Thursday 22 June 2017

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் - திருவாரூர்



மூலவர்: சகலபுவனேஸ்வரர் , மேகநாத சுவாமி

உற்சவர்: பஞ்சமூர்த்தி

அம்மன்: மேகலாம்பிகை, சவுந்தரநாயகி , லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)

தல விருட்சம்: மந்தாரை, வில்வம்

தீர்த்தம்: சூரியபுஷ்கரிணி , காளி தீர்த்தம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருமீயச்சூர் இளங்கோயில்

ஊர்: திருமீயச்சூர் இளங்கோயில்

பாடியவர்கள்:
திருநாவுக்கரசர்

🦋 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 56 மற்றும் 57வது தலம்.🦋

🅱 தேவாரபதிகம்🅱

பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள்அக லாரிளங் கோயிலே.
திருநாவுக்கரசர்

🅱 திருவிழா:🅱

🌺 தை மாத ரத சப்தமி சிறப்பாக கொண்டாட படுகிறது.

🌺 சிவபெருமானுக் குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கிறது.  

🅱 தல சிறப்பு:🅱

🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள்.

🎭 வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு.

🎭 சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

🎭 சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார்.(கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு.)

🎭 இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை.   மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.

🎭 சனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம்.

🎭 சேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது.

🎭 இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.  

🎭 இத்திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது.

🎭 இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன.

🎭  இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோயில் திருப்பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

🎭 சூரிய பகவான், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை, அகத்திய முனிவர், என்று இவர்களோடு அல்லாமல் , எமன் இக்கோயிலிலேயே தங்கி எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்து பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

🎭 சங்கநிதி, பதுமநிதியுடன் மகாலட்சுமிதேவி அருள்புரியும் தலம்.

🎭 சூரியனும், பைரவனும் தனிச்சன்னிதியுடன் காட்சி தரும் தலம்.

🎭 அகத்தியர் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை அருளிய தலம்.

🎭 அம்பாள் சன்னிதி ஒரு ராஜ தர்பார் நடக்குமிடம் போன்று பொலிவுற காட்சியளிக்கிறது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 120 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடை திறப்பு :🅱

🗝 காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 🗝

🅱 பொது தகவல்:🅱

🌞 குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். ஒருவர் கோபப் படும்போதும் எந்நேரத்திலும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டும். உலகில் எல்லா உயிர்களும் சமம்தான் என்ற அகந்தையின்றி வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழலாம் என்பது இத்தலத்தில் உள்ள விக்கிரகங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும்.

🔵 திருமீயச்சூர் பெருங்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது.

🅱 லலிதாம்பிகை திருக்கோயில் குறிப்பு: 🅱

🔵 இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன.

🔵 முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது.

🔵 அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார்.

🔵 முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.

🔵 இக்கோயில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது.

🔵 இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

🔵 இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஈஸ்வரனக்குத் தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.

🔵 இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம்.

🔵 இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன.

🔵 இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.

🔵 இத்திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

🔵 கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோயிலின் சுற்றுச் சுவர்களில் லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது.

🅱 இளங்கோயிலின் குறிப்பு: 🅱

🔴 இக்கோயிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர் உள்ளனர். தலவிநாயகர், சண்டிகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், பைரவர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

🔴 இத்திருக்கோயில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

🔴 இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும் என்பதை இக்கோயிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

🅱 பிரார்த்தனை:🅱

🔥 இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.

⭕ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.

💧 பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் லலிதாம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
👉🏽 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

💎 பிரார்த்தனை நிறைவேறியதும் லலிதாம்பிகைக்கு கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.

🅱 தலபெருமை:🅱

👉🏽 மூலவர் சகல புவனேஸ்வரர் சுயம்புலிங்கமாக உள்ளார்.

👉🏽 இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

👉🏽 ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு.

👉🏽 பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

⭕ ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான்.

🔵 இது காளிதேவி பூஜித்த தலம்.

