Sunday, 18 September 2016

திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -


மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.

திருவிளக்கின் தத்துவம்..

குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.

விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.

குத்து விளக்கும் பெண்மையும்:

குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். அவை: 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை -பொறுமை ஆகியன.

விளக்கிற்கு ஏற்ற எண்ணெய்

பசு நெய் – லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும். சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும்.

நல்லெண்ணெய் – சனியால் பீடிக்கப்பட்டோருக்குப் பரிகாரமாக அமையும். லட்சுமி அருள் கிட்டும். எல்லாப் பீடைகளையும் விலக்கும்.

தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும். கணவன் மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். பழம்பாவங்கள் நீங்கும்.

இலுப்பை எண்ணெய் – எல்லாப் பாவங்களும் போகும். மோட்சம் கிட்டும். நல்ல ஞானம் வரும். பிறவி நீங்கும்.

விளக்கு எண்ணெய் – தெய்வ அருள், புகழ், சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவற்றை அதிகரிக்கச் செய்யும். உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர் சுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும்.

வேப்ப எண்ணெய் – குல தெய்வத்தின் அருள் கிட்டும்.

முக்மூட்டு எண்ணெய்:- நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் – ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வர செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும், இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

ஜங்கூட்டு எண்ணெய்: நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து ஏற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம்(45 அல்லது 48) நாட்கள் பூசை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும்.

விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

விலக்க வேண்டியவை

கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய் முதலியனவை கூடாது.

விளக்கு ஏற்ற வேண்டிய திசைகள் 

கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்றுவது சிறப்பு, துன்பங்கள் நீங்கும், கிரகங்கட்கு மகிழ்ச்சி ஏற்படும்.

மேற்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும். சனி கிரகத்திற்கு உவப்பு ஏற்படும், பகை நீங்கும்.

வடக்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.

தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.

விளக்குக்கு ஆசனம்

விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்ச லோகம் முதலியவற்றாலான ஒரு தாம்பாளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினாலான பலகையின் மீதாவது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கும் முகங்களும்

ஒருமுகம் (திரி)ஏற்றி வழிபடுவது – மத்திய பலன்

இரண்டு முகம் (திரி ஏற்றி வழிபடுவது- குடும்ப ஒற்றுமை பெருகும்

மூன்று முகம்(திரி ஏற்றி வழிபடுவது -புத்திர சுகம் தரும்

நான்கு முகம் (திரி ஏற்றி வழிபடுவது – பசு, பூமி இவற்றைத் தரும்

ஜந்து முகம் (திரி ஏற்றி வழிபடுவது – செல்வத்தைப் பெருக்கும்

விளக்கு ஏற்றும் நேரம்

காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சா்வ மங்களயோகத்தைத் தரும்.

மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.

காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்ட பிறகே விளக்கேற்ற வேண்டும்.

மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீா் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும்.

விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.

எரியும் விளக்கைத் தூண்டும் முறை

விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த விளக்குக்குரிய தேவதை ஆவாகனமாகி விடுவதால், விளக்கு எரியும்போது அதன் திரியில் சிட்டத்தைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. திரியைப் பெரிதாக்கி வெளிச்சத்தைக் கூட்டலாம்.
நேரம் ஆக, ஆக விக்கின் ஒளி மங்கிக் கொண்டேவந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியில் அருகே புதுத்திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்துவிட வேண்டும்.

விளக்கைக் அணைக்கும் (குளிர) வைக்கும் முறை

விளக்கேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து விளக்கு தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனா். அது தவறு! விளக்கு ஏற்றியதிலிருந்து அதனைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும்.

எலுமிச்சம்பழ விளக்கு

எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்துவிட்டு, அதன் தோலை விளக்குகளாக்கி அதில் நெய் விட்டு ராகு நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது உண்டு. இதனால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

விளக்கின் திரி

பருத்திப் பஞ்சினாலான திரி நல்லவை அனைத்தும் செய்யும்.

இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரி சகல பாக்கியங்களையும் தரும்.

தாமரைத் தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது முற்பிறவியில் செய்த பாவத்தைப் போக்கும். செல்வம் நிலைத்து நிற்கும்.

வாழைத் தண்டின் நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் குடும்பசாபம் முதலியவை நீங்கிச் சாந்தி உண்டாக்கும். குலதெய்வக் குறைபாடு நீங்கும்.

வெள்ளை எருக்கன் பட்டையில் திரித்த திரியால் பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்கட்கு அதன் தொல்லைகள் நீங்கும்.

