Friday 16 September 2016

சிவன் கோவில் (அமைப்புகள்) பற்றி சில செய்திகள்


பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும் வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.

பெருங்கோயில் -
   மாடக் கோயில் குன்றுகள் மேல் கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.
கரக்கோயில் தேரைப் போன்ற அமைப்புள்ளது.
ஞாழற் கோயில் நறுஞ்சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.
இளங்கோயில் பழமையான கோயில்களுக்கு மாறாகக் காலத்தால் பிற்பட்ட கோயில்கள் இளங்கோயில்கள்.

மணிக்கோயில்
மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட கோயில்.
கொகுடிக் கோயில்
முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில் அமைந்தது.
ஆலக்கோயில்
ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள் ஆலக்கோயில்கள்.

விரிவாக பார்ப்போம்:

கோயில் வகைகள்.:

1. பெருங்கோயில்

    விண்ணளாவிய விமானங்களும், விரிவான மண்டபங்களும், பெரிய திருச்சுற்றுக்களும், திருமாளிகைப் பத்திகளும், மாடப்புரைகளும் கொண்டு அனைத்து உறுப்புகளுடனும் விளங்குகின்ற திருவாரூர், மதுரை, திருவானைக்கா, திருவண்ணாமலை முதலியன பெருங்கோயில்கள் எனலாம். அப்பர், நன்னிலம் ஆகிய தலங்களின் கோயில்கள் பெருங்கோயில்கள் என்று தேவாரப் பாடல்களில் குறிக்கப்பெற்றுள்ளன.

2. கரக்கோயில்

    மரக் கைகள் பரப்பி அவற்றின்மீது புல், கீற்று அல்லது ஒடுவேய்ந்து அமைக்கப்படுவது. சாலை, அர்த்த சாலை, கூடம் என்று இது மூவகையாக அமைக்கப்டும். தில்லைச் சிற்றம்பலம் இவ்வகையைச் சேர்ந்தது. இவ்வகையான கோயில்கள் கேரளத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தேர்ச்சக்கரம்போல் அமைந்த கோயிலென்றும் இதனைச் சிலர் கூறுவர். கடம்பூர்க் கோயில் “ கரக்கோயில்“ என்று போற்றப்பெற்றுள்ளது.

3. ஞாழற்கோயில்

    பல சிறுசிறு மரங்கள் சூழ்ந்த ஒரு கூடாரம் போன்ற இடத்தில் மரங்களின் நிழலில் அமைக்கப்படும் மேடைக்கோயில். இது பெரும்பாலும் வேலி சூழ்ந்த காவணத்தில் அமைக்கப்படும். இக்கோயிலே பிற்றை நாளில் நூறுகால், ஆயிரங்கால் மண்டபங்கட்கு அடிப்படையாயிற்று என்று கூறலாம். ஞாழல்கொன்றை, முன்னாளில் இதற்குக் கூரை இல்லை.

4. கொகுடிக்கோயில்

    கொகுடியென்பது ஒரு வகை முல்லை. நெருங்கியடர்ந்து வளர்ந்த முல்லைக் கொடிப்பந்தர்ப் பரப்பின் இடையில் அமைக்கப்பெற்ற கோயில் திருக்கருப்பறியல் என்னும் தலத்தின் கோயில் ”கொகுடிக்கோயில்” எனப்பெற்றது.

5. இளங்கோயில்  

    இதைச் சில அறிஞர்கள் ‘பாலாலயம்‘ எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் இளங்கோயில் என்பது திருவுண்ணாழி (கர்ப்பக்கிரகம்) மட்டும் அமைந்த கோயில் என்பர். இவைகள் பின்னர் பெரிதாக வளரக்கூடிய நிலையில் அமைக்கப்பெற்றவை. மீயச்சூர்க் கோயில் “இளங்கோயில்“ எனப்பெற்றது.

6. மணிக்கோயில்

    இது வண்ணம் தீட்டிய சிற்பங்களுடன் கூடிய அழகிய சுதை வேலைப்பாடுள்ள கோயிலாகும். திருவதிகைக் கோயில் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்பர். பெரிய கோயில்களில் உருத்திராக்கம் போன்ற மணிகளினால் அமைக்கப்பெறும் சிறிய  சந்நிதிகளே மணிக்கோயில் எனவும் சிலர் கூறுவதுண்டு. இதைத் திருமுறைக் கோயில் என்றாற்போலக் கொள்ளலாம்.

7. ஆலக்கோயில்

    நாற்புறமும் நீர் சூழ்ந்த இடத்தில் அமையும் கோயில் தஞ்சை, வலிவலம்,  திருப்புகலூர் முதலிய தலங்களின் கோயில்களை இங்கு நினைவுகூரலாம், ‘ஆலம்‘ என்ற சொல்லுக்கு நீர்சூழ்ந்த இடம் எனவும் பொருள் உண்டென்பர். ஒருசிலர் ஆலமரத்தைச் சார்ந்த கோயில் என்று கூறுவர். கச்சூர் ஆலக்கோயில் என்பது தேவாரம்.

8. மாடக்கோயில்

    யானைகள் ஏற இயலாதவாறு பல படிகளைக் கொண்ட உயரமான இடத்தில் கருவறை அமைந்த கோயில்கள், கோச்செங்கணான் என்ற சோழப் பேரரசன் இத்தகைய பல கோயில்களைக் கட்டுவித்தான் என்பது வரலாறு. ‘வைகல் மாடக் கோயில்‘ என்பது இவற்றுள் ஒன்று.

9. தூங்கானை மாடக்கோயில்

    தூங்குகின்ற யானையின் பின்புறம்போன்ற அமைப்பில் கட்டப்பெற்ற கோயில்கள். இதனைக் ‘கஜப் பிருஷ்டம்‘ என்பர். திருப்பெண்ணாகடம் கோயில் தூங்கானை மாடக்கோயில் என்று தேவாரம் குறிப்பிடுகின்றது. மற்றும் திருவாரூர்க் கோயில் “ பூங்கோயில் (கமலாலயம்)” என்றும் திருவீரிமிழலைக் கோயில் ‘விண்ணிழி கோயில்‘ என்றும் குறிப்பிடப்பெறுகின்றன.

 10. தாழக்கோயில்

    மலையடிவாரத்தில் உள்ள கீழ்க்கோயில்கள்

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment