தமிழ் ஆண்டுகளில் ஆறாவது மாதம் ஆகும்.
சூரியன் கன்னி இராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.
வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார்.
கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும்.
மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர்.
கன்னி மாதத்தில் (புரட்டாசி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம்.
இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர்.
புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு.
ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
புரட்டாசி மாதத்தில் அசைவம்
புதன் வீடான கன்னி ராசியில் சூரியன் இருக்கும் புரட்டாசி மாதத்தில் அசைவம் உண்ணக்கூடாது..
கன்னி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 வது ருண,ரோக ஸ்தானம் ஆகும்..
அசைவம் உண்பதால் வயிறு உபாதைகள் உண்டாகும்..
அஜீரண கோளாறுகளால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அதே நினைவாக இருக்கும்..
இதனால் சோம்பல்,மறதி,சலிப்பு உண்டாகும்..
இது கோபத்தையும்,காமத்தையும் அதிகம் தூண்டும்..
என்பதற்காகவே முன்னோர்கள் இம்மாதத்தை பெருமாளை வணங்கும் மாதமாக அமைத்தார்கள்..
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான்.
மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது.
நம்முடைய பாவங்களை எல்லாம் பொசுக்கும் திருவேங்கடமாம் ஏழுமலையில் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால், நெடியானான திருவேங்கடவன் "புரட்டாசி மாத திருவோண நாளை" தீர்த்தநாளாகக் கொண்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார்.
ஆதி காலத்தில் பிரம்மாவே இந்த உற்சவத்தை நடத்தியதாக ஐதீகம்.
பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் மலையப்பசுவாமி காலையும் மாலையும் சிறப்பு அலங்காரத்தில் பல் வேறு வாகன சேவை தந்தருளுகின்றார்.
இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஐந்தாம் நாள் இரவின் கருட சேவையாகும்.
அன்றைய தினம் மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், வைர முடி தாங்கி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அணிந்து அனுப்பிய மாலையில் மூலவராகவே மாட வீதீ வலம் வந்து சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே,
பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே.
நவராத்திரி பூஜை இம்மாதத்தில் நடக்கிறது.
அம்பாளை,
முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும்,
அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும்,
அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.
தைரியம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது.
தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும்.
இந்நேரத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் கொலு வைப்பது சிறப் பம்சம்.
சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின் றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில் களில், “பாரி வேட்டை’ எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
முருகனுக்கும் இம்மாதத்தில் விழா உண்டு.
திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பால பிஷேகம் செய்யப்படும்.
இந்த வேல், புரட்டாசி பவுர்ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நடக்கும்.
அங்குள்ள காசி விஸ்வ நாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை:
ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு உகந்தது.
அதுவும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள்
ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரமிருக்க முடியாதவர்கள், புரட்டாசிச்சனி நாட்களால் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர்.
இந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து வெங்கடேச பெருமாளை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்தி அதன் பின்னர் மதிய வேளை உணவு உண்ணல் சிறப்பு தரும்.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது அன்று “அகல்கில்லேன் இறையும் என்றும் அலர்மேல் மங்கை உறை மார்பனாம் திருவேங்கடவனின் திருப்பாதம் சரண் அடைந்து”, விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும், நீண்ட ஆயுளும் இறுதியாக வைகுண்டப் பதவியும் பெறுவர்.
புரட்டாசி விரதத்தை உண்மையான பக்தியுடன் அனுசரித்த ஒரு பக்தரின் அனுபவம் மிகவும் சுவையானது
தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை.
எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.
திருமலைக்கு அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார்.
இவர், ஏழு மலையானின் தீவிர பக்தர்.
ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார்.
ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார்.
அது என்ன தெரியுமா?
பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது தான் இந்த கோரிக்கை.
இவர் தினமும் மண்பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்கமல். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார்.
திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு,
”ஏடுகொண்டலு வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா…’
“ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, கோவிந்தா, கோவிந்தா”,
என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களையே உண்மையான மலர் தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்
அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தார் தொண்டைமான் என்னும் சக்கரவர்த்தி.
அவர் பெருமாளின் பக்தர் மட்டுமல்ல
பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஒருவர்.
ஒருநாள் அவர் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றார்.
பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதற்காக அவர் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தார்.
அவர் அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் இருந்ததை கவனித்தார்.
தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டார்.
எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.
மறுநாளும் அவர் திருவேங்கடவனின் சன்னிதிக்கு வந்த சமயம், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்ததைக் கண்டு குழம்பிப் போனார்.
அவரது கனவில், சீனிவாசப் பெருமாள் தோன்றினார்.
“மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்;
அவற்றை நான் ஏற்றேன்.
அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.
மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றானர் மன்னன் .
அவர், பெருமாளின் மண் சிலைக்கு மண் பூக்களால் அர்ச்சனை செய்து கொண்டிருந்ததைக் கண்டார்
“எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்;
தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’
என்றார் தொண்டைமான் சக்கரவர்த்தி.
அதற்கு அந்த பக்தர்
“அரசே… நானோ பரம ஏழை.
இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும்.
குடும்பம் மேலும் வறுமையில் வாடும்.
எனவே தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன்.
மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது.
ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.
இதைக் கேட்ட தொண்டைமான் மன்னன் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு செல்வம் அளித்தார்.
குசேலனைப் போல ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர்.
நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார்.
அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார்.
இதனால் தான், இப்போதும் அவர் நினைவாக திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.
துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்
சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர்.
இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.
துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம்.
இந்த தீபம் மாலை வரை எரியும்.
பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம்.
அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்.
வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!
நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.
சிலர் பாயாசமும் படைப்பர்.
வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான "நவநீதமும் படைப்பதுண்டு.
"அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.
பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.
இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே "கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
புரட்டாசியில் மற்ற விசேஷங்கள்:
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை:
இந்நாள் கலைகளின் அதிபதி கலைமகளின் விசேச தினம். தொழில்கள் செய்வோரும் வியாபாரிகளும் மாணவர்களும், தொழிலையும், வியாபாரத்தையும், படிப்படையும் சிறப்பாக்கி தருமாறு கலைமகளிடம் வேண்டுகோள் விடுக்கும் தினம்.
இந்நாளில் சரஸ்வதி பூஜை செய்யும் போது ஆதி குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலை என்னும் பாடல்கள் பத்தையும் பாடித் தோத்திரம் செய்தல் வேண்டும்.
இன்றைய தினம் அவல், கடலை, பொரி, சுண்டல் சிறப்பு படையல் செய்வது நல்லது.
விஜயதசமி:
சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் முன்தினம் பூஜையில் வைத்த ஆயுதங்கள், புத்தகங்கள் முதலியவைகளை கற்பூர ஆரத்தி செய்து கொலுவை கலைத்து தங்கள் பணியை தொடர வேண்டும்.
புதிதாக ஏதாவது ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்குதல் நலம்.
மாகளய அமாவாசை:
முன்னோர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் இன்றைய தினம் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
இன்று விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு, ஒரு வேளை உபவாசமிருப்பது நலம்.
இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.
மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம்.
சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எம தர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.
அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இஙகே வருகின்றனர்.
புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான,
15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.
இதையே, “மகாளய பட்சம்’ என்பர்;
“பட்சம்’ என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள்.
இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகா பரணி’ என்றும்,
அஷ்டமியை, “மத்யாஷ்டமி’ என்றும்,
திரயோதசியை “கஜச்சாயை’
என்றும் சொல்வர்.
இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை.
இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும்.
புரட்டாசி அமாவாசை தினத்தில்
ஏழைகளுக்கு அன்னதானம்,
ஊனமுற்றோர்களுக்கு உதவி போன்றவை
முடிந்த அளவுக்கு செய்யலாம்
,இதனால் என்ன பலன்..? .
இயலாதவர்களுக்கு செய்யும் உதவியால் புண்ணிய காலமான புரட்டாசி அமாவசையில் செய்யப்படும் தான தர்மங்களின் பலன் பல ஆயிரம் மடங்கு பலன்களை தரும்..
உங்கள் பூர்வஜென்ம கர்ம வினை தொலையும்..
அன்று உங்கள் வம்சத்தார்க்கு திதி, தர்ப்பணம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்..
உங்களது சிக்கலான தருணத்தில் உங்களை காப்பது உங்கள் முன்னோர்களின் ஆத்மாவே..
புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம்.
இம்மாதத்தில், தவறாமல் வழி பாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.
No comments:
Post a Comment