புது மஞ்சள் சேலைத் துண்டால் செய்யப்பட்ட திரி – அம்மன் அருள் கிட்டும். வியாதிகள் குணமாகும் காற்றுச் சேட்டைகள் நீங்கும்.

சிவப்பு நிறச் சேலைத் துண்டினால் திரிக்கப்பட் திரி திருமணத் தடை நீங்கும். மலட்டுத் தன்மை நீங்கும். பிசாசுத் தொல்லை செய்வினை தோஷங்கள் விலகும்.

பன்னீா் விட்டுக் காயவைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரி – உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.

விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்:

1. வெள்ளிக் கிழமை

2. கார்த்திகை, திருவாதிரை, பூரம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள்

3. பௌர்ணமி

4. அமாவாசை

5.சதுர்த்தி திதி

6. பஞ்சமி திதி

7. ஏகாதசி திதி

8. நவராத்திரி

9. சிவராத்திரி

10. ஆடிச் செவ்வாய்

11. ஆடி வெள்ளி

12. தைச் செவ்வாய்

13. தை வெள்ளி


ஆகிய நாட்கள் பூஜைக்கு ஏற்ற நாட்கள்.

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூட்டுவழிபாடாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.

திருவிளக்கு பூஜையில் கவனிக்க வேண்டியவை

விளக்கு பூஜையில், விளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தரை உச்சி வடுகிலும் வைத்துவர அவா்களது கணவா்கள் நலமுடன் வாழ்வார்கள்.
திருவிளக்குப் பூஜை செய்யும் போது குத்து விளக்கைத் தலை வாழை இலை மீது வைத்துப் பூசை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாகச் செழிப்புற்று ஓங்கும்.

விளக்கின் சுடா் நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.

விளக்கில் குளம் போல எண்ணையை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து, நிற்கின்ற காரணத்தால், அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது குற்றமாகும்.

அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்துவிளக்கு, அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

விளக்கு என்பது இலட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். உங்கள் வீடு பிரகாசமாக இருக்க வேண்டின் எப்போதும் விளக்கும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

அடுப்பேற்று முன்பாக

சுமங்கலிப் பெண்கள் காலையில் குறித்துவிட்டு, காமாட்சி விளக்கேற்றியோ, ஓம் சக்தி விளக்கேற்றியோ வழிபட்டு, அதிலிருக்கும் தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றி வர சகல நன்மைகள் ஏற்படும்.

விளக்கேற்றியவுடன் செய்யக் கூடாதவை

விளக்கேற்றிய பின்பு தலை சீவக் கூடாது.

வீட்டைப் பெருக்கக் கூடாது.

விளக்கேற்றியவுடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.

விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.

விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.

விளக்கேற்றிய பின்பு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

விளக்கேற்றி விட்டு உடனே தலை குளிக்கக் கூடாது.

மேற்கண்டவாறு செய்தால் வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அதனால் தரித்திரமே குடிபுகும்.

விளக்குப் பூசை பற்றிப் புராணங்கள் சொல்வன, காலம் காலமாக நம்பிக்கையாக இருப்பன. சாத்திரங்களில் கூறப்பட்டுளன மேலெ தரப் பெற்றுள்ளன.

திருவிளக்கு வழிபாடு


விளக்கின் முன்னே வேதனை மாறும் என்று திருமந்திரம் போற்றுகிறது. புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க வல்லது திருவிளக்கு வழிபாடு. தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் தீபமேற்றி வழிபடுவது நம் சம்பிரதாயம்.

விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின். ஆலயங்களில் பலர் கூடிச் செய்யும் திருவிளக்கு வழிபாடு, மந்திர பூர்வமாகச் செய்யும் வேள்வி செய்வதற்குச் சமம்.

வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்லாது, சந்திரபகவான் தம் அம்ருத ஒளியைப் பிரவகிக்கச் செய்கிற பௌர்ணமி தினம், மற்றும், சந்திர சூரியர்கள் நேர்க்கோட்டில் சந்திக்கிற அமாவாசை தினங்களும் திருவிளக்கு வழிபாடு செய்வது விசேஷப் பலன்களைக் கொடுக்க வல்லது.

ஒவ்வொரு மாத பௌர்ணமி, அமாவாசை தினங்களில் திருவிளக்கு பூஜை செய்வதற்கான பலன்கள்.

· சித்திரை பௌர்ணமி மற்றும் அமாவாசை -தான்ய விருத்தி ஏற்படும்.

· வைகாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -செல்வம் உண்டாகும்.

· ஆனி பௌர்ணமி மற்றும் அமாவாசை -திருமணத் தடை நீங்கும்.

· ஆடி பௌர்ணமி மற்றும் அமாவாசை -ஆயுள்விருத்தி உண்டாகும்.

· ஆவணி பௌர்ணமி மற்றும் அமாவாசை- புத்திரபாக்கியம் கிட்டும்.

· புரட்டாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -பசுக்கள் விருத்தியாகும்

· ஐப்பசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -தீராத நோய் நீங்கும்.

· கார்த்திகை பௌர்ணமி மற்றும் அமாவாசை -முக்தி கிட்டும்.

· மார்கழி பௌர்ணமி மற்றும் அமாவாசை -ஆரோக்கியம் நிலைக்கும்.

· தை பௌர்ணமி மற்றும் அமாவாசை- எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

· மாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -துன்பம் நீங்கும்.

· பங்குனி பௌர்ணமி மற்றும் அமாவாசை - தர்மசிந்தனை மேலோங்கும்.

கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் மேற்கண்ட பலன்கள் பன்மடங்கு பெருகும் என்பது உறுதி.

நம் இல்லத்திலும் எங்கும் நிறைகிற இறையொளியை தீபத்தில் எழுந்தருளச் செய்து, பூஜித்து வழிபடலாம். தீபத்தில் எழுந்தருளுகிற சுடரை, தீபலெக்ஷ்மி என்றே வழிபடுவது நமது வழக்கம். தீபமேற்றும் வேளையில், நல்ல எண்ணங்களோடு, நமக்குத் தெரிந்த துதிகளைக் கூறிக் கொண்டே விளக்கேற்றுவது நல்லது.

இல்லத்தில், திருவிளக்கு பூஜை செய்ய வேண்டுவோர், கீழ்க்காணும் விதிகளைத் தெரிந்து கொள்வது நல்லது. 

பூஜை ஆரம்பிக்கும் முன்:


· பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, நிவேதனங்களைத் தயார் செய்து கொண்ட பின்பே பூஜைக்கு அமரவும்.

· சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. வேண்டும் பிற நிவேதனங்களும் செய்யலாம்.

· திருவிளக்கு பூஜைக்கு, விளக்கை கிழக்கு முகமாக ஏற்றுவதே சிறந்தது. பூஜிப்பவர், வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும்.

· வாழை இலையில் அரிசியை சதுரமாகப் பரப்பி அதன் மேல் திருவிளக்கை இட்டு பூஜிப்பது சிறந்தது. இலையின் நுனி, விளக்குக்கு இடப்புறம், வடக்கு நோக்கி இருக்க வேண்டும். சிறிய தாம்பாளத்தட்டிலும் அரிசியைப் பரப்பி அதன் மேல் விளக்கை இட்டு பூஜிக்கலாம். திருவிளக்கின் கீழிருக்கும் அரிசியை, மறுநாள் வீட்டுக்கு உபயோகிக்கலாம்.

· மாக்கோலமிட்டு அதன் மேல் வாழை இலையை வைப்பது சிறந்தது.

· பூஜிப்பவர், பாய் அல்லது விரிப்பில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.

· பூஜிக்கும் விளக்கிற்கு அருகில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்கவும். அதிலிருந்து தான், ஊதுபத்தி,கற்பூரம் முதலியவை ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் விளக்கை அதற்கு உபயோகிக்கக் கூடாது.

· பூஜை செய்யும் போது (இடையில்) நடுவில் எழுந்திருக்கக்கூடாது.

· பூஜை செய்யும் விளக்கைச் சுத்தம் செய்து, பொட்டு வைத்து, தண்டுப்பாகத்தில், பூ சூட்டி பூஜையில் வைக்கவும். விளக்கின் அடிப்பகுதியில், அம்பிகையின் பாதங்களைக் குறிக்கும் விதமாக, இரண்டு பொட்டுக்கள் வைக்கவும்.

· எண்ணை ஊற்றி அதன் பின்பே திரியைப் போடவேண்டும்.

· பூஜைக்குப் புதுத் திரிகளையே உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் விளக்கேற்றும் போதும், புதுத் திரிகளை உபயோகிப்பதே சிறந்தது.

· குங்குமம், அட்சதை, மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சிக்கலாம்.

· பூஜை முடியும் வரை, விளக்கு ஆடக் கூடாது. ஆகவே, சற்று தாராளமாக அரிசி போட்டு, விளக்கை சரியாக வைக்கவும். சற்று கெட்டித் திரியாகப் போட்டால், பூஜை முடியும் வரை சுடர்கள் அலைபாயாமல் இருக்கும்.

பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து, பூஜை முடியும் வரை இறை நாமங்களை ஜெபித்தபடி இருப்பது, பூஜையில் மனம் ஒன்றிச் செய்ய உதவும்.


மஞ்சள் பிள்ளையாரை, ஒரு சிறு வெற்றிலையில் அல்லது தட்டில் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கவும். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யத் தேவையான வெற்றிலை, பாக்கு, பழத்தைத் தனியாக வைக்கவும்.

பூஜைக்குத் தேவையான,மலர்கள், அட்சதை முதலியவற்றைத் தனித் தனி தட்டுக்களில் வைக்கவும். சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு, திருவிளக்கை நமஸ்கரித்து, பூஜைக்கு அமரவும்.

முதலில், பிரதான விளக்கிற்கு அருகிலிருக்கும் சிறு விளக்கை ஏற்றவும். பின், பிரதான விளக்கை, அந்த சிறு விளக்கைக் கொண்டோ, தீபக்காலைக் கொண்டோ ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது,'ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லிக் கொண்டே ஏற்றவும்.

மஞ்சள் பிள்ளையாரில், ஸ்ரீ விக்னேஸ்வரரை எழுந்தருளப் பிரார்த்தித்து, பூஜை எவ்வித விக்னமும் இன்றி நிறைவேற விக்னேஸ்வர பூஜையைச் செய்யவும். பிள்ளையாருக்கு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்.

பின், பிரதான விளக்கில், அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் திருவிளக்கிலும் அம்பிகை எழுந்தருளி, நம் வாழ்வில் ஒளியேற்றப் பிரார்த்திக்கவும்.

பின், அம்பிகைக்கு உபசார பூஜைகள் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், திருவிளக்கு போற்றிகள் முதலியவற்றை, நேரம்,சௌகரியத்திற்கு தகுந்தபடி கூறி, குங்குமம், அட்சதை மற்றும் மலர்களால் அர்ச்சிக்கவும்.

பூஜை செய்வதற்கு, ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சத நாமாவளியை பஜனையாக பாடவும்.

ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். ஒரு முக தீபத்தை(தீபக்கால்) ஏற்றிக் காட்டவும். பின்பு நிவேதனங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கவும். நிவேதனம் செய்யும் போது, எவ்வித நிவேதனமாக இருந்தாலும் 'அம்ருதமயமான இந்த நிவேதனத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்(சர்வம் அம்ருதமயம் நிவேதயாமி)' என்று கூறி சமர்ப்பிக்கவும்.

தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்யவும். கற்பூரம் ஏற்றிக் காட்டவும். தூபம் முதலானவை காட்டும் பொழுது, எழுந்து நின்று உபசார பூஜைகளைச் செய்வது சிறந்தது.

முடிந்தால், திருவிளக்கைச் சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். இல்லையெனில், ஆத்மபிரதக்ஷிணமாக(தன்னைத் தானே சுற்றுதல்) செய்து திருவிளக்கை நமஸ்கரிக்கவும். கை நிறைய புஷ்பங்களை எடுத்து அம்பிகையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்கவும்.

ஒரு தட்டில், மஞ்சள் குங்குமம் கலந்த நீரில், இரு சிறு நெய்தீபங்களை ஏற்றி வைத்து, திருவிளக்கிற்குக் காட்டவும். இந்த ஆரத்தி நீரை பூஜை முடிந்த பின் செடிகளுக்கு ஊற்றவும்.

பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக அம்பிகையிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரவும். நமஸ்கரிக்கும் போது, தீபச்சுடரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுடன், மனமொழி மெய்யை இணைத்து, 'நீயே அனைத்தும்' என்று மானசீகமான சரணாகதியடைந்து நமஸ்கரிக்கவும். 'நீங்காத பக்தியை அருள்வாய்' என்று அம்பிகையிடம் மனமுருகி வேண்டவும்.

பூஜை முடிந்ததும், பூ, அக்ஷதையை திருவிளக்கின் பாதத்தில் இட்டு, தீபத்திலிருக்கும் அம்பிகையை தம் இடம் சேரப் பிரார்த்திக்கவும். பின் திருவிளக்கை, கிழக்காக நகர்த்தவும். பூஜைப் பிரசாதங்களை சிறிது உண்டுவிட்டு, மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும். சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது.

குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியில் அம்பிகை குடியிருக்கிறாள். நம்மைச் சுற்றிலும் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை அகற்ற வல்ல வலிமை தீப வழிபாட்டிற்கு உண்டு. இதை உணர்ந்து, உள்ளன்போடு தீப வழிபாடு செய்யச்செய்ய, வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.

No comments:

Post a Comment