Friday, 12 May 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.7



வித்தியா தத்துவங்களைக் கூறத் தொடங்குதல்

17. ஓதியிடும் நாலாறும் உற்றான்ம தத்துவம் என்று

ஆதி அருள்நூல் அறையுங்காண்; தீதறவே

வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள்

உத்தமனே நன்றா உனக்கு.


பதவுரை

ஓதியிடும் இதுவரை சொன்ன

நால் ஆறும் இருபத்து நான்கு தத்துவங்களும்

உற்ற உயிர்க்கு நுகர்ச்சியாகப் பொருந்திய

ஆன்ம தத்துவம் என்று ஆன்ம தத்துவம் என்று

ஆதி அருள் நூல் சிவபிரான் அருளிச் செய்த ஆகம நூல்

அறையும் கூறும்

தீது அறவே இனி, உனது மயக்கம் நீங்கும் படியாக

வித்தியா தத்துவங்கள் தம்மை வித்தியா தத்துவங்களின் இயல்பை

உனக்கு உனக்கு

நன்றா ஐயமற

விளம்ப யாம் சொல்ல

உத்தமனே நன்மாணாக்கனே,

கேள் கேட்பாயாக.




பொழிப்புரை

இதுவரை யாம் விளக்கிக் கூறிய பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களையும் ஆன்ம தத்துவங்கள் என்று சிவாகமங்கள் குறிப்பிடும்.




நன்மாணாக்கனே! இனி, வித்தியா தத்துவங்களை உனக்கு உரைப்போம். கேட்பாயாக.




வித்தியா தத்துவங்களின் பெயர்

18. காலம்நியதி கருதும் கலை வித்தை

ஏல அராகம்புருடனே மாயை மால் அறவே

சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம்உண்மை

உன்னி உரைக்கும் நாம் உற்று




பதவுரை

காலம் காலமும்

நியதி நியதியும்

கருதும் கலை ஆராய்ந்து கொள்ளத்தக்க கலையும்

வித்தை வித்தையும்

ஏல அராகம் பொருந்திய அராகமும்

புருடன் புருடனும்

மாயை மாயையும் என




(வித்தியா தத்துவங்களை)

மால் அற மயக்கம் நீங்க

அடைவாக வரிசைப்படுத்தி

சொன்னோம் கூறினோம்

சொன்ன இவ்வாறு பெயர் அளவில் சொல்லிய

இவை தன் உண்மை இத்தத்துவங்களின் இயல்பை

நாம் யாம்

உன்னி (உனக்கு விளங்கச் சொல்லும் முறையை) நினைந்து

உற்று அதனைக் கடைப்பிடித்து

உரைக்கும் கூறுவோம்




பொழிப்புரை

காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்னும் ஏழும் வித்தியா தத்துவங்கள் ஆகும். இவற்றின் இயல்பை இனி உரைப்போம்.




வித்தியா தத்துவங்களின் தொழில்

19. எல்லைபலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்

அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு ஒல்லை

அறிவு ஆசைஐம்புலனும் ஆரவரும் காலம்

குறியா மயக்குஎன்று கொள்.




பதவுரை (காலம் செய்யும் தொழிலாவது)

எல்லை இறந்த காலமாய் நின்று, வினைகளை நுகர்ச்சியினால் கழியச் செய்தல்.

பலம் நிகழ்காலமாய் நின்று, உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகரச் செய்தல்.

புதுமை எதிர்காலமாய் நின்று, வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்தல்.




(நியதி செய்யும் தொழிலாவது)

எப்போதும் நிச்சயித்தல் எப்போதும் வினைப்பயன் அதனைச் செய்த உயிரையே சாருமாறு நியமித்தல்.

(கலை செய்யும் தொழிலாவது)

ஆன்மாவுக்கு உயிருக்கு

அல்லல் தரும் வினைகளை ஈட்டித் துன்புறுதற்கு ஏதுவாகும்படி

கிரியை அதன் கிரியாசத்தியாகிய செயலாற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(வித்தை செய்யும் தொழிலாவது)

ஒல்லை விரைந்து

அறிவு அதன் ஞானசத்தியாக அறிவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(அராகம் செய்யும் தொழிலாவது)

ஆசை அதன் இச்சா சத்தியாகிய விழைவு ஆற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.




(புருடன் என்பது)

ஐம்புலனும் (உயிர் மேற்கூறிய ஐந்தோடும் கூடி நின்று) ஐம்புலன்களையும்

ஆர வரும் காலம் நுகர்தற்குத் தகுதி பெற்ற காலத்தில் அந்நிலையில் வழங்கும் பெயராகும்.




(மாயை என்பது)

குறியா மயக்கு உயிரின் அறிவு இச்சை செயல் ஆகிய மூன்றும் பிரிந்து தோன்றுதல் இன்றி, ஒன்றையும் குறியாத, பொதுவான மயங்குநிலையை உயிருக்குத் தருவது என்று கொள் என்று இவ்வாறு உணர்ந்துகொள்.




பொழிப்புரை

உயிருக்கு வினைப் பயன்களை இத்துணைப் பொழுது என வரையறுப்பது காலம் அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாகி நிற்கும். அவற்றுள் இறந்தகாலம் வினைகளை நுகர்ச்சியினால் கழியச்செய்து உயிரை அவ்வினையினின்றும் பிரிக்கும். இதுவே எல்லை எனப்பட்டது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகர்விக்கும் இதுவே பலம் எனப்பட்டது. எதிர்காலம் வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்யும். இதுவே புதுமை எனப்பட்டது.




நியதி எப்போதும் வினைப்பயன் அதனைச் செய்த உயிரையே சாருமாறு நியமிக்கும். இதுவே நிச்சயித்தல் எனப்பட்டது. கலை, உயிரின் செயலாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும்; வித்தை அறிவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும். அராகம் விழைவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும். உயிர் இவ்வைந்தோடும் கூடி நின்று விடயங்களை நுகரும் தகுதி பெற்ற காலத்தில் புருடன் எனப்பெயர் பெறும். மாயை மயக்குதலைச் செய்யும்.




விளக்கம்

முந்திய செய்யுளில் வித்தியா தத்துவங்களின் பெயர்களை வரிசைப்படக் கூறிய ஆசிரியர், இச்செய்யுளில் அவை செய்யும் தொழிலை அதே வரிசை முறையில் நிறுத்திக் கூறியுள்ளார். எனவே அவற்றைப் பின்வருமாறு அமைத்துக் கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்.




வித்தியாதத்துவம் தொழில்

1. காலம் இறந்தகாலம் எல்லை

நிகழ்காலம் பலம்

எதிர்காலம் புதுமை

2. நியதி எப்போதும் நிச்சயித்தல்

3. கலை கிரியை விளங்கச் செய்தல்

4. வித்தை அறிவு விளங்கச் செய்தல்

5. அராகம் ஆசை விளங்கச் செய்தல்

6. புருடன் ஐம்புலனும் ஆரவரும் காலம்

7. மாயை மயக்குதல்




இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்கள் 5




வித்தியா தத்துவங்கள் ஏழினையும் ஆசிரியர் விளக்கிய முறையில் இதுகாறும் அறிந்தோம். அவை உயிரின் அறிவாற்றல், விழைவாற்றல், செயலாற்றல்களை மலத்தடையிலிருந்து நீங்கி எழுப்பி உயிரை உலக நுகர்ச்சியில் நோக்குடையதாகச் செய்யும் எனக் கண்டோம். ஆயின் அக்கருவிகள் தாமே சுதந்திரமாகச் செயற்படா. இறைவனது சத்தியே அவற்றைச் செலுத்தி நிற்கும்.




இறைவனது சத்தி பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டும். அது எதனையும் நேராகச் செய்யாது. ஒன்றை நிலைக்களமாகக் கொண்டு நின்றே செய்யும். நெருப்பு ஒரு பொருளில் தங்கி நின்று தன் தொழிலைச் செய்யுமேயன்றி அது தனித்து நிற்பதில்லை. அது விறகு, நெருப்புக்குச்சி முதலியவற்றுள் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு நிற்கிறது. அதுபோல இறைவனது சத்தி நின்று தொழிற்படுவதற்கு ஓர் ஆதாரம் நிலைக்களம் வேண்டும். அந்த நிலைக்களம் எது? தூய்மையற்ற அசுத்த மாயை தூயதாகிய இறைவனது சத்திக்கு நிலைக்களம் ஆகாது. எனவே சுத்த மாயையே அதற்கு நிலைக்களம் ஆவது என்பது விளங்கும்.




இறைவனது சத்தி சுத்த மாயையிற் பொருந்தி ஐந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கும். அவை சிவம், சத்தி, சதாசிவம், (அல்லது சாதாக்கியம்), ஈசுரம், சுத்தவித்தை என்பன. இவ்வைந்துமே இறைவனது சத்திக்கு நிலைக்களமாய் அமைவன இத்தத்துவங்கள் சுத்த மாயையில் தோன்றும் முறையைக் காண்போம்.




