழிந்தன. சூரபன்மன் நேரடியாக முருகனை எதிர்க்க சக்தியின்றி சக்கரவாகப் பறவையாக மாறிப் போரிட்டான். பிறகு கடல் நடுவே மாமரமாகி நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு இருகூறாக்கினார்.
அவை சேவலும், மயிலுமாகிப் போரிட வந்தன.
அவற்றுக்கு மெய்யுணர்வு வழங்கி அவற்றை முருகப்பெருமான் தன்னருகில் இருக்கும் நிலை வழங்கினார். இவ்வாறு போரின் இறுதி நாளான சஷ்டியன்று சூரன் சம்ஹரிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நடந்த இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்.
கந்தப்பெருமான் சூரர்களை அழிக்கப் போர்புரிந்த நிகழ்வே கந்தசஷ்டி விழாவாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்தநாள் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாள் சஷ்டி திதியில் விரதத்தை முடிக்கவேண்டும்.
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத நாட்கள் ஆறிலும் பூரண உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் மேற்கொள்ளவேண்டும். தினந்தோறும் அன்றாடக் கடமைகளை முடித்த பின் முருகன் கோவிலிலோ, வீட்டிலோ முருகனை மலர்கொண்டு வழிபட்டு திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் துதிகளைப் பாராயணம் செய்யவேண்டும். ஏழாவது நாள் சப்தமியன்று வழிபாட்டை முடித்துவிட்டு ஆறு அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும்.
கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் முதன்மையானது. இவ்விரதத்தை முறைப்படி மேற்கொள்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுவர்.
கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்த முசுகுந்தன் இம்மை இன்பம், மறுமை இன்பம் இரண்டையும் பெற்றான் என்பதை புராண வரலாறுகள் மூலம் அறியலாம்.
முசுகுந்தன் என்ற சோழ சக்கரவர்த்தி, தேவாசுரப் போர் நடந்தபோது இந்திரனுக்குத் துணை நின்றவன். சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, ஏற்பாடுகள் செய்தான். போரின்போது தனக்கு உதவிசெய்த முசுகுந்தனுக்கும் இந்திரன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தான்.
திருமணவிழாவில் கலந்துகொண்ட முசுகுந்தன், வசிஷ்ட முனிவரிடம் கந்த சஷ்டி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்தான். முறைப்படி சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டான். அவனது வழிபாட்டில் திருப்தி யுற்ற முருகப்பெருமான் முசுகுந்தனுக்குக் காட்சி தந்து, “”வேண்டும் வரம்யாது?” என்று கேட்டார். வீரபாகுத்தேவர் உள்ளிட்ட நவவீரர்களும் தனக்குத் துணைபுரிய அருளவேண்டுமென முசுகுந்தன் வரம் வேண்டினான்.
முருகப்பெருமான் அவ்வாறே வரமருளினார்.
ஆனால் வீரபாகுத் தேவர் உள்ளிட்டோர் “மானிடர்க்கு உதவி செய்வதில்லை’ என்று கூறி மறுத்தனர். அதனை ஏற்காத முருகப்பெருமான் அவர்களை மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டுமுசுகுந்தனுக்கு துணைசெய்ய ஆணையிட்டார். மானிடர்களாகப் பிறந்த நவ வீரர்கள் துணையுடன் முசுகுந்தன் விண்ணுலகும் மண்ணுலகும் புகழ அரசாண்டு, கயிலையில் கணநாதர் நிலையை அடைந்தான்.
அகங்காரத்தின் வடிவமான சூரபன்மன், குரோதத்தின் வடிவமான சிங்கமுகன், மோகத்தின் வடிவமான தாருகாசுரன் ஆகிய மூவரையும் முருகப்பெருமான் அழித்தது மனிதனின் அகங்காரம், குரோதம், மோகம் ஆகிய தீய இயல்புகளை ஒழிக்க வேண்டும் என்பதைக் குறிப்பதே. சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட, சூரபன்மன் மட்டும் கடைசிவரை போராடி முருகப் பெருமானால் ஞானம் அருளப் பெற்று அவரால் ஆட்கொள்ளப் பட்டான்.
குரோதம், மோகம் போன்றவற்றை ஒழித்துவிட்டாலும் ஆணவத்தை அடியோடு அழிக்க முடியாது என்பதையே சூரசம்ஹார நிகழ்வு உணர்த்துகிறது.
முருகப்பெருமான் அசுரனை சம்ஹரித்து ஆட்கொண்டது- ஆணவம் அழியும்போது இறையருள் கிட்டுவதோடு வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பதை உணர்த்துகிறது. அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், பகைவனையும் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது.
No comments:
Post a Comment