தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :
பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. ("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.
இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.
அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.
ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.
மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :
H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume - I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.
1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
"துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான்.
11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.
துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. - I என்ற நூலில் நன்கு விளங்கும்.
சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.
மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே" என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்" (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்" (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று "ரகர" ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் "ரகர" ஒற்றுடன் கூறுகிறார்.
ஸ்தல வரலாறு:
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வார் மாமயிலை என்றும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், மயிலாப்பில் மயிலாப்பு என்றும் திருஞான சம்பந்தர், மயிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.
இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்டபோது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார்.
அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும் என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்குப்பகுதியில் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. இதன் உயரம் சுமார் 120 அடி உயரமும் உடையது. வெளிப் பிரகாரம் விசாலமாமாகவும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம்.
சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர். இந்த கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலா திருமேனி வரிசையில் உள்ளன. கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.
கபாலீசுவரர் சந்நிதிக்கு இடப்புறம் உள்ள கோயிலில் மேற்கு திசை மேவி ஆறுமுகத்தோடு அமர்ந்திருக்கிறான் சிங்கார வேலவன். கற்பகவல்லிக்கு நேர் தெற்கே வாயிலார் நாயனார் கோயில் அமைந்துள்ளது. முக்கிய வாயிலின் வடப்புறம் திருஞானசம்பந்தர் பூம்பாவையுடன் இருக்கிறார். கோயிலின் வடக்குவெளிச் சுற்றிலே புனித புன்னை மரம் இருக்கிறது.
ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயில் எதிரே நர்த்தன விநாயகர் குறைநீக்கி அருளுகின்றார். சனி பகவானுக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீசுவரரை நோக்கியபடி நந்தி அமைந்துள்ளது.
நந்தியை ஒட்டினாற்போல் கொடிமரமும், பலி பீடமும் இருக்கின்றன. நந்தியம் பெருமானுக்கு விசேஷ நாட்களிலும் பிரதோஷ காலங்களிலும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment