Friday, 27 April 2018

மதுரை சித்திரைத் திருவிழா !


மிழ்நாட்டில் புராதனமான திருத் தலங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சங்கத் தமிழாலும் சமயத் தமிழாலும் ஒருசேரப் புகழப்பெற்ற திருத் தலம் மாமதுரை. 
மதுரை மாநகரில் சுமார் பதினேழு ஏக்கரில் தனிப்பெருங்கோயிலாக பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். 

பெரும்பாலான பதிகங்களில் அங்கயற்கண்ணி என்று அழைக்கப்பட்ட  மீனாட்சியன்னை சோழர், பாண்டியர் காலத்தில் திருக்காமக்கோட்ட நாச்சியா ராகவும், நாயக்கர் காலத்தில் மீனாட்சி எனவும் பெயர் மாற்றம் பெற்று மதுரை யில் அருளாட்சி செய்து வருகிறாள்.

காலத்தைக் காட்டும் கண்ணாடியாகக் கோயில்கள் விளங்கினாலும், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, கட்டடக்கலை, வழிபாடு, நிர்வாகம், சமுதாயம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை அந்தக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாகவே அறிய முடியும்.  
இந்தியாவில் அதிகமாகக் கல்வெட்டு கள் காணப் பெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் முப்பதாயிரம் கல்வெட்டுகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பகுதி கோயில் களில்தான் உள்ளன. 

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், இதுவரை 64 கல்வெட்டுகள் படியெடுக் கப்பட்டுள்ளன. 

பிற்காலப் பாண்டியர்களின் 44 கல்வெட்டுகளும், விஜயநகர நாயக்கர் களின் 19 கல்வெட்டுகளும், ஆங்கிலேயர் களின் கல்வெட்டு ஒன்றும் இந்தத் திருக்கோயிலில் உள்ளன.

பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிவத்தலங்களில் பிரதானமானது மதுரையே. இந்தத் தலத்தை இலக்கியங்கள் ‘விழவுமலிமூதூர்’ என்று அழைக் கின்றன. இதற்கு ‘விழாக்கள் நிறைந்த தொன்மை யான நகரம்’ என்பது பொருள். இந்தப் பெயருக்குத் தகுந்தாற்போல், பல நூற்றாண்டுகளாக இந்தக் கோயிலில் பதின்மூன்று விழாக்கள் மிக விமர்சை யாக நடத்தப்பட்டு வருகின்றன. ஓர் ஆண்டில் 294 நாள்கள் இங்குத் திருவிழா நடப்பதாக சமய ஆன்றோர் தெரிவிக்கின்றனர்.  
அப்படியான விழாக்களில் குறிப்பிடத்தக்கப் பெரிய விழாக்களாகத் திகழ்வன: சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா. 

இவற்றில், மதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சித்திரைத் திருவிழாவின்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மதுரைக்கு வந்து, மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள்!

சித்திரைத் திருவிழா!

தி
ருக்கோயிலின் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும் நிறைவுநாளை முடிவுசெய்து, உற்சவம் தொடங்கப்படுகிறது. அவ்வகையில், சித்திரை நட்சத்திரத் தைக் கணக்கிட்டு இந்தத் திருவிழா தொடங்கும்.

பன்னிரண்டு நாள்கள் நடை பெறும் விழாவில், பத்தாம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெறும்.  திருப்புகழ் மண்டபம் அருகே நடைபெறும் திருக்கல்யாணத்தில் திருப்பரங் குன்றம் சுப்ரமணியரும் பவளக் கனிவாய் பெருமாளும் கலந்து கொள்வது விசேஷ அம்சமாகும்.  

இந்த வைபவத்தில் `குலசேகர பாண்டியர்' பட்டர் வழியிலான சிவாசார்யர் சுந்தரேஸ்வரராகவும், `உக்கிர பாண்டியர்' பட்டர் வழியிலான  சிவாசார்யர் மீனாட்சி யம்மனாகவும் வேடமேற்று, மாலை மாற்றிக்கொள்வார்கள். தொடர்ந்து, மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பெறும். பிரியாவிடை அம்மனுக்குப் பொட்டும் மாங்கல்யமும் அணிவிக்கப்பெறும்.  
இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் திருமாங்கல்யம், பட்டுத்துணி, பணம் முதலியவற்றை மணமக்களுக்கு மொய் செய்கின்றனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும், `குண்டோதரனுக்கு அன்னமிடல்' எனும் திருவிளையாடற் புராண நிகழ்ச்சி நடைபெறும். 

திருக்கல்யாணத்துக்கு முன்பு, மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக முடிபுனைந்து செங்கோல் ஏந்தும் விழாவும் சிறப்பாக நடைபெறும். பதினோராம் நாள் தேர்த்திருவிழா. பன்னி ரண்டாம் நாள் கொடியிறக்கப்படும். விழா நிறைவு நாளான சித்திரைப் பௌர்ணமியன்று கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வார். 

மீனாட்சி அம்மனின் திருமணத்தைக் காண வைகையைத் தாண்டி வரும் அழகர், மதுரைக்கு வருவதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது போலவும், இந்தச் செய்தியைக் கேட்டு அழகர் திரும்பிவிடுவது போலவும் சித்திரைப் பெரு விழாவை அமைத்திருக்கிறார்கள்.

அழகர் கோயிலில்... 

வை
கையாற்றின் வடகரையில் அழகர் விழா கொண்டாடும்  வைணவ மக்களும், தென்கரையில் சித்திரைத் திருவிழா கொண்டாடும் சைவ மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும்படி, நாயக்கர் காலத்தில் இந்தத் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டது.  
``மாசி மாதத்தில் நடந்துட்டிருந்த சித்திரைத் திருவிழாவை உழவர் களுக்காக சித்திரை மாதத்துக்கு மாத்தினது நாயக்க மன்னர்கள்தான். கிட்டத்தட்ட நானூறு வருடங் களாகச் சித்திரை மாதத்தில்தான் இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. 

அழகர் கோயிலில் நடக்கும் பத்து நாள் சித்திரைத் திருவிழாவில், முதல் மூன்று நாள் கோயிலுக்குள்ளேயே அழகர் எழுந்தருள்வார். பின்னர் மூன்றாம் நாள் மாலை, தங்கப்பல்லக்கில் கள்ளர் வேடத்தில் மதுரைக்குப் புறப்படுவார்.

17-ம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை... அலங்காநல்லூர் வழியாக தேனூர் வந்தடையும் கள்ளழகர், அதன்பின்னர் வைகைக் கரையோரத்திலேயே பயணப்பட்டு வண்டியூரை வந்தடைவார். அங்கே மண்டூக மகரிஷிக்குச் சாபவிமோசனம் அளித்துவிட்டு, அழகர்கோயிலுக்குத் திரும்ப வருவார்.   
நாயக்கர்கள் காலத்தில் அழகர் மதுரைக்கு வரும் வழியில் மாற்றம் செய்யப்பட்டது. கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாள், திருக்கோயிலின் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து கள்ளர் வேடத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு எழுந்தருளும் அழகர், பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தை வந்தடைவார். 

அங்கிருந்து கடச்சனேந்தல் வழியாக மூன்றுமாவடியை வந்தடையும் போது, பொதுமக்கள் அழகரை எதிர்கொண்டு அழைத்துச் செல்வார்கள். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்வார். மறுநாள் காலையில் தங்கக்குதிரை வாகனத்தில்  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நிகழும். பத்தாம் நாள் கள்ளர் திருக்கோலத்திலேயே பூப்பல்லக்கில் திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருள்வார்’’ என்று அழகர் கோயில் சித்திரைத் திருவிழா குறித்து விவரிக்கிறார் அம்பி பட்டர். 
மதுரை சித்திரைத் திருவிழா, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், மதுரை மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் மண்ணின் கலைகளைச் செழித்தோங்கச் செய்யும் வைபவமாகத் திகழ்கிறது.