விருத்தி

பிரகிருதியிலும், அசுத்த மாயையிலும் தோன்றும் காரியங்கள் எல்லாம் பரிணாமமாய்த் தோன்றுவன என அறிந்தோம். ஆயின், சுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் அவ்வாறு பரிணமித்துத் தோன்றுவன அல்ல. அவை விருத்திப்பட்டுத் தோன்றுவனவாகும். விருத்தி என்றால் என்ன? என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம். சுருங்கி நிற்பது விரிவடைதல் விருத்தி எனப்படும். எடுத்துக் காட்டினால் இதனை விளக்கலாம். சர்க்கஸ் நடத்துவோர் அக் காட்சிக்கென்று பெரிய கூடாரங்களை அமைப்பர். மடித்து வைத்திருந்த முரட்டுத் துணிகளை விரித்துக் கால்களை நாட்டிக் கூடாரமாகச் செய்வர். முன்னே சுருங்கி நின்ற துணியே பின் விரிந்து கூடாரமாக மாறுகிறது. இம் மாற்றமே விருத்தி எனப்படும். சுத்த மாயையிலிருந்து இம்முறையில் விரிந்து தோன்றும் தத்துவங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டோம். அவை விரியும் முறை வருமாறு.




1. சிவதத்துவம்

முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.




2. சத்திதத்துவம்

இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில் அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.




3. சதாசிவ தத்துவம்

இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.




4. ஈசுர தத்துவம்

ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.




5. சுத்த வித்தியா தத்துவம்

கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.




சுத்த மாயை

(1. சிவம்(நாதம்) 2. சத்தி (விந்து) 3. சிதாசிவம் (சாதாக்கியம்) 4. ஈசுரம் 5. சுத்த வித்தை இவற்றைச் சுத்த மாயையிலிருந்து சிவபெருமானே நேரே தோற்றி ஒடுக்குவதால் இவை சிவதத்துவங்கள் எனப்படுகின்றன. சுத்த மாயையினின்றும் தோன்றிச் சுத்தமாய் இருத்தல் பற்றி இவை சுத்த தத்துவங்கள் என்றும் சொல்லப்படும். முன்னே சொன்னபடி இறைவனது சத்தி, சுத்த தத்துவங்களாகிய இவற்றை நிலைக்களமாகப் பற்றி நின்று இவற்றின் வழியாகக் கீழேயுள்ள ஏனைத் தத்துவங்களைச் செலுத்தி நிற்கும். செலுத்தும் கருவியாதல் பற்றி இத்தத்துவத் தொகுதி பிரேரக காண்டம் என்றும் சொல்லப்பெறும் பிரேரகம் செலுத்துவது.




சுத்த தத்துவங்களின் பெயர்

20. வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்

சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் நித்தமாம்

சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம் நல்

சத்திசிவம் காண் அவைகள் தாம்

பதவுரை

வித்தியா தத்துவங்கள் அசுத்த மாயையின் காரியமாகிய வித்தியா தத்துவங்கள்

ஏழும் ஏழினையும்

விளம்பினோம் இதுவரையில் விளக்கினோம்.

சுத்தமாம் தத்துவங்கள் இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்களின் இயல்பை

சொல்லக்கேள் கூறுகிறோம். கேட்பாயாக.

அவைகள் அத் தத்துவங்கள்

சுத்த வித்தை சுத்த வித்தையும்

ஈசுரம் ஈசுரமும்

பின் சொல்லும் அவற்றின் மேலாகச் சொல்லப்படும்

சதாசிவம் சிதாசிவமும்

நல்சத்தி நல்ல சத்தியும்

சிவம் சிவமும் என

காண் அறிவாயாக.




பொழிப்புரை

அசுத்த மாயையிலிருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் ஏழினையும் விளக்கிச் சொன்னோம். இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்களின் இயல்பை உனக்குக் கூறுகிறோம். அவை சுத்த தத்துவங்கள் எனப்படும். அவை சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் என்னும் பெயரை உடையன. அவை நித்தமாக உள்ளன.




சுத்த தத்துவங்களின் நிலை

21. சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம் தான்

அத்தன் தொழில் அதிகம் ஆக்கியிடும் ஒத்தவிவை

சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை

ஆதார ஞானஉரு ஆம்




பதவுரை

சுத்த வித்தை சுத்த வித்தை என்ற தத்துவம்

ஞானம் மிகும் இறைவனது ஞானசத்தி மிகுந்து, கிரியா சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.

தொன்மையாம் பழமையாகிய

ஈசுரம் ஈசுரதத்துவம்

அத்தன் தொழில் இறைவனது கிரியா சத்தி

அதிகம் ஆக்கியிடும் மேம்பட்டு நிற்க, ஞானசத்தி அடங்கி நிகழும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.

ஓத்தலிவை ஞானசத்தியும் கிரியாசத்தியும் ஆகிய இவை ஒத்து இணைந்து நிகழும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது.

சாதாக்கியம் சதாசிவ தத்துவமாகும்.

என்றும் எப்போதும்

சத்தி சத்தி தத்துவம்

கிரியை ஆதார உரு இறைவனது சத்தி கிரியை மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது.

சிவம் சிவ தத்துவம்

ஞான ஆதார உருவாம் இறைவனது சத்தி ஞானமேயாய் நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.