🅱 அருணனின் கதை:🅱

💥 சூரியனின் தேரோட்டி யார் என்றால் "அருணன்' என்பீர்கள். இவரது கதையை மியச்சூரில் தான் கேட்க முடியும்.

🍁 காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விட்டது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ''நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்'' என்று கூறினார்.

🍁 இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள்.

🍁 சிவபிரானும், ''நான் சொல்லியது போல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்'' என்று கூறினார்.

🍁 இந்நிலையில் கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான்.

🍁 இருப்பதிலேயே மிகப் பெரிய பாவம், இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும்  ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான் !

🍁 ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி  ஏளனம் செய்வதும் மகாபாவம்.  சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும்  செய்தார்!

🦋 சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு  திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம்.  சூரியனிடம்  அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான்.

🦋  சிவபக்தியில்  திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்;  மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன்.  இதில் உருவானவன் தான் வாலி.

🦋  எண்ணம்  ஈடேறியது.  சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன்,  சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே  மாறிக்காட்டு' என்றார்.

🦋 அருணன், மோகினியாக மாறினான்.  அழகில் சூரியனை மயக்கினான்.  விளைவு.. சுக்ரீவன்  பிறந்தான்.

🦋 தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா,  சிவனார்? சூரியனைச் சபித்தார்.  இருளடைந்து போனார் சூரியனார்.

🍄  ஏழு மாதங்கள்,  மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்'  என அருளினார்.  இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை  வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே,  சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' என்று  கேட்க...

🍄 வெகுண்டாள் ஸ்ரீபார்வதி.   'உரிய ‍‌‌‍‌நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?' என்று கடும்  உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள்.  பதறிப்போன சிவனார், 'எற்கெனவே  கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன்.  இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம்  இருளில் விழிபிதுங்கித் தவிக்கும்.  வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார்.  அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!  சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறார், அந்தத் திருத்தலம், திருமீயச்சூர்  எனப்படும்.

🍁 அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார். அன்னையின் திருவாயிலிருந்து வசினீ என்ற தேவதைகள் தோன்றி அவர்கள் துதித்த பாடல்களே சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் எனப் படுகிறது.

🍁 அம்பாளே அருளிச் செய்ததால் லலிதா சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகிறது.

🌷 ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீ லலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார்.

🌷 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார்.

🌷 அவ்வாறே அகத்தியரும் இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து பூரண பலனைப் பெற்றார்.

🌷 அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார்.

🌷 பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

🔥 அமர்ந்த திருக்கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார் இத்தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை.

🔥 நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று விடுவோம் அன்னை லலிதாம்பிகையின் திருமுகத்தைக் காணும்போது.

🔥 அன்னையைக் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும்.

🔥 அன்னை லலிதாம்பிகை பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி என எல்லோரும் இணைந்த வடிவமாகத் திகழ்பவள்.

🅱 கொலுசு கேட்ட லலிதாம்பிகை : 🅱

🔥 சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை பல ஆபரணங்கள் அணிந்த அன்னை, தனது பக்தை ஒருவரிடம் கொலுசு வாங்கி போட்டுக் கொண்டுள்ள அதிசயமும் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ளது.

🔥 பக்தையின் கனவில் தோன்றிய அன்னை தான் எல்லாவிதமான அணிகலன்களையும் அணிந்துள்ளதாகவும், கொலுசு மட்டும் அணியவில்லை, அதனை தனக்கு அணிவிக்குமாறு கூறிச் சென்றுள்ளார். இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அந்த, பெரும் புண்ணியம் செய்த பக்தை அழகு கொலுசினை செய்து கொண்டு ஊர் ஊராக அலைந்து கடைசியாக, திருமீயச்சூர் வந்துள்ளார். இங்கு வந்து கோயில் சார்ந்தவர்களிடம் இந்தச் செய்தியினை அவர் கூற அவர்கள் நம்பவில்லை. அந்தப் பெண்மணியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அன்னையின் காலின் சுற்றுப் பகுதியில் கொலுசு அணிவிக்க வசதியாக துளை ஏதும் உள்ளதா என ஆராய்ந்துள்ளனர்.

🔥 பல காலம் அன்னைக்கு செய்த அபிஷேகங்களினால், அந்தப் பொருட்கள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து, கொலுசிட துவாரம் உள்ளதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்து கொண்டு அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர். தான் பிறந்த பலனையும் அடைந்ததாக கொலுசிட்ட பெண்ணும் மகிழ்ந்தார்.

🔥 பரபிரும்மத்தின் சக்திகள் அனைத்து இணைந்த வடிவமாகவே துதிக்கப் படுகிறாள் அன்னை லலிதாம்பிகை. இத்தலத்தில் லலிதாம்பிகையிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்தான் ஸ்ரீ ஹயக்ரீவர்.

🔥 அகத்தியரின் மனைவி இங்கு வந்து அன்னையை வழிபட்ட போது , அவருக்கு அம்பாள் நவரத்தினங்கள் வடிவில் காட்சி தந்தார். இதன் காரணமாகவே அகத்தியர் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே எனத் தொடங்கும் லலிதா நவரத்தின மாலையை அருளிச் செய்து நல்ல பலன்களைப் பெற்றார்.

🔥 இத்திருத்தலத்தில் காணப்படும் அன்னையின் திருவுருவத்தை, வடிவத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்பது இத்தலத்தின் பெருஞ்சிறப்பு.

🍁 சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத் திருத்தலம் மீயச்சூர் என அழைக்கப்படுகிறது.

☔ ஸ்ரீசக்ர நாயகி
அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும்  உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு.

🅱 இரண்டு லிங்கம்:🅱

🔴 இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர்.

⛅ அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

🅱 பிரண்டை சாத நைவேத்தியம்.🅱

🌷 நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக் கூட்டும் சக்தி உள்ளது என்பதால், சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளைத் தரவல்ல சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டை கலந்த சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இக்கோயில் ஐதீகம்.

🌹 பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம்.

🅱 தல வரலாறு:🅱

🍄 பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் தங்களை காத்தருளும்படி அன்னை பராசக்தியை வேண்டினர்.

🦋 அசுரனை அழிப்பதற்காக தேவியானவள், ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ரத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அரக்கனுடன் கடுமையாக போர்புரிந்து அவனை அழித்தாள்.

🔵 உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக "மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.

🌤 அன்னையும் திருமீயச்சூருக்கு வந்து தவம் செய்து சாந்தமானாள்.

🐚 அப்போது அங்கு சாப விமோசனத்திற்காக தவம் இருந்த சூரியன், சிவபெருமான் வர காலதாமதமானதால் 'வகுரா' என கத்துகிறான். 'வகுரா' என்பது திருமீயச்சூர் இறைவனின் பெயர்.

🌺 இது பார்வதிக்கு சினத்தை மூட்டியது. 'சூரியன் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன்' என்று கூறி பார்வதியை சமாதானப்படுத்தினார் சிவபெருமான்.

🍁 அன்னையின் கோபத்தை தணிக்க, வகினி தேவதைகள் ஆயிரம் திருநாமங்களால் லலிதா சகஸ்ரநாமத்தை பாடினர். இதுவே லலிதா சகஸ்ரநாமம் ஆயிற்று.

🅱 சிறப்பம்சம்:🅱

🌿 அதிசயத்தின் அடிப்படையில்:

👉🏽 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார்.

👉🏽 ஏனைய சிவன் கோவில்களைக் காட்டிலும் இந்தக் கோயிலில் அம்மனை தரிசித்துவிட்டுதான் சிவனை தரிசிக்கவேண்டும் என்று ஐதீகம் உள்ளது.

👉🏽 திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீமேகநாதசுவாமி, ஸ்ரீசகலபுவனேஸ்வரர் ஆகிய இரண்டு சிவன் சன்னிதிகள் ஒருங்கே கொண்ட தலம் இது.

🅱 இருப்பிடம்:🅱

🚗 மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் திருமியச்சூர் உள்ளது.

🚗 மயிலாடுதுறையில் இருந்து பேரளத்திற்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.


No comments:

Post a Comment