Friday 27 April 2018

வியர்வை வெப்பம் வெறுப்பு - வெயிலின் மறுபக்கம் !


ரக்கமற்ற இடி. மிரட்டும் மின்னல். மேகம் கறுத்த அடுத்த நொடி, வீட்டிற்குள் ஒளிந்து கதவைத் தாழிட்டுக் கொள்பவர்கள்தாம் இங்கே அதிகம். ஆயினும், அரைகுறை ஆர்வத்துடன் ஜன்னல் அருகே நின்றுகொண்டு மழையின் அழகை அவர்கள் ஒரு நொடியேனும் ரசிப்பார்கள். “நல்ல மழை. வெயில் குறையும்” என்று மழைக்கு உள்ளிருந்து ஆதரவு கொடுப்பார்கள். இப்படி மழையில் நனையாமலே அதைப் பற்றிச் சிலாகிப்பவர்கள், வெயிலில் நடந்து கொண்டே அதைத் தூற்றுவார்கள். மழை, கவிதை எழுத வைக்கும். வெயில் புலம்ப வைக்கும்! 

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடுத்த நூற்றாண்டில் மனித இனத்திற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கப்போவது இந்த வெயில்தான். ஜுரம் வந்த பூமிக்கு உரிமையாளர்களான நாம் இதுவரை எந்த வைத்தியமும் செய்யாததால் வருடா வருடம் அதன் வெப்ப நிலை வெப்பமானியின் மெர்குரியை அதன் அதிகபட்ச நிலையிலேயே வைத்து அலறச் செய்து கொண்டிருக்கிறது. உலகின் வெப்பமான வருடங்கள் பட்டியலில் பத்தில் ஒன்பது வருடங்கள், கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகே வந்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் கூறும் தரவுகளின்படி, பூமி தனது பனிப்போர்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. கடலில் அதைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த நூறு வருடங்களில், இதனால் கடல் நீர் மட்டம் ஏழு அங்குலங்கள் (178 மிமீ) உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடின் அளவும் காற்றில் அதிகரித்துள்ளது.
வெப்பநிலையும் உயிரினங்களும்

பூமியின் ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு வெப்பநிலை உண்டு. அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அங்கிருக்கும் உயிரினங்கள் (மனிதர்கள் உட்பட), தாவரங்கள் தங்கள் உடல் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும். சிலவகை தாவரங்கள், பூமியின் குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர வேறு எங்கும் இருக்காது. இதற்குக் காரணம், அந்தத் தாவரம், அந்த வெப்பநிலையில் மட்டுமே உயிர் வாழும் திறன் கொண்டது. இது சில வகை மிருகங்களுக்கும் பொருந்தும். 

மனிதர்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட எல்லைவரை, வெளியிலிருக்கும் வெப்பநிலைக்கு ஏற்ப உடல் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். நம் உடல்களின் உயிரியல் கடிகாரங்கள் மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ளாது. உதாரணத்திற்கு உங்கள் உடல் தினமும் மாலை ஆறு மணிக்கு அலுவலக ஏ.சி அறையிலிருந்து வெளியேறி இரவு ஏழு மணிக்கு உங்கள் வீட்டின் சீதோஷ்ண நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, உங்கள் உடல் அதற்கு ஏற்றவாறு அதைத் தகவமைத்து கொள்ளும். நாளடைவில் இரவு ஏழு மணி ஆனதும் உங்கள் உடல், உங்கள் வீட்டு வெப்பத்திற்கு ஏங்க ஆரம்பிக்கும். நீங்கள் திடீரென அன்று ஓவர்டைம் பார்த்தால், மனச்சோர்வு ஏற்படக்கூடும். மலைப்பிரதேசங் களில் வாழ்பவர்களின் உடல்கள் அங்கிருக்கும் குளிருக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்தி வைத்திருக்கும். இதனால்தான், அவர்கள் சென்னை போன்ற வெப்ப நகரங்களுக்கு வேலை கிடைத்து வரும்போது அங்கிருக்கும் சூட்டைத் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சரும நோய் போன்ற பிரச்னைகளைத் தருவித்துக் கொள்கின்றனர்.

வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? 

வெயிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமக் கேடுகள். நம்மில் பெரும்பாலானோர் சுத்தமாக இருப்பதையே விரும்புகிறோம். வியர்வை, துர்நாற்றம் போன்றவை சுற்றி இருப்பவர்களுக்குச் செய்தி அனுப்பாமல் இருக்க, வாசனைத் திரவியங்களை உபயோகிக்கிறோம். சங்கிலி போல உருவாகும் இந்தச் சங்கதிகள்தான் வெயில் நமக்குத் தரும் எரிச்சலூட்டும் தண்டனைகள். ஆனால், இதோடு வெயிலின் உளவியல் ரீதியான கோரத்தாண்டவம் நிற்பதில்லை. வெப்பத்தினால் அதீத மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. 

“வெயிலினால் உடல் ரீதியாக ஏற்படும் டீஹைட்ரேஷன் (உடல் வறட்சி) போன்ற பிரச்னைகளைத் தாண்டி மன ரீதியாகவும் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும்’’ என்கிற தகவலுடன் ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. வெயிலுக்கும் மனநிலைக்குமான தொடர்பு பற்றி அவர் பகிரும் தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

‘‘மேலை நாடுகளில், பருவ காலங்களுக்கும் மனித மனநிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து நிறைய ஆய்வுகள் உண்டு. முக்கியமாக, உஷ்ணமான சீதோஷ்ண நிலை இருக்கும்போது ஒருவித எரிச்சலுடனே நாம் எல்லாக் காரியங்களையும் அணுகுவோம். வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வு, மனச்சோர்விற்கும் வழி வகுக்கும். மற்ற நாள்களைப்போல நம்முடைய பணிகளை இயல்பாக முடிக்க முடியாமல் போவதால், இது நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக வெயில் மேல் நமக்கு ஏற்படும் கோபத்தை நாம் மற்றவர்களின் மீது வெளிப்படையாகக் காட்டி விடுகிறோம். இத்தகைய சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, நம்முடைய நாள்களைத் திட்டமிடுதல் என்பது கோடைக்காலத்தில் அவசியமான ஒன்றாகிறது. 

வெயில் தொடங்கும் முன்னரே அலுவலகத்திற்குப் பயணம் செய்வது; வெயில், வாகனப்புகை, காற்று மாசு போன்றவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது போன்றவை பலன் தரும். முன்னர் நாம் ஒரே மூச்சில் செய்து வந்த ஒரு வேலையை வெயில் காலத்தின்போது அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம். அதற்காக எரிச்சலோ, கோபமோ படாமல் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்வது நலம். டீ, காபி போன்றவற்றுக்குப் பதிலாகப் பழச்சாறுகள் குடிப்பது நமக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். டயட் விஷயத்திலும் கவனம் செலுத்தி நீர்ச்சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல்நலமும் மன நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”.

வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது என்பது இயலாத காரியம்தான். ஆனால், வரப்போகும் வெயிலுக்கு ஏற்றவாறு நம் உடலைத் தகவமைத்துக் கொள்வது என்பது எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று, செய்யக் கூடிய ஒன்று. முக்கியமாகச் சரும நோய்கள் அதிகம் ஏற்படும் காலம் இதுதான். அது போல, வேலை செய்யும் இடத்தில் 20 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமும், 35 முதல் 60 சதவிகிதம் வரை ஈரப்பதமும் இருந்தால் மட்டுமே நாம் சிரமமின்றி வேலை செய்ய முடியும். உங்கள் உடலால் ஓரளவிற்குத்தான் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு தன் தேவைகளை மாற்றிக் கொள்ள முடியும். அதைத் தாண்டினால் சருமப் பிரச்னைகளில் ஆரம்பித்துப் பல்வேறு தீங்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இந்தப் பிரச்னைகளை எப்படித் தவிர்க்கலாம்? சரும நோய் மருத்துவர் பிரபாவதி விளக்குகிறார்.

“வெயில் காலத்தின்போது இரண்டு வகைப் பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். ஒன்று எல்லோருக்கும் ஏற்படும் வியர்க்குரு, படர்தாமரை, தேமல் போன்ற பொதுவான சருமப் பிரச்னைகள்.  வெயில் காலம் அதன் உச்சத்தில் இருக்கும்போது இவை சர்வ சாதாரணமாக ஏற்படும். அதிக நேரம் வெயிலில் செலவழித்தால் வெங்குரு எனப்படும் சரும வெடிப்புகள் ஏற்படும். இதற்குக் காரணம் சூரியனில் இருந்து அதிக அளவில் வெளியேறும் புற ஊதாக் கதிர்கள்தான். அடிக்கும் வெயில் ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொருவரின் உடல் தன்மையைப் பொறுத்தே பாதிப்பின் வீரியம் இருக்கும். இதிலிருந்து காத்துக்கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். இதன் முக்கியப் பணியே, நம் சருமத்திற்கும் சூரிய ஒளிக்கும் இடையே ஒரு தடையாக இருப்பதுதான். அதிலும் ரிஃப்ளெக்டார் (Reflector) வகை க்ரீம்கள் விசேஷமானவை. அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் சூரிய ஒளி நம் சருமத்தை பாதிக்காதபடி திருப்பி அனுப்பி விடுகின்றன. முக்கியமாக, துத்தநாகம் (Zinc) கலந்த க்ரீம்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலன்களைத் தரும். இதனால் பின் விளைவுகள், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. நீங்கள் எந்த வகை க்ரீம்களை உபயோகித்தாலும் அதன் ஆயுள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்தான். அதன் பிறகு, மீண்டும் அதை உபயோகப்படுத்த வேண்டும். 

வெயிலில் அலைந்தால் சருமம் கறுத்துப்போவது இயற்கைதான். அப்படி நிகழ்ந்தால்தான் உங்கள் எதிர்ப்பு சக்தி நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். இந்தக் கருமைதான் அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. வெயில் காலம் முடிந்தவுடன் சருமம் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இதுதவிர ஒரு சாராருக்கு மட்டும் ஏற்படும் பாதிப்புகளும் உண்டு. அவர்களின் உடல் வெயிலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாது. அப்படிச் செய்து கொண்டாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும், அல்லது திரும்பவே திரும்பாது. ஒரு சில வினோத சரும நோய்கள் உள்ளவர்களுக்கு இப்படித்தான் வெயிலுக்குப் பிறகு சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பாது. சருமப் புற்றுநோய் போன்றவை இதன் தொடர்ச்சிதான். முறையான மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிலைமை மோசமாவதைத் தவிர்க்கலாம்” என்கிறார் பிரபாவதி.

இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக்கொள்ளும் வழிகள்
ஏ.சியை நீங்கள் எந்த அளவிற்குக் குளிராக வைத்திருக்கிறீர்களோ அந்த அளவு அது அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். அறையிலுள்ள உங்களின் உடலை மட்டும் அது சும்மா விட்டு விடுமா என்ன? உங்கள் உடலில் தேவையான அளவு இருக்கும் ஈரப்பதத்தையும் அது உறிஞ்சி விடும். இது உங்களுக்கு உடல் சோர்வை ஏற்படுத்தும். முறையாக ஏ.சியைப் பராமரிக்கவில்லை என்றால்கூட அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து அழுக்கு, தூசி போன்றவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

காலை முதல் மாலை வரை ஏ.சி குளிரில் செலவு செய்வதால் உடல் சுறுசுறுப்பை இழக்க நேரிடும். குளிரிலேயே இருந்து பழகிவிட்டால் பின்னர் குறைவான வெயிலைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். திடீரென வெப்பநிலை மாற்றம் ஏற்படும் போது அதை உடல் ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வாமை, சுவாசம் சீரின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அதிகநேரம் செலவழிக்க வேண்டாம். காரணம், அது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைவாகவே வைத்திருக்கும். அதற்காக ஏ.சி பயன்படுத்தவே கூடாது என்றில்லை. அதிகக் குளிர் இல்லாமல் மிதமான வெப்பத்தில் பயன்படுத்துதல் நலம்.