பொழிப்புரை

சிவசத்தி மூத்திறப்பட்டு விளங்கும். அவை இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி என்பன. இச்சை என்றும் ஒரே நிலையில் இருப்பது. ஏனைய ஞானமும் கிரியையும் ஆகியவற்றின் தொழிற்பாட்டில்தான் வேறுபாடு உள்ளது. ஞான சத்தி மிகுந்து, கிரியா சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது சுத்தவித்தை.




கிரியா சத்தி மிகுந்து, ஞான சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது ஈசுரம். ஞான சத்தியும் கிரியா சத்தியும் சமமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது சதாசிவம். இனி, சிவசத்தி கிரியை மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு கிரியையாய் நிற்கும் நிலைக்கு நிலைக்களமானது சத்தி தத்துவம். சிவசத்தி ஞானம் மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு ஞானமேயாய் நிற்கும் நிலைக்கு நிலைக்களமானது சிவதத்துவம். இவ்வாறு சிவசத்திக்கு இடமாய் உள்ளவை இச் சுத்ததத்துவங்கள் ஆகும்.




இனி, பாசமாகிய ஆணவமும் வினையும்

22. அறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக

மாறா மலம்இரண்டும் வாசொல்லக் கூறில்

அறியாமை ஆணவம் நீயானசுக துக்கம்

குறியா வினைஎன்று கொள்.




பதவுரை

ஆறாறு தத்துவமும் முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும்

அடைவாக முறையாக

சொன்னோம் விளக்கிக் கூறினோம்

(ஆணவம், கன்மம், மாயை என்ற பாசம் மூன்றனுள் இதுவரை மாயை பற்றிக் கூறிமுடித்தோம். இனி, எஞ்சியுள்ள)

மாறா உயிரை விட்டு நீங்காமல் தொடர்ந்து வரும்

மலம் இரண்டும் ஏனைய இரண்டு மலங்களின் இயல்பையும்

சொல்ல, வா யாம் கூறுவோம்; நீ கேட்க வருவாயாக.

கூறில் அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து

அறியாமை அறியாமையைத் தருவது

ஆணவம் ஆணவ மலமாகும்.

நீயான உன்னில் வேறாகப் பிரித்தறிய முடியாமல், உன் இயல்பாகவே நீ கண்டுவருகின்ற

சுக துக்கம் இன்பத் துன்பங்களைப் பயந்து நிற்பது

குறியா வினை எதிர்பாராத வகையில் வந்து பொருந்துகின்ற கன்ம மலமாகும்

என்று கொள் என்று அறிவாயாக.




பொழிப்புரை

இதுவரை முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகக் கூறி முடித்தோம். இனி, உயிரை விட்டு நீங்காதிருக்கும் ஆணவம், வினை என்னும் இரண்டு மலங்களின் இயல்பினை உனக்கு உரைப்போம். உனது அறிவை மறைத்து அறியாமையைத் தருவது ஆணவம்; உனக்கு இன்ப துன்ப நுகர்ச்சிகளைத் தருவது நல்வினை தீவினை என இரு வகைப்படும் வினையாகும் என்று அறிவாயாக.




விளக்கம்

ஆணவம்

உயிர்களாகிய நாம் அறிவுப் பொருள். அறிவுப் பொருளாகிய நம்மிடத்தில் அறியாமையும் இருக்கிறது. எவ்வாறெனில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுத் துன்புற்று வருகிறோம். ஆயினும், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தோம் என்பதையோ பிறவி நமக்குத் துன்பம் தருவது என்பதையோ உணராதிருக்கின்றோம். நாம் செய்த வினை காரணமாகவே பிறவியும் துன்பங்களும் வருகின்றன என்பதையும் நாம் உணர்வதில்லை. இப்பிறவியிலிருந்து நம்மை எடுத்துக் காத்துப் பேரின்பத்துள் வைக்கவல்ல இறைவனது திருவருளையும் நாம் அறியாமல் அதனைப் பற்றிச் சிறிம் கவலை கொள்ளாமல் வாழ்கின்றோம். அறிவுப் பொருளாக இருந்தும் நாம் பிறவித்துயர், வினை, திருவருள் முதலியவற்றை அறியாதிருக்கிறோம். இவற்றை அறியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?




அகவிருள்

காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காணவொட்டாதபடி இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அகவிருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. முன்னே கூறியபடி பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளேயாகும்.