வைகையாற்றுக்கு அழகர் வரும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளர் வேடம் பூண்டு அழகரை வரவேற்பார்கள்.

‘‘பிள்ளைவரம், நேர்த்திக்கடன்னு வேண்டுதலை நிறைவேற்ற இருபத்தோரு நாள்கள் மாலை போட்டு விரதமிருந்து, சித்திரா பௌர்ணமியன்று கள்ளர் வேடம் போடுவோம். எங்களுடைய எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றிய அழகரின் சிறப்பையும் அழகர் மலை சிறப்பையும் பாட்டா படிச்சபடி அழகர் முன்னாடி ஆடிப்பாடி எங்கள் நன்றியைத் தெரிவிப்போம்’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன். இவர் 1965-ம் ஆண்டு முதல் சித்திரைத் திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் வைபவம்...

ழகர் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்வு. `தான் வருவதற்குள் தங்கை திருமணம் செய்துகொண்டாளே' என்ற ஆதங்கத்தில் அழகர் கொண்ட கோபத்தைத் தணிக்க தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறு வதாகக் கூறப்படுகிறது. நாயக்கர் காலத்தில் புதிதாகச் சாலைகள் அமைக் கப்பட்டு அதில்தான் அழகர் பயணித்து வந்தார். அப்போது ஏற்படும் புழுதியைச் சரிசெய்ய தண் ணீர் பீய்ச்சுதல் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சாப விமோசனம்

`வை
கை நதியில் நீ தவளையாக இருப்பாயாக' என்று சுபதஸ் முனிவரைச் சபித்துவிடுகிறார் துர்வாசர். சுதபஸ் முனிவர் தவளையாக மாறிவிட்டதால், அவர் மண்டூக ரிஷி என்று பெயர் பெற்றார். 

அவர், சாபவிமோசனம் தரும்படி துர்வாசரை வேண்டிக்கொள்ள, ``விவேகவதி (வைகை ) தீர்த்தக் கரையில் தவமியற்றி வா. அழகர் வந்து விமோசனம் தருவார்'' என்று வழிகாட்டினார் துர்வாசர்.அதன்படி, சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வ தாகப் புராணங்கள் கூறுகின்றன. 

சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தேனூர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து சுதபஸ் முனிவருக் குச் சாப விமோசனம், அளிக்கப்படுகிறது. அப்போது, முனிவர் சாப விமோசனம் பெற்றதைக் குறிக்கும் விதமாக `நாரை' பறக்கவிடப்படும்.

கள்ளர் வேடம்

ழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர் கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கரங்களில் வளைதடி, வளரித்தடி மற்றும் சாட்டைக் கம்பு திகழ, காதுகளில் கல்பதித்த வளையத்துடன் கூடிய கடுக்கனும், கறுப்பு வண்ண ஆடையும் அணிந்து பக்தர்கள் படைசூழ புறப்படுகிறார்.

பச்சைப் பட்டு...

சித்திரைத் திருவிழா தொடங்கியதும், அழகர் முன்பு திருவுளச்சீட்டு எழுதிப் போடப்படும்.  சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை என எழுதப் பட்டிருக்கும் அந்தச் சீட்டுகளில் ஒன்றை, அழகரை வேண்டிக்கொண்டு எடுக்கவேண்டும்.  எடுக்கப்படும் சீட்டினில் எந்த நிறம்  குறிபிடப் பட்டுள்ளதோ, அந்த நிறத்திலான பட்டுத் துணியை உடுத்திக்கொண்டு, வைகையில் எழுந்தருள்வார் அழகர்.

பச்சைப் பட்டு தேர்வானால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் சிவப்பு என்றால் வறட்சியும், வெள்ளை என்றால் மிதமான பலன்களும் இருக்கும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

அழகருக்கு ஆரத்தி!

ழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் தாகத் தைப் போக்க நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களால் அமைக்கப்பட்டிருக்கும். 

அழகர் வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களா கவே அழகருக்கு ஆரத்திக் காட்டி வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

No comments:

Post a Comment