இதற்கு மாற்றாக, உங்கள் வீட்டைச் சுற்றி நிறைய செடிகள், மரங்கள் இருப்பது போலப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடு இருக்கும் சுற்றுப்புறத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்தி விட்டாலே, நீங்கள் இரவின் இயற்கைக் காற்றில் ஜன்னலைத் திறந்து வைத்து உறங்கலாம். ஏ.சியின் தேவையே இருக்காது. எப்போதும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால், வெயில் காலத்தைச் சுலபமாகக் கடந்து விடலாம்.

- ர.சீனிவாசன்

வியர்வை எதனால் ஏற்படுகிறது?

நாம் இருக்கும் இடத்தின் வெப்பநிலை உயரும் போது, நம் உடலின் வெப்பநிலையும் உயருகிறது. உடனே அந்த அதீத வெப்பநிலையைச் சீர்ப்படுத்த, நம் உடல் ஒரு தெர்மோஸ்டாட் போலச் செயல்பட தொடங்கும். நம் இதயம் அதிக அளவில் ரத்தத்தைப் பம்ப் செய்யத் தொடங்கும். இதனால் நம் சருமத்தில் வியர்வை உற்பத்தியாகிறது. சுற்றி இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு நம் உடல் ஈடுகொடுக்க முடியாதபோது அது வெப்பம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.

வெப்பத்தால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?

* நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு வெப்பநிலை உருவாகும்போது பிரச்னைகள் தலைதூக்குகின்றன. இது உடல் ஆரோக்கியத்தைச் சீர்குலைப்பதோடு நம் அன்றாடச் செயல்களையும் செய்ய விடாமல் தடுக்கின்றது. 

* வெப்பநிலை உயரும் போது உடலிலும், மனதிலும் எரிச்சல் அதிகமாகும். இது பின்னர் கோபமாக வெளிப்படும்.

* கவனக்குறைவு ஏற்படும். யோசித்துச் செயல்பட உடல் மறுக்கும்.

* அதிகத்திறனை எதிர்பார்க்கும் வேலைகள், கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் போகும்.

வெப்பப் பக்கவாதம் (Heat Stroke) என்றால் என்ன?

அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளில் மிகவும் ஆபத்தானது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பப் பக்கவாதம். இது நிகழும்போது ஒருவரின் உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும். முழுவதுமாக அல்லது அரைகுறையாகச் சுயநினைவை இழந்திருப்பார்கள். பல நேரங்களில் இந்த வெப்பப் பக்கவாதம் நிகழும் போது வியர்வை பெரிய அளவில் சுரக்காது. முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். உடனே இதற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிரை இழக்கும் நிலைகூட ஏற்படலாம்.
அறிகுறிகள்

* எரிச்சல், சருமம் வறட்சி.

* தலைச்சுற்றல், மயக்க நிலை, தள்ளாடும் நிலை.

* தலைவலி, குழப்பம்.

* சோர்வு.

* தண்ணீர் குடித்தும் அடங்காத தாகம். 

* அதிக உடல் வெப்பநிலை.

* வலிப்பு.

என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்?

* உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும். உதவி வரும் வரை கட்டாயம் ஒருவர் அருகில் இருக்க வேண்டும்.

* மிகவும் குளிர்ந்த, நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஷூ, சாக்ஸ், மேலாடை போன்ற தேவையற்ற உடைகளை அகற்றி விடவும். 

* குளிர்ந்த நீரில் நனைத்த துணி அல்லது ஐஸ்கட்டிகள் கொண்டு தலை, முகம் மற்றும் கழுத்திற்கு அழுத்தம் கொடுக்கவும். குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து விடவும்.

* தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

No comments:

Post a Comment