அறியாமையே அறிவாகத் தோன்றுதல்

புறவிருள் வந்து கண்ணை மறைக்கும் போது கண் செயற்படாது போகிறது. உயிர் கண்ணுக்கு வேறாக இருப்பதனால் அக் கண் செயற்படாமையைக் கொண்டு அதனை மறைக்கக் கூடிய இருளாகிய பொருள் வந்துற்றது என்று உயிர் கருதி உணர்கிறது. இனி அகஇருளாகிய ஆணவமோ உயிரையே மறைத்து நிற்கிறது. அவ்வாறு மறைத்து நின்று அறியாமையை உண்டாக்குகிறது. உயிர் அவ்வறியாமையையே அறிவென்று நம்பி விடுகிறது. அதனாலேயே தன்னை ஒன்று மறைத்திருக்கிறது என்பதை எவ்வகையினாலும் உணர முடியாமற்போகிறது.




உலகில் இருள் வந்துற்றபோது அதனை உணர்ந்து அதனை நீக்கிக் கொள்ள வழி தேடுகிறோம். ஆணவ இருளினால் அறிவு மறைக்கப்படும் போது அம் மறைப்பினை நாம் உணர்வதில்லை. அதனால் ஏற்படும் அறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறோம். அதனாலேயே அறியாமையைப் போக்கிக் கொள்ள வழி தேடாமல் இருக்கிறோம். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். ஒரு குடும்பத்தலைவர் தமது மனைவி, மக்கள், உடன் பிறந்தார் பொருட்டு வாழ்நாளெல்லாம் பாடுபட்டுப் பொருள் ஈட்டினார். கடைசி காலத்தில் அவர்கள் தனக்குத் துணையாக இருப்பர் என்று உறுதியாக நம்பினார். ஆனால் நடந்தது என்ன? அவர் ஓய்வு பெற்ற பின்னர், அவருக்கு வருவாய் இல்லை என்று ஆன பின்னர், குடும்பத்தார் அவரிடம் நடந்து கொண்ட முறையில் அவர் வேறுபாட்டைக் கண்டார். தனக்கு உரிய மதிப்பினை அளிக்காமல் புறக்கணிக்கும் போக்கினைக் கண்டார். அவர்கள் கடைசி வரை தமக்குத் துணையாய் இருப்பர் என்று நம்பியது எவ்வளவு அறியாமை என்று எண்ணி வருந்தினார். இத்துணைக் காலமும் அவர் அறியாமையில் இருந்தார். ஆயினும் நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை அதற்குக் காரணம், அந்த அறியாமையே அவருக்கு அறிவாகத் தோன்றியதுதான்.




ஆணவம் செய்யும் முழுமறைப்பு

இனி அறியாமையிலே இரு நிலைகள் உள்ளன. ஒன்று பேரறியாமை; மற்றொன்று, ஓரளவில் அறியாமை பேரறியாமையாவது உயிர் யாதொன்றையும் அறியமாட்டாமல் முழுஅறியாமையில் மூழ்கியிருத்தல். அந்நிலையில் உயிர், தான் ஒரு பொருள் உண்டு எனத் தன் இருப்பையும் கூட அறியாது நிற்கும். நாம் உறங்குங் காலத்தில் இப்படிப்பட்ட பேரறியாமையே நமக்கு உண்டாகிறது அப்பொழுது ஐம்பொறி முதலிய கருவிகள் செயற்படாது போதலினால் அறிவு விளங்காமற் போகிறது. உயிர் அந்நிலையில் ஆணவமலத்தின் வயப்பட்டு விடுகிறது. இருள் வயப்பட்ட கண் ஒன்றையும் அறிய மாட்டால் திகைந்து நிற்பதுபோல உயிரும் உறக்கத்தில் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு முழு அறியாமை உடையதாய் நிற்கிறது. இப்படிப்பட்ட பேரறியாமை நிலை, கேவல நிலை எனப்படும். நாள்தோறும் நாம் இக் கேவல நிலையை அடைந்துவருகிறோம்.




ஆணவத்தால் உண்டாகும் மயக்கவுணர்வு

இனி ஓரளவில் உள்ள அறியாமை என்றால் என்ன? என்பதைக் கூறுவோம். எங்கும் செறிந்த இருளிடத்தில் ஒரு விளக்கை ஏற்றினால் அவ்விளக்கொளியில் இருள் சிறிது விலகுகிறது. ஆனால் அது முற்றிலும் நீங்கி விடவில்லை. நீங்காதிருக்கிற அந்த இருள் விளக்கொளியின் காரணமாக முன்பு போலப் பொருள்களை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. விளக்கொளியானது பொருள்களைப் புலப்படுத்துகிற போது இருளானது அந்த ஒளியோடு கலந்து பொருள்களை மங்கலாகப் புலப்படும்படி செய்கிறது. தரையில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு என்று தவறாகக் கருதும்படி செய்கிறது. இவ்வாறு இருள் ஒளியோடு சேர்ந்து பொருளின் இயல்பை வேறுபடுத்திக் காட்டுகிறது.




இந்தப் புறவிருளின் செய்கை போல அக இருளாகிய ஆணவத்தின் செயலும் அமைகிறது. ஆணவம் இருள் என்றால் அதனை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. நமக்கு வாய்த்துள்ள ஐம்பொறிகளும், மனம் புத்தி போன்றவையும் மாயையினின்றும் தோன்றிய கருவிகளே என்பது நாம் அறிந்தது. இக்கருவிகளின் செயற்பாட்டினால் அஃதாவது, மாயாமலத்தின் சேர்க்கையால் ஆணவ மலத்தின் சத்தி சிறிது விலகுகிறது. அறிவு விளங்குகிறது. மாயையின் காரணமாக ஆணவ இருள் முன்பு போல அறிவை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது இப்பொழுது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. மாயா கருவிகளால் விளங்கும் அறிவை விபரீத அறிவாக மாற்றி விடுகிறது. அஃதாவது அற்பமான பொருளை உயர்வானது என்றும், நிலையில்லாத பொருளை நிலைத்தது என்றும் இவ்வாறு மாறி உணரும்படியாகச் செய்து விடுகிறது. இவ்வாறு ஆணவ இருள் மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு மயக்க உணர்வை உண்டாக்குகிறது. நாமெல்லாம் நமக்கு வேறாகிய உடம்பையே நாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது மயக்க உணர்வு தானே. நமக்கென்று என்ன உடைமை இருக்கிறது? நாம் பிறக்கும் போது எதையும் உடன் கொண்டு வரவில்லை. இறக்கும் போது எதையும் உடன் கொண்டு போவதும் இல்லை. அப்படியிருக்க எனது எனது என்று எண்ணி உடைமைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோமே. இது மயக்கவுணர்வு தானே. இம்மயக்கவுணர்வே ஓரளவில் அறியாமை என்று முன்னே குறிப்பிடப்பட்டது.




ஆணவத்தின் தன்னியல்பும் பொதுவியல்பும்

இதுவரை கூறியவற்றால் ஆணவ மலத்தின் இயல்பு இரண்டு என்பது புலனாகும். ஒன்று மாயையோடு சேராத தனி நிலையில் ஆணவமலம் உயிருக்குப் பேரறியாமையைத் தருதல். மற்றொன்று, மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு ஓரளவில் அறியாமையைத் தருதல். ஆணவம் தனித்துச் செயற்படும் நிலை கேவலநிலை என்று குறிப்பிட்டோம். மாயையோடு கூடிச் செயற்படும் நிலை சகல நிலை எனப்படும். ஆணவம் தனி நிலையில் பேரறியாமையைச் செய்தல் அதற்குத் தன்னியல்பு ஆகும். அது மாயையின் சேர்க்கையைப் பெற்றவிடத்து மயக்கவுணர்வைச் செய்தல் அதற்குப் பொதுவியல்பு ஆகும். எனவே தனி நிலையிலும், மாயையோடு கூடிய பொது நிலையிலும் ஆன்மாவுக்கு அறியாமையைத் தருதலே ஆணவத்தின் இயல்பாகும். இதுபற்றியே அறியாமை ஆணவம் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். இத்தொடரின் நடுவே தருவது என்ற ஒரு சொல்லை வருவித்து அறியாமையைத் தருவது ஆணவம் எனக்கொள்ள வேண்டும்.




வினை

ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும். ஆணவத்தினால் வினை எப்படித் தோன்றுகிறது என்பதைக் காண்போம். உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளேயாகும். ஆயினும் சுதந்திரமான அறிவுடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு ஏது? பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தானே அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் அல்லவா துணை செய்கின்றன? இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது ஏது? உயிருக்குச் சுதந்திர அறிவு இல்லாமை போலவே சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும். இத்தகைய செயல் உரிமை உயிருக்கு இருக்கிறதா?

ஒன்றை நினைக்கில் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை

நினையாத முன் வந்து நிற்கினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்




எனவரும் அனுபவ வாக்கு உயிருக்குச் சுதந்திரமான செயல் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறது.

பற்றுடன் செய்யும் முயற்சியே வினையாதல்

இறைவனையின்றி ஆன்மா எதனையும் தானே அறியவும்மாட்டாது; எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும் ஆணவ மலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

ஆணவ மலத்தின் வழிப்பட்டது வினை

ஆணவ மலமே உயிருக்கு யான் என்னும் உணர்வை உண்டாக்கி செய்வோனாம் தன்மையைத் தருகிறது; எனது என்னும் உணர்வை உண்டாக்கி நுகர்வோனாம் தன்மையைத் தருகிறது. செய்வோனாம் தன்மையும், நுகர்வோனாம் தன்மையுமே வினை உண்டாவதற்கு ஏதுவாகின்றன. சுருங்கக் கூறினால், ஆணவ மலத்தின் வழியாகவே வினை வந்து உயிரைப் பற்றுவதாகிறது.

வினையின் மூவகை நிலைகள்

ஆன்மா தனது செய்வோனாம் தன்மையினால் ஒரு செயலைச் செய்யுங்கால் நிகழ்வது தூல கன்மம். புலப்படுகிற வினை என்பது அதற்குப் பொருள். அச்செயல் முடிந்த பின் அது தூல நிலை நீங்கிச் சூக்கும நிலையை அடைந்து நிற்கும். அதனைப் புலப்படாத வினை எனலாம். புலப்படும் வினை நல்வினை, தீவினை என இரண்டு வகையாய் அமையும் பின் அவைகளே புலப்படாத வினையாய் நிற்குங்கால் புண்ணியம், பாவம் எனப் பெயர் பெறும். புலப்படாத வினைகளே தத்தமக்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய தம் தம் பயன்களைத் தம்மைச் செய்த ஆன்மாக்களுக்குக் கொடுக்கும். புலப்படும் நிலையில் நிகழும் வினை ஆகாமியம் எனப்படும். ஆகாமியம் என்பதற்கு விரும்பிச் செய்யப்படுவது என்பது பொருள். அச்செயல் முடிந்தபின், புலப்படா நிலையை அடைந்து சூக்குமமாய் நிலைத்து நிற்குங்கால் சஞ்சிதம் எனப்படும். சஞ்சிதம் என்பதற்கு நன்கு பெறப்பட்டது என்பது பொருள். புலப்படாத நிலையினின்று பயனாய் வந்து இன்ப துன்பங்களைக் கொடுக்கும் போது பிராரத்தம் எனப்படும். பிராரத்தம் என்பதற்கு நேர்படுவது என்பது பொருள்.

இன்ப துன்பங்களுக்குக் காரணம்

இதனால், ஒருவர் நல்வினை செய்தால் அது புலப்படாத நிலையில் புண்ணியமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்தபோது இன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும் என்பதும், ஒருவர் தீவினை செய்தால் அது பாவமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்த போது துன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும் என்பதும் புலனாகும். எனவே இன்ப துன்பங்களுக்குக் காரணம் வினை என்பது விளங்கும்.




நீயான சுகதுக்கம்

இன்ப துன்பங்கள் நமது இயற்கையல்ல. இயற்கையென்றால் என்றும் ஒரு தன்மையாய் இருக்கவேண்டும் மாறுதல் அடைவது இயற்கையாகாது. நமக்கு வருகின்ற இன்ப துன்பங்கள் இயற்கை எனின் அவை நம்மை விட்டு எப்பொழுதும் நீங்காதிருத்தல் வேண்டும். ஆயின் அவை சிறிது காலம் இருந்து பின் நீங்கக் காண்கிறோம். ஆகையால் அவை நம்மோடு என்றும் இருக்கும் இயற்கையல்ல. வினை என்னும் காரணத்தினால் வந்து பொருந்துகிற செயற்கையேயாகும். அக்காரணம் உள்ள வரையில் அவையும் இருந்து, அது நீங்கியவுடன் அவையும் நீங்கி விடும். நாம் இவ்வுண்மையை உணர்வதில்லை. இன்ப துன்பங்களை நமக்கு வேறானவை எனப் பிரித்து உணராது, அவற்றை நம் இயல்பாகவே கண்டு வருகிறோம். யான் இன்பமாய் இருக்கிறேன், துன்பமாய் இருக்கிறேன் என்று நம் இயல்புகளாகச் சொல்லி வருகிறோம். இது பற்றியே நீயான சுகதுக்கம் என்றார் ஆசிரியர். இங்கேயும் தருவது என்ற ஒரு சொல்லை வருவித்து, சகதுக்கம் தருவது குறியாவினை என்று கொள்ளவேண்டும்.




குறியாவினை

சுக துக்கத்திற்குக் காரணம் இன்னது என்பதை மேலே அறிந்தோம். சுகமும் துக்கமும் வருவதும் போவதும் நம் கையில் இல்லை. அவை எவ்வழியாக வரும்? எத்தனை காலம் நிற்கும்?என்று யாரால் சொல்ல முடியும்? உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. நீலவானம் மேகமேயில்லாமல் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று கருமேகங்கள் எங்கிருந்தோ திரண்டு வந்து, இடி இடித்து மின்னல் மின்னிப் பெருமழை கொட்டுகிறது. சில சமயம் காற்று என்பதே இல்லாமற் போய் விடுகிறது. மரங்களின் இலைகளும் அசையாமல் இருக்கின்றன. திடீரென்று எங்கிருந்தோ ஒரு சூறைக்காற்று வந்து சுழன்று அடிக்கிறது. அதன் வேகத்தில் பெரிய பெரிய மரங்களெல்லாம் வேருடன் பெயர்ந்து விழுகின்றன. சற்று முன்னால் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த பசுஞ்சோலை இப்பொழுது நிலைகுலைந்து தரைமட்டமாகி விடுகிறது.




வாழ்க்கையும் இதுபோலத்தான். சுகம் எப்படி வருகிறது? துக்கம் எப்படி வருகிறது? என்பதை நாம் அறிய முடியவில்லை. காலம் வருமளவும் நுண்ணியதாய் அடங்கியிருந்து, காலம் வந்தவிடத்து உருப்பட்டு வந்து பொருந்தி இன்ப துன்பங்களைப் பயப்பதாகிய வினையின் இயல்பு அறிதற்கு அரிது. அதனைக் குறியாவினை என அடைமொழி கொடுத்துக் கூறினார் உண்மை விளக்க ஆசிரியர். குறியாவினை என்பதன் பொருளை நன்கு விளங்கிக் கொள்ளச் சங்க இலக்கியமாகிய அகநானூற்றில் வரும் ஒருதொடர் துணை செய்வதாகும். அத்தொடரையும், அத்தொடர் பயன்படுத்தப்பட்ட சூழலையும் முதலில் அறிந்து கொள்வோம்.




ஒரு வளமான மலைச்சாரல். எங்கே பார்த்தாலும் அடர்த்தியான காடு. அங்கே எத்தனை வகையான மரங்கள்! செழிப்பாக வளர்ந்துள்ள வாழை மரங்களில் பெரிய பெரிய குலைகள். அவற்றை வெட்டுவார் இல்லை. அவ்வாழைக் குலைகள் முற்றி முதிர்ந்து தாமாகப் பழுத்து நிற்கின்றன. கீழே பாறையான தரையில் குழிவான இடத்தில் சிறிய சுனை இருக்கிறது. தாமே பழுத்து உதிர்ந்த வாழைக் கனிகள் அச்சுனை நீரில் கலக்கின்றன. அருகிலே பலா மரங்கள் உள்ளன. அவற்றில் கொத்துக் கொத்தாகப் பலாப் பழங்கள் காட்சியளிக்கின்றன. அவை நன்றாகக் கனிந்து வெடித்து, அவற்றின் சுளைகள் உதிர்ந்து கீழே பாறையிலுள்ள சுனை நீரில் கலக்கின்றன. இவ்வாறு வாழைக் கனிகளும் பலாப்பழச் சுளைகளும் விழுந்து கலந்து பல நாள் ஊறி ஊறி அந்தச் சுனைநீர் தேன்போல ஆகிவிட்டது. இனிமையான அந்த மலைச் சாரலில் மனிதர்களின் நடமாட்டம் இல்லை. ஆனால் வளமான மரங்கள் நிறைந்த இடத்திலே வானரங்கள் மிகுதியாக இருப்பது இயற்கை தானே. மரமேறும் குரங்குகளுக்கு மரங்கள்தான் வாழும் அரண்மனை; பசி தீர்க்கும் உணவுச்சாலை; தாவி விளையாடும் ஊசல்; துயிலும் தொட்டில்! இதோ ஓர் ஆண்குரங்கு. அதற்குப் பொறுக்கமுடியாத தாகம் போலும். அது பாறையிலே தேங்கியிருந்த சுனை நீரை ஓடிச் சென்று குடித்தது. அது வெறும் நீரா? புளித்த தேன் (கள்) அல்லவா? அதன் தன்மையறியாமல் நீர் என்றே கருதிப் பருகி விட்டது.




சுனையின் பக்கத்தில் ஒரு சந்தன மரம் ஓங்கி நிற்கிறது. கள் ஆகிய நீரைப் பருகிய குரங்குக்கு ஒரே மயக்கம். சந்தன மரத்தில் அது ஏற முயல்கிறது. சிறிது தூரம் ஏறுவதற்குள் மயக்கம் கண்ணைச் சுழற்றுகிறது. மேலே செல்ல முடியாமல் கீழே விழுகிறது. விழுந்த இடமோ பல வகையான மலர்கள் உதிர்ந்து மெத்தென்று இருக்கிறது. மென்மையான அந்த மலர்ப்படுக்கையிலே விழுந்ததும் குடி மயக்கத்தால் தன்னை மறந்து இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது. இந்த இன்ப உறக்கம் முயற்சியும் நினைப்பும் இன்றி, எதிர்பாராதவகையில் அதற்குக் கிடைத்ததாகும். அதனால், குறியாஇன்பம் என அதனைக் குறிப்பிட்டார் புலவர் (அகநானூறு,2) குறியா எதிர்பார்க்காத, நினைக்காத. இச்சங்க இலக்கியத் தொடரையொத்து அமைந்துள்ளது குறியா வினை என்ற உண்மை விளக்கத்தொடர், எதிர்பாராத வகையில், நாம் நினைக்காத முறையில், வந்து பொருந்தி இன்ப துன்பங்களைத் தருதலின் குறியா வினை எனப்பட்டது என